Saturday, 16 March 2019

சாம்பலில் பூத்த சரித்திரம்:மத்தியகால கிறிஸ்தவ அறிஞர்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம்:மத்தியகால கிறிஸ்தவ அறிஞர்கள் புனித பெரிய ஆல்பர்ட் அவர்கள்

படைத்தவராம் கடவுள்மீது எந்த அளவிற்கு நம்பிக்கை கொண்டிருக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் கேட்பதை அவரிடமிருந்து பெறுகிறோம், மரியா விண்ணக நூலின் பக்கம், அதில் தந்தையாம் இறைவன், அவரின் மகனான இயேசு பற்றி எழுதியுள்ளார் - புனித பெரிய ஆல்பர்ட்.
மேரி தெரேசா-வத்திக்கான் 
புனித பெரிய ஆல்பர்ட் அவர்கள், மத்தியகாலத்தில், ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் அரிஸ்டாட்டில் அவர்களின் மெய்யியலை இணைத்து இறையியலைக் கற்பித்த சிறந்த அறிஞர்களில் ஒருவர். இவர், திருமறையின் மறைவல்லுனர். மேலும், இவர்,  அறிவியலாளர், மெய்யியலாளர் மற்றும், மருத்துவ தொழில்நுட்பவியலாளரின் பாதுகாவலரும் ஆவார். ஏறக்குறைய கி.பி. 1,200ம் ஆண்டில் ஜெர்மனியின் பவேரியாவில் இவர் பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவரது குடும்பம் பற்றிய விவரங்கள் அவ்வளவாகத் தெரியாவிடினும், இவர் நன்கு கல்வி கற்றவர் மற்றும் பதுவை நகர் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் எனவும், அச்சமயத்தில்தான் அரிஸ்டாட்டில் பற்றியும் அவரது எழுத்துக்கள் பற்றியும் கற்றறிந்தார் எனவும் தெரிகிறது. இவர், அரிஸ்டாட்டில் அவர்களின் மெய்யியலைக் கற்றதே, பிற்காலத்தில் இவரது கல்விப்பணிக்கு அடித்தளமாக அமைந்தது. ஏறக்குறைய 1223ம் ஆண்டில், இவர் அன்னை மரியாவைக் காட்சியில் கண்ட அனுபவத்தில், அன்னை மரியா கேட்டுக்கொண்டபடி, தொமினிக்கன் துறவு சபையில் சேர்ந்தார். அச்சபையில் சேர்ந்த பின்னர் இறையியலைக் கற்றார் ஆல்பர்ட். இவர் கல்வியில் சிறந்து விளங்கியதால், ஜெர்மனியின் கொலோன் நகரில் தொமினிக்கள் கல்லூரியில் இறையியல் பேராசிரியரானார். அதேநேரம், ஜெர்மனியிலும், பன்னாட்டு அளவிலும் சொற்பொழிவுகள் ஆற்றினார். பிரான்ஸ் நாட்டு புகழ்பெற்ற இறையியலாளரான, சான்சிலர் பிலிப் அவர்களோடு இணைந்து பணியாற்றியதற்குப் பின்னர், "Summa de Bono" என்ற மாபெரும் நூலை வெளியிட்டார்.
இறையியல் போதகர்
புனித பெரிய ஆல்பர்ட் அவர்களுக்கு, 1245ம் ஆண்டில் இறையியல் போதகர் என்ற பட்டம் கிடைத்தது. இத்தகைய பட்டத்தைப் பெற்ற, ஜெர்மன் நாட்டு முதல் தொமினிக்கன் இவரே. பின்னர் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் இறையியல் கற்பிக்கச் சென்றார். புனித ஜேம்ஸ் கல்லூரியில் இறையியல் துறையின் தலைவரானார். இவரது மாணவர்களில் ஒருவர்தான் புனித தாமஸ் அக்குவினாஸ். அரிஸ்டாட்டில் அவர்களின் மெய்யியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட புனித ஆல்பர்ட் அவர்கள், அரிஸ்டாட்டில் எழுத்துக்கள் பற்றி கருத்துரைகள் எழுதினார். பல்வேறு முஸ்லிம் வல்லுனர்களின் போதனைகளையும் இவர் கற்றார். 1254ம் ஆண்டில் தொமினிக்கன் சபையின் மாநிலத் தலைவரானார். இவர் நிர்வாகத்திலும் திறமை கொண்டவர் என்பதை, இந்த தலைமைப்பணி வழியாக அறிய முடிகிறது. 1259ம் ஆண்டில், தாமஸ் அக்குவினாஸ் மற்றும் அச்சபையின் பல்வேறு தலைவர்களுடன் பொதுப் பேரவையில் கலந்துகொண்டார் ஆல்பர்ட். அச்சமயம், தொமினிக்கன் சபையின் உருவாக்குதலுக்கும், அச்சபை மெய்யியலை வளர்ப்பதற்கும் பாடத்திட்டத்தை அவர்கள் உருவாக்கினர். ஆல்பர்ட் அவர்களை, திருத்தந்தை 4ம் அலெக்சாந்தர், ரேகன்ஸ்பூர்க் ஆயராக 1260ம் ஆண்டில் நியமித்தார். ஆயர் பணியில், குதிரையின் மீது பயணம் செய்வதை மறுத்து, எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்று மேய்ப்புப் பணியாற்றினார் அவர். தனக்கு ஆயர் பணி ஒத்துவரவில்லையென உணர்ந்து, அதிலிருந்து விலகினார் ஆல்பர்ட். கொலோன் நகரில் பல்கலைக்கழகம் ஒன்றையும் இவர் நிறுவினார். இதுவே ஜெர்மனியின் மிகப் பழமையான பல்கலைக்கழகமாகும்.
புனித பெரிய ஆல்பர்ட் அவர்களின் மாணவர் புனித தாமஸ் அக்குவினாஸ் அவர்கள், இவருக்குமுன் இறந்துவிட்டார். புனித தாமஸ் அக்குவினாஸ் அவர்களின் இறப்புக்குப் பின்னர், அவர் எழுதியது தவறு என பாரிஸ் பல்கலைக்கழகம் கூறியது. அச்சமயத்தில் எண்பது வயது நிரம்பியிருந்த, புனித பெரிய ஆல்பர்ட் அவர்கள், உடனே கொலோன் நகரிலிருந்து பாரிஸ் சென்று, தம் மாணவர் எழுதியது சரியே என்று எண்பித்தார். ஆல்பர்ட் அவர்கள், தனது வாழ்நாளில், வானயியல், சட்டம், நட்பு, அன்பு என பல தலைப்புக்களிலும், மெய்யியல் முதல் புவியியல் வரையிலும், 38 நூல்கள் எழுதியுள்ளார். 1278ம் ஆண்டில் நோயால் தாக்கப்பட்ட புனித பெரிய ஆல்பர்ட் அவர்கள், 1280ம் ஆண்டு நவம்பர் 15ம் நாள் காலமானார்.
புனித பெரிய ஆல்பர்ட் அறிவியலாளர்
புனித பெரிய ஆல்பர்ட் அவர்கள், நவீன உலகிற்கு, புனிதமான அறிவியலாளர் எனவும் போற்றப்படுகிறார். தொமினிக்கன் ஆன்மீகத்தின் புதிய இரசம் (The New Wine of Dominican Spirituality) என்ற நூலில், தொமினிக்கன் சபை அருள்பணி Paul Murray அவர்கள், புனித பெரிய ஆல்பர்ட் அவர்கள் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார். “இப்பூமியில் முதல் ஆதாம் போன்று, 13ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில், கொலோன் நகர ஆல்பர்ட் அவர்கள், தன்னைச் சுற்றியிருந்த உலகை முழுவதும் புத்தம் புதியதாக நோக்கினார். மத்தேயு நற்செய்திக்கு ஆல்பர்ட் அவர்கள் எழுதியுள்ள விளக்கத்தில், இந்த முழு உலகமும், நமக்கு இறையியலாக உள்ளது. ஏனெனில், விண்ணகம், கடவுளின் மாட்சியை அறிவிக்கின்றன” எனக் கூறியுள்ளார். கடவுளில் நம்பிக்கையில்லை என பல அறிவியலாளர்கள் அறிவிக்கின்ற ஓர் உலகில் இன்று நாம் வாழ்ந்து வருகின்றோம். மேலும், மதமும் அறிவியலும் இரு துருவங்கள் என்ற அறியாமையில், மதத்தை அல்லாமல், அறிவியலை நம்புகின்றோம் எனக் கூறும் இளையோரின் எண்ணிக்கையும் இவ்வுலகில் அதிகரித்து வருகின்றது. இத்தகைய ஓர் உலகிற்கு, புனித பெரிய ஆல்பர்ட் அவர்களின் போதனைகளும், கல்வியும் மிகவும் தேவைப்படுகின்றன. புனித பெரிய ஆல்பர்ட் அவர்கள் பற்றி மேலும் பல செய்திகளை, அவர் சார்ந்திருந்த, போதகர்கள் எனப்படும் தொமினிக்கன் சபையினர் இணையத்தில் பதிவுசெய்துள்ளனர். இச்சபை, 2016ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, தனது 800வது யூபிலி ஆண்டைச் சிறப்பித்தது.
புனித ஆல்பர்ட் அவர்கள், மெய்யியல் மற்றும் இறையியல் புலமையோடு, மானுடயியல், வானயியல், உயிரியல், தாவரவியல், வேதியல், பல்மருத்துவம், நிலவியல், மருத்துவம், இயற்பியல், உளவியல், விலங்கியல், புவியியல் ஆகிய அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி, தனது பங்கையும் அளித்துள்ளார். இதனால், இவர் இவ்வுலகில் வாழ்கையிலேயே பெரிய ஆல்பர்ட் என்ற பட்டத்தைப் பெற்றார். உலகின் மிக முக்கியமான பேராசிரியராகவும், அதேநேரம் ஆண்டவர் மீது மிகுந்த தாகம் கொண்டவராயும் விளங்கினார். இவர், தனது படிப்பை, வகுப்பில் கற்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. தன்னைச் சுற்றியுள்ள படைப்பு பற்றி, தாவரங்கள், டான்யூப் நதியிலுள்ள மீன்கள் உட்பட எல்லா வகையான விலங்குகள் என இப்பூமியுள்ள அனைத்தையும் பற்றியும், விண்கோள்கள், விண்ணிலுள்ளவை என அனைத்திலும் ஆர்வம் காட்டினார். உண்மையில், ஆல்பர்ட் அவர்களின் நூல்களில் விளக்கப்பட்டிருப்பவைகளைக் கொண்டு, ஜெர்மனியின் பவேரியா காடுகளை, மீண்டும் தாவரங்கள் மற்றும் விலங்குகளால் நிரப்பலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு, அவர், படைப்பு முழுவதிலும் ஆர்வம் கொண்டு அவை பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார்.
கற்கும் திறன்
இப்புனிதர் பற்றி பல சுவையான தகவல்கள் சொல்லப்படுகின்றன. பெரிய ஆல்பர்ட் எனச் சொல்லப்படும் அளவிற்கு இவர் அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கினார். ஆனால் இவர் பதுவை நகர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, மாலையில் படித்தவற்றை அடுத்த நாள் காலையில் மறந்து விடுவாராம். அந்த அளவிற்கு அவரது கற்கும் திறன் இருந்ததாம். ஒருநாள் அவரது அறையில், புனிதர்கள் கத்ரீன், பார்பரா மற்றும் புனித அன்னை மரியா திடீரெனத் தோன்றினார்களாம். அப்போது அன்னை மரியா அவரின் ஆசைகளைக் கேட்கையில், தனக்கு மனித ஞானம் பற்றிய விரிவான அறிவு வேண்டும் என ஆல்பர்ட் சொன்னாராம். அதற்கு அன்னை மரியா, மெய்யியலைக் கற்கும் அளவற்ற திறனை அளிப்பதாகவும், ஆல்பர்ட்டின் மனித அறிவு, அவரை ஒருபோதும் விசுவாசத்திலிருந்து அகற்றி விடாது எனவும், இவ்வுலகில் இவர் தன் வாழ்நாளை முடிக்கையில், இந்த அறிவு இவரைவிட்டு அகலும் மற்றும், இவர் கடவுளிடம் எளிய, மாசற்ற குழந்தையாகத் திரும்புவார் எனவும் கூறினார் எனச் சொல்லப்படுகின்றது. புனித ஆல்பர்ட் அவர்கள் கல்வி கற்பதில் எதிர்கொண்ட இன்னல்கள், அவர் படிப்பில் நீண்ட காலம் செலவழிக்கக் காரணமாக அமைந்தது என, இப்புனிதரின் வாழ்வு பற்றி எழுதிய ஜோவாக்கிம் சிக்கார்ட் என்பவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மாணவப் பருவத்தில் படிப்பில் கஷ்டப்பட்ட இப்புனிதர், மிகவும் திறமை வாய்ந்த ஆசிரியராக விளங்கினார். தான் புனித அன்னை மரியாவால் தூண்டப்பட்டு படித்ததாகவும், தன்னால் படிக்க இயலாததை செபத்தின் வழியாக கற்றதாகவும் இப்புனிதரே தன்னைப் பற்றி எழுதியுள்ளார்.
புனித பெரிய ஆல்பர்ட் அவர்கள், மத்திய காலத்தில், மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவராய் இருந்தார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...