Tuesday, 19 March 2019

17வது இந்திய மக்களவைத் தேர்தலையொட்டி மேய்ப்புப்பணி கடிதம்

17வது இந்திய மக்களவைத் தேர்தலையொட்டி மேய்ப்புப்பணி கடிதம் இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்

இந்தியப் தேர்தல்களில் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்படியாக, கத்தோலிக்கர் அனைவரும், ஆலயங்களிலும், வீடுகளிலும் செபிக்குமாறு, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
குடிமக்களின் நியாயமான தேவைகள் மற்றும், ஏக்கங்களுக்குச் செவிசாய்த்து, அவற்றைப் புரிந்துகொண்டு, செயலாக்கத்துடன் பதிலளிக்கும் தலைவர்களை, இந்தியப் பொதுத்தேர்தல்கள் வெளிக்கொணரும் என்ற, கத்தோலிக்கத் திருஅவையின் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார், தலத்திருஅவை உயர் அதிகாரி ஒருவர்.

இந்தியாவில், வருகிற ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து, மே 19ம் தேதி வரை, மக்களவைக்கான பொதுத்தேர்தல்கள் நடைபெறவிருப்பதையொட்டி, அனைத்து ஆயர்களுக்கும்,   மேய்ப்புப்பணி கடிதம் ஒன்றை எழுதியுள்ள, இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகிய இந்தியாவில், கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்யவிருக்கும் இவ்வேளையில், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓட்டுப்போடும் உரிமை உள்ளது என்பதையும்,  ஓட்டுப்போடுவது, நம் நாட்டிற்கு நாம் ஆற்ற வேண்டிய புனித கடமை என்பதையும் நினைவுபடுத்தியுள்ளார், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.

அறிவியல், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, பொதுநல வசதிகள் போன்றவற்றில், கடந்த பல ஆண்டுகளில் நாடு, பெரும் முன்னேற்றம் கண்டு, வருங்காலத்தின்மீதும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது, அதேநேரம், ஏழை-பணக்காரர் இடைவெளி அகன்றுகொண்டே போவது, சிறுதொழில் முனைவோரும், தினக்கூலி பெறுவோரும், தங்களின் வருமானத்தைக் கொண்டு வாழ இயலாத நிலையில் உளளது, விவசாயிகள் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி வருவது போன்ற, கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய பல்வேறு துறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார், கர்தினால் கிரேசியஸ்.

கத்தோலிக்கத் திருஅவை எந்த ஓர் அரசியல் கட்சியுடனும் தன்னை இணைத்துக்கொள்வதில்லை என்ற கோட்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும்,  அதேநேரம், நாட்டின் நலன்கருதி, பொதுத்தேர்தல்களுக்குமுன்னர், பொதுவான வழிமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்திய ஆயர்களுக்கு எழுதிய கடிதத்தில் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் தேர்தல்கள் நல்ல முடிவுகளைக் கொண்டுவரும்படியாகவும், தெளிந்துதேர்ந்து நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்படியாகவும் கத்தோலிக்கர் அனைவரும் செபிக்குமாறும், மும்பை பேராயரான, கர்தினால் கிரேசியஸ் அவர்களின் கடிதம் கூறுகிறது.

அதிகாரம் என்பது பணிபுரிவதற்கே என்பதைப் புரிந்துகொள்ளும் தலைவர்கள் நாட்டிற்குத் தேவைப்படுகின்றனர் என்றும், ஆன்மீக உணர்வுகொண்ட இந்தியா, பொதுத்தேர்தல்களை அமைதியான முறையில் நடத்தி, ஏனைய நாடுகள் பின்பற்றக்கூடிய வகையில் செயல்பட முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார், இந்திய ஆயர் பேரவைத் தலைவர். (CBCI)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...