Tuesday, 19 March 2019

சிறு புன்னகை, பெரிய மாற்றம் - 'No Food Waste’ அமைப்பின் பத்மநாபன்

சிறு புன்னகை, பெரிய மாற்றம் - 'No Food Waste’ அமைப்பின் பத்மநாபன்'No Food Waste’  தொண்டு அமைப்பின் நிறுவனர் பத்மநாபன்

ஒரு சிறு புன்னகை, சிறு உதவி போன்றவை வழியாக, ஒவ்வொருவருமே, யாராவது ஒருவரின் ஏதாவது ஒரு சிறு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உதவுவதன் வழியாக, அந்த மனிதரின் வாழ்வில் ஒரு சிறு மாறுதலை ஏற்படுத்த முடியும்.
மேரி தெரேசா - வத்திக்கான்
ஓர் உணவகத்தில் நாள் முழுவதும் கடின வேலைசெய்யும் பெண் ஒருவர், ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து வீடு திரும்புகையில், வேலையின் களைப்பைப் பொருட்படுத்தாமல், மீதமுள்ள உணவுகளைப் பொட்டலங்களில் சேகரித்து, வீடுகளின்றி தெருக்களில் வாழும் வறியவர்களுக்கு உணவளித்து வந்தார். தொழிலதிபர் ஒருவர், இந்தப் பெண்ணின் இந்தச் செயலை, ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் கவனித்து வந்தார். ஒருநாள் அப்பெண்ணிடம், இந்த உலகில் வீடற்றவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் எனத் தெரியுமா, எனக் கேட்டார். பின்னர், அவர், இந்த செயலைச் செய்வதால், இந்த சமுதாயத்தில் எந்த விதத்தில், என்ன மாறுதலை நீ கொண்டுவரப் போகிறாய்? என்று கேட்டார். இப்படி முதன்முறையாக ஒருவர் தன்னிடம் கேட்டவுடன் திகைத்து நின்றார் அந்தப் பெண். அந்நேரத்தில், அந்தப் பெண்ணிடம் உணவு பெற்ற, மனிதர் ஒருவர் வந்தார். தனது கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே அவர் சொன்னார் – இன்று பசியோடுதான் தூங்கச் செல்ல வேண்டும் என்று நினைத்து, கடவுளிடம் உணவிற்காக கண்ணீரோடு மன்றாடினேன். நான் செபித்து கண்களைத் திறக்கையில், தாங்கள், என்முன் நின்று உணவுப் பொட்டலத்தைக் கொடுத்தீர்கள், நன்றி, கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக என்றார். கடவுள் உங்களையும் ஆசிர்வதிப்பாராக என்று சொல்லிவிட்டு, அந்த தொழிதிபரிடம், பாருங்கள், எத்தகைய மாறுதலைக் கொண்டுவந்துள்ளது என்று சொன்னார் அந்தப் பெண்.
என்ன மாறுதலை கொண்டுவரப் போகிறாய்?
ஒவ்வொரு நாளும், ஏதாவது ஓரிடத்தில், யாராவது ஒருவரில், ஏதாவது ஒரு சிறு மாறுதலைக் கொண்டுவருவதற்கு நமக்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த உலகில் ஒவ்வொரு நாளும் நிறைய பிரச்சனைகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த வார நியூசிலாந்து நாட்டில் இரு மசூதிகளில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள், எத்தியோப்பிய விமான விபத்து, சில நாடுகளில் போர், புலம்பெயர்ந்தோர் பிரச்சனை, பாலியல் வன்கொடுமை... இவ்வாறு பல பிரச்சனைகள். ஏன், நாம் வாழ்கின்ற சூழல்களிலும், பல்வேறு விதமான பிரச்சனைகள் உள்ளவர்களை, ஒவ்வொரு நாளும் சந்திக்கின்றோம். பசியோடு பள்ளிக்கு வருகின்ற சிறார், குடும்பப் பிரச்சனையோடு அலுவலகத்திற்குச் செல்லும் தம்பதியர், பல்வேறு இழப்புகளைச் சந்தித்து, பள்ளிக்கோ, பணிக்கோ வருகின்றவர்கள், பேருந்தில் பணப் பையைத் தொலைத்தவர்கள்... இவ்வாறு பலர். இவர்களுக்கு மத்தியில், என்னால், எனது ஒரு சிறிய செயலால், என்ன ஒரு மாறுதலைக் கொண்டுவர முடியும், என சிந்திக்கலாம். இந்த நிகழ்வை யுடியூப்பில் பதிவு செய்தவர் சொல்கிறார்... நீங்கள் இந்த உலகின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால், அந்தப் பெண், வீடற்றவர்க்கு அன்று இரவு உணவளித்து அப்போதைய அவரின் பிரச்சனையை நீக்கியது போன்று, நீங்களும், யாராவது ஒருவரின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உதவுவதன் வழியாக, அந்த மனிதரின் வாழ்வில் ஒரு சிறு மாறுதலை ஏற்படுத்த முடியும். ஆம். நமது ஒரு சிறு புன்னகைகூட, அயலவரில் ஒரு மாறுதலை ஏற்படுத்தும்.
சிறந்த இளையோர் விருது
2019ம் ஆண்டு, காமன்வெல்த் அமைப்பின், ஆசியப் பகுதிக்கான சிறந்த இளையோர் விருது, தமிழகத்தைச் சேர்ந்த பத்மநாபன் கோபாலன் என்ற இளையவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசியா, பசிபிக், கரீபியன், அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 15க்கும் 29 வயதுக்கும் உட்பட்ட இளையோரில், ஒவ்வொரு பகுதியிலும், தலா ஒருவருக்கு ஆண்டுதோறும் சிறந்த இளைஞர் விருதினை காமன்வெல்த் அமைப்பு வழங்கி வருகிறது. தங்களின் நாடுகளில் வறுமை, பாலின சமத்துவம், சுத்தமான நீர், கல்வி, நலவாழ்வு, காலநிலை மாற்றம் போன்வற்றில் நீடித்து நிலைக்கும் வளர்ச்சி இலக்குகளைக் கொண்டு செயல்பட்டு, சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் இளையோர்க்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'No Food Waste’ என்னும் தன்னார்வத் தொண்டு அமைப்பின் நிறுவனரான பத்மநாபன் அவர்களுக்கு, ஆசிய பகுதியின் இவ்வாண்டுக்கான சிறந்த இளையோர் விருது, மார்ச் 13, கடந்த புதன்கிழமையன்று, இலண்டனிலுள்ள காமன்வெல்த் அமைப்பின் தலைமையகத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. பத்மநாபன் அவர்களின் வயது 25. இந்த அமைப்பின் ஆரம்பம் பற்றி, இளையவர் பத்மநாபன் அவர்களிடம் பிபிசி தமிழ் ஊடகத்திடம் பேசியுள்ளார்.
'No Food Waste’ அமைப்பின் பத்மநாபன்
"நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சேலம். பிறகு பொறியியல் படிப்பதற்காக கோயம்புத்தூர் வந்தேன். கல்லூரியில் படிக்கும்போதே, அருகிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களைச் சொல்லிக்கொடுத்து வந்தேன். அந்நிலையில், வழக்கம்போல் பள்ளி ஒன்றுக்குச் சென்றபோது, மதிய உணவு இடைவேளையில், மாணவர்கள் உணவுப் பொருட்களை சர்வசாதாரணமாக வீணாக்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அடுத்து அப்பள்ளிக்குச் சென்றபோது,  கல்வியோடு, உணவுப் பொருட்களை வீணாக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்த தொடங்கினேன். இவ்வாறு ஒரு சமயம், ஓர் ஆரம்பப் பள்ளியில், உணவை வீணாக்கக் கூடாது என்பது பற்றி,  வரைபடங்கள் மூலம் பல்வேறு விடயங்களை விளக்கினேன். இறுதியில் 6-7 வயதிருக்கும் சிறுமி ஒருவர் என்னிடம் வந்து, 'என் அம்மா, வீட்டிலும், எங்கேயாவது வெளியே செல்லும்போதும், எனக்கென்று தனியே பெரிய வாழை இலையில் சாப்பிட வைக்கிறார். அப்படி, நான் வீணாக்கும் உணவை எங்குச் சென்று கொடுப்பது?' என்று கேட்டது, என்னைப் பெரிதும் சிந்திக்க வைத்தது. அதற்கு மறுநாளே என்னுடைய அலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, முகநூலில், 'உங்களிடம் வீணாகும் பொருட்களை என்னிடம் கொடுங்கள். அதை பசியால் வாடுபவர்களிடம் கொண்டு சேர்க்கிறேன்' என்று பதிவிட்டவுடன், திருமணம் ஒன்றில், மீதமான உணவுப்பொருட்கள் உள்ளதாக அழைப்பு வந்தது. கையில் கட்டைப் பையை எடுத்துக்கொண்டு, உணவை வாங்கி அருகிலுள்ள மருத்துவமனையில் பசியால் வாடுபவர்களுக்கு கொடுத்தேன். இதில் வியக்க வைக்கும் தகவல் என்னவென்றால், பேருந்தில் சென்று உணவை வாங்கி, தாளில் மடித்து, மருத்துவமனையில் கொடுப்பதற்கு எனக்கு 12 ரூபாய் மட்டுமே செலவானது. ஆனால், நான் கொண்டு சென்ற உணவால் 52 பேரின் பசி தீர்ந்தது...
பத்மநாபன் அவர்களின் இந்த ஆரம்பகால நிகழ்வுகள், 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தவை. இவரின் 'No Food Waste’ அமைப்பு, தற்போது, தமிழகத்தின் 16 நகரங்களில் இந்த அமைப்பு இயங்கி வருகின்றது. திருமணம் மற்றும் ஏனைய விழாக்களில் சமைத்து மீதமாகும் உணவைப் பெற்று, பசியால் வாடும் ஏழை மக்களுக்கு விநியோகித்து வருகின்றது இந்த அமைப்பு. மேலும், இந்தியாவில் பசியால் வாடுபவர் ஒருவரும் இல்லை என்ற நிலையை அடையும்வரை, எங்களது பணியைத் தொடர்வதற்கு இதுபோன்ற விருதுகள் மிகுந்த ஊக்கமளிக்கும்" என்று பத்மநாபன் அவர்கள் கூறியுள்ளார். மேலும், பத்மநாபன் அவர்கள், கழிவு மேலாண்மை நிறுவனம் ஒன்றையும் தனியே நடத்தி வருகிறார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க்
மார்ச் 15, இவ்வெள்ளியன்று, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள், பருவநிலை மாற்றத்தைத் தடுக்க, அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தங்கள் வகுப்புகளை ஒருநாள்  புறக்கணித்து அடையாளப் போராட்டம் நடத்தினர். இந்நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை பல தலைவர்களிடம் உருவாக்கியுள்ளது. இதில், இவ்வாண்டு நொபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கும் அளவுக்கு உலகினரின் கவனத்தை ஈர்த்திருப்பவர், சுவீடனைச் சேர்ந்த, 16 வயது சிறுமி கிரேட்டா துன்பர்க் (Greta Ernman Thunberg,சன.03,2003)அவர்கள். பூமி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவது குறித்து ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்துள்ள இச்சிறுமி, இதற்காக தனது பள்ளிப் படிப்பைக்கூட பாதியிலேயே நிறுத்திவிட்டார். இவர், சுற்றுச்சூழலைக் காப்பாற்ற, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். கடந்த ஆண்டு சனவரி மாதம் தாவோஸ் பகுதியில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார் கிரேட்டா. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுவீடன் நாடாளுமன்ற வாயிலில், சிறிய பதாகையுடன் அமைதியான போராட்டத்தில் தனி ஆளாக ஈடுபட்டார். இது மட்டுமின்றி அன்று முதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், உலக வெப்பமயமாதலைத் தடுக்க வேண்டி,  பள்ளிக்குச் செல்வதை விடுத்து, சுவீடன் நாடாளுமன்ற வாயிலில் அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகிறார் கிரேட்டா துன்பர்க்.
தனியொரு நபராக, உலகில், வாழ்கின்ற சூழலில், என்ன மாறுதலைக் கொண்டுவர முடியும் என்று சிந்தித்தால், அதற்குச் செயலுரு கொடுக்க, பத்மநாபன், கிரேட்டா போன்ற, சில ஆர்வலர்களின் வாழ்வுமுறை உந்து சக்தியாக உள்ளது. சிறு சிறு நல்ல செயல்கள் மூலம், யாராவது ஒருவரிலாவது நம்மால் ஏதாவது ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும், மனமிருந்தால். ஒரு சிறு புன்னகை, ஒரு பூந்தோட்டம் போன்றது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...