Saturday, 16 March 2019

தொன்மையான மரங்கள் பாதுகாப்பு

தொன்மையான மரங்கள் பாதுகாப்பு 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஓக் மரங்கள்

தமிழகத்தில் நூறு தொன்மையான மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு மதிப்பிடமுடியாத பணியாற்றும் இந்த மரங்களைக் காப்பாற்றுவதற்கு மாநில அரசு, தொன்மையான மரம் பாதுகாப்பு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
மேரி தெரேசா - வத்திக்கான்
ஓய்வு பெற்ற தமிழக வனத்துறை அதிகாரியான சுந்தரராஜு (V Sundararaju) அவர்கள், தனது சுயவிருப்பத்தின் காரணமாக, நூறு முதல் ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகள் வரையிலான எண்பதுக்கு அதிகமான மரங்களை ஆவணப்படுத்தியுள்ளார். 2011ம் ஆண்டில் அரசுப் பணி ஓய்வுக்குப் பின்னர், திருச்சியில், உடனடியாக, இயற்கைப் பாதுகாப்பு என்ற அறக்கட்டளையை உருவாக்கியுள்ள இவர், மரத்தின் வயது, தனித்துவம், வரலாறு மற்றும் மரத்தின் தோற்றம் போன்றவற்றைக் கொண்டு வித்தியாசமான, பழைய மரங்களின் விவரங்களை தொகுத்து வருகிறார். சுந்தரராஜு அவர்கள், தனது அனுபவத்தைக் கூறும்போது, 2010ம் ஆண்டில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத்துறை அதிகாரியாகப் பணியாற்றியவேளையில், Terminalia Arjuna என அழைக்கப்படும் ஐந்நூறு ஆண்டுகள் பழமையுடைய மரத்தைக் கண்டுபிடித்ததாகவும், இத்தகைய மரங்கள் பருவமடைந்து, சிறப்பான இடத்தைப் பெற, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன எனவும், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ்நாட்டில் வனத்துறையில் பணியாற்றியதன் பயனாக, இத்தகைய மரங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார். சுந்தரராஜு அவர்கள், சிவகங்கையில் ஒரு அபூர்வ மரத்தைப் பார்வையிட்ட நிகழ்வை விவரிக்கும்போது, ''இரண்டு மரங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கிடந்தன. அந்த இரண்டு மரங்களும் ஆப்ரிக்க நாட்டு மர இனத்தைச் சேர்ந்த பவோபாப் மரங்கள். ஆறாயிரம் சதுர அடியில் பரந்துவிரிந்து வளர்ந்துள்ள இரண்டு மரங்களும், ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகள் ஆன மரங்கள் என்பது என் கணிப்பு. ஒரு மரத்தின் தண்டுப் பகுதி ஏழு மீட்டர் சுற்றுளவு கொண்டதாக இருந்தது. இந்த மரங்கள் முந்தைய காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வர்த்தகம் செய்ய வந்தவர்கள் போட்ட விதைகளில் வளர்ந்தவையாக இருக்கலாம்'' என்றார். வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு இந்தியாவின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப வளர்ந்த மரங்களின் பட்டியலில் சூடானில் இருந்துவந்த புளிய மரமும் ஒன்று என்று சொல்லியுள்ளார் சுந்தரராஜு அவர்கள். நாகர்கோவில் பாலமோர் சாலை ஈசாந்திமங்கலத்தில் ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முந்தைய மருது மரம் உள்ளது. 151 அடி உயரமும், 85 அடி சுற்றளவும் கொண்டது இந்த மரம். பல்வேறு மருத்துவ குணம் கொண்ட இந்த பழமையான மரத்துக்கு தொல்காப்பியர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் செய்யப்படும் கட்டில் போன்ற வீட்டுக்குப் பயன்படும் பொருட்கள் உடலுக்கு நலம் தரும். இதன் பட்டை இதயநோய், எலும்புருக்கி, ஆஸ்துமா, மதுமேகம், கல்லீரல் வீக்கம், நுரையீரல் புண், ரணம், சொறி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் இலை பித்தவெடிப்பு, வயிற்று வலி ஆகியவற்றை குணப்படுத்தும்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...