Wednesday, 6 March 2019

அன்டார்டிக் பனிப்பாறைகள்  அன்டார்டிக் பெருங்கடல்

அன்டார்டிக் பெருங்கடல், ஏறக்குறைய 2,600 கி.மீ. அகலத்தையும், நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் மீட்டர் வரை ஆழத்தையும், ஏறக்குறைய 17,968 மீட்டர் கடற்கரைப் பகுதியையும் கொண்டிருக்கின்றது
மேரி தெரேசா - வத்திக்கான்
இப்பூமியின் தென்முனையின் கடைகோடியில் உள்ள அன்டார்டிக் பெருங்கடல், தெற்கு பெருங்கடல் அல்லது தென்முனை பெருங்கடல் அல்லது Austral பெருங்கடல் என அறியப்படுகிறது. உலகின் நீர்நிலை பரப்பு (hydrographic) குறித்த பன்னாட்டு ஆய்வு அமைப்பு, உலகின் முக்கிய பெருங்கடல்களில், நான்காவது பெரிய நீர்பரப்பாக, பெருங்கடல்களில், இருபது விழுக்காடு நீர்பரப்பைக் கொண்டிருப்பதாகவும்,  மூன்று கோடி ஆண்டுகளுக்குமுன் உருவான உலகின் மிக இளைய பெருங்கடல் எனவும், இதைக் கணித்துள்ளது. இப்பெருங்கடலில் உள்ள கார்பன், புவிமண்டலத்தைவிட ஐம்பது மடங்குக்கு மேலாகவே உள்ளது. இதில் பெட்ரோலியம், இயற்கை வாயு, மக்னீசியம், போன்ற கனிமவளங்கள் அதிகமாக உள்ளன. மேலும், பென்குயின், சிப்பி மீன்கள், திமிங்கிலம், சீல், krill என, பல்வகை மீன் வகைகள் உட்பட பத்தாயிரத்திற்கு மேற்பட்ட உயிரின வகைகளும் இப்பெருங்கடலில் வாழ்கின்றன. 2006க்கும் 2007ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், கெட்டியான மேல் ஓட்டைக் கொண்ட krill மற்றும் கடல்மீன்கள், 1,26,976 மெட்ரிக் டன்கள் அளவில் பிடிக்கப்பட்டதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. தற்போது உலகை அச்சுறுத்தி வரும் வெப்பநிலை உயர்வால், பெரிய பனிப்பாறை ஒன்று, அன்டார்டிகா பனிமலையிலிருந்து உடைந்து விழ இருக்கிறது என நாசா விண்வெளி ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து கூறியுள்ள நாசா ஆய்வாளர்கள், அன்டார்டிகாவின் ப்ரண்ட் ஐஸ் ஷெல்ஃப் (Brunt Ice Shelf) பகுதியில், இந்தப் பிளவு, அக்டோபர் 2016ம் ஆண்டில் முதன்முறையாக ஏற்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிப் பரவிய இந்தப் பிளவு, மற்றொரு பிளவைச் சந்திக்க இருக்கிறது. தற்போது இது ஆண்டுக்கு, ஏறக்குறைய நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்குப் பரவி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த இரண்டு பிளவுகளும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படிச் சந்தித்தால் 660 சதுர மைல் பரப்பளவுடைய பனிப்பாறை உடைந்து விழும். பனிமலையிலிருந்து பனிப்பாறை உடைந்து விழும் நிகழ்வு இயற்கையாகவே நடைபெறக்கூடியதுதான். ஆனால், தற்போது நடைபெறும் மாற்றங்கள் இந்தப் பகுதியில் இதற்கு முன்பு நிகழ்ந்தது இல்லை. எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். பனிப்பாறை உருகுதல் கடல் மட்ட உயர்வில் முக்கிய பங்காற்றுகின்றன. உலகப் பெருங்கடல்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பனிப்பாறை உருகும் வேகம் அதிகரித்துள்ளது. எனவே வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு குறைக்கப்படாவிட்டால், 2070ம் ஆண்டுக்குள் 25 செ.மீ அளவுக்குக் கடல் மட்ட உயர்வு ஏற்படும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

No comments:

Post a Comment