Wednesday, 6 March 2019

பூமியில் புதுமை – பழங்குடியின மக்களும் காடுகளும்

பூமியில் புதுமை – பழங்குடியின மக்களும் காடுகளும்  பானமா பூர்வீக இனத்தவர்

மலைவாழ் மக்களுடைய முக்கியமான வேலை, காடுகளைப் பாதுகாப்பதும், காடுகளுடன் இணைந்து வாழ்வதும்தான். இயற்கையுடன் தொடர்பில் உள்ள பழங்குடியின மக்கள் பற்றிய புரிதல் எல்லாருக்கும் அவசியம்
மேரி தெரேசா - வத்திக்கான்
இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றம், பழங்குடியினருக்கு எதிரான உத்தரவு ஒன்றை அண்மையில் பிறப்பித்துள்ளது. அதாவது இந்தியா முழுவதும் 16 மாவட்டங்களில் காடுகளில் வாழ்கின்ற, பட்டா இல்லாத 11 இலட்சத்திற்கும் மேற்பட்ட  பழங்குடி மக்கள், வரும் ஜூலை 27ம் தேதிக்குள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. அந்த உத்தரவு குறித்து தி இந்து நாளிதழில் இந்து குணசேகர் என்பவர், பழங்குடியினர் நலத்தில் அக்கறையுள்ள சிலரின் எண்ணங்களைப் பதிவு செய்துள்ளார்.
பகிர்வுகள்
இந்தியாவில் மலைப் பகுதியில், பழங்குடிகள், ஆதிவாசிகள் என அனைவரும் காலம்காலமாக காடுகளில் வாழ்கிறார்கள். இதில் பழங்குடிகளின் வரலாறு என்பது, ஏறக்குறைய மூவாயிரம் முதல் நான்காயிரம் ஆண்டுகள் வரையிலான பழமை வாய்ந்தது. காடுகளைப் பாதுகாப்பதும், காடுகளுடன் இணைந்து வாழ்வதும்தான் மலைவாழ் மக்களுடைய முக்கியமான வேலை. காடு இல்லை என்றால் அவர்கள் இல்லை, அவர்கள் இல்லை என்றால் காடுகள் இல்லை. வனத்துறை என்பது, மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு ஆங்கிலேயர்கள் உருவாக்கியதுதான். இவர்கள் கொண்டுவந்த அனைத்து வனச் சட்டங்களும், வனங்களை அழிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டவை. காட்டை அழிப்பதற்கு, அங்குள்ள பழங்குடி மக்களும், மலைவாழ் மக்களும் பெரும் தடையாய் இருந்தார்கள். அதனால் காட்டை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் காட்டிலுள்ள எல்லா மக்களையும் ஆக்ரமிப்பாளர்கள் என்று கூறிவிட்டனர். வன உரிமைச் சட்டம், அவர்கள் வாழும் பகுதி, அவரவர்கள் கட்டுப்பாட்டின்கீழ் வரவேண்டும் எனக் கூறுகிறது. வெளியேற்றப்படும் மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக இருக்க வேண்டியதுதான். இந்த மாதிரியான உத்தரவு இந்திய வரலாற்றில் எங்குமே வரவில்லை. பழங்குடிகள்தான் காடுகளைப் பாதுகாக்கிறார்கள், அவர்களுக்குத்தான் அதற்கான மரபு அறிவு இருக்கிறது. இதுவரை எந்தப் பழங்குடியும் காடுகளை அழித்ததாக வரலாறே கிடையாது. சில குற்றங்கள் அவர்கள் மீது இருந்தாலும், நாம் காட்டுக்குச் சென்று அவர்களைச் செய்ய வைத்திருப்போமே தவிர, அந்த மக்கள் செய்யமாட்டார்கள். எனவே பழங்குடி மக்களை காடுகளிருந்து பிரிப்பது தவறு. இன்னொன்று, முன்னேற்ற நடவடிக்கைகள் என்ற பெயரில் காடுகளை அழிப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது வேதனை தருகிறது.

No comments:

Post a Comment