Friday, 16 September 2016

செய்திகள்-16.09.16

செய்திகள்-16.09.16
-------------------------------------------------- -------------------------------------------------- -
1. ஆயர்களின் மேய்ப்புப்பணியில் இரக்கம் முதன்மை பெறவேண்டும்
2. திருத்தந்தை - 'நாளை மறுநாள்' என்பதில், கிறிஸ்தவ ஆன்மீகம்
3. திருத்தந்தையுடன், டெண்டை புத்தமதப் பிரிவின் தலைவர்
4. கர்தினால் பரோலின் - பாப்பிறை பிரதிநிதிகளின் யூபிலி மறையுரை
5. முதியோர் சார்பில் பேசிய வத்திக்கான் உயர் அதிகாரி
6. நினிவே பள்ளத்தாக்கில் கண்ணி வெடிகளை அகற்றுவது முதல் கடமை
7. அன்னை தெரேசாவின் பாரம்பரியத்தைத் தொடரும் பல்கலைக் கழகங்கள்
8. நில அபகரிப்பு குற்றங்களை விசாரிக்க பன்னாட்டு நீதிமன்றம் முடிவு
-------------------------------------------------- -------------------------------------------------- -
1. ஆயர்களின் மேய்ப்புப்பணியில் இரக்கம் முதன்மை பெறவேண்டும்
செப் .16, 2016. பாலை நிலத்தில் மோசேயைத் தேடிக் கண்டுபிடித்து, தன் மக்களின் பணிக்கென அழைத்த இறைவன், தன் அற்புதமான இரக்கத்தால், உங்கள் ஒவ்வொருவரையும் தேடி கண்டுபிடித்துள்ளார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானுக்கு வருகை தந்திருக்கும் புதிய ஆயர்களிடம் கூறினார்.
கடந்த ஈராண்டுகள் ஆயர்களாக நியமனம் பெற்றவர்கள், வத்திக்கானில் மேற்கொண்டுள்ள ஓர் அறிமுகப் பயிற்சியின் சிகரமாக, செப்டம்பர் 16, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்தித்த வேளையில், திருத்தந்தை வழங்கிய உரையில், ஆயர்கள் பெற்றுள்ள சிறப்பு அழைப்பைக் குறித்துப் பேசினார்.
இறைவன் வழங்கும் தனிப்பட்ட அழைப்பு, அவர் காட்டும் பெரும் கருணை, உண்மையான இரக்கத்தின் கதவான இயேசுவின் இதயத்தைத் தாண்டிச் செல்லுதல், ஆயர்களின் மேய்ப்புப்பணியில் இரக்கம் முதன்மை பெறுதல் ஆகிய கருத்துக்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் , புதிய ஆயர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
ஆயர்கள் மேற்கொள்ளவேண்டிய இரக்கப்பணியை தன் உரையின் மையப்பொருளாக்கிய திருத்தந்தை, அப்பணியைத் திறம்பட ஆற்ற மூன்று பரிந்துரைகளை முன்வைத்தார்.
தன் வாழ்வு முழுவதும் தவறுகளையே செய்துவந்த குற்றவாளி, கல்வாரியில், சிலுவையில் தொங்கிய இயேசுவிடம் "குற்றம் ஒன்றும் காணாமல், நல்லதையே கண்டதுபோல்" (காண்க. லூக்கா 23, 41), ஆயர்களின் நன்மைத்தனத்தால், அனைவரும் அவர்கள்பால் ஈர்க்கப்படவேண்டும் என்பதை, திருத்தந்தை தன் முதல் பரிந்துரையாகக் கூறினார்.
அக்கறையின்றி, தூரமாய் இருக்கும் இறைவனை நாம் மறந்துவிடலாம். ஆனால், நம் வாழ்வில் ஈடுபட்டு, நமக்காகத் துன்பங்களைத் தாங்கும் இறைவனை அலட்சியம் செய்யமுடியாது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார் .
இயேசு தன் சீடர்களுக்கு இறையரசைக் குறித்து விளக்கியபோது காட்டிய பொறுமையை, ஆயர்கள் தங்கள் மக்களிடம் காட்டவேண்டும் என்பது, திருத்தந்தை முன்வைத்த இரண்டாம் பரிந்துரையாக இருந்தது.
தாங்கள் பின்பற்ற இயலாத புண்ணியப் பாதையில், தங்கள் மந்தைகளை ஆயர்கள் அனுப்ப முயல்வது பயனளிக்காது என்று கூறியத் திருத்தந்தை , குறிப்பாக, தங்கள்வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அருள் பணியாளர்கள், அருள்பணிக்கென பயிற்சி பெறுவோர் ஆகியோரிடம் மிகுந்த பொறுமையும் பரிவும் கொண்டிருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .
ஆயர்கள் கொண்டிருக்கவேண்டிய இரக்கத்திற்கு, நல்ல சமாரியரை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறி, இரக்கம், தொடர்ந்து பெருக்கெடுத்த வண்ணம் இருக்கவேண்டும் என்பதை, தன் மூன்றாவது பரிந்துரையாக புதிய ஆயர்களிடம் கூறினார், திருத்தந்தை.
எரிகோவுக்குச் செல்லும் வழியில் அடிபட்டிருந்தவரைக் கண்ட சமாரியர், செயலில் இறங்கியது மட்டுமல்லாமல், தன் இரக்கச் செயலை முழுமையாக நிறைவேற்றினார் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அத்தகைய இரக்கம் ஆயர்களுக்கு இயல்பாகத் தோன்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பல வழிகளில் காயப்பட்டிருக்கும் குடும்பங்களை தனிப்பட்ட முறையில் தன் உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை , குடும்பங்களில் உள்ள காயங்களைக் கண்டு, ஆயர்கள் விலகிச் செல்லாமல் இருக்கவேண்டும் என்று விண்ணப்பித்தார்.
ஒரு மேய்ப்பராக, தந்தையாக, சகோதரராக ஆயர்களாகிய நாம் விளங்க, இறைவனின் ஆசீரை வேண்டுவோம் என்று, திருத்தந்தை புதிய ஆயர்களுக்கு வழங்கிய உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.
ஆதாரம்: வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை - 'நாளை மறுநாள்' என்பதில், கிறிஸ்தவ ஆன்மீகம்
செப் .16, 2016. இன்றைய நாள் என்ற எண்ணத்தில் கிறிஸ்தவ ஆன்மீகம் மூடப்பட்டுவிடக்கூடாது; மாறாக, 'நாளை மறுநாள்' என்பதை எதிர்பார்த்து காத்திருப்பது நமது ஆன்மீகம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் , இவ்வெள்ளி காலை நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றினார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை , திருத்தூதர் பவுல், கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தை மையப்படுத்தி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
இறந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை மீண்டும், மீண்டும் சிந்திக்க முயலும் நாம், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கத் தயங்குகிறோம் என்று, தன் மறையுரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை.
'நாளை மறுநாள்' என்ற எண்ணம், இயேசுவின் உயிர்ப்புடன் தொடர்புகொண்டது என்பதை விளக்கிக்கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்த்தபின்னர் சீடர்களைச் சந்தித்த இயேசு, அவர்களிடம் தன்னைத் தொடுமாறு அழைத்ததைப் போலவே, நம்மையும் அந்த அனுபவம் பெற அழைக்கிறார் என்று கூறினார்.
இயேசுவைத் தொடுவது, நமக்குள் பெரும் மாற்றங்களை உருவாக்கும் என்ற அச்சத்தால், நாம் இந்த முயற்சியை மேற்கொள்ளத் தயங்குகிறோம் என்று கூறியத் திருத்தந்தை, உயிர்த்த இயேசுவைத் தொட்டு, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர் கொண்டு, நமது வாழ்வை மாற்றியமைக்கும் வரத்தை வேண்டுவோம் என்று தன் மறையுரையை நிறைவு செய்தார் .
ஆதாரம்: வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தையுடன், டெண்டை புத்தமதப் பிரிவின் தலைவர்
செப் .16, 2016. "ஆண்டவருக்கு முன் தங்களையேத் தாழ்த்துவோர், அவரது பெரும் இரக்கத்தைச் சுவைக்கமுடியும்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டன.
இவ்வெள்ளி காலையில், டெண்டை (டென்டாய்) புத்தமதப் பிரிவின் தலைவர், வணக்கத்திற்குரிய Koei Morikawa அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
ஜப்பான் நாட்டில், 8 ம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட டெண்டை புத்தமதப் பிரிவின் 257 வது தலைவராக, 91 வயது நிரம்பிய Morikawa அவர்கள் பணியாற்றுகிறார்.
மேலும், பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில், இவ்வாண்டு ஜூலை 14 ம் தேதி கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே ஒரு லாரியை ஒட்டிச்சென்று , மக்களைக் கொன்ற அந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 24, அடுத்த சனிக்கிழமையன்று, வத்திக்கானில் சந்திப்பார் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
அவ்வண்ணமே, செப்டம்பர் 25, ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் மறைக்கல்வி ஆசிரியர்களின் யூபிலியையொட்டி, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், காலை 10.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலி நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: வத்திக்கான் வானொலி
4. கர்தினால் பரோலின் - பாப்பிறை பிரதிநிதிகளின் யூபிலி மறையுரை
செப் .16, 2016 'சிலுவையின் அடியில் நிற்பது, பாப்பிறை பிரதிநிதிகளின் முதன்மையானப் பணி' என்று திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இவ்வியாழன் ஆற்றிய ஒரு மறையுரையில் கூறினார்.
நடைபெறும் இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஓர் அங்கமாக, செப்டம்பர் 15, இவ்வியாழன் முதல், 17, இச்சனிக்கிழமை முடிய வத்திக்கானில் நடைபெறும் பாப்பிறை பிரதிநிதிகளின் யூபிலி கொண்டாட்டத்தின் துவக்கத் திருப்பலியை , வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவேற்றிய கர்தினால் பரோலின் அவர்கள் , இவ்வாறு கூறினார்.
மன்னன் நெப்போலியனால் திருஅவைக்கு ஏற்பட்ட துன்பங்களின் நினைவாக, திருத்தந்தை 7 ம் பயஸ் அவர்கள், துயருறும் அன்னை மரியா திருநாளை திருஅவை கொண்டாட்டங்களில் ஒன்றாக இணைத்தார் என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள் , இன்றும், திருஅவை பல்வேறு கல்வாரிகளைச் சந்தித்து வருவதால், இந்த விழா பொருள் நிறைந்ததாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
நாம் வாழும் 21 ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்கத் திருஅவை, மறைசாட்சிகளின் திருஅவையாக இருப்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி நினைவுறுத்தி வருகிறார் என்பதை எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள் , பிரான்ஸ் நாட்டில் கொலையுண்ட அருள்பணி ஜாக் ஹமேல் அவர்களுக்காக செப்டம்பர் 14 ம் தேதி திருத்தந்தை நிறைவேற்றியத் திருப்பலியைக் குறித்துப் பேசினார்.
இறைமகன் இயேசு மரணத்தை நெருங்கியபோது, உலகம் இருளால் சூழப்பட்டது என்றாலும், அந்த இருளின் நடுவில், சிலுவையடியில் மரியன்னை நின்று கொண்டிருந்தது, நம்பிக்கை ஒளியைத் தரும் ஒரு வாக்கியமாக விவிலியத்தில் விளங்குகிறது என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் .
இன்று நம்மீது சுமத்தப்படும் பல சிலுவைகளின் அடியில் நிற்பது, பாப்பிறை பிரதிநிதிகளுக்கு விடுக்கப்படும் ஒரு சிறப்பான அழைப்பு என்பதை திருப்பீடச் செயலர் வலியுறுத்திக் கூறினார் .
ஆதாரம்: வத்திக்கான் வானொலி
5. முதியோர் சார்பில் பேசிய வத்திக்கான் உயர் அதிகாரி
செப் .16, 2016. வயதின் அடிப்படையில் மனித சமுதாயம் சந்திக்கும் மாற்றங்களின் ஒரு முக்கிய அம்சமாக , வயதானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது நமது கடமை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார் .
ஜெனீவாவில் நிகழும் ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் இவான் Jurkovi C அவர்கள், செப்டம்பர் 14, இப்புதனன்று நடைபெற்ற மனித உரிமை அவையின் 33 வது அமர்வில், வயது முதிர்ந்தோர் சார்பில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
தற்போதைய உலகில், வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை வளர்ந்துவருவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் Jurkovi C அவர்கள், இந்த நிலை தொடர்ந்தால், 2050 ம் ஆண்டில், 15 வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கையை விட, வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்பதை எடுத்துரைத்தார்.
தற்போது 90 கோடியாக இருக்கும் வயது முதிர்ந்தோர் எண்ணிக்கை, 2050 ம் ஆண்டு 200 கோடியாக உயரும் என்ற புள்ளிவிவரத்தைச் சுட்டிக்காட்டிய பேராயர் Jurkovi C அவர்கள், இந்நிலையில், வயது முதிர்ந்தோரின் நலவாழ்வு, பணியாற்றும் உரிமை, சமுதாயப் பாதுகாப்பு ஆகிய தேவைகளை நாம் நிறைவேற்றும் வழிகளை, தற்போதிருந்தே தேடவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
வறுமைப்பட்ட முதியோரின் நிலை ஒவ்வோர் ஆண்டும் மோசமாகிவருவதை தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் Jurkovi C அவர்கள், முதியோரில் பாதிக்குப் பாதி பேர், ஓய்வூதியமோ, குடும்ப ஆதரவோ இல்லாமல் வாழ்வதையும் எடுத்துரைத்தார்.
திறமையுள்ளவராக, பயனுள்ளவராக இருப்பதை மட்டுமே வலியுறுத்தும் இன்றைய உலகில், முதியோர், பயனற்றவர்கள் என்ற எண்ணம் வளர்ந்துவருவது ஆபத்தான ஒரு போக்கு என்று, திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் Jurkovi C அவர்கள், கவலையை வெளியிட்டார்.
ஆதாரம்: வத்திக்கான் வானொலி
6. நினிவே பள்ளத்தாக்கில் கண்ணி வெடிகளை அகற்றுவது முதல் கடமை
செப் .16, 2016. ஈராக்கின் நினிவே பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து நகரங்களையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன் , அப்பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தடி கண்ணி வெடிகளை அகற்றுவது முதல் கடமை என்று , கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் விண்ணப்பம் விடுத்துள்ளார்.
புனிதப் போர் நிகழ்த்துவதாகக் கூறும் அடிப்படைவாதிகள், ஒரு நகரில் தோல்வியடைந்து வெளியேறும் நிலையில், அந்நகரில் கண்ணி வெடிகளை புதைத்துவிட்டுச் செல்வதால், மரணங்களை தொடர்ந்து விதைத்துவிட்டுச் செல்கின்றனர் என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் , ஆசிய செய்திக்கும், பீதேஸ் செய்திக்கும் அனுப்பிய ஒரு மடலில் குறிப்பிட்டுள்ளார்.
தரைமட்டமாக்கப்பட்டுள்ள மோசூல் மற்றும் ஏனைய நகரங்களில், மருத்துவ மனைகளையும், பள்ளிகளையும் கட்டுவது அவசியம் என்றாலும், அதற்கு முன்னதாக, அங்குள்ள கண்ணி வெடிகளை அகற்றி, அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வது மிக அவசியம் என்று முதுபெரும் தந்தையின் மடல் வலியுறுத்துகிறது .
நினிவே பள்ளத்தாக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட 1, 20, 000 த்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், மீண்டும் அங்கு குடியேற ஆவல் கொண்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் , அப்பகுதியின் பாதுகாப்பு உறுதியான பிறகே, மக்கள் அங்கு நுழைவது நல்லது என்று கூறியுள்ளார்.
மீண்டும் வாழவரும் குழந்தைகளை மனதில் கொண்டு, கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள நிலத்தில் அவர்கள் காலடி பதிக்கக் கூடாது என்ற கருத்துடன் , தானும் பல்வேறு நாடுகளின் உதவியை நாடியிருப்பதாக முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் , தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரம்: AsiaNews / வத்திக்கான் வானொலி
7. அன்னை தெரேசாவின் பாரம்பரியத்தைத் தொடரும் பல்கலைக் கழகங்கள்
செப் .16, 2016. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இயங்கிவரும் மூன்று பல்கலைக் கழகங்கள், அன்னை தெரேசா அவர்கள் துவங்கிய சமூகப்பணி பாரம்பரியத்தைத் தொடர்வதற்கு முடிவு செய்துள்ளன என்று , அப்பகுதியில் தொடர்பு சாதனத் துறையில் பணியாற்றும் சலேசிய அருள்பணி சி.எம்.பால் அவர்கள் , பீதேஸ் (Fides செய்தி) செய்தியிடம் கூறினார்.
அன்னை தெரேசா அவர்கள் இவ்வுலகிலிருந்து மறைந்து ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் , அவர் விட்டுச்சென்ற உன்னத எண்ணங்கள் , இளையோரை மட்டுமல்லாமல் , கல்வியாளர்களையும் கவர்ந்து வருவது நம்பிக்கை தரும் ஓர் அடையாளம் என்று அருள்பணி பால் அவர்கள் கூறினார்.
அன்னையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி , சமுதாய அக்கறை கொண்ட மாணவ சமுதாயத்தை உருவாக்க பல்வேறு அம்சங்களை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தி வருகிறோம் என்று , குவஹாத்தி பல்கலைக் கழக துணை வேந்தர் , Mridul Hazarika அவர்கள் கூறியுள்ளார்.
வடகிழக்கு இந்தியாவின் , குவஹாத்தி பல்கலைக் கழகம் , திப்ருகாரே ( Dibrugarhe) பல்கலைக் கழகம் , மற்றும் , காட்டன் கல்லூரி மாநில பல்கலைக் கழகம் ஆகிய மூன்று கல்வி நிலையங்கள் , இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று பீதேஸ் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி
8. நில அபகரிப்பு குற்றங்களை விசாரிக்க பன்னாட்டு நீதிமன்றம் முடிவு
செப்.16 , 2016. போர் காலத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரித்துவந்த பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் , அமைதிக் காலத்தின்போது நிகழ்த்தப்படும் சுற்றுச்சூழல் அழிப்பு , மற்றும் , நில-அபகரிப்பு போன்றவற்றையும் கருத்தில் கொண்டு , அவற்றை தனது அதிகார வரம்பிற்குள் கொணர்ந்து , விசாரணைகள் நடத்த திட்டமிட்டுள்ளது .
இத்தகையக் குற்றங்களை ஒரு பன்னாட்டு நீதிமன்றம் , தன் அதிகார வரம்பிற்குக் கீழ் கொண்டு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும் என்பதால் , இந்த முடிவை வரவேற்கும் ஆதரவாளர்கள் இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நடவடிக்கை என தெரிவித்துள்ளனர்.
தற்போது தனியார்துறையின் முதலீட்டாளர்கள் ஏழை நாடுகளில் இரகசியமாக நிலங்களை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் , உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்படும் நிலை உள்ளது.
பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த முயற்சி பலனளிப்பதற்கு , இந்த நீதிமன்றத்துடன் தொடர்பு கொண்டுள்ள நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படும் , அப்போதுதான் , இது போன்ற செயல்களை தடுக்கும் ஒரு வழியாக , பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் செயல்பட முடியும் என்று பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment