Friday 16 September 2016

செய்திகள்-15.09.16

செய்திகள்-15.09.16
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: எந்நிலையிலும் நமக்கொரு தாய் இருக்கிறார்

2. இலத்தீன், கீழை வழிபாட்டு முறை திருஅவைகளில் விதிமுறை மாற்றங்கள்

3. திருத்தந்தையைச் சந்தித்த ஐக்கிய அரபு குடியரசுகளின் இளவரசர்

4. இத்தாலிய விவிலியக் கழகத்தினரைச் சந்தித்த திருத்தந்தை

5. வத்திக்கானில் பாப்பிறை பிரதிநிதிகளின் யூபிலி துவக்கம்

6. இத்தாலியில் கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் சந்திப்பு

7. பக்ரீத் விழாவையொட்டி இந்திய ஆயர்களின் வாழ்த்துக்கள்

8. மரணதண்டனையை மீண்டும் கொணர்வதை எதிர்த்து ஆயர்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: எந்நிலையிலும் நமக்கொரு தாய் இருக்கிறார்

செப்.15,2016. அனாதையாக்கப்படும் உணர்வு மேலோங்கியிருக்கும் இன்றைய உலகில், நம்முடன் துணை வர ஒரு தாய் தேவை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கினார்.
செப்டம்பர் 15, இவ்வியாழனன்று, துயருறும் அன்னை மரியா திருவிழாவின் திருப்பலியை நிகழ்த்தியத் திருத்தந்தை, இன்றைய விழா நம்மை கல்வாரிக்கு, இயேசுவின் காலடிக்கு அழைத்துச் செல்கிறது என்று குறிப்பிட்டார்.
ஏனைய சீடர்கள் அனைவரும் தப்பித்து ஓடிவிட்ட நிலையில், புனித யோவான் மட்டும் இயேசுவின் தாயோடு சிலுவைக்கடியில் நின்றார் என்பதை, தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, தன் மகனைப் பற்றி சொல்லப்பட்ட அத்தனை அவதூறான சொற்களையும் தன் காதுபடக் கேட்ட அத்தாய், மகன் மீது முழு நம்பிக்கை கொண்டு, சிலுவைக்கடியில் அவருக்குத் துணையாக நின்றார் என்று எடுத்துரைத்தார்.
தான் புவனஸ் அயிரெஸ் பேராயராகப் பணியாற்றியபோது, சிறைக்கைதிகளைச் சந்திக்கச் சென்ற அனுபவத்தை தன் மறையுரையில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குற்றவாளியென முத்திரை குத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்கள் மகன்களைக் காணக் காத்திருந்த அன்னையரை, மரியன்னைக்கு ஒப்புமைப்படுத்திப் பேசினார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் அனாதைகள் அல்ல, எந்த ஒரு துயரத்திலும் அன்னை மரியாவின் அரவணைப்பு நமக்கு உண்டு என்பதை, பல ஆன்மீக அறிஞர்கள் நமக்குக் கூறியுள்ளனர் என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
அனாதையாக்கப்பட்ட உணர்வால் அலைக்கழிக்கப்படும் இவ்வுலகில், நமக்கென ஒரு தாய் இருக்கிறார்; தவறுகளால் நாம் வெட்கமடைந்தாலும், நம்மருகே மரியன்னை எப்போதும் இருக்கிறார் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்வோமாக என்று, திருத்தந்தை, தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. இலத்தீன், கீழை வழிபாட்டு முறை திருஅவைகளில் விதிமுறை மாற்றங்கள்

செப்.15,2016. அருள் அடையாளங்களைப் பொருத்தவரை, இலத்தீன் வழிபாட்டு முறையைப் பின்பற்றுவோருக்கும், கீழை வழிபாட்டு முறையைப் பின்பற்றுவோருக்கும் இடையே நிலவும் வேறுபாடுகள், ஐயங்கள் ஆகியவற்றைத் தீர்க்கும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வகுத்துள்ள ஒரு சில விதிமுறை மாற்றங்கள், இவ்வியாழனன்று வெளியிடப்பட்டன.
இலத்தீன் மற்றும் கீழை வழிபாட்டு முறை திருஅவைகளில் பின்பற்றப்படும் திருஅவை சட்டங்கள் சிலவற்றில் மாற்றங்களைக் கொணர்ந்து, Motu Proprio எனப்படும் தன் சுயவிருப்பத்தின் அடிப்படையில் திருத்தந்தை எழுதியுள்ள மடலை, திருப்பீடம் இவ்வியாழனன்று வெளியிட்டது.
ஓரிடம்விட்டு, வேற்றிடம் செல்லும் கட்டாயம் அதிகரித்துவிட்ட இன்றைய உலகில், இலத்தீன் வழிபாட்டு முறையைப் பின்பற்றுவோர் மத்தியில், கீழைவழிபாட்டு முறையைப் பின்பற்றுவோர் வாழவேண்டியிருப்பதால், ஒரு சில மாற்றங்களை எண்ணிப் பார்க்க, தான் விழைவதாக திருத்தந்தை அவர்கள், இம்மடலின் துவக்கத்தில் கூறியுள்ளார்.
திருமுழுக்கு பெறும் குழைந்தையின் பெற்றோர், வெவ்வேறு வழிபாட்டு முறைகளைச் சேர்ந்தவர்கள் எனில், அவர்களது குழந்தை, தந்தை பின்பற்றும் வழிபாட்டு முறையில் திருமுழுக்கு பெறவேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
மேலும், அக்குழந்தை, 14 வயது நிறைந்தபின், இலத்தீன் வழிபாட்டு முறையிலோ, வேறு வழிபாட்டு முறையிலோ திருமுழுக்கு பெற விரும்பினால், அந்த விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாற்றம் ஒன்றைக் கொணர்ந்துள்ளார்.
இதேவண்ணம், ஏனைய அருளடையாளங்களைப் பெறுவதிலும் நிலவிவரும் ஒரு சில ஐயங்களை நீக்கும் வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 11 விதிகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தி, தன் மடலை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தையைச் சந்தித்த ஐக்கிய அரபு குடியரசுகளின் இளவரசர்

செப்.15,2016. ஐக்கிய அரபு குடியரசுகளின் இளவரசர், Mohammed Bin Zayed bin Sultan Al-Nahyan அவர்களை, இவ்வியாழன் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில் இளவரசர் Al-Nahyan அவர்களுடன், மூன்று பெண்கள் உட்பட, 10 பேர் அடங்கிய ஒரு குழு பங்கேற்றது. இச்சந்திப்பிற்குப் பின், இக்குழுவினர், திருப்பீடச் செயலகத்திற்கும் சென்றனர்.
ஐக்கிய அரசு குடியரசுகளின் இளவரசர், Al-Nahyan அவர்கள், ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்ட, பலவண்ணம் கொண்ட, அழகான கம்பளம் ஒன்றை, பரிசாக அளித்தார். அந்தக் கம்பளம் நெய்யும் பிறரன்பு நிறுவனத்திற்கு, தன் மகளே பொறுப்பானவர் என்று இளவரசர் திருத்தந்தையிடம் விளக்கினார்.
திருத்தந்தையும், அமைதியைக் குறிக்கும் பதக்கம் ஒன்றை, இளவரசருக்குப் பரிசாக அளித்தார்.
மேலும், "இன்றைய மனித சமுதாயத்தை சந்திப்பதற்கு, இவ்வுலகின் வழிகளில் இயேசுவுடன் நடக்க திருஅவை அழைக்கப்பட்டுள்ளது" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் காணப்பட்டன.
"இயேசு சிலுவையிலிருந்தும், மரியா, சிலுவையின் அடியிலிருந்தும் வழங்கிய மன்னிப்பு எவ்வளவு பரந்து விரிந்ததோ, அதைப்போன்று, திருஅவையின் மன்னிப்பும் அமையவேண்டும்" என்ற செய்தி, திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், செப்டம்பர் 14, திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாளன்று வெளியானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. இத்தாலிய விவிலியக் கழகத்தினரைச் சந்தித்த திருத்தந்தை

செப்.15,2016. இறைவனின் சாயலில் நாம் உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரும்போது, அதே இறைவனால் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து மனிதர்கள் மீதும் நம் மதிப்பு கூடுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னை சந்திக்க வந்திருந்த விவிலிய அறிஞர்களிடம் கூறினார்.
இத்தாலிய விவிலியக் கழகம், உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள தேசிய விவிலிய வாரத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை, இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, ஆண், பெண் உறவு குறித்து அவர்கள் மேற்கொண்ட கருத்துப் பரிமாற்றங்கள் தெளிவைத் தரும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
"மானிடரை நம் சாயலில் உருவாக்குவோம்: விவிலியத்தில் ஆண், பெண் என்ற பாலின துருவங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தைப் போலவே, புனித இரண்டாம் ஜான் பாலும், தானும், மறைக்கல்வி உரைகளில் கருத்துக்கள் பகிர்ந்துகொண்டதை திருத்தந்தை தன் உரையில் கூறினார்.
மானிடரை இறைவன் உருவாக்கியபோது, வெறும் வார்த்தைகளைக் கொண்டு மட்டும் உருவாக்கவில்லை, மாறாக, தன் கரங்கள், மூச்சுக் காற்று இவற்றைப் பயன்படுத்தி உருவாக்கினார் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் முழுமையான ஈடுபாட்டுடன் மனிதர்கள் உருவாகியிருப்பது, நமக்கு தனியொரு மதிப்பைத் தருகிறது என்று கூறினார்.
இறைவனுக்கும், அவரால் உருவாக்கப்பட்ட மனிதர்களுக்கும் உரிய மதிப்பைத் தர மறுக்கும்போது, பொன்னாலும், வெள்ளியாலும் ஆன மற்ற போலி தெய்வங்களை வழிபடும் தவறான பாதைக்கு நாம் செல்கிறோம் என்று, தன் உரையில் வலியுறுத்தினார், திருத்தந்தை.
இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் தந்திருக்கும் மாண்பை, நாம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் போதுதான், அவரது படைப்பு என்ற முழு நிறைவை நாம் அடைகிறோம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. வத்திக்கானில் பாப்பிறை பிரதிநிதிகளின் யூபிலி துவக்கம்

செப்.15,2016. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, செப்டம்பர் 15, இவ்வியாழன் முதல், 17 இச்சனிக்கிழமை முடிய, பாப்பிறை பிரதிநிதிகளின் யூபிலி வத்திக்கானில் நடைபெறுகிறது.
திருப்பீடத்தின் தூதர்களாக உலகின் பல நாடுகளில் பணியாற்றும் பிரதிநிதிகள், மற்றும் ஐ.நா. போன்ற உலக அவைகளில் திருப்பீடத்தின் சார்பாகப் பணியாற்றும் பிரதிநிதிகள் இணைந்துவந்து கொண்டாடும் யூபிலி இது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகில் 103 திருப்பீடத் தூதர்கள் மற்றும், உலக அவைகளில் பணியாற்றுவோர் 5 பேர் என, திருப்பீடத்தின் பிரதிநிதிகளாக உலகெங்கும் பணியாற்றும் 108 ஆயர்களில், இருவரைத் தவிர, ஏனைய 106 ஆயர்கள் இந்த யூபிலியைக் கொண்டாட வத்திக்கானுக்கு வருகை தந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
செப்டம்பர் 15, இவ்வியாழன் காலை 8 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காவின் ஒரு சிற்றாலயத்தில் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் ஆற்றிய திருப்பலியுடன் இந்த யூபிலி கொண்டாட்டம் துவங்கியது.
செப்டம்பர் 16, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தின் தூதர்களாகப் பணியாற்றுவதில் உள்ள சவால்கள், பலசமய உரையாடல், குறிப்பாக, இஸ்லாம் சமயத்துடன் உறவு போன்ற தலைப்புக்களில் விவாதங்கள் நடைபெறும்.
செப்டம்பர் 17, இச்சனிக்கிழமை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் முன்னாள் திருத்தூதர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றுவார்.
யூபிலியைக் கொண்டாடும் பாப்பிறை பிரதிநிதிகள் அனைவரும், இச்சனிக்கிழமை, 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காவின் புனிதக் கதவு வழியே நுழைந்து, பசிலிக்கா பேராலயத்தின் ஒரு பகுதியில் திருத்தந்தையால் வரவேற்கப்படுவர் என்றும், மதியம் 1 மணிக்கு, அனைவரும் இணைந்து சாந்தா மார்த்தா இல்லத்தில் விருந்துண்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, நவம்பர் 18ம் தேதி, வத்திக்கானில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுடனும், திருத்தந்தை, யூபிலி ஆண்டைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. இத்தாலியில் கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் சந்திப்பு

செப்.15,2016. கத்தோலிக்கத் திருஅவைக்கும், ஆர்த்தடாக்ஸ் திருஅவைக்கும் இடையே உரையாடலை வளர்க்கும் ஒரு முயற்சியாக, செப்டம்பர் 15, இவ்வியாழன் முதல், 22, வருகிற வியாழன் முடிய, இத்தாலியின் கியேத்தி (Chieti) எனுமிடத்தில் 16வது அகில உலக ஒருங்கிணைந்த அவையின் கூட்டம் நடைபெறுகிறது.
கிறிஸ்தவ ஒன்றிப்பு தீருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோச் (Kurt Koch) அவர்களும், கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையின் சார்பில், தெல்மெஸோஸ் பேராயர், Job Getcha அவர்களும் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டம், Chieti-Vasto உயர் மறைமாவட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"திருஅவையின் ஒன்றிப்பை நோக்கியப் பணியில், சமத்துவம், முதன்மை ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல்" என்ற தலைப்பில் இந்த ஒருவாரக் கூட்டம் நடைபெறுகிறது.
அகில உலக ஒருங்கிணைந்த அவையின் கூட்டம், 2014ம் ஆண்டு, ஜோர்டன் நாட்டின் அம்மானிலும், 2015ம் ஆண்டு, உரோம் நகரிலும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. பக்ரீத் விழாவையொட்டி இந்திய ஆயர்களின் வாழ்த்துக்கள்

செப்.15,2016. செப்டம்பர் 13, இச்செவ்வாயன்று, இஸ்லாம் சமயத்தினர் பக்ரீத் விழாவைக் கொண்டாடிய வேளையில், இந்திய ஆயர் பேரவையின் சார்பில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வழங்கப்பட்டன.
"ஆபிரகாமின் அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல், தன் மகனையே பலிதரும் அளவு அவர் கொண்டிருந்த தியாக உணர்வு ஆகியவற்றைக் கொண்டாடும் பக்ரீத் திருநாளன்று, அவரது மனம், இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே ஓர் உந்து சக்தியாக இருக்கட்டும்" என்ற வார்த்தைகள் அடங்கிய வாழ்த்து அறிக்கையை, இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர், ஆயர் தியடோர் மஸ்கரேனஸ் அவர்கள் அனுப்பினார்.
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் மத நம்பிக்கைகளின் வழி நடப்பதையும், உடன் பிறந்த உணர்வை வளர்ப்பதையும் இந்த விழா நமக்கு நினைவுறுத்தட்டும் என்று ஆயர் மஸ்கரேனஸ் அவர்களின் வாழ்த்து வலியுறுத்தியது.
இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்ட பக்ரீத் விழா, ஊரடங்கு சட்டம் அமலில் இருந்த காஷ்மீர் மாநிலத்திலும், பெங்களூரு நகரத்திலும் கொண்டாடப்பட்டது என்று, UCAN செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

8. மரணதண்டனையை மீண்டும் கொணர்வதை எதிர்த்து ஆயர்கள்

செப்.15,2016. பிலிப்பீன்ஸ் நாட்டில் மரண தண்டனையை மீண்டும் கொணர்வதற்கு அந்நாட்டின் பாராளு மன்றம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, பிலிப்பீன்ஸ் ஆயர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சட்டங்களில் திருத்தங்களைக் கொணர்வதற்கு அதிகாரம் பெற்றுள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும், குறிப்பாக, கிறிஸ்தவத் தலைவர்களையும், இந்த மாற்றத்திற்கு ஆதரவு வழங்காமல் இருக்குமாறு ஆயர்கள் இப்புதனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.
மனித உயிருக்கு அடிப்படையில் இருக்கும் மாண்பையும், நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் வகுத்துள்ள திட்டங்களையும் நிர்மூலமாக்கும் ஒரு வழியாக, மரண தண்டனை இருக்கிறது என்று, ஆயர்கள் தங்கள் விண்ணப்பத்தில் கூறியுள்ளனர்.
அனைத்து மனிதர்களும், அவர்கள் குற்றம் புரிந்தவரே ஆனாலும், வாழ்வதற்கு உரிமை பெற்றவர்கள்; அந்த வாழ்வைப் பறிக்கும் உரிமை எந்த மனித அமைப்பிற்கும் கிடையாது என்று ஆயர்களின் அறிக்கை வலியுறுத்துகிறது.
பிலிப்பீன்ஸ் நாட்டில், 2006ம் ஆண்டு, மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்று UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment