Wednesday, 7 September 2016

செய்திகள்-07.09.16

செய்திகள்-07.09.16
------------------------------------------------------------------------------------------------------

1. அடுத்த இரு மாதங்களில் திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகள்

2. திருத்தந்தையின் உரைகள் அடங்கிய இரண்டாவது தொகுப்பு

3. ஞானமும், கருணையும் - பல்கலைக் கழகங்களின் யூபிலி

4. சிறைப்பட்டோருக்கு வழங்கப்படும் பணி, கலாச்சார அளவு கோல்

5. புனித அன்னை தெரேசா தொடர்ந்து பாடங்கள் புகட்டி வருகிறார்

6. புனித அன்னை தெரேசாவைப் பற்றி, பூனே ஆயர் தாமஸ் தாப்ரே

7. கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் இணைந்து மேற்கொள்ளும் வழிபாடுகள்

8. சீனாவின் விமான நிலையங்களில் சிற்றாலயங்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. அடுத்த இரு மாதங்களில் திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகள்

செப்.07,2016. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருவழிபாட்டு நிகழ்வுகள், மற்றும் அவர் மேற்கொள்ளும் பயணங்கள் குறித்த விவரங்களை, வத்திக்கான் திருவழிபாட்டுத் துறையின் தலைவர், அருள்பணி குயிதோ மரினி அவர்கள் வெளியிட்டுள்ளார்.
செப்டம்பர் 25, ஞாயிறன்று, மறைக்கல்வி ஆசிரியர்களுக்கென குறிக்கப்பட்டுள்ள யூபிலியையொட்டி, காலை 10.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றுவார்.
செப்டம்பர் 30 வெள்ளி முதல், அக்டோபர் 2, ஞாயிறு முடிய, ஜார்ஜியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கு திருத்தூது பயணம் மேற்கொள்கிறார், திருத்தந்தை.
மரியாவின் யூபிலி என்ற கொண்டாட்டத்தையொட்டி, அக்டோபர் 8ம் தேதி, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு புனித பேதுரு வளாகத்தில் திருவிழிப்பு வழிபாட்டை தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்தநாள் ஞாயிறன்று, அதே வளாகத்தில், காலை 10.30 மணிக்கு திருப்பலி நிகழ்த்துவார்.
அக்டோபர் 16ம் தேதி ஞாயிறு, காலை 10.15 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெறும் சிறப்புத் திருப்பலியில், அருளாளர்களான Salomone Leclercq, José Sanchez del Rio, Manuel González García, Lodovico Pavoni, Alfonso Maria Fusco, José Gabriel del Rosario Brochero, மற்றும் மூவொரு இறைவனின் Elisabeth ஆகிய எழுவரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதர்களாக அறிவிக்கிறார்.
1517ம் ஆண்டு, மார்ட்டின் லூத்தர் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து பிரிந்து, Protestant Reformation என்ற அமைப்பை உருவாக்கியதன் 500ம் ஆண்டு துவக்கத்தை, லூத்தரன் சபையினரோடு இணைந்து சிறப்பிக்க, அக்டோபர் மாத இறுதி நாளன்றும், நவம்பர் மாத முதல் தேதியன்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுவீடன் நாட்டிற்கு திருத்தூது பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
சிறைப்பட்டோரின் யூபிலியையும், வீடற்றோர் யூபிலியையும் சிறப்பிக்கும் விதமாக, நவம்பர் 6ம் தேதி, மற்றும் 13ம் தேதி ஆகிய இரு ஞாயிறுகளில் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் காலை 10 மணிக்கு திருப்பலியை தலைமையேற்று நிகழ்த்துவார் திருத்தந்தை.
நவம்பர் 20, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதி நிகழ்வாக, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் காலை 10 மணிக்கு திருப்பலியாற்றும் திருத்தந்தை, திருப்பலியின் இறுதியில், புனிதக் கதவை மூடி, இந்தப் புனித ஆண்டை முடிவுக்குக் கொணர்வார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையின் உரைகள் அடங்கிய இரண்டாவது தொகுப்பு

செப்.07,2016. நாம் மனம் வருந்தும்போது, இறைவன் எப்போதும் நம்மீது பரிவு கொள்கிறார்என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியிடப்பட்டன.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரைகள், புதன் மறைக்கல்வி உரைகள், மூவேளை செப உரைகள், மற்றும், ஏனைய நாடுகளில் அவர் வழங்கிய உரைகள், இன்னும், அவர் எழுத்து வடிவில் வெளியிட்ட செய்திகள் ஆகியவற்றின் தொகுப்பு ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
வத்திக்கான் வெளியீட்டகத்தின் முயற்சியால் வெளியாகியுள்ள இந்த இரண்டாவது நூலில், 2014ம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய திருத்தந்தை வழங்கிய உரைகளும், செய்திகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
தென் கொரியாவில் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்டு வழங்கிய உரைகள், மற்றும் அல்பேனியா, துருக்கி ஆகிய நாடுகளில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்களில் வழங்கிய உரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
மேலும், FAO எனப்படும் உலக உணவு மற்றும் வேளாண்மை மையத்தில் 2014ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி வழங்கிய உரையும், நவம்பர் 25ம் தேதி, Strasbourg நகரில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய உரையும் இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. ஞானமும், கருணையும் - பல்கலைக் கழகங்களின் யூபிலி

செப்.07,2016. செப்டம்பர் 7, இப்புதன் முதல், 10, இச்சனிக்கிழமை முடிய, பல்கலைக் கழகங்களின் யூபிலியும், ஆசிரியர்களின் 13வது பன்னாட்டு கருத்தரங்கும்  உரோம் நகரில், சிறப்பிக்கப்படுகின்றன என்று, கத்தோலிக்கக் கல்வி திருப்பீடப் பேராயம் அறிவித்துள்ளது.
இத்திருப்பீடப் பேராயம், உரோம் மறைமாவட்டம், மற்றும், இத்தாலிய கல்வித் துறை ஆகிய அமைப்புக்கள் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கில், 1000த்திற்கும் மேற்பட்ட பன்னாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர் என்றும், 22 அமர்வுகள் கொண்ட இக்கருத்தரங்கில், 300க்கும் அதிகமானோர் உரைகள் வழங்கவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 9 வெள்ளியன்று மாலை, புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா பேராலயத்தில், கத்தோலிக்கக் கல்வி திருப்பீடப் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஜியூசெப்பே வெர்ஸால்தி அவர்கள் நிகழ்த்தும் நிறைவுத் திருப்பலியில், கருத்தரங்கின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
ஞானமும், கருணையும்என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கின் சிகர நிகழ்வாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 10, சனிக்கிழமை வழங்கும் யூபிலி மறைக்கல்வி உரையில், இக்கருத்தரங்கின் பிரதிநிதிகள் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. சிறைப்பட்டோருக்கு வழங்கப்படும் பணி, கலாச்சார அளவு கோல்

செப்.07,2016. சிறைப்பட்டோரை மீண்டும் நம் சமுதாயத்தில் இணைப்பதற்கு, அவர்களை நம்மிடையே வாழ வரவேற்க வேண்டும் என்று இங்கிலாந்து கர்தினால், வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் கூறினார்.
சிறைப்பட்டோரின் ஆன்மீக வழிகாட்டிகளுக்குசெப்டம்பர் 6, இச்செவ்வாயன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், சிறைப்பட்டோரின் ஆன்மீக வழிகாட்டிகள், பரிவுடன் ஆற்றிவரும் பணிக்கு பாராட்டு தெரிவித்தார்.
சமுதாயத்தின் மிக நலிந்த குழுவினரில் ஒன்றாக விளங்கும் சிறைப்பட்டோருக்கு, இரக்கமும் மதிப்பும் வழங்க, இரக்கத்தின் சிறப்பு யூபிலி நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்று, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள், சிறைப்பட்டோரின் ஆன்மீக வழிகாட்டிகளாக இணைந்து உழைப்பது, மிகுந்த ஊக்கத்தைத் தருகிறது என்று கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
சிறைகளில் நிலவும் சூழல், கைதிகளை மனிதர்களாக மதிப்பது கிடையாது என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், சிறைப்பட்டோருக்கு வழங்கப்படும் கனிவான பணி, ஒரு சமுதாயத்தின் கலாச்சார அளவு கோல் என்பதையும் எடுத்துரைத்தார்.
நடைபெறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய பகுதியாக, சிறைப்பட்டோரின் யூபிலியை சிறப்பிக்க, நவம்பர் 6ம் தேதி, ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் காலை 10 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியை தலைமையேற்று நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி

5. புனித அன்னை தெரேசா தொடர்ந்து பாடங்கள் புகட்டி வருகிறார்

செப்.07,2016. புனித அன்னை தெரேசா விண்ணிலிருந்து இன்னும் பலருக்கு தன் பரிந்துரையின் வழியே உதவிகள் செய்து வருகிறார் என்பதை, தனக்கு வந்து சேரும் சாட்சியப் பதிவுகளில் காண முடிகிறது என்று, அன்னை தெரேசாவின் புனிதர்பட்ட முயற்சிகளை ஒருங்கிணைத்த அருள்பணி Brian Kolodiejchuk அவர்கள் கூறியுள்ளார்.
அன்னை தெரேசா உருவாக்கிய பிறரன்பு மறைப்பணியாளர்கள் துறவு சபையின் ஆண்கள் பிரிவில் உறுப்பினராக இருக்கும் அருள்பணி Kolodiejchuk அவர்கள், ZENIT கத்தோலிக்க செய்திக்கு அளித்த பேட்டியில், புனித அன்னை தெரேசா தொடர்ந்து நமக்கு பாடங்கள் புகட்டி வருகிறார் என்று கூறினார்.
"இரக்கத்திற்கு அழைப்பு: அன்புகூர மனங்களும், பணியாற்ற கரங்களும்" (“A Call to Mercy: Hearts to Love, Hands to Serve”) என்ற தலைப்பில், அன்னையின் பல புதிய கூற்றுகள் அடங்கிய புதிய நூல், கடந்த வாரம் வெளியானதைச் சுட்டிக்காட்டிய அருள்பணி Kolodiejchuk அவர்கள், அன்னையின் கருத்துக்களை தொடர்ந்து கற்றுக்கொள்ள, இரக்கத்தின் யூபிலி ஆண்டு நல்லதொரு வாய்ப்பு என்று எடுத்துரைத்தார்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன், "வாருங்கள், என் ஒளியாக வாழுங்கள்" (“Come Be My Light”) என்ற தலைப்பில் அன்னையின் கூற்றுகள் அடங்கிய நூலை தான் வெளியிட்டபோது, அது பலருக்கு ஆச்சரியத்தையும், ஒரு சிலருக்கு அதிர்ச்சியையும் தந்தது என்று கூறிய அருள்பணி Kolodiejchuk அவர்கள், புதிய புனிதரின் வாழ்வும், கருத்துக்களும் நமக்குச் சவாலாக அமைந்துள்ளன என்று கூறினார்.
புனித அன்னை தெரேசாவை பணியாற்றத் தூண்டியது, ஒரு கொள்கை அல்ல, மாறாக, இயேசு என்ற உயிருள்ள ஓர் ஆள் என்று கூறிய அருள்பணி Kolodiejchuk அவர்கள், சிறியோருக்குச் செய்ததை எனக்கேச் செய்தீர்கள் என்று இயேசு கூறியதை முற்றிலும் ஏற்று, வாழ்வாக்கியவர், அன்னை தெரேசா என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி

6. புனித அன்னை தெரேசாவைப் பற்றி, பூனே ஆயர் தாமஸ் தாப்ரே

செப்.07,2016. மதம் என்பது, கண்களுக்குத் தெரியாத ஒரு கருத்து அல்ல, அது, நம்பிக்கையின் விளைவாக, கண்கூடாக வெளிப்படும் செயல்களில் அடங்கியுள்ளது என்பதை, புனித அன்னை தெரேசா உணர்த்திச் சென்றார் என்று, பூனே ஆயர் தாமஸ் தாப்ரே (Thomas Dabre) அவர்கள் கூறினார்.
ஏறத்தாழ 60 ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றி, தன்னை ஓர் இந்தியராகவே மாற்றிக்கொண்ட அன்னை தெரேசா அவர்களைச் சந்தித்த அனைவரும், ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய ஆயர் தாப்ரே அவர்கள், தான் இப்புனிதரைச் சந்தித்த நிகழ்வையும் நினைவுகூர்ந்தார்.
பாரத இரத்னா, அமைதியின் நொபெல் பரிசு போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றிருந்தாலும், எளிமையின் ஓர் இலக்கணமாக வாழ்ந்த புனித அன்னை தெரேசாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன என்று, ஆயர் தாப்ரே அவர்கள், எடுத்துரைத்தார்.
அவரது பணியின் வழியாக மக்களை மதமாற்றம் செய்தார் என்ற தவறான செய்திகளை  பரப்பி வரும் அரசியல்வாதிகளுக்கு பதில் தரும் வகையில், பல்சமய உரையாடல் என்ற உயரிய விழுமியத்திற்கு அவர் ஒரு நடைமுறை எடுத்துக்காட்டாக விளங்கினார் என்று ஆயர் தாப்ரே அவர்கள், வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

7. கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் இணைந்து மேற்கொள்ளும் வழிபாடுகள்

செப்.07,2016. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் 15ம் ஆண்டு நினைவாக, கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் இணைந்து மேற்கொள்ளும் வழிபாடுகளுக்காக, இத்தாலியில் உள்ள பல இஸ்லாமிய தொழுகைக் கூடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஒற்றுமைக்காக இணைவோம்" என்ற பெயரில் இத்தாலியில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ, இஸ்லாமிய ஒருமைப்பாட்டு இயக்கத்தின் தலைவராகிய Foad Aodi என்ற பாலஸ்தீனிய மருத்துவர், தங்கள் தொழுகைக் கூடங்களுக்கு கிறிஸ்தவர்கள் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
ஜுலை மாதம், பிரான்ஸ் நாட்டில், அருள்பணி Jacques Hamel அவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற இறுதி அடக்கச் சடங்கிலும், அதே நேரம் இத்தாலியில் நடைபெற்ற கிறிஸ்தவ வழிபாடுகளிலும் 23,000த்திற்கும் அதிகமான இஸ்லாமியர் கலந்துகொண்டனர் என்பதைச் சுட்டிக்காட்டும் Foad Aodi அவர்கள், கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் இணைந்துவருவது, உண்மையான மதங்களின் அடிப்படை உணர்வான ஒற்றுமையை உலகிற்கு வெளிப்படுத்தும் என்று கூறினார்.
செப்டம்பர் 11, 12 ஆகிய இருநாட்கள் மேற்கொள்ளப்படும் இந்த ஒற்றுமை வழிபாடுகளில் கலந்துகொள்ள தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை அழைத்துள்ளதாக, Foad Aodi அவர்கள் கூறியுள்ளார் என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. சீனாவின் விமான நிலையங்களில் சிற்றாலயங்கள்

செப்.07,2016. சீனாவின் பல்வேறு விமான நிலையங்களில் சிற்றாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று பிதேஸ் (Fides) செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
அண்மையில் Shen Zhen விமான நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள சிற்றாலயத்தில், பயணிகள் அமர்ந்து அமைதியில் செபிப்பதற்கும், விவிலியத்தை வாசிப்பதற்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்று பிதேஸ் செய்தி மேலும் கூறுகிறது.
கிறிஸ்தவ கலாச்சாரத்தை மதிக்கும் வகையிலும், தங்கள் நகருக்கு வருகைதரும் பன்னாட்டு பயணிகளை மனதில் கொண்டும் இந்த சிற்றாலயம் அமைக்கப்பட்டுள்ளது என்று, Shen Zhen நகரின் விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பெய்ஜிங் பன்னாட்டு விமான நிலையத்திலும், Cheng Du, Xian Yang ஆகிய நகரங்களில் அமைந்துள்ள விமான நிலையங்களிலும் இத்தகைய சிற்றாலயங்களும், இஸ்லாமியர், மற்றும் ஏனைய மதத்தவரும் தொழுவதற்கு ஏற்ற இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...