Saturday, 3 September 2016

செய்திகள்- 03.09.16

செய்திகள்- 03.09.16
------------------------------------------------------------------------------------------------------

1. துன்புறுவோர்க்கு முதுகைக் காட்டுவது நவீனகால பாவம்

2. வத்திக்கான் தோட்டத்தில் அப்பரெசிதா அன்னை மரியா திருவுருவம்

3. அன்னை தெரேசா பற்றிய கருத்தரங்கிற்கு திருத்தந்தை செய்தி

4. அன்னை தெரேசா, நற்செய்தி மகிழ்வின் மறைப்பணியாளர்

5. இரக்கத்தின் மறுஉருவமாக அன்னை தெரேசா

6. நற்செய்தி அறிவிப்பு பேராயம் : புதிய ஆயர்களுக்கு கருத்தரங்கு

7. மனித வர்த்தகத்திற்கெதிரான காரித்தாஸ் கருத்தரங்கு

8. மத்தியதரைக் கடலில் புலம்பெயர்ந்தவர் இறப்பு 2016ல் அதிகரிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. துன்புறுவோர்க்கு முதுகைக் காட்டுவது நவீனகால பாவம்

செப்.03,2016. இறைவனின் இரக்கம் ஏதோ ஓர் அழகான கருத்து அல்ல, மாறாக, அது தெளிவான செயலில் விளங்குவதாகும், மேலும், அது, நம் அன்றாட வாழ்வின் செயல்களில் தெளிவாக வெளிப்படாதவரை, மனித இரக்கமும் உண்மையானதல்ல, என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையில் இவ்வெள்ளி முதல் சிறப்பிக்கப்பட்டு வரும் இரக்கத்தின் மற்றும் தன்னார்வப் பணியாளர்கள் யூபிலியின் ஒரு நிகழ்வாக, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இச்சனிக்கிழமை காலையில் கூடியிருந்த ஏறத்தாழ நாற்பதாயிரம் மக்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, அன்பு பற்றி பவுலடிகளார் கொரிந்தியர்க்கு (1கொரி.13:1-13) கூறியிருப்பதை மையப்படுத்திப் பேசினார்.
கைவிடப்பட்ட சிறார், நோயாளர், வயதானவர்கள், உணவு அல்லது வேலையின்றி இருப்போர், வீடற்றவர், கைதிகள், அகதிகள், புலம்பெயர்ந்தோர், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோர் என, உதவி தேவைப்படும் அனைவருக்கும், இப்பணியாளர்கள் ஆற்றும் சேவையின் வழியாக, திருஅவையின் நம்பகத்தன்மை, நம்பத்தக்க வகையில் வெளிப்படுத்தப்படுகின்றது என்று கூறினார் திருத்தந்தை.
துன்புறும் மனிதரைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்ட, குரு மற்றும் லேவியர் (லூக்.10,25-35) போல் செயல்பட வேண்டாமெனவும், இப்படிச் செயல்படுவது மாபெரும் பாவம், இது நவீனகால பாவம், இன்றையப் பாவம் எனவும், இதை நாம் அனுமதிக்க முடியாது எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்பணியாளர்கள் தாங்கள் ஆற்றும் பணிகளில், எப்போதும் நிறைவான மகிழ்வுடன் இருக்குமாறும், பிறரைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று ஒருபோதும் எண்ணாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை.
இவ்வுலகத்திற்கு, குறிப்பாக, புறக்கணிப்புச் சோதனைகளை எதிர்நோக்கும் உலகத்திற்கு, ஒருமைப்பாட்டின் காணக்கூடிய அடையாளங்கள் தேவைப்படுகின்றன என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்னை தெரேசா அவர்களை, இஞ்ஞாயிறன்று, ஒரு புனிதராக அறிவிப்பதைப் பார்த்து மகிழவிருக்கின்றோம், இப்புனிதரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, உலகின் துன்பங்களை அகற்றுவதில், கடவுளின் கரங்களில், நாம் தாழ்மையான கருவிகளாகச் செயல்பட, இறையருளை இறைஞ்சுவோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வாறு திருத்தந்தை கூறியபோது பலத்தக் கரவொலி எழும்பியது.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் திறந்த காரில் வந்தபோது, ஏராளமான சிறாரை முத்தமிட்டதோடு, ஆறு சிறாரை தனது வாகனத்தில் அமரச் செய்தார் திருத்தந்தை. மேலும், இவ்வளாகத்தில், நீலமும் வெண்மையும் கலந்த மாலை ஒன்றை, அன்னை தெரேசா சபை சகோதரிகள், திருத்தந்தைக்கு அணிவித்தனர்.
அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபை தலைவர் அருள்சகோதரி பிரேமா அவர்கள், இந்நிகழ்வில் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.
இவ்வெள்ளி முதல் சிறப்பிக்கப்பட்டு வரும் இரக்கத்தின் மற்றும் தன்னார்வப் பணியாளர்கள் யூபிலி விழா, இஞ்ஞாயிறன்று, அன்னை தெரேசா அவர்களின் புனிதர்பட்ட நிகழ்வோடு நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. வத்திக்கான் தோட்டத்தில் அப்பரெசிதா அன்னை மரியா திருவுருவம்

செப்.03,2016. வத்திக்கான் தோட்டத்தில், இச்சனிக்கிழமையன்று, புதிதாக  நிறுவப்பட்டுள்ள அப்பரெசிதா(Aparecida) அன்னை மரியா திருவுருவத்தை ஆசீர்வதித்து, செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரேசில் நாட்டையும், அந்நாட்டு மக்களையும், அப்பரெசிதா அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து செபித்த திருத்தந்தை, அந்நாட்டின் ஏழைகள், புறக்கணிக்கப்பட்டவர், கைவிடப்பட்ட வயதானவர், சாலையோரச் சிறார் ஆகியோருக்காகச் சிறப்பாக செபிக்குமாறு விண்ணப்பித்தார்.
பிரேசில் மக்களை, சமூக நீதியிலும், கிறிஸ்துவின் மீதுள்ள அன்பிலும் காப்பாற்றுமாறு, அன்னை மரியாவிடம் மேலும் செபித்தார், திருத்தந்தை.
2013ம் ஆண்டில், ரியோவில் நடைபெற்ற உலக இளையோர் நாளுக்குச் சென்றபோது, அப்பரெசிதா திருத்தலத்திற்குச் சென்றதையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இவ்வாண்டில் அப்பரெசிதா செல்வது இயலாத காரியம் எனினும், இவ்வன்னை மரியா திருவுருவம், அருகிலே இருக்கின்றது என்றும் கூறினார்.
ஏழைத் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அப்பரெசிதா அன்னை மரியா திருவுருவத்தை, வேலை, கல்விவசதி மற்றும் மனித மாண்பைத் தேடுவோர் என, அனைவரும் இன்று கண்டுபிடிப்பார்களாக என்றும் கூறினார் திருத்தந்தை.
அப்பரெசிதா பேராயர் கர்தினால் Raymundo Damasceno Assis, வத்திக்கான் நகர பாப்பிறை அமைப்பின் தலைவரும், வத்திக்கான் நகர நிர்வாகியுமான கர்தினால் Giuseppe Bertello ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. அன்னை தெரேசா பற்றிய கருத்தரங்கிற்கு திருத்தந்தை செய்தி

செப்.03,2016. அன்னை தெரேசா அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வு, கிறிஸ்துவை மையமாக வைத்து வாழ்வதற்கு நமக்கு உதவுவதாக என்று, அன்னை தெரேசா பற்றிய ஒரு கருத்தரங்கிற்கு அனுப்பிய தந்திச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்னை தெரேசா: ஆசியாவுக்கும், உலகுக்கும் இரக்கம் என்ற தலைப்பில், ஆசியச் செய்தி நிறுவனம், இவ்வெள்ளியன்று, உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைகழகத்தில் நடத்திய கருத்தரங்கிற்கு, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்துவை நம் வாழ்வில் மையமாக வைப்பதற்கும், இரக்கத்தின் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவதில், சுதந்திரமாக நற்செய்தியை வாழ்வதற்கும், உண்மையின் ஒளியால் தூண்டப்பட்டு, நல்லதோர் உலகை அமைப்பவர்களாக மாறுவதற்கும், அன்னை தெரேசா அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வு, நமக்கு உதவுவதாக என்றும், அச்செய்தி கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. அன்னை தெரேசா, நற்செய்தி மகிழ்வின் மறைப்பணியாளர்

செப்.03,2016. அன்னை தெரேசா பற்றிய கருத்தரங்கில் உரையாற்றிய, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் கர்தினால் ஃபெர்னான்டோ ஃபிலோனி அவர்கள், அன்னை தெரேசா, நற்செய்தி மகிழ்வின் மறைப்பணியாளர் என்று பாராட்டிப் பேசினார்.
அன்னை தெரேசா அவர்கள், புனிதராக அறிவிக்கப்படும் நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் பேசிய கர்தினால் ஃபிலோனி அவர்கள், செபத்தையும் செயலையும், நற்செய்தி அறிவிப்பையும் மனித முன்னேற்றத்தையும், ஒருசேர ஆற்றிய உன்னத மறைப்பணியாளர் என்று புகழ்ந்தார்.
பிறரன்பின் மறைப்பணியாளரான அன்னை தெரேசா, செபத்தின் வழியாக, தன்னையே ஏழைகளுக்கு முழுவதுமாகத் தானமாக அளித்தார் என்றும், சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களிடம், கடவுளின் அன்பை அனுபவித்தார் என்றும் கூறினார் கர்தினால் ஃபிலோனி.
மேலும், இக்கருத்தரங்கில் உரையாற்றிய மும்பை கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், அன்னை தெரேசாவின் வாழ்வு, அன்பு மற்றும் செபத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்று தெரிவித்தார்.
அன்னை தெரேசா அவர்கள் முதலில் சேர்ந்த லொரேத்தோ சபையைவிட்டு விலகி, ஏழைகளுக்குகென தன்னை அர்ப்பணிக்க எடுத்த தீர்மானத்திற்கு, அவருக்கு மிகுந்த துணிச்சல் தேவைப்பட்டது என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தான் அருள்பணியாளராக இருந்தபோது, அன்னையவர்களைச் சந்தித்த பல அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

5. இரக்கத்தின் மறுஉருவமாக அன்னை தெரேசா

செப்.03,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டை அறிவித்ததற்கும், அன்னை தெரேசா அவர்களை, இரக்கத்தின் மறுஉருவமாகத் தேர்ந்தெடுத்திருப்பதற்கும் கடவுளுக்கும், திருத்தந்தைக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்று, அருள்சகோதரி பிரேமா அவர்கள் கூறினார்.
அன்னை தெரேசா அவர்களின் புனிதர்பட்ட நிகழ்வை முன்னிட்டு, பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய, பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபை தலைவர் அருள்சகோதரி பிரேமா அவர்கள், இப்புனிதர்பட்ட நிகழ்வு, நற்செய்தி மற்றும் கடவுளின் செய்தியைப் பரப்புவதற்கு ஒரு நல்ல வாயப்பு என்று கூறினார்.
ஒவ்வொரு மனிதரையும், குறிப்பாக, ஏழைகளையும், மிகவும் நம்பிக்கையிழந்து வாழ்பவர்களையும், இரக்கத்தின் அருள் சென்றடையும் என்று தங்கள் சபையினர் நம்புவதாகத் தெரிவித்தார் அருள்சகோதரி பிரேமா.
உலகில், துன்பங்கள், அவமானப்படுத்தல், ஒதுக்கப்படுதல் ஆகியவை இருக்கும்வரை, அன்னை தெரேசாவின் செய்தியும், பணியும், முழுவதும் பிரசன்னமாக இருக்கும் என்றும் கூறினார் அருள்சகோதரி பிரேமா.
அருள்சகோதரி பிரேமா அவர்கள் வெளியிட்டுள்ள விபரங்களின்படி, அச்சபையின் 5,161 அருள்சகோதரிகள், 139 நாடுகளில், 758 இல்லங்களை நடத்துகின்றனர். மேலும், அன்னை தெரேசா தொடங்கிய பிறரன்பு சகோதரர்கள் சபையில், 397 அருள்பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் 29 நாடுகளில் 69 இல்லங்களில் பணியாற்றுகின்றனர்.
63 வயது நிரம்பிய அருள்சகோதரி பிரேமா, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

6. நற்செய்தி அறிவிப்பு பேராயம் : புதிய ஆயர்களுக்கு கருத்தரங்கு

செப்.03,2016. கடந்த இரண்டு ஆண்டுகளில், உலக அளவில் ஆயர்களாக நியமனம் பெற்ற 94 ஆயர்களுக்கு, உரோம் நகரில், கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயம்.
இக்கருத்தரங்கில், ஆப்ரிக்காவின் 19 நாடுகளிலிருந்து 42, ஆசியாவின் 9 நாடுகளிலிருந்து 36,  அமெரிக்காவின் 9 நாடுகளிலிருந்து 12, ஓசியானியாவின் 2 நாடுகளிலிருந்து 4 என, கடந்த இரண்டு ஆண்டுகளில், புதிதாக நியமனம் பெற்ற ஆயர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
தங்களின் ஆயர் பணியையும், வாழ்வையும், உரையாடல் மற்றும் செபத்தின் வழியாக, ஆழப்படுத்தும் நோக்கத்தில், 1994ம் ஆண்டிலிருந்து, புதிய ஆயர்களுக்கு, இத்தகைய கருத்தரங்கை நடத்தி வருகின்றது நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயம்.
உரோம் புனித பவுல் கல்லூரியில், செப்டம்பர் 5ம் தேதி முதல், 17ம் தேதி வரை நடைபெறும் இக்கருத்தரங்கில், பல்வேறு உரைகளும், நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
செப்டம்பர் 9ம் தேதி வெள்ளியன்று இந்த ஆயர்கள் திருத்தந்தையைச் சந்திப்பார்கள். 11ம் தேதி அசிசிக்குத் திருப்பயணம் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

7. மனித வர்த்தகத்திற்கெதிரான காரித்தாஸ் கருத்தரங்கு

செப்.03,2016. போர், வறுமை மற்றும் அடக்குமுறைக்கு அஞ்சி, கட்டாயமாக வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், நைஜீரியாவில் கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம்.
இவ்வாறு ஆப்ரிக்காவில் ஆயிரக்கணக்கில் வயது வந்தவர்களும், சிறாரும் வெளியேறுகின்றனர் என்றும், இவர்கள், பல நேரங்களில், பாலியல் மற்றும் கட்டாயத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் காரித்தாஸ் கூறியது.
நைஜீரியக் காரித்தாஸின் ஒத்துழைப்புடன்,  இம்மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை, நைஜீரியாவின் அபுஜாவில் இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம், நைஜீரியா, ஐவரி கோஸ்ட், உகாண்டா, ஜிம்பாபுவே மற்றும் மாலி நாடுகளில், மனித வர்த்தகத்திற்கெதிரான திட்டங்களில் பணியாற்றி வருகிறது என்று செய்திகள் கூறுகின்றன.
2015ம் ஆண்டில், அறுபது இலட்சம் மக்கள், அகதிகளாக அல்லது கட்டாயமாக வெளியேறியவர்கள்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

8. மத்தியதரைக் கடலில் புலம்பெயர்ந்தவர் இறப்பு 2016ல் அதிகரிப்பு

செப்.03,2016. மத்திய தரைக் கடலின் மத்திய பகுதி வழியாக, வட ஆப்ரிக்காவிலிருந்து இத்தாலிக்கு வருகின்ற வழியில் இறக்கும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, ஐ.நா. புலம்பெயர்ந்தவர் அமைப்பு கூறியது.
துருக்கி-கிரேக்கம் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழையும் இம்மக்களின் இறப்பு எண்ணிக்கை குறைந்திருந்தாலும், வட ஆப்ரிக்காவிலிருந்து இத்தாலிக்கு வருகின்ற இம்மக்களின் இறப்பு எண்ணிக்கை, 2016ம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக, அந்த ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.
லிபியாவிலிருந்து இத்தாலிக்கு வருகின்ற வழியில் இறக்கும் இம்மக்களின் எண்ணிக்கை, துருக்கியிலிருந்து கிரேக்கம் செல்லும் வழியில் இறப்பவர்களைவிட பத்து மடங்கு அதிகம் எனவும், அந்த அமைப்பு கூறியது. 
2016ம் ஆண்டில், வட ஆப்ரிக்காவிலிருந்து இத்தாலிக்கு வருகின்ற வழியில், 42 பேருக்கு ஒருவர் வீதம் இறப்பதாகவும், இவ்வெண்ணிக்கை, கடந்த ஆண்டில், 52 பேருக்கு ஒருவர் வீதம் இருந்ததாகவும், ஐ.நா. அதிகாரி வில்லியம் ஸ்பின்ட்லர் பத்திரிகையாளரிடம் கூறினார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...