செய்திகள்-08.06.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. செபம் மற்றும் உடன் ஆயர்களின் ஆதரவையும் கொண்டு ஆயர் பணி தொடரட்டும்
2. திருத்தந்தையுடன் அர்ஜென்டீனா அரசுத்தலைவர் சந்திப்பு
3. உக்ரைனின் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து தலத்திருஅவை கவலை
4. மத சிறுபான்மையினரை பாகிஸ்தான் அரசு காக்க இங்கிலாந்து ஆயர்கள் அழைப்பு
5. சிரியா அகதிகள் சார்பாக இயேசு சபை அகதிகள் மையம்
6. காமரூனில் சிறார்கள் கடத்தப்படுவது தொடர்கிறது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. செபம் மற்றும் உடன் ஆயர்களின் ஆதரவையும் கொண்டு ஆயர் பணி தொடரட்டும்
ஜூன்,08,2015. மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில், செபத்தை நோக்கி திரும்பும் அதேவேளை, தங்கள் உடன் ஆயர்களின் நட்புணர்வும், சகோதரத்துவமும் இணைந்த உதவியையும் நாடவேண்டும் என Puerto Rico ஆயர்களிடம் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அத் லிமினா' சந்திப்பை முன்னிட்டு உரோம் நகர் வந்துள்ள Puerto Rico ஆயர்களை இத்திங்களன்று நண்பகல் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவைத் தலைவர்கள் எப்போதும் அமைதியைக் கட்டியெழுப்புபவர்களாகவும், ஒருவர் ஒருவரோடு ஒத்துழைப்பவர்களாகவும் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஒவ்வோர்
ஆயரும் குருக்களின் முன்மாதிரிகையாக இருந்து அவர்களின் ஆன்மீக
புதுப்பித்தலுக்கு உதவவேண்டும் என வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், குருக்களுக்கான பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார்.
பொருளாதாரத் துன்பச்சூழல்கள், குடிபெயர்வு, குடுபங்களுக்குள் வன்முறை, வேலைவாய்ப்பின்மை, போதைப்பொருள் கடத்தல், இலஞ்ச ஊழல் என பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கிவரும் குடும்பங்களுக்கு ஆற்றவேண்டிய மறைப்பணிகள் குறித்தும் Puerto Rico ஆயர்களிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
திருமண
மதிப்பீடுகள் குறித்தும் ஆயர்கள் தங்கள் சமுதாயத்திற்கு உணர்த்தவேண்டும்
என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்தின்
மீது கொள்ளும் அக்கறையின் வெளிப்பாட்டை உள்ளடக்கியதாக நற்செய்தி
அறிவித்தல் பணி இருக்கவேண்டும் எனவும் ஆயர்களிடம் தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தையுடன் அர்ஜென்டீனா அரசுத்தலைவர் சந்திப்பு
ஜூன்,08,2015. இஞ்ஞாயிறன்று மாலை, அர்ஜென்டீனா அரசுத்தலைவர் Cristina Fernández de Kirchner அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாக 2013ம் ஆண்டு பதவியேற்றபின், அவரை, அர்ஜென்டீனா அரசுத்தலைவர் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடுவது இது ஐந்தாவது முறையாகும்.
ஒன்றரை மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின்போது, அர்ஜென்டீனா அரசுத்தலைவர் Fernández de Kirchner, அவர்கள், அர்ஜென்டீனா நாட்டு மக்களின் அன்பை, திருத்தந்தைக்குத் தெரிவித்ததோடு, அம்மக்களுக்காக திருத்தந்தையின் ஆசீரையும் வேண்டினார்.
உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் (FAO) கூட்டமொன்றில்
பங்குபெறுவதற்கென அர்ஜென்டீனாவிலிருந்து அரசுத்தலைவருடன் வந்திருக்கும்
குழுவையும் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜென்டீனாவிலிருந்து திருத்தந்தைக்கென அரசுத்தலைவர் கொணர்ந்த பல்வேறு பரிசுப் பொருள்களுள், அந்நாட்டு பிரபல ஓவியர் வரைந்த பேராயர் ஆஸ்கர் ரொமேரோவின் உருவப்படம், அந்நாட்டு பிரபலக் கவிதைத் தொகுப்பு, ஒரு கூடை நிறைய அர்ஜென்டீனிய உணவுப்பொருள்கள் ஆகியவையும் அடங்கும்.
திருத்தந்தையும், தன் சார்பாக, அரசுத்தலைவருக்கு, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரஷ்ய புனிதப்படம் ஒன்றின் பிரதியை பரிசாக வழங்கினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. உக்ரைனின் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து தலத்திருஅவை கவலை
ஜூன்,08,2015.
உலக அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்தவல்ல உக்ரைனின் தற்போதைய மனிதாபிமான
நெருக்கடிகள் குறித்து உலகச் சமுதாயம் பாராமுகமாய் இருக்கமுடியாது என
தெரிவித்துள்ளது அந்நாட்டின் கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருஅவை.
இஞ்ஞாயிறு
மற்றும் திங்கள் தினங்களில் ஜெர்மனியின் பவேரியாவில் இடம்பெற்ற ஜி 7
அமைப்பின் தலைவர்களுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ள உக்ரைன் திருஅவைத்
தலைவர்கள், உக்ரைனுக்கு எதிரான அத்துமீறல்கள், உலக அமைதிக்கு ஒரு பெரும் சவாலாக உள்ளன என உரைத்துள்ளனர்.
உக்ரைனின் தற்போதைய நிலைகள் குறித்து தன் கவலையை வெளியிட்ட உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டுமுறை பேராயர் Sviatoslav Shevchuk அவர்கள், கிழக்கு ஐரோப்பாவில் அநியாயம் எதுவும் இடம்பெறவில்லை என நாம் தப்பான எண்ணத்தைக் கொண்டிருக்கமுடியாது என்றார்.
உக்ரைனில் அரசுக்கு ஏதிராக இடம்பெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, புதிய அரசு நியமிக்கப்பட்டது. இருப்பினும், இரஷ்யாவாலும், இரஷ்ய ஆதரவுப் பெற்ற குழுக்களாலும், உக்ரைனின் பல இடங்கள் ஆக்ரமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. இந்த மோதல்களால் கிழக்கு உக்ரைனில் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் பதட்டநிலைகளால், உலக அளவில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் குறித்து தலத்திருஅவை பலமுறை தன் கவலையை வெளியிட்டுள்ளது.
ஆதாரம் : EWTN/வத்திக்கான் வானொலி
4. மத சிறுபான்மையினரை பாகிஸ்தான் அரசு காக்க இங்கிலாந்து ஆயர்கள் அழைப்பு
ஜூன்,08,2015.
மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பாகிஸ்தானில் நிறுத்தப்பட
அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென பிரித்தானிய அரசு
வலியுறுத்தும் என நம்புவதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள்
அறிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் Sandha எனுமிடத்தில் கிறிஸ்தவ சமுதாயமும் கிறிஸ்தவ கோவில் ஒன்றும் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இங்கிலாந்து ஆயர் பேரவையின் வெளிவிவகாரத்துறை தலைவர் ஆயர் Declan Lang பேசுகையில், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அரசு பாராமுகமாய் இருந்தால், சிறுபான்மை மதத்தவர் பலர் தங்கள் மாண்பையும், வீடுகளையும், வாழ்வையும் தொடர்ந்து இழக்கவேண்டியிருக்கும் என கவலையை வெளியிட்டார்.
மக்களின் மாண்பும் உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை பிரித்தானிய அரசு, பாகிஸ்தான் அதிகாரிகளிடம் வலியுறுத்தும் என்பதை தாங்கள் உறுதியாக நம்புவதாக, இங்கிலாந்து ஆயர்கள் சார்பில் பேசிய ஆயர் Declan Lang கூறினார்.
ஆதாரம் : Catholicherald/வத்திக்கான் வானொலி
5. சிரியா அகதிகள் சார்பாக இயேசு சபை அகதிகள் மையம்
ஜூன்,08,2015. ஐ.எஸ். இஸ்லாமியத் தீவிரவாதிகளால் பல ஆயிரக்கணக்கானோர் சிரியாவில் வீடுகளை இழந்துள்ள நிலையில், புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்கவேண்டிய அவசியம், உலகத் தலைவர்களுக்கு உள்ளது என அறிவித்துள்ளது, இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோர் பணி அமைப்பு (JRS).
மதம், இனம் என்ற எவ்வித பாகுபாடுமின்றி சிரிய அகதிகளிடையே பணியாற்றிவரும் JRS அமைப்பின் பணியாளர்களுள் ஒருவரான இயேசுசபை அருள்பணி Ziad Hilal பேசுகையில், கிறிஸ்தவ
மற்றும் இஸ்லாமிய மக்களிடையே இருந்த ஒற்றுமைக் கலாச்சாரம் கடந்த நான்கு
வருடப் போரினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிரியாவின் ஹோம்ஸ் நகரில் 50 விழுக்காட்டுப் பகுதி போரினால் அழிவுக்குள்ளாகியுள்ளதாகவும் கூறினார்.
சிரியா நாட்டு மக்கள் பெருமளவில் ஏமாற்றங்களை தாங்கி, அமைதிக்காக ஆவலோடு காத்திருப்பதாகவும், உலகத்தலைவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் ஆற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் உரைத்தார் இயேசு சபை அருள்பணி Ziad Hilal.
2 கோடியே 20 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட சிரியாவில் ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் குடிபெயர்ந்தவர்களாக மாறியுள்ளனர், 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்மை நாடுகளான ஜோர்டான், லெபனான் மற்றும் துருக்கியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி
6. காமரூனில் சிறார்கள் கடத்தப்படுவது தொடர்கிறது
ஜூன்,08,2015. 2014ம் ஆண்டின் இறுதியிலிருந்து இதுவரை காமரூன் நாட்டில் ஏறத்தாழ 1500 சிறார் Boko Haram இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டினார்.
8 வயதிற்கும் 12 வயதிற்கும் இடைப்பட்ட சிறார்கள் கடத்தப்பட்டு, உள்நாட்டுச் சண்டையில் அரசுப் படைகளுக்கு எதிராக Boko Haram தீவிரவாதிகளால் முன்னணியில் நிறுத்தப்படுவதாகவும், மேலும் பலர், இந்த தீவிரவாதிகளுக்கு உணவு மற்றும் தண்ணீரைக் கொணர வேலையாட்களாக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார் ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் Najat Rochdi.
காமரூன் நாட்டில் Boko Haram இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள், 2014ம் ஆண்டு ஜூலை மாதத்தில் துவக்கியத்திலிருந்து, இக்குழுவால் அரசுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
No comments:
Post a Comment