Monday, 9 February 2015

செய்திகள் - 07.02.15

செய்திகள் - 07.02.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை-உலகில், திருஅவையில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும்

2. திருத்தந்தைநகரங்களில் கிறிஸ்தவ வாழ்வின் புளிக்காரமாக வாழ பொதுநிலையினர்க்கு அழைப்பு

3. திருத்தந்தை ஆயர்கள் இளையோர் உருவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்

4. திருத்தந்தை தொழிலதிபர்கள் மனித மாண்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுகோள்

5. CCBI ஆயர்கள் பேரவையின் புதிய தலைவர்கள்

6. சமூகத்தின் உறுதியான வளர்ச்சிக்கு மதங்கள் பங்குதாரர்கள், பேராயர் அவ்சா

7. உக்ரேய்ன் கிறிஸ்தவத் தலைவர்கள் நாட்டின் ஒற்றுமைக்கு வேண்டுகோள்

8. குடும்பங்கள் குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்துக்கு நவநாள் செபங்கள்

9. எபோலா நோயால் கைவிடப்பட்ட சிறாருக்கு குடும்பங்கள் உதவி
 
1. திருத்தந்தை-உலகில், திருஅவையில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும்

பிப்.07,2015. சமூக மற்றும் திருஅவை வாழ்வின் பல்வேறு துறைகளில் பெண்கள் முழுமையாய்ப் பங்கேற்பதற்குப் புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டிய சவாலை இனிமேலும் தள்ளிப் போட முடியாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட கலாச்சார அவை நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அறுபது பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் பெண்களின் இருப்பு இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றது, இதன்மூலம், மேய்ப்புப்பணி பொறுப்புகளிலும், இறையியல் சிந்தனைகளிலும், குழுக்களிலும், குடும்பங்களிலும், மனிதர்களோடு செல்வதிலும் பல பெண்கள் ஈடுபட முடியும் என்றும் கூறினார்.
பெண்மைக் கலாச்சாரத்தில் சமத்துவமும், வேறுபாடும், தாய்மார், பெண்களும் மதமும், குடும்பங்களில் பெண்களின் முக்கியத்துவம் போன்ற தலைப்புக்களில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, திருஅவையில் பணிகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்கப்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
பல்வேறு பொதுப்பணித் துறைகளிலும், தொழில் உலகிலும், மிக முக்கியமான தீர்மானங்கள் எடுக்கவேண்டிய இடங்களிலும் பெண்களின் உயிரூட்டமுள்ள இருப்பை ஊக்குவித்து வளர்க்க வேண்டும், அதேநேரம், குடும்பங்களிலும் குடும்பங்களுக்காகவும் அவர்கள் ஆற்ற வேண்டிய முக்கியமான பணிக்கும் சிறப்பு கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆண்-பெண், இவர்களுக்கிடையே நிலவும் உறவுகள் அவரவரின் தனித்தன்மையோடு நிறைவேற்றப்படவேண்டும் என்றும் கூறிய திருத்தந்தை, கலாச்சாரத்துக்கும் உயிரியலுக்கும் இடையே பெண்களின் உடலமைப்பு என்பது பற்றியும் விளக்கி, பல்வேறு அடிமைமுறைகள், மனித வர்த்தகம், பெண்களின் உடல் உறுப்புகள் சிதைக்கப்படல் போன்ற தீய செயல்களால் பெண்கள் பல்வேறு சந்தைகளில் வெறும் விற்பனைப் பொருள்களாக ஆக்கப்படுவதையும் குறிப்பிட்டார்.
சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்படுகின்ற, சுரண்டப்படுகின்ற, ஆபத்தான சூழல்களில் வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்ற, புறக்கணிப்புக் கலாச்சாரத்துக்குப் பலியாகின்ற பல ஏழைப் பெண்களின் துன்பம் நிறைந்த நிலைகளையும் குறிப்பிட்டுப் பேசினார்  திருத்தந்தை.
குடும்பங்களில் பெண்களின் தவிர்க்க இயலாத பங்கை நாம் மறக்க இயலாது என்றும், இப்பெண்கள் குடும்பங்களின் வாழ்வுக்கும், அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கும்  உண்மையான சக்தியாக இருக்கின்றனர் என்றும், இவர்கள் இன்றி மனிதரின் அழைப்பு இயலாததாக அமைந்துவிடும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பெண்மைக் கலாச்சாரம் : சமத்துவமும் வேறுபாடும் என்ற தலைப்பில் திருப்பீட கலாச்சார அவை இம்மாதம் 4ம் தேதி தொடங்கிய ஆண்டுக் கூட்டம் இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தைநகரங்களில் கிறிஸ்தவ வாழ்வின் புளிக்காரமாக வாழ பொதுநிலையினர்க்கு அழைப்பு

பிப்.07,2015. திருப்பீட பொதுநிலையினர் அவை உரோமையில் நடத்திய மூன்று நாள் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட 120 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நகரங்களின் மையத்தில் கடவுளைச் சந்திக்க இயலும் என்று கூறினார்.
நகரத்தின் மையத்தில் கடவுளைச் சந்தித்தல் என்ற தலைப்பில் இக்கூட்டம் நடைபெற்றது பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நகரங்களில், மக்கள் வீடின்றி, உறவுகளின்றி, ஏழ்மை நிலையில் வாழும் சூழல்களிலும், கடவுள் நகரங்களைக் கைவிடவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நகரங்களில் அதிக வாய்ப்புகளும், பெரும் ஆபத்துகளும் உள்ளன, இங்கு அதிகளவான சுதந்திரமும், நிறைவான வாழ்வும் உள்ளன, அதேநேரம், மனிதத்தைக் கீழ்மைப்படுத்தும் மற்றும் மகிழ்வற்ற நிலையும் காணப்படுகின்றன என்றுரைத்தார் திருத்தந்தை.
மனிதரின் இதயத்தைவிட்டு கடவுள் ஒருபோதும் விலகுவதில்லை என்பதால், கடவுள் நகரங்களிலிருந்து ஒருபோதும் விலகுவதில்லை என்றும், உண்மையாகவே தங்கள் வாழ்வுக்கு அர்த்தம் தேடும் அனைவரோடும் கடவுளின் பிரசன்னம் தொடர்ந்து செல்கின்றது  என்றும்  கூறிய திருத்தந்தை, கடவுளைத் தேடும் இதயங்களுக்குப் பணிசெய்யும் வழிகளைத் திருஅவை தேடுகின்றது  என்று கூறினார்.
பொதுநிலை விசுவாசிகளும் தங்களின் மேய்ப்பர்களின் துணையுடன் நகரங்களில் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, பெரும் நகரங்கள் நற்செய்தி அறிவிப்புக்கு வளமான தளங்களாக இருப்பதால், பொதுநிலையினர் பெரும் நகரங்களில் கிறிஸ்தவ வாழ்வின் புளிக்காரமாக வாழுமாறு அழைப்பு விடுத்தார்.
நகரங்களில் கடவுளைச் சந்தித்தல், மூன்றாம் மில்லென்யத்தில் நற்செய்தி அறிவித்தல்  என்ற தலைப்பில் திருப்பீட பொதுநிலையினர் அவை இம்மாதம் 5ம் தேதி தொடங்கிய இந்த ஆண்டுக் கூட்டம் இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை ஆயர்கள் இளையோர் உருவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்

பிப்.07,2015. உலகாயுதப் போக்கு, அரசியல் ஆர்வம் போன்றவற்றை விலக்கி, திருப்பீடத் தூதர்கள் வழியாக, பேதுருவின் வழிவருபவர்களுடன் உடன்பிறப்பு ஒன்றிப்பைத் தொடர்ந்து வலுவடையச் செய்யுமாறு ஆப்ரிக்க ஆயர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
SECAM எனப்படும் ஆப்ரிக்கா மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆப்ரிக்காவின் வருங்காலம் இளையோரிடம் இருப்பதால், அவர்களின் உருவாக்கத்தில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தினார்.

ஆயர்களின் சான்றுபகரும் வாழ்வு இளையோருக்கு அதிகம் தேவைப்படுகின்றது என்றும், வெற்றி, செல்வம், அதிகாரவெறி போன்றவற்றை அடைவதற்கு எந்த வழியையும் பின்பற்ற முயலும் புதிய காலனி ஆதிக்கமுறைகளிலிருந்து இளையோர் பாதுகாக்கப்படுவது முக்கியம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குடும்பங்கள் பிளவுபடுவதை ஆப்ரிக்காவிலும் காண முடிகின்றது என்றும் கூறிய திருத்தந்தை, குடும்ப வாழ்வை உறுதிப்படுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் ஆயர்கள் மதிப்பீடு செய்து ஊக்கப்படுத்துமாறும் கூறினார்.
நற்செய்தி அறிவித்தல் என்பது அக வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும் என்றும், மனமாற்றத்தின் பயனாக திருஅவை சமூகம் முழுவதும் உயிருள்ள விசுவாசம் மற்றும் பிறரன்புக்குச் சான்றாய்த் திகழும் என்றும் ஆப்ரிக்க ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை தொழிலதிபர்கள் மனித மாண்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுகோள்

பிப்.07,2015. இவ்வுலகில் எல்லாருக்கும் போதுமான உணவு இருக்கும்வேளை, இவ்வுணவு அனைத்து மக்களையும் சென்றடைவதில்லை மற்றும் நம் கண்முன்னே பெருமளவான உணவுப்பொருள்களும், உணவுகளும் வீணாக்கப்படுகின்றன என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த நம் பூமிக்கு உணவளிப்போம், வாழ்வுக்குச் சக்தி என்ற தலைப்பில், இத்தாலிய நகரமான மிலானில், பன்னாட்டு அரசியல் மற்றும் தொழிலதிபர்கள் என 500 பேர் கலந்துகொள்ளும் அனைத்துலக கருத்தரங்குக்கு இச்சனிக்கிழமையன்று காணொளிச் செய்தி வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொழிலதிபர்கள் மனித மாண்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமாறு கேட்டுக்கொண்டார்.
மிலானில் வருகிற மே மாதம் தொடங்கும் Expo 2015 என்ற கண்காட்சியின் தலைப்பாகவும் இது எடுக்கப்பட்டுள்ளது.
மனித மாண்புக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு, இவர்கள் பிறரன்புக்குச் சாட்சிகளாக இருந்து இந்தப்பூமியின் தலைவர்களாக இல்லாமல், அதன் பாதுகாவலர்களாகச் செயல்படுமாறும் பரிந்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகில் ஒவ்வோர் ஆண்டும் 800 கோடி யூரோக்களுக்கு மேலான மதிப்புள்ள உணவுப்பொருள்கள் குப்பையில் வீசப்படுவதாக ஓர் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. CCBI ஆயர்கள் பேரவையின் புதிய தலைவர்கள்

பிப்.07,2015. CCBI என்ற இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவையின் தலைவராக, மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பங்களூருவில் நடைபெற்றுவரும் CCBI ஆயர்கள் பேரவையின் 27 வது ஆண்டுக் கூட்டத்தில், அப்பேரவையின் உதவித் தலைவராக கோவா பேராயர் பிலிப் நேரி ஃபெராரோ, பொதுச் செயலராக கோழிக்கோடு ஆயர் வர்க்கீஸ் சக்களக்கள் ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இத்தலைவர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள்.
கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், ஆசிய ஆயர்கள் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் திருப்பீட நிர்வாகச் சீரமைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை கூறும் எட்டு கர்தினால்களில் ஒருவர்.
CCBI என்ற இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவை, ஆசியாவிலுள்ள ஆயர்கள் பேரவையில் பெரியதும், உலகிலுள்ள ஆயர்கள் பேரவையில் நான்காவதுமாக உள்ளது.   
இம்மாதம் 3ம் தேதி தொடங்கிய இக்கூட்டம் 9ம் தேதி நிறைவடையும். இதில் இந்தியாவின் 131 இலத்தீன் மறைமாவட்டங்களின் 140 ஆயர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : Ind.Sec /வத்திக்கான் வானொலி

6. சமூகத்தின் உறுதியான வளர்ச்சிக்கு மதங்கள் பங்குதாரர்கள், பேராயர் அவ்சா

பிப்.07,2015. மதங்களும், மதங்களை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களும்  உலகின் உறுதியான வளர்ச்சிக்குப் பங்குதாரர்களாகவும், ஐ.நா.வின் 2015ம் ஆண்டின் வளர்ச்சித் திட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்கு வல்லமையுள்ள கருவிகளாகவும்  உள்ளன என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்.  
உலக பல்சமய நல்லிணக்கம்:உறுதியான வளர்ச்சிக்கு மதங்களின் பங்கு என்ற தலைப்பில் ஐ.நா. பொது அவை சிறப்பித்த நிகழ்வில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernardito Auza அவர்கள், மனித சமுதாயத்தின் வரலாற்றில் உறுதியான வளர்ச்சிக்கு மதங்களும், மதம் சார்ந்த நிறுவனங்களும் எப்பொழுதும் தங்களைக் கையளித்து வருகின்றன என்று தெரிவித்தார்.
உலக சமூகங்களின் வாழ்வில் மதங்களும், மதம் சார்ந்த நிறுவனங்களும் ஆற்றிவரும் நற்பணிகளை அங்கீகரிப்பதாய் ஐ.நா.வின் இந்நிகழ்வு அமைந்துள்ளது என்றும் கூறினார்  பேராயர் Auza.
எனினும், உலகின் பல பகுதிகளில், மதங்களும், மதம் சார்ந்த நிறுவனங்களும் ஓரங்கட்டப்படுவது அல்லது கட்டுப்படுத்தப்படுவது, அடிப்படை மனித உரிமை மீறல் மட்டுமல்லாமல், சமூகத்தில் இவை வகிக்கின்ற முக்கிய பங்கையும், இவை தொடர்ந்து ஆற்றும் நற்பணிகளையும் ஏற்கத் தவறுவதாகும் என்பதை நினைவுபடுத்தும் செயலாகவும் ஐ.நா.வின் இந்நிகழ்வு உள்ளது என்றும் கூறினார் பேராயர் Auza.
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி முதல் வாரம் உலக பல்சமய நல்லிணக்க வாரம் ஐ.நா.வில் சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. உக்ரேய்ன் கிறிஸ்தவத் தலைவர்கள் நாட்டின் ஒற்றுமைக்கு வேண்டுகோள்

பிப்.07,2015. உக்ரேய்னில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளதை முன்னிட்டு அந்நாட்டின் ஒற்றுமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் உக்ரேய்ன் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர்கள்.
உக்ரேய்ன்க்கு ஆயுத உதவி வழங்குவது குறித்து அமெரிக்க ஐக்கிய நாடு பரிசீலித்துவரும்வேளை, உக்ரேய்ன் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் Lviv பேராயர் Mieczyslaw Mokrzycki, உக்ரேய்ன் Lviv ஆர்த்தடாக்ஸ் சபைப் பேராயர் Filaret Kucherov  ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இறைவனால் வழங்கப்பட்ட சுதந்திரத்தை நாம் பாதுகாப்போம் எனக் கூறியுள்ளனர்.
போர் மனித வாழ்வுக்கு எதிரான குற்றம் என்றும், இது துன்பங்களையும், மரணங்களையும், அநீதிகளையும் கொண்டு வருகின்றது என்றும் கூறும் அவ்வறிக்கை, நம் முயற்சிகளை ஒன்றிணைப்பதன் மூலம் போரையும், தீமையையும் எதிர்கொள்ள இயலும் என்றும் கூறியுள்ளது.
கிழக்கு உக்ரேய்னில் தற்போது தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதுநாள்வரை அங்கு நடந்துவந்த சண்டையில் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய 5,400 பேர் இறந்துள்ளனர். 12 இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர்.

ஆதாரம் : CNS /வத்திக்கான் வானொலி

8. குடும்பங்கள் குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்துக்கு நவநாள் செபங்கள்

பிப்.07,2015. வருகிற அக்டோபரில் வத்திக்கானில் தொடங்கும் குடும்பங்கள் குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்துக்கு உலக அளவில் நவநாள் செபங்கள் தொடங்கியுள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின்பேரில் இந்நவநாள் பக்தி முயற்சிகள் பிப்.5, இவ்வியாழனன்று தொடங்கியுள்ளன.
ஒன்பது மாதங்கள் நவநாள் பக்தி முயற்சிகள் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழனன்று திருநற்கருணை ஆராதனை பக்தி முயற்சியாக நடைபெறும். இது அக்டோபர் முதல் தேதி வரை ஒவ்வொரு மாதமும் நடைபெறும்.
குடும்பங்கள் குறித்த உலக ஆயர்கள் மாமன்றம் வருகிற அக்டோபர் 5-19 வரை நடைபெறும்.

ஆதாரம் : CNA /வத்திக்கான் வானொலி

9. எபோலா நோயால் கைவிடப்பட்ட சிறாருக்கு குடும்பங்கள் உதவி

பிப்.07,2015. மேற்கு ஆப்ரிக்காவில் எபோலா நோய்த் தாக்கத்தால் 16 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறார் பெற்றோரின்றி கைவிடப்பட்டிருந்தாலும், இவர்களில் பலரை குடும்பங்கள் தங்களோடு சேர்த்துக்கொண்டுள்ளன என்று யூனிசெப் நிறுவனம் கூறியது.
ஐ.நா.வின் குழந்தை நல நிதியமான யூனிசெப் நிறுவனம் சார்பில் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய Andrew Brooks அவர்கள், சில குடும்பங்கள் மூன்று முதல் ஏழு குழந்தைகள் வரை தங்களோடு சேர்த்துள்ளன என்றும், 16,600 அநாதைக் குழந்தைகளில் ஏறக்குறைய 500 பேரை மட்டுமே பொதுவான மையங்களில் வைத்து பராமரிக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.
இச்சிறாரில் எண்பது விழுக்காட்டினர் தங்களின் உறவினர் குடும்பங்களோடு இணைந்துள்ளனர் என்றும் அறிவித்தார் Brooks.
எபோலா நோயால் 22,525 பேர் தாக்கப்பட்டனர், இவர்களில் 9004 பேர் இறந்துள்ளனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.

ஆதாரம் :UN/வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Pope: ‘Synod final document forms part of papal Magisterium’

  Pope: ‘Synod final document forms part of papal Magisterium’ Pope Francis publishes a note accompanying the Final Document of the Synod of...