மூடப்படும் மஹிந்த புதல்வர்களின் தொலைக்காட்சி சேவை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர்களான நாமல் மற்றும் யோசித ராஜபக்ஸ ஆகியோரின் தொலைக்காட்சி நிறுவனமான சீ.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசை மூடப்பட உள்ளது. குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்புப் பணிகளை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகிகளினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி நடத்திய காலத்தில் இந்த தொலைக்காட்சி அலைவரிசை ஸ்தாபிக்கப்பட்டு இயங்கி வந்தது.
இந்த தொலைக்காட்சி நிறுவனத்தை கட்டியெழுப்ப பாரியளவில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதுடன், எதுவித வரிகளும் கிரமமான முறையில் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் இது குறித்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
நிறுவனத்தின் அதிகாரிகள் ஊழியர்களுக்கு நிறுவன நிர்வாகம் விடுமுறை வழங்கியுள்ளது. விரும்பிய அதிகாரிகள் ஊழியர்கள் நட்ட ஈட்டைப் பெற்றுக்கொண்டு பதவியை ராஜினாமா செய்ய முடியும் என அறிவித்துள்ளது.
உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரின் ஒளிபரப்பு உரிமையை சீ.எஸ்.என் நிறுவனம் சட்ட விரோதமான முறையில் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த ஒளிபரப்பு உரிமையை மீளவும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டது.
சீ.எஸ்.என் நிறுவனத்தின் சில உயர் அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக ஊதியம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தின் சில உத்தியோகபூர்வ வாகனங்களையே இந்த அதிகாரிகள் பயன்படுத்தி வந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் சகோதரர்களில் ஒருவரான நிசாந்த ரணதுங்க இந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் முக்கிய பதவியொன்றை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் புதிய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் சீ.எஸ்.என் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்யும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு பாரியளவில் வரிகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீ.எஸ்.என் ஊடக நிறுவனத்தை மூடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர்கள் எடுத்த தீர்மானம், மீளவும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்பதனை உணர்ந்து கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.
No comments:
Post a Comment