Wednesday, 25 February 2015

செய்திகள் - 24.02.15

செய்திகள் - 24.02.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை-அர்மேனியப் புனிதர் கிரகரி திருஅவையின் மறைவல்லுனர்

2. பாங்காக் புதிய கர்தினால் - உலகாயுதப் போக்கு தீயவனின் முகம்

3. அன்னை தெரேசா மீதான அவதூறுக்கு இந்திய ஆயர்கள் கடும் கண்டனம்

4. அ.பணி பிரேம்குமாரின் விடுதலைக்கு இந்திய ஆயர்கள் பிரதமருக்கு நன்றி 

5. கடத்தல் நிகழ்வுகள் ஆபத்தான பகுதிகளில் JRSன் பணிகளை வலுப்படுத்துகின்றன

6. கந்தமால் மறைசாட்சிகளுக்கு நினைவுச்சின்னம்

7. கடந்த எழுபது ஆண்டுகளில் ஐ.நா.வின் பணிகள்

8. 2020ம் ஆண்டுக்குள் ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்த முடியாத ஸ்மார்ட் ஊசிகள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை-அர்மேனியப் புனிதர் கிரகரி திருஅவையின் மறைவல்லுனர்

பிப்.24,2015. அர்மேனியக் கவிஞரும், ஆதினத் துறவியுமான Narek புனித கிரகரி அவர்களை, அகிலத் திருஅவையின் மறைவல்லுனர் என அறிக்கையிட்டுள்ளார்  திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த சனிக்கிழமையன்று கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள் முன்வைத்த பரிந்துரையை ஏற்று, இந்த பத்தாம் நூற்றாண்டு புனிதரை மறைவல்லுனர் என  அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்மேனிய நகரமான Narekல் கி.பி.951ம் ஆண்டில் பிறந்த புனித கிரகரி, வல்லுனர்கள் மற்றும் திருஅவை மனிதர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர். இவரது தந்தையான ஆயர் Khosrov அவர்கள், அக்காலத்திலேயே திருவழிபாடு பற்றிய விளக்கங்களை எழுதியவர். புனித கிரகரி எழுதிய புலம்பல்கள் நூல் மிகவும் புகழ்பெற்றது. இதயத்தின் ஆழத்திலிருந்து இறைவனோடு உரையாடும் 95 செபங்களைக் கொண்டது இந்நூல்.
தற்போது திருஅவையில், Narek புனித கிரகரியுடன் சேர்த்து முப்பத்தாறு(36) மறைவல்லுனர்கள் உள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட தலைமையக அதிகாரிகளும் அரிச்சா நகரில் நகரில் ஆண்டு தியானம் செய்துகொண்டிருக்கின்றனர். இத்தியானம் வருகிற வெள்ளிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. பாங்காக் புதிய கர்தினால் - உலகாயுதப் போக்கு தீயவனின் முகம்

பிப்.24,2015. மக்கள் மத்தியில் உறவுப் பாலங்களைக் கட்டுவதற்கும், இக்காலத்திய உலகாயுதப் போக்குக்கு எதிராகச் செல்வதற்கு கத்தோலிக்கரை உருவாக்குவதற்கும் தாய்லாந்து திருஅவை முயற்சித்து வருகின்றது என்று கூறினார் அந்நாட்டின் புதிய கர்தினால் Francis Xavier Kriengsak Kovithavanij.
இம்மாதம் 14ம் தேதி புதிய கர்தினாலாகத் திருநிலைப்படுத்தப்பட்ட பாங்காக் கர்தினால் Kriengsak அவர்கள் CNA செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தாய்லாந்து திருஅவை இக்காலத்தில் உலகாயுதப் போக்கு என்ற சவாலை எதிர்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
தாய்லாந்தில் வாழும் மியான்மார் அகதிகள் பற்றியும் பேசிய கர்தினால் Kriengsak அவர்கள், 2007ம் ஆண்டில் முப்பது இலட்சம் அகதிகள் மியான்மாரிலிருந்து தாய்லாந்து வந்தனர், அவர்கள் தாய்லாந்தில் தொடர்ந்து வாழ்வதற்கு, தாய்லாந்து அரசால் உதவி செய்ய முடியாததால் அவர்களுக்கு அகதிகள் என்ற நிலை கொடுக்கப்படவில்லை என்று கூறினார்.
ஆயினும் மியான்மார் அகதிகள் தாய்லாந்தில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும், யாங்கூன் புதிய கர்தினால் சார்லஸ் போ அவர்களுக்கும் தனக்குமிடையே அதிக ஒத்துழைப்பு ஏற்பட இது காரணமானது என்றும் கூறினார் பாங்காக் கர்தினால் Kriengsak.

ஆதாரம் : CNA/வத்திக்கான் வானொலி

3. அன்னை தெரேசா மீதான அவதூறுக்கு இந்திய ஆயர்கள் கடும் கண்டனம்

பிப்.24,2015. தூய மனிதர் அருளாளர் அன்னை தெரேசா மீதும், ஏழைகள், கைவிடப்பட்டவர், நோயாளிகள் போன்றோருக்கு அவர் தனது வாழ்வில் நீண்ட காலம் ஆற்றிய மனிதாபிமானப் பணிகள் மீதும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோகன் பகவத் (Mohan Bhagwat) அவர்கள் பழிகளைச் சுமத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று இந்திய ஆயர்கள் இச்செவ்வாயன்று கூறியுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற நொபெல் அமைதி விருது, பாரத ரத்னா விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ள அருளாளர் அன்னை தெரேசா அவர்களை, இத்தகைய உண்மையல்லாத சர்ச்சைகளில் சிக்கவைப்பது, தேவையற்ற செயல் என்று CBCI என்ற இந்திய ஆயர்கள் பேரவை கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
அன்னை தெரசாவின் சேவை நல்லதாக இருந்தாலும், கிறிஸ்தவராகிய அவர் மத மாற்றம் செய்வதையே தனது பணியின் நோக்கமாகக் கொண்டிருந்தார் என, ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் அவர்கள் இத்திங்களன்று ராஜஸ்தானில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இதற்கு, தமிழக அரசியல்வாதிகள் உட்பட இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், கிறிஸ்தவத் தலைவர்களும், இந்தியக் குடிமக்கள் பலரும் தங்களின் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் மனிதாபிமானிகளில் ஒருவர் அன்னை தெரேசா என்று குறிப்பிட்டுள்ள இந்திய ஆயர்கள், அன்னை தெரேசா ஒருபோதும் மறைவாக எதையும் செய்தது கிடையாது என்றும், மதமாற்றத்துக்காக அவர் ஒருபோதும் தனது பணிகளைப் பயன்படுத்தியது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ் தலைவரின் இக்கூற்றுக்குக் கண்டனம் தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் அவர்கள், கொல்கத்தாவிலுள்ள அன்னை தெரசாவின் நிர்மல் ஹிருதய இல்லத்தில் அன்னை தெரசாவுடன் தான் சில மாதங்கள் பணி செய்ததாகவும், அன்னை தெரசா, தூய்மையான இதயமுள்ளவர், அவரின் வாழ்வை இவ்வாறு இழிவுபடுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவை ஆளும் பிஜேபி கட்சி இதற்கு மன்னிப்புக் கோருமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் ஏழையிலும் கடும் ஏழைகளாய் இருந்த மக்களுக்குப் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் பணியாற்றிய அன்னை தெரேசா அவர்கள், பிறரன்பு மறைபோதகச் சபையை நிறுவியவர் மற்றும் 1979ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதையும் பெற்றிருப்பவர்.

ஆதாரம் : CBCI /வத்திக்கான் வானொலி

4. அ.பணி பிரேம்குமாரின் விடுதலைக்கு இந்திய ஆயர்கள் பிரதமருக்கு நன்றி 

பிப்.24,2015. அருள்பணி அலெக்சிஸ் பிரேம்குமார் அவர்கள் கடத்தல்காரர்களிடமிருந்து விடுதலையடைவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் இந்திய ஆயர்கள்.

அருள்பணி பிரேம்குமார் அவர்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்படுவதற்கு, பிரதமர் மோடி அவர்களும், அரசின் பல்வேறு நிறுவனங்களும் எடுத்த முயற்சிகளுக்கு இந்திய ஆயர் பேரவை நன்றி தெரிவிப்பதாக, புதுடெல்லியிலுல்ள CBCI அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே, தனது இயேசு சபை தலைவர்கள் அனுமதியளித்தால், தான் மீண்டும் ஆப்கான் பணித்தளத்துக்குச் சென்று பணி செய்யத் தயாராய் இருப்பதாக அருள்பணி பிரேம்குமார் அவர்கள் கூறியதாக, பேராசிரியர் அருள்பணி PR John கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் நான்கு இந்திய இயேசு சபையினர் கல்வி மற்றும் சமூகநலப் பணிகளை ஆற்றி வருகின்றனர். 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி

5. கடத்தல் நிகழ்வுகள் ஆபத்தான பகுதிகளில் JRSன் பணிகளை வலுப்படுத்துகின்றன

பிப்.24,2015. புலம்பெயர்ந்தவர் மத்தியில் பணியாற்றுவோர் கடத்தப்படுவது, ஆபத்துக்கள் அதிகம் நிறைந்த பல நாடுகளில், JRS நிறுவனத்தின் பணிகளை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகின்றது என்று JRS நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.
இயேசு சபை அருள்பணி பிரேம்குமார் அவர்கள் ஆப்கானிஸ்தானில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு தற்போது விடுதலையாகி இருப்பது குறித்து CNS செய்தி நிறுவனத்திடம் பேசிய, JRS நிறுவனத்தின் அனைத்துலகத் தொடர்பின் ஒருங்கிணைப்பாளர் James Stapleton இவ்வாறு தெரிவித்தார்.
இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தவர் நிறுவனமான JRSல் பணிபுரிவோர் ஐ.நா. நிறுவனத்திடம் பயிற்சி பெற்றவர்கள் அல்லது புலம்பெயர்ந்தவர்களைப் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தும் இராணுவ அனுபவத்தைக் கொண்டவர்கள் என்றும் கூறினார் Stapleton.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் JRS நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய  அருள்பணியாளர் பிரேம்குமார் அவர்கள், இறைவன் தனது வாழ்வைக் காப்பாற்றியுள்ளார் என்றும், தனது கடத்தல் பற்றி வேறு எதுவும் விவாதிக்க விரும்பவில்லை என்றும், தனக்காகச் செபித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

ஆதாரம் : CNS /வத்திக்கான் வானொலி

6. கந்தமால் மறைசாட்சிகளுக்கு நினைவுச்சின்னம்

பிப்.24,2015. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 2008ம் ஆண்டில் இடம்பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு முதன் முறையாக நினைவுச்சின்னம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டில் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற  வன்முறையில் கொல்லப்பட்ட Tiangia கிராமத்தின் ஏழு மறைசாட்சிகளை நினைவுகூருவதற்கென Tiangia கிராமத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் முதல் நினைவுச்சின்னத்தை  எழுப்பியுள்ளனர். இதனை கட்டக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் ஆசிர்வதித்துள்ளார்.
இந்த ஏழு மறைசாட்சிகளும், கந்தமால் மற்றும் பிற இடங்களின் மக்களுக்குச் சாட்சித் தூண்களாக உள்ளனர் என்றுரைத்த பேராயர் ஜான் பார்வா அவர்கள், இயேசு மீது கொண்டிருந்த அன்புக்காகத் தங்கள் உயிரைக் கையளித்த இத்தகைய மனிதர்களுக்காக இறைவனுக்கு நன்றி கூருவோம் என்றார்.
Tiangia கிராம ஏழு மறைசாட்சிகள் - அ.பணி Bernard Digal (இறப்பு அக்.28,2008), Trinath Digal (25 ஆகஸ்ட் 2008), Bikram Nayak (25 ஆகஸ்ட் 2008), Parikhit Nayak (27 ஆகஸ்ட் 2008), Darasantha Pradhan (25 ஆகஸ்ட் 2008), Dibyasing Digal (25 ஆகஸ்ட் 2008), Dinabandhu Pradhan (27 ஆகஸ்ட் 2008).
இதற்கிடையே, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தங்கள் அமைப்பின் ஐம்பதாவது ஆண்டு நிறைவைச் சிறப்பிப்பதற்கு கந்தமால் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது அப்பகுதி கிறிஸ்தவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
கந்தமாலில் 2007ம் ஆண்டு டிசம்பரில் வெடித்த கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையில் 900 வீடுகளும் நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் 395 ஆலயங்களும், 5,500க்கு அதிகமான வீடுகளும் தீயிட்டு கொளுத்தப்பட்டன, ஏறக்குறைய நூறு பேர் கொல்லப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகினர்.  

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி

7. கடந்த எழுபது ஆண்டுகளில் ஐ.நா.வின் பணிகள்

பிப்.24,2015. ஐக்கிய நாடுகள் நிறுவனம் கடந்த எழுபது வருடப் பணியில் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளது மற்றும் அளப்பரிய வாய்ப்புகளும் அதற்குக் காத்திருக்கின்றன என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.
மற்றுமோர் உலகப்போரைத் தவிர்ப்பதற்காக ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கப்பட்டது, அதில் வெற்றியும் கண்டுள்ளது என்றுரைத்த பான் கி மூன் அவர்கள், இனப்படுகொலைகள், ஆயுதத் தாக்குதல்கள் போன்றவை இடம்பெற்றிருந்தாலும், கடந்த எழுபது ஆண்டுகளில் இரத்தம் சிந்தும் உலகப் போர் இடம்பெறவில்ல என்று கூறினார்.
அமைதிக்கும், பாதுகாப்புக்கும், பசிப்பிணியைப் போக்குவதற்கும், பெண்களின் மேம்பாட்டுக்கும், அனைத்துலக சட்டத்தை ஊக்குவிப்பதற்கும் ஐ.நா. குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளது என்றும் அவர் கூறினார். 
1945ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

8. 2020ம் ஆண்டுக்குள் ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்த முடியாத ஸ்மார்ட் ஊசிகள்

பிப்.24,2015. பாதுகாப்பற்ற ஊசிகளால் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களை உயிர்க்கொல்லி நோய்த் தொற்றுகளிலிருந்து காப்பாற்றும் நோக்கத்தில், ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்த முடியாத ஸ்மார்ட் ஊசிகளை 2020ம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் பயன்படுத்த வேண்டுமென்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் இத்திங்களன்று வலியுறுத்தியுள்ளது.
எய்ட்ஸ் நோய்க்குக் காரணாகும் HIV கிருமிகள், hepatitis மற்றும் பிற நோய்களிலிருந்து உலக மக்களைக் காப்பாற்றுவதற்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்ட  ஸ்மார்ட் ஊசிகள் மிகவும் முக்கியம் என, WHO நிறுவனத்தின் HIV/AIDS துறைப் பிரிவின் இயக்குனர் மருத்துவர் Gottfried Hirnschall கூறினார்.
WHO நிறுவனத்தின் உதவியுடன் 2014ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, பாதுகாப்பற்ற ஊசிகளால், 2010ம் ஆண்டில் 17 இலட்சம் பேர் வரை hepatitis B நோய்க் கிருமிகளாலும், 3 இலட்சத்து 15 ஆயிரம் பேர்வரை hepatitis C நோய்க் கிருமிகளாலும், ஏறக்குறைய 33 ஆயிரத்து 800 பேர் HIV நோய்க் கிருமிகளாலும் தாக்கப்பட்டனர் எனத் தெரியவந்துள்ளது.
WHO நிறுவனம் பரிந்துரைத்துள்ள, சதையில் அல்லது தோளில் போடப் பயன்படுத்தப்படும் புதிய ஸ்மார்ட் ஊசிகள், மறுமுறையும் பயன்படுத்துவதற்கு உதவாதவையாகும். 
கம்போடியாவில் அழுக்கான ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதால், அங்கு பலருக்கு எச்.ஐ.வி, மற்றும் ஈரல் தொற்றுநோய் கணிசமாகப் பரவியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி



கடுகு சிறுத்தாலும்...


வளைந்து கொடுக்கும் நாணல் வாழும்...

பாங்கேயி என்ற குருவின் உரையைக் கேட்பதற்கு வரும் கூட்டம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போனது. இதைக் கண்ட நீச்சிரன் என்ற மற்றொரு குருவுக்கு பொறாமையும், கோபமும் அதிகமானது. குரு பாங்கேயி அவர்கள் போதித்துக் கொண்டிருக்கும்போது, அவருடைய புகழைக் கெடுக்கும் நோக்கத்தில், நீச்சிரன் அவர்கள் அங்கு வந்து உரத்தக் குரலில், "ஏய், குருவே, உன்னிடம் வருபவர் எவரும் நீ சொல்வதற்கு முற்றிலும் கீழ்படிவார்களாமே. எங்கே, என்னைக் கீழ்ப்படிய வைத்துவிடு, பார்ப்போம்" என்றார். குரு பாங்கேயி அவரிடம், "இங்கே அருகில் வாருங்கள். நான் இதை எப்படி செய்கிறேன் என்று காட்டுகிறேன்" என்றார்.
நீச்சிரன் அவர் அருகில் சென்றார். குரு பாங்கேயி புன்முறுவலுடன் அவரிடம், "என் இடது பக்கமாய் வாருங்கள்" என்றார். நீச்சிரன் அப்படியே செய்தார். "மன்னிக்கவும். என் வலது பக்கம் வந்தால், நாம் இதைப்பற்றி இன்னும் தெளிவாகப் பேசலாம்" என்றார் குரு பாங்கெயி. நீச்சிரனும் அப்படியே செய்தார். அப்போது, பாங்கேயி அவரிடம், "பார்த்தீர்களா? நான் சொன்னவற்றையெல்லாம் நீங்கள் செய்தீர்கள். நீங்கள் உன்னதமானவர். இப்போது அமரவும், நாம் பேசுவோம்." என்றார்.
வெள்ளம் வரும்போது, வளைந்து கொடுக்கும் நாணல், நிமிர்ந்து நிற்கும். எதிர்த்து நிற்கும் பெரும் மரம், வேரோடு, வெள்ளத்தோடு போய்விடும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...