Wednesday, 25 February 2015

செய்திகள் - 23.02.15

செய்திகள் - 23.02.15
------------------------------------------------------------------------------------------------------

1. அருள்பணியில் ஈடுபடுவோர் கொள்ளவேண்டிய மன உறுதி - தியான உரை

2. குழித்துறை மறைமாவட்ட முதல் ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் பணி ஏற்பு

3. "வயது முதிர்ந்தோரைப் பேணுதல்" - வத்திக்கானில் கருத்தரங்கு

4. பிலிப்பின்ஸ் நாட்டில் அமைதி நிலவ மாதம் முழுவதும் சிறப்பு செபம்

5. சிரியாவில் கடத்திச் செல்லப்பட்டுள்ள கிறிஸ்துவர்களுக்காக செபம்

6. தீவிரவாதம் பற்றி இஸ்லாமிய உயர் குருவின் வன்மையான கண்டனம்

7. ஒரு பில்லியன் டாலர்கள் நிதி உதவி கேட்டு WHO விண்ணப்பம்

8. ஐ.நா.வில் Veto வாக்குரிமை கைவிடப்பட வேண்டும்: அம்னெஸ்டி
------------------------------------------------------------------------------------------------------

1. அருள்பணியில் ஈடுபடுவோர் கொள்ளவேண்டிய மன உறுதி - தியான உரை

பிப்.25,2015 திருத்தந்தையுடன் வத்திக்கான் அதிகாரிகள் பங்கேற்கும் ஆண்டு தியான உரைகளை வழங்கிவரும் அருள்பணி புரூனோ செகோந்தின் (Bruno Secondin) அவர்கள், கிறிஸ்தவ வாழ்வை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக வாழ அனைவரும், குறிப்பாக, திருஅவை ஊழியர்களும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
Ariccia எனுமிடத்தில் அமைந்துள்ள Casa Divin Maestro என்ற தியான இல்லத்தில், பிப்ரவரி 22, இஞ்ஞாயிறு மாலை முதல், பிப்ரவரி 27 இவ்வெள்ளி காலை முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், வத்திக்கானில் அவருடன் பணியாற்றும் கர்தினால்களும் ஆயர்களும் ஏனைய அருள் பணியாளர்களும் தங்கள் ஆண்டு தியானத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாண்டு தியானத்தை வழிநடத்தும் அருள்பணி செகோந்தின் அவர்கள், விவிலியத்தில், அரசர்கள் முதல் நூலில் இறைவாக்கினர் எலியா, மன்னர் ஆகாபுவிடம் மேற்கொண்ட முயற்சிகளை சுட்டிக்காட்டிப் பேசுகையில், அருள்பணியில் ஈடுபடுவோர் கொள்ளவேண்டிய மன உறுதியைக் குறித்து தன் கருத்துக்களை வழங்கினார்.
பொய்வாக்கினர்களால் தவறாக வழிநடத்தப்பட்ட மன்னர் ஆகாபுவைப் போல இன்று பல அரசுகள் வழிமாறிச் செல்வதால் மக்கள் துன்புறுகின்றனர் என்றும், இந்நிலையில், அருள் பணியாளர்கள் தங்கள் பாதுகாப்பைத் துறந்து, துணிவுடன் வெளியேறி உண்மைகளை எடுத்துரைக்கவேண்டும் என்றும் அருள்பணி செகோந்தின் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. குழித்துறை மறைமாவட்ட முதல் ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் பணி ஏற்பு

பிப்.25,2015. கோட்டார் மறைமாவட்டத்தில் இருந்து குழித்துறை மறைமாவட்டம் என்ற புதிய மறைமாவட்டம் உருவாக்கப்பட்டு, அந்த மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமிக்கப்பட்ட அருள்பணி ஜெரோம் தாஸ் வறுவேல் அவர்கள் இச்செவ்வாயன்று (பிப்.24) ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
குமரி மாவட்ட சித்திரங்கோடு மூவொரு கடவுள் மத்திய பள்ளி வளாகத்தில் இச்செவ்வாய் மாலை 28 ஆயர்கள் ஒன்றிணைந்து நிறைவேற்றிய ஆயர் திருநிலைப்பாட்டுத் திருப்பலிக்கு தலைமை தாங்கிய ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள், ஆயர்நிலை என்பது மகிமையன்று; பணியைக் குறிக்கும் சொல், ஆள்வதைவிட பணிபுரிவதே ஆயரின் மேலான கடன் என்ற மையக்கருத்துடன் மறையுரையாற்றினார்.
புதிய ஆயரை திருநிலைப்படுத்திய வழிபாட்டுமுறையை நிறைவேற்றியதில், முதன்மை ஆயராக, கோட்டார் மறைமாவட்ட ஆயரும், தமிழக ஆயர் பேரவை தலைவருமான பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களும், திருநிலைப்படுத்திய இணை ஆயர்களாக, மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி, சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆகியோரும் பங்கேற்றனர்.
இதில் ஆயர்கள், சலேசிய சபை மாநில தலைவர் அருட்பணியாளர் ஜெயபால் ஆகியோர் குத்துவிளக்கேற்றிய பின்னர், குழித்துறை மறைமாவட்டம் தொடர்பான திருத்தந்தையின் ஆணையை, ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள் வாசிக்க, கோட்டார் மறைமாவட்ட முதன்மைக்குரு அருள்பணி சாலமன் அந்த ஆணையை தமிழில் வாசித்தார்.
திருப்பலிக்குப்பின் இடம்பெற்ற வாழ்த்துக் கூட்டத்தில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள் வாழ்த்திப்பேசி, குழித்துறை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணியாளர்களுக்கு ஓய்வு நிதியாக ரூ.25 இலட்சத்துக்கான காசோலையை புதிய ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேல் அவர்களிடம் வழங்கினார்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் கே.டி.பச்சைமால், கே.பி.ராஜேந்திரபிரசாத், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன் உட்பட பல அரசியல் தலைவர்கள் புதிய ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேலு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
குழித்துறை புதிய மறை மாவட்ட உதய தினம் மற்றும் புதிய ஆயர் திருநிலைப்பாட்டு விழாவையொட்டி செவ்வாயன்று, மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கத்தோலிக்க நிறுவனங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது.

ஆதாரம் : Kumari online /வத்திக்கான் வானொலி

3. "வயது முதிர்ந்தோரைப் பேணுதல்" - வத்திக்கானில் கருத்தரங்கு

பிப்.25,2015 "வயது முதிர்ந்தோருக்கு உதவுதல் மற்றும் உடல்துன்பத்தில் பேணுதல்" என்ற தலைப்பில், வருகிற மார்ச் மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி முடிய வத்திக்கானில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்கள் வாழ்வின் இறுதியை நெருங்கியுள்ள வயது முதிர்ந்தோருக்குத் தேவையான மருத்துவ உதவிகள், மற்றும் மனநல, ஆன்மீக உதவிகள் ஆகியவை இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளதென்று கருத்தரங்கின் அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
மரணத்தை நெருங்கிவிடும் முதிர்ந்தோரை ஆதரவின்றி விட்டுவிடும் உலகப் போக்கு, அவர்கள் வேதனையைத் தீர்க்க மருத்துவ உலகம் பரிந்துரைக்கும் சுருக்கு வழிகள் ஆகியவை இந்தக் கருத்தரங்கில் பேசப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வுக்கு ஆதாரமாகச் செயலாற்றும் பாப்பிறை அறக்கட்டளை ஏற்பாடு செய்துவரும் இக்கருத்தரங்கு, இவ்வறக்கட்டளை நடத்தும் 21வது கருத்தரங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. பிலிப்பின்ஸ் நாட்டில் அமைதி நிலவ மாதம் முழுவதும் சிறப்பு செபம்

பிப்.25,2015 பிலிப்பின்ஸ் நாட்டில், குறிப்பாக, வன்முறைகளால் பாதிக்கப்படும் Mindanao பகுதியில் அமைதி நிலவ, அந்நாட்டுத் தலத்திருஅவை மார்ச் மாதம் முழுவதும் சிறப்பு செபம் ஒன்றை செபிக்க, பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை விண்ணப்பித்துள்ளது.
மார்ச் 1ம் தேதி முதல், மார்ச் 28ம் தேதி முடிய ஒவ்வொரு நாளும், திருப்பலியில் திருவிருந்துக்குப் பின்னர், இந்தச் சிறப்புச் செபம் அனைத்துக் கோவில்களிலும் செபிக்கப்படவேண்டும் என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Socrates Villegas அவர்கள் மடல் அனுப்பியுள்ளார்.
இவ்வாண்டு சனவரி 25ம் தேதி, Mindanao தீவின் Mamasapano எனுமிடத்தில் நடைபெற்ற வன்முறையில் இறந்தோரை எண்ணி இந்நாடு கண்ணீர் சிந்துகிறது என்றும், இக்கொடுமைக்குத் தகுந்த பதில், மக்கள் எழுப்பும் செபங்களே என்றும் பேராயர் Villegas அவர்கள், Fides செய்தியிடம் கூறியுள்ளார்.
Mamasapanoவில் நடைபெற்ற வன்முறை, நம்மைப் பிரிக்கும் தீய சக்தியாக மாறாமல் இருக்க, நமது செபங்களே சிறந்த கருவியாக அமையும் என்று Cotabato பேராயர், கர்தினால் Orlando Quevedo அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

5. சிரியாவில் கடத்திச் செல்லப்பட்டுள்ள கிறிஸ்துவர்களுக்காக செபம்

பிப்.25,2015 சிரியாவின் வடக்கிழக்குப் பகுதியிலிருந்து, ISIS தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள 90க்கும் அதிகமான கிறிஸ்துவர்களுக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செபிக்கவேண்டும் என்று சிரிய கத்தோலிக்கத் திருஅவையின் முதுபெரும் தந்தை மூன்றாம் இக்னேசியஸ் ஜோசப் யூனான் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
மனித உயிர்கள் மட்டில் எவ்வித மதிப்பும் இன்றி செயல்படும் ISIS தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் அப்பாவி கிறிஸ்தவர்களுக்காக செபிப்பது ஒன்றே தற்போது நாம் செய்யக்கூடிய செயல்பாடு என்று முதுபெரும் தந்தை ஜோசப் யூனான் அவர்கள், CNA கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் Al -Hasakah பகுதியில், மிகப் பழமையான கிறிஸ்தவக் குடியிருப்புக்கள் என்று கருதப்படும் இரு கிராமங்களிலிருந்து 90க்கும் அதிகமான சிரிய கத்தோலிக்கர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று CNA செய்திக்குறிப்பு கூறுகிறது.
சிரியாவில் தொடர்ந்துவரும் போரினால், அந்நாட்டிலிருந்து 30 இலட்சம் மக்கள் வேற்று நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும், 65 இலட்சத்திற்கும் அதிகமானோர், உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்து வாழும் கட்டாயத்திற்கு உள்படுத்தப்படுள்ளனர் என்றும் CNA செய்தி கூறுகிறது.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி

6. தீவிரவாதம் பற்றி இஸ்லாமிய உயர் குருவின் வன்மையான கண்டனம்

பிப்.25,2015 திருக்குரானில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை, வார்த்தைக்கு, வார்த்தை அப்படியே பொருள்கொண்டு, அதனால், தீவிரவாதத்தைப் பின்பற்றும் ஒருசில இஸ்லாமியக் குழுக்களின் போக்கை, இஸ்லாமிய உயர் குரு ஒருவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
எகிப்தின் தலைநகர், கெய்ரோவில் உள்ள al-Azhar பல்கலைக் கழகத்தின் தலைமை குரு, Sheikh Ahmed al-Tayeb அவர்கள், அண்மையில் லிபியா கடற்கரையில் 21 காப்டிக் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்ட கொடுமையைக் கண்டனம் செய்து பேசுகையில் இவ்வாறு கூறினார்.
இஸ்லாமியக் கோட்பாடுகளை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சொல்லித் தரும்போது, எவ்வகையில் இம்மதத்தின் அடிப்படை உண்மைகளைச் சொல்லித் தருகிறோம் என்பதை நாம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தலைமை குரு Tayeb அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
வெள்ளிக்கிழமைகளில் மசூதிகளில் ஒலிபரப்பாகும் மத குருக்களின் உரைகள் இஸ்லாமிய மதத்தின் உண்மைக் கோட்பாடுகளை எடுத்துரைக்கும் உரைகளாக அமையவேண்டும் என்று தலைமை குரு Tayeb அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இஸ்லாமியத் தீவிரவாதிகள் மேற்கொண்டு வரும் வன்முறைச் செயல்கள், உலகெங்கும் பரவியிருக்கும் இஸ்லாம் மக்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று தலைமை குரு Tayeb அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
கெய்ரோவில் உள்ள al-Azhar பல்கலைக் கழகத்தின் தலைமை குரு கூறியுள்ள கருத்துக்களை ஒத்த எண்ணங்களை, எகிப்து, மொராக்கோ ஆகிய நாடுகளின் இஸ்லாமியத் தலைவர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

7. ஒரு பில்லியன் டாலர்கள் நிதி உதவி கேட்டு WHO விண்ணப்பம்

பிப்.25,2015 உலகெங்கும் அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படும் 2 கோடியே, 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் சார்பாக, உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) ஒரு பில்லியன் டாலர்கள் நிதி உதவி கேட்டு விண்ணப்பித்துள்ளது.
உலக நலவாழ்வு நிறுவனத்தின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கிவரும் 50 நாடுகளுக்கு, இச்செவ்வாயன்று, ஜெனீவாவின் தலைமையகத்திலிருந்து இச்சிறப்பு விண்ணப்பத்தை, WHO விடுத்துள்ளது.
பலநாடுகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போர்ச்சூழல்கள், இயற்கைப் பேரிடர்கள், மற்றும் எபோலா போன்ற தோற்று நோய்கள் காரணமாக, இந்த நிதி உதவி உடனடியாகத் தேவைப்படுகிறது என்று WHO நிறுவனத்தின் உயர் அதிகாரி, மருத்துவர் Bruce Aylward அவர்கள் கூறினார்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, ஈராக், தெற்கு சூடான், சிரியா ஆகிய நாடுகளில், குழந்தைகளுக்குத் தேவைப்படும் மருத்துவ உதவிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

8. ஐ.நா.வில் Veto வாக்குரிமை கைவிடப்பட வேண்டும்: அம்னெஸ்டி

பிப்.25,2015 ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் ஐந்து நாடுகளும் தமது Veto வாக்குரிமையை கைவிட வேண்டும் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம் கோரியுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம் இப்புதனன்று வெளியிட்டுள்ள 2014ஆம் ஆண்டுக்கான தமது அறிக்கையில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பெரிய அளவில் நடைபெற்ற வன்முறைகள் காரணமக இலட்சக் கணக்கான மக்கள் கொடுமையான அவலங்களில் சிக்கித் தவிக்கும் சூழலிலும், பெருமளவில் அராஜகங்கள் நடைபெறும்போதும் சர்வதேச சமூகத்தின் அணுகுமுறை அவமானப்படக்கூடிய வகையில் இருந்தது என்று அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
பெரிய அளவில் அட்டூழியங்கள் நடைபெறும்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் தமது Veto வாக்குரிமையை பயன்படுத்துவதை விட்டொழிக்க வேண்டும் என அம்னெஸ்டி கோரியுள்ளது.
உலகளவில் ஆயுத மோதல்களின் தன்மைகள் மாறிவரும் சூழலில் அதை எதிர்கொள்ள சர்வதேசத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தமது ஆண்டறிக்கையில் வேண்டியுள்ளது.
இஸ்லாமிய அரசு அமைப்புப் போன்ற கொடூரமான அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் ஏராளமான மக்கள் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சூழலில், இந்த ஆண்டில் உலகளவில் மனித உரிமைகள் மேலும் கேள்விக்குறியாகியுள்ளது என்று அம்னெஸ்டி கூறியுள்ளது.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி

புத்திசாலித்தனம் அனைவருக்கும் பொது

அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை, என்று ஒரு சிறைக்கைதிக்கு அவருடைய மனைவி கடிதம் எழுதியிருந்தார்.
கைதி பதில் எழுதினார், அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும், என்று.
ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம் வந்தது. அன்புள்ள கணவருக்கு, யாரோ ஒரு கூட்டத்தினர் பெரிய இயந்திரங்களுடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர். இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..? என்று அதில் எழுதியிருந்தது.
கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினார், அன்பே.. அவர்கள் காவல் துறையினர். நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு, என்று.

புத்தியிருந்தால் எங்கிருந்தாலும் பிழைத்துக்கொள்ளலாம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment