செய்திகள்-13.02.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இருபது புதிய கர்தினால்களுக்கு சிவப்பு தொப்பியும் மோதிரமும் வழங்கும் திருவழிபாடு
2. மறையுரையாளர்களுக்கு வழிகாட்டி கையேடு
3. ஈராக்கில் ஐஎஸ் அரசால் பாதிக்கப்பட்டவருடன் இரத்ததான தோழமையுணர்வு
4. டில்லி கிறிஸ்துவப் பள்ளி தாக்குதல்
5. உக்ரேய்னில் கார்னிவால் விழாக்களை இரத்து செய்யுமாறு வேண்டுகோள்
6. உலக வானொலி நாள், பிப்.13
7. சிறாரைப் போரில் ஈடுபடுத்துவது நிறுத்தப்பட வேண்டும், யூனிசெப்
8. டிஜிட்டல் இந்தியா திட்டம் ஐந்து கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும்
9. கையில் எழுதிப் பழகினால் குழந்தைகளின் கற்கும் திறன் வளரும்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இருபது புதிய கர்தினால்களுக்கு சிவப்பு தொப்பியும் மோதிரமும் வழங்கும் திருவழிபாடு
பிப்.13,2015.
இச்சனிக்கிழமை காலை 11 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா
பேராலயத்தில் புதிய கர்தினால்களுக்கு சிவப்பு தொப்பியும் மோதிரமும்
வழங்கும் திருவழிபாட்டை நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகின் 18 நாடுகளின் ஆயர்கள்,
பேராயர்கள் என இருபது பேரை கர்தினால்களாக உயர்த்தி அவர்களை கன்சிஸ்டரி
என்ற கர்தினால்கள் அவையுடன் இணைப்பார் திருத்தந்தை. மியான்மார், பசிபிக் நாடாகிய டோங்கா, கேப் வெர்தே ஆகிய நாடுகள் முதன்முறையாக கர்தினால்களைப் பெறுகின்றது.
மேலும், இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், புதிய கர்தினால்களுடன் சேர்ந்து கூட்டுத் திருப்பலியும் நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இவ்வியாழன், இவ்வெள்ளி தினங்களில் வத்திக்கானில் உலகின் கர்தினால்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இதில், திருஅவையிலுள்ள
227 கர்தினால்களுள் 165 கர்தினால்கள் கலந்துகொண்டனர். மற்றவர்கள் வயது
மற்றும் நோயின் காரணமாக இதில் கலந்துகொள்ள இயலவில்லை. இவ்வெள்ளி
முற்பகலுடன் நிறைவு பெறுவதாய் திட்டமிடப்பட்டிருந்த இந்தக் கூட்டம்
மாலையிலும் தொடர்ந்து நடந்தது. திருப்பீட தலைமையகச் சீர்திருத்தம் குறித்த
தலைப்பில் இக்காலை அமர்வோடு நாற்பது கர்தினால்கள் தங்களின் கருத்துக்களைப்
பகிர்ந்துகொண்டனர் என்றும், உலகில்
திருஅவை இன்னும் சிறப்பாக எவ்வாறு பணிபுரியலாம் என்பது குறித்த பகிர்வுகள்
மிகவும் மனம்திறந்த சூழலில் இடம்பெற்றன என்றும் திருப்பீட செய்தித்
தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. மறையுரையாளர்களுக்கு வழிகாட்டி கையேடு
பிப்.13,2015. ஆலயம் செல்லும் பலர்,
அன்றையத் திருப்பலியில் தாங்கள் கேட்கும் மறையுரைகளை வைத்தே முழுத்
திருப்பலியையும் கணிக்கின்றனர் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
மறையுரையாளர்களுக்கு வழிகாட்டி கையேடு ஒன்றை, பத்திரிகையாளர்களுக்கு வெளியிட்டுப் பேசிய, திருவழிபாட்டுத் திருப்பேராயத் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள் இவ்வாறு கூறினார்.
திருப்பலி நிச்சயமாக மறையுரை அல்ல என்றாலும், இறைவார்த்தையைக் கேட்பதற்கும், ஆண்டவரின் திருஉடல், திருஇரத்த
உறவில் ஒன்றிப்பதற்குமான புனிதப் பேருண்மைகளில் பங்குகொள்வதன்
நோக்கத்திற்கு ஏற்ற நேரமாக மறையுரையாற்றும் நேரம் உள்ளது என்று விளக்கினார்
கர்தினால் சாரா.
மறையுரையானது, புனித நூல்களை, குறிப்பாக, நற்செய்தியை நேரடியாகத் தொடர்பு கொண்டதாக அமைந்து, அவற்றால் அது ஒளியூட்டப்படுவதாய் அமைய வேண்டுமெனவும், திருப்பணியாளர்களின் பணியின் தரத்தை உயர்த்துவதற்கு இக்கையேடு உதவும் எனவும் கூறினார் கர்தினால் சாரா.
மறையுரை என்பது, திருப்பணியாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட ஒரு திருவழிபாட்டு நிகழ்வு, இவர்கள், தங்கள் சொந்தப் பாணியில் இல்லாமல், திருஅவையின்
விசுவாசத்திற்கேற்ப இறைவார்த்தைக்குப் பணிபுரிய அழைப்புப் பெற்றுள்ளனர்
என்று கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. ஈராக்கில் ஐ.எஸ். அரசால் பாதிக்கப்பட்டவருடன் இரத்ததான தோழமையுணர்வு
பிப்.13,2015. ஐ.எஸ். இஸ்லாமிய நாட்டின் பயங்கரவாதிகளாலும், பிற ஆயுதம் ஏந்திய தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைபாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில், இரத்த தான முகாம் ஒன்றை நடத்தியுள்ளார் ஈராக் பேராயர் ஒருவர்.
கிர்குக்
இயேசுவின் திருஇதய பேராலயத்தில் இச்செவ்வாயன்று இந்த இரத்த தான முகாமை
நடத்தினார் கிர்குக் கல்தேய வழிபாட்டுமுறை பேராயூசிப் தாமஸ்.
மேலும், ஐ.எஸ். இஸ்லாமியப் பயங்கரவாதிகள் பற்றிய அச்சத்தில் வாழ்ந்துவரும் மக்கள் உரையாடல், மனித உரிமைகள் போன்ற வார்த்தைகளைக் கேட்டு களைத்திருக்கின்றனர் என்று ஈராக் அருள்பணியாளர் ஒருவர் கூறினார்.
ஈராக் முழுவதும் துன்பம் நிறைந்த சூழலையே காண முடிகின்றது என்று CNA செய்தி நிறுவனத்திடம் கூறிய அருள்பணி Rebwar Basa அவர்கள், தங்களின் அன்றாட வாழ்வை மகிழ்வாக வாழும் சூழலையும், அதற்கு
உதவும் அரசியல்வாதிகளின் வெளிப்படையான மற்றும் தெளிவான செயல்களையும்
பார்ப்பதற்கு மக்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.
ஈராக்கில் ஒவ்வொரு நாளும் அதிக அழிவுகளையும், துன்பத்தையும், குழப்பமான நிலையையுமே காண முடிகின்றது என்றும் உரைத்த அருள்பணி Basa அவர்கள், கடந்த ஆண்டில் தீவிரவாதிகள் ஆக்ரமிப்பைத் தொடங்கியபோது இருந்த நிலையும், தற்போது ஐ.எஸ். ஆட்சியின்கீழ் காணப்படும் நிலையும் ஏறக்குறைய ஒரேமாதிரி உள்ளன என்றும் அக்குரு கூறினார்.
ஆதாரம் : Fides / CNA/வத்திக்கான் வானொலி
4. டில்லி கிறிஸ்துவப் பள்ளி தாக்குதல்
பிப்.13,2015.
டில்லியிலுள்ள கத்தோலிக்கப் பள்ளி ஒன்றின் மீது மர்ம நபர்கள் இவ்வியாழன்
இரவு தாக்குதல் நடத்தியுள்ளதற்கு கிறிஸ்தவத் தலைவர்கள் தங்களின் கண்டனங்களை
வெளியிட்டுள்ளனர்.
டெல்லியின் தெற்கில், Vasant Viharவிலுள்ள Holy Child Auxilium பள்ளியில், மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தி, பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சில CCTV புகைப்படக் கருவிகளைச் சேதப்படுத்தியதோடு, தலைமை ஆசிரியர் அறையையும் சூறையாடியுள்ளனர் என்று டெல்லி உயர்மறைமாவட்டச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி சவரிமுத்து சங்கர் கூறினார்.
மேலும், ஏறக்குறைய 12 ஆயிரம் ரூபாய் காணாமல்போயுள்ளது என்று, அப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்சகோதரி லூசி கூறினார்.
மேலும், டெல்லி முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள அர்விந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் இத்தாக்குதலுக்கு தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்துமாறு டெல்லி காவல்துறை அதிகாரி BS Bassi அவர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி.
டில்லியில் கடந்த 4 மாதங்களில் கிறிஸ்துவப் பள்ளி மற்றும் ஆலயங்கள் மீது நடத்தப்பட்ட ஆறாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : IANS /வத்திக்கான் வானொலி
5. உக்ரேய்னில் கார்னிவால் விழாக்களை இரத்து செய்யுமாறு வேண்டுகோள்
பிப்.13,2015. கிழக்கு உக்ரெய்னில் பிப்ரவரி 15, இஞ்ஞாயிறு நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளவேளை, அந்நாட்டில்
இடம்பெறும் போர் முழுவதுமாக முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு வேண்டுகோள்
விடுத்துள்ளார் அந்நாட்டு ஆர்த்தடாக்ஸ் திருஅவைத் தலைவர்
உக்ரெய்னில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தில், Belarus தலைநகர் மின்ஸ்க் நகரில் இப்புதன் இரவிலிருந்து 15 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக, போர் நிறுத்த ஒப்பந்தம் இவ்வியாழனன்று கையெழுத்திடப்பட்டது. கனரக பீரங்கிகளைப் பயன்படுத்துவதில்லை என்ற ஒப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள உக்ரெய்ன் ஆர்த்தடாக்ஸ் திருஅவைத் தலைவர் பேராயர் Onufra அவர்கள், பாரம்பரியமாகச் சிறப்பிக்கப்படும் கர்னிவால் விழாக்களுக்குப் பதிலாக நோன்பிருந்து செபிக்குமாறு கேட்டுள்ளார்.
தவக்காலம் தொடங்குவதற்கு முன்னர் சிறப்பிக்கப்படும் கர்னிவால் விழாக்களை நிறுத்தி, செப தவத்துடன் நாட்டின் அமைதிக்காகச் செபிக்குமாறு வலியுறுத்தியுள்ள பேராயர் Onufra அவர்கள், கிறிஸ்தவர்கள் ஒருவர் ஒருவரைக் கொலை செய்யக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.
கிழக்கு உக்ரேய்னில், இரஷ்ய ஆதரவு புரட்சியாளர்கள் புதிய தாக்குதல் ஒன்றைத் தொடங்கியதிலிருந்து அண்மை வாரங்களாக அப்பகுதியில் வன்முறை அதிகரித்துள்ளது.
மின்ஸ்க் நகரில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைகள், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளால் நடத்தப்பட்டது.
ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி
6. உலக வானொலி நாள், பிப்ரவரி13
பிப்.13,2015. புதிய உறுதியான வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவதற்கும், வெப்பநிலை
மாற்றம் குறித்த உலகளாவிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கும் அனைத்துலக
சமுதாயம் முயற்சித்துவரும் இக்காலத்தில் இளையோரின் குரல்களுக்கு நாம்
செவிமடுக்க வேண்டியது அவசியம் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியுள்ளது.
இளையோரும், வானொலியும் என்ற தலைப்பில், பிப்ரவரி 13, இவ்வெள்ளியன்று
கடைப்பிடிக்கப்பட்ட உலக வானொலி நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐ.நா. நிறுவனம்
உலகின் 180 கோடி இளையோருக்கு வானொலியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட
வேண்டுமெனக் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் வானொலி, ஒவ்வோர் ஆண்டும், 1200க்கும் மேற்பட்ட ஆவணங்கள், செய்திகள் மற்றும் ஆசிரியர் பகுதிகளை ஒலிபரப்பி வருகிறது.
2011ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, யுனெஸ்கோவின் 36வது பொது அவையில், உலக வானொலி நாளுக்கு இசைவு தெரிவிக்கப்பட்டது.
மேலும், இஸ்பெயின் அனைத்துலக வானொலிக் கழகம், வத்திக்கான் வானொலிக்கு விருது ஒன்றையும் இவ்வெள்ளியன்று வழங்குகிறது.
ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி
7. சிறாரைப் போரில் ஈடுபடுத்துவது நிறுத்தப்பட வேண்டும், யூனிசெப்
பிப்.13,2015. ஆப்கானிஸ்தான் முதல் காங்கோ குடியரசு வரை, உலகில்
போர் இடம்பெறும் பல்வேறு பகுதிகளில் ஆயுதக் குழுக்கள் சிறாரைப்
படைப்பிரிவுக்குச் சேர்ப்பது தொடர்ந்து இடம்பெற்று வருவதாக கவலை
தெரிவித்துள்ளது யூனிசெப் நிறுவனம்.
இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட, சிறார் படைவீரர்க்கு எதிரான அனைத்துலக நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட யூனிசெப் நிறுவனம், சிறாருக்கு எதிரான இந்தக் கொடுமையான உரிமை மீறல் நிறுத்தப்பட உடனடி நடவடிக்கை அவசியம் எனக் கூறியுள்ளது.
இராணுவத்திலிருந்து சிறார்ப் படைவீரர்களை நீக்கும் அரசுகளின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்பட்டாலும், சிறார் படைப்பிரிவில் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்று, சிறார் படைவீரர் குறித்த ஐ.நா. பொதுச்செயலரின் சிறப்பு பிரதிநிதி Leila Zerrougui கூறினார்.
கடந்த ஆண்டில் மட்டும் தென் சூடானில் 12 ஆயிரம் சிறார் படைப்பிரிவில் இன்னும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிக்கையை, சிறார் படைவீரர் குறித்த ஐ.நா. பொதுச்செயலரின் சிறப்பு பிரதிநிதியும், யூனிசெப் நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ளன.
ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி
8. டிஜிட்டல் இந்தியா திட்டம் ஐந்து கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும்
பிப்.13,2015. ''டிஜிட்டல் இந்தியா'' என்ற திட்டத்தின் மூலம் நாட்டில் ஐந்து கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரவிசங்கர் அவர்கள், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை முப்பது இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது என்றும், இந்தியாவை அறிவுசார் பொருளாதார நாடாக மாற்றும் நோக்கில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன என்றும், மக்கள்
மிக எளிதாக தொழில்நுட்ப அடிப்படை கட்டமைப்பு மற்றும் அரசு சேவைகளைப் பெற
வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம் என்றும் மேலும் தெரிவித்தார்
அமைச்சர் ரவிசங்கர்.
குக்கிராமங்களிலும் கணனி, தொலைதொடர்பு
வசதிகள் கிடைக்கும் பட்சத்தில் வேலை வாய்ப்புகள் பெருகும். இந்தியாவில்
முதலீடு செய்ய நான்காயிரம் பேர் முன்வந்துள்ளனர். அவர்களில் அதிகம் பேர்
அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நகரமான சிலிக்கான் வேலியைச் சேர்ந்தவர்கள்
என்று அமைச்சர் ரவிசங்கர் கூறினார்.
ஆதாரம் : PTI/வத்திக்கான் வானொலி
9. கையில் எழுதிப் பழகினால் குழந்தைகளின் கற்கும் திறன் வளரும்
பிப்.13,2015. கைகளால் எழுதிக் கற்கும் முறை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு துணைபுரிவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கைகளால்
எழுதுவதற்குப் பதில் கணினியின் விசைப்பலகை மற்றும் தொடுதிரைகளைப்
பயன்படுத்தி குழந்தைகள் அதிகமாக கல்வி கற்கும் தற்போதைய நடைமுறை, அவர்களின் படிக்கும் திறனைப் பாதிப்பதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.
குழந்தைகள், பேனா மற்றும் பென்சிலைப் பயன்படுத்தி காகிதத்தில் எழுதும் போக்கு உலக அளவில் படிப்படியாக குறைந்து வருகிறது என்றும், அதற்குப் பதிலாக, குழந்தைகள்
கணனிகளின் விசைப்பலகைகளைப் பயன்படுத்தியும் டேப்ளட்டுகளின் தொடுதிரைக்
கணனிகளில் விரல்களைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யும் போக்கு அதிகரித்து
வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் படைப்புத்திறனும் பாதிக்கப்படும் என்று இந்த ஆய்வு கூறியுள்ளது.
ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment