Friday, 13 February 2015

செய்திகள் - 12.02.15

செய்திகள் - 12.02.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீட கட்டமைப்பு மாற்றங்கள் எளிதானவை அல்ல - திருத்தந்தை

2. ஈரான் நாட்டுத் துணைத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

3. C 9 கர்தினால்கள் குழுவின் அடுத்தச் சந்திப்பு ஏப்ரல் 13-15

4. திருத்தந்தை பெனடிக்ட், தலைமைப் பொறுப்பைத் துறந்ததன் இரண்டாம் ஆண்டு

5. இத்தாலியக் கடலில் நிகழ்ந்த மரணங்கள், ஐரோப்பாவின் தோல்வி

6. இந்தியாவின் போத் கயாவில் பல்சமய உரையாடல்

7. அருள் பணியாளர்கள், துறவியருக்கு புனித பூமி திருப்பயணம்

8. சிரியாவைக் காட்டிலும், இந்தியாவில் 2014ம் ஆண்டு பாதுகாப்பற்ற நிலை

------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீட கட்டமைப்பு மாற்றங்கள் எளிதானவை அல்ல - திருத்தந்தை

பிப்.12,2015 'சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது' என்று திருப்பாடல் ஆசிரியர் கூறும் சொற்களைக் கொண்டு நாம் இறைவனுக்கு நன்றி சொல்வோம் என்ற வார்த்தைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலையில் தன் சகோதரக் கர்தினால்களைச் சந்தித்தார்.
பிப்ரவரி 12, 13 ஆகிய இரு நாள்கள் நடைபெறும் ஒரு கூட்டத்திற்கு, உலகெங்கிலுமிருந்து வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள கர்தினால்களை வரவேற்றத் திருத்தந்தை, கர்தினால்கள் அவையில் புதிதாக இடம்பெறவிருக்கும் 20 கர்தினால்களை தனிப்பட்ட வகையில் வரவேற்று, தன் உரையைத் துவங்கினார்.
திருப்பீட உயர்மட்ட அலுவலகக் கட்டமைப்புக்களில் மாற்றங்களைக் கொணரும் நோக்கத்துடன் தன்னுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டுவரும் 9 கர்தினால்களுக்கு தன் நன்றியைக் கூறியத் திருத்தந்தை, திருப்பீட கட்டமைப்பு மாற்றங்கள் திருஅவையின் தலைமைப் பணிகளில் இன்னும் ஆழ்ந்த ஒருங்கிணைப்பை உருவாக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
இந்த மாற்றங்கள், தன்னிலேயே நிறைவடைவதில்லை, மாறாக, இம்மாற்றங்களால் கிறிஸ்தவ சாட்சிய வாழ்வு இவ்வுலகிற்கு மேலும் தெளிவாகவேண்டும் என்றும், கிறிஸ்தவ சபைகளிடையே இன்னும் ஆழமான ஒற்றுமை வளரவேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
துவக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் எளிதானவை அல்ல என்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரின் துணையுடன் உண்மையான தேடலில் அனைவரும் ஈடுபடவேண்டும் என்றும் கர்தினால்கள் கூட்டத்தில் வழங்கிய துவக்க உரையில் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. ஈரான் நாட்டுத் துணைத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

பிப்.12,2015 ஈரான் நாட்டுத் துணைத் தலைவர், Shahindokht Molaverdi அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்தார். இச்சந்திப்பிற்குப் பின், Molaverdi அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.
மேலும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்ற, அருள் பணியாளர் Fernando Chica Arellano அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று நியமித்தார்.
1963ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பிறந்த Arellano அவர்கள், 1987ம் ஆண்டு அருள் பணியாளராகத் திருநிலைப் படுத்தப்பட்டு, 2002ம் ஆண்டு முதல் பல்வேறு திருப்பீடத் துறைகளில் பணியாற்றி வந்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. C 9 கர்தினால்கள் குழுவின் அடுத்தச் சந்திப்பு ஏப்ரல் 13-15

பிப்.12,2015 ஒன்பது கர்தினால்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்கள் முதல் புதன் முடிய வத்திக்கானில் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டங்களில், திருப்பீடக் கலாச்சார அவை, பொருளாதாரத் துறை, மற்றும் சமூகத் தொடர்புத் துறை ஆகியவை குறித்த மாற்றங்கள் பேசப்பட்டன என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், இயேசு சபை அருள்பணி பெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் பேசப்பட்டக் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையொன்று, இவ்வியாழன், வெள்ளி ஆகிய இருநாட்கள் நடைபெறும் அனைத்துக் கர்த்னால்களின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, மேலும் கருத்துப் பகிர்வுகள் இடம்பெறும் என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் எடுத்துரைத்தார்.
C 9 எனப்படும் கர்தினால்கள் குழுவுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் அடுத்தச் சந்திப்பு, ஏப்ரல் 13 முதல் 15 முடிய நடைபெறும் என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் அறிவித்தார்.
இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பின்ஸ் நாட்டில் மேற்கொண்ட பயணத்தின்போது, அவர்மீது கொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது என்று ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும், மணிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் அளித்த உறுதியின்படி இதனைத் தான் தெரிவிப்பதாகவும் இப்புதன் மாலையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தின் இறுதியில், அருள்பணி லொம்பார்தி அவர்கள் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பெனடிக்ட், தலைமைப் பொறுப்பைத் துறந்ததன் இரண்டாம் ஆண்டு

பிப்.12,2015 முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் திருஅவைக்கு வழங்கியுள்ள சிந்தனைகள் மறக்கமுடியாத ஒரு கருவூலம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பை, தான் துறப்பதாகக் கூறியதன் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி, திருவழிபாடு மற்றும் அருள் அடையாளங்களின் நெறிமுறைகளைக் கண்காணிக்கும் பேராயத்தின் செயலராகப் பணியாற்றும் பேராயர் ஆர்தர் ரோச் அவர்கள், CNA கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னாள் திருத்தந்தை என்ற அடைமொழியைக் காட்டிலும் அருள்பணியாளர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுவதை விரும்பும் அருள்பணியாளர் பெனடிக்ட் அவர்கள், தலைமைப் பொறுப்பில் இருந்த வேளையில், ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பிவந்த ஊடகங்களால் துன்புற்றார் என்பதையும் பேராயர் ரோச் அவர்கள் எடுத்துரைத்தார்.
பழகுவதற்கு இனியவராகவும், எளிமையானவராகவும் விளங்கிய அருள் பணியாளர் பெனடிக்ட் அவர்கள் ஆழ்ந்த இறையியல் எண்ணங்களால் திருஅவையில் உருவாக்கியுள்ள தாக்கம் நிலைத்து நிற்கும் என்று பேராயர் ரோச் அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி

5. இத்தாலியக் கடலில் நிகழ்ந்த மரணங்கள், ஐரோப்பாவின் தோல்வி

பிப்.12,2015 இத்திங்களன்று இத்தாலிக்கு அருகே கடலில் நிகழ்ந்த மரணங்கள், ஐரோப்பிய சமுதாயத்தை மீண்டும் ஒருமுறை தோல்வியுறச் செய்துள்ளது என்று கத்தோலிக்க நீதி, மற்றும் பிறரன்புப் பணிகள் அமைப்பைச் சேர்ந்த பலர் கூறியுள்ளனர்.
லிபியாவிலிருந்து புறப்பட்ட ஒரு பாதுகாப்பற்ற கலன், இத்தாலியின் லாம்பதூசாவை அடைவதற்கு முன் இத்திங்கள் இரவு கடலில் மூழ்கி, 300க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் காப்பாற்றப்பட்ட ஒன்பது பேர், குளிருக்கு எதிராக எவ்வித பாதுகாப்பும் அளிக்கப்படாததால் மரணமடைந்தனர் என்ற செய்தி, மேலும் அதிர்ச்சியைத் தருகிறது என்று இயேசு சபையினர் நடத்தும் புலம்பெயர்ந்தோர் பணிக்குழு கூறியுள்ளது.
கடலில் பயணிக்கும் புலம் பெயர்ந்தோர் குறித்த முடிவுகளை எடுக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரான Brusselsலிருந்து உத்தரவு வரும்வரை இத்தாலிய அரசு காத்திருந்தால், பல்லாயிரம் அப்பாவி உயிர்கள் நம் கண்முன்னே இறக்கும் கொடுமைக்கு நாம் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்று சாந்த் எஜிதியோஅமைப்பை உருவாக்கிய ஆந்த்ரேயா ரிக்கார்தி அவர்கள் கூறினார்.
தங்கள் நாடுகளில் நிலவும் வன்முறைகளிலிருந்து தப்பித்து வரும் புலம்பெயர்ந்தோருக்கு வாழ்வளிக்கும் வழிமுறைகளை இத்தாலிய ஒன்றியம் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை, JRS எனப்படும் இயேசு சபை புலம்பெயர்ந்தோர் அமைப்பினர் விடுத்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. இந்தியாவின் போத் கயாவில் பல்சமய உரையாடல்

பிப்.12,2015 திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் பிரதிநிதிகளும், புத்த மதத்தின் பல்வேறு கிளைகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் இணைந்து, பிப்ரவரி 11 புதன் முதல் இவ்வெள்ளி முடிய இந்தியாவில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று வருகின்றனர்.
குடும்பங்கள் மற்றும் பல்சமய உரையாடல் ஆகியவற்றை மையப்படுத்தி நடைபெறும் இக்கருத்தரங்கு, புத்தர்களின் முக்கியத் தலமான போத் கயாவில் நடைபெறுகிறது.
இச்சந்திப்பிற்குப் பின், திருப்பீடப் பிரதிநிதிகள், இந்தியாவின் மற்றொரு புண்ணியத் தலமான வாரணாசியில், இந்து மற்றும் இஸ்லாமியப் பிரதிநிதிகளுடன் மற்றொரு கருத்தரங்கில் கலந்துகொள்வர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இச்சந்திப்புக்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆசிய ஆயர் பேரவைகளின் பல்சமய உரையாடல் பணிக்குழுவின் தலைவர், வசாய் ஆயர் பீலிக்ஸ் மச்சாடோ அவர்கள், குடும்பங்கள், குழந்தை வளர்ப்பு ஆகிய கருத்துக்களை அனைத்து உண்மையான மதங்களும் உயர்வாகக் கருதுகின்றன என்று கூறினார்.
சமுதாய நெருக்கடிகளால் சிதறியுள்ள குடும்பங்களில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் இச்சந்திப்புக்களில் முக்கியமாக இடம்பெறும் என்றும் ஆயர் பீலிக்ஸ் மச்சாடோ அவர்கள் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

7. அருள் பணியாளர்கள், துறவியருக்கு புனித பூமி திருப்பயணம்

பிப்.12,2015 இந்தியாவில் பணியாற்றும் அருள் பணியாளர்கள் மற்றும் இருபால் துறவியருக்கு புனித பூமியில் 20 நாள் பயணம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.
மிக அழகான முறையில் திட்டமிடப்பட்டுள்ள இப்பயணத்தால் பெரும்பாலான அருள் பணியாளர்களும் துறவியரும் பயன்பெறுவர் என்று சீரோ மலபார் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் கூறினார்.
புனித பூமி பராமரிப்பில் ஈடுபட்டுள்ள பிரான்சிஸ்கன் சபையினரும், எருசலேம் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தை நடத்திவரும் சலேசிய சபையினரும் இணைத்து ஏற்பாடு செய்துவரும் இத்திருப்பயணம், ஏப்ரல் 21 முதல், மேமாதம் 10ம் தேதி முடிய நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விவிலிய அறிஞர்கள் வழிநடத்தும் இத்திருப்பயணம், இயேசுவின் சீடர்கள் மேற்கொண்ட பயணத்தின் அடிச்சுவடுகளில் செல்லும் என்று இத்திருப்பயணத்தை ஏற்பாடு செய்பவர்களில் ஒருவரான அருள்பணி டோஜி ஜோஸ் அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

8. சிரியாவைக் காட்டிலும், இந்தியாவில் 2014ம் ஆண்டு பாதுகாப்பற்ற நிலை

பிப்.12,2015 போர்ச்சூழல் நிறைந்த சிரியா நாட்டைக் காட்டிலும், இந்தியாவில் 2014ம் ஆண்டு பாதுகாப்பற்ற நிலை இருந்ததென்று இந்திய வெடிகுண்டு தகவல் மையம் அறிவித்துள்ளது.
NBDC (National Bomb Data Centre) என்ற தகவல் மையம் வழங்கியுள்ள தகவல்களின்படி, 2014ம் ஆண்டு, 313 வெடிகுண்டு தாக்குதல்களுடன் பாகிஸ்தான் முதலிடத்திலும், 246 தாக்குதல்களுடன் ஈராக் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
ISIS தீவிரவாத அமைப்புடன் மோதல்களில் ஈடுபட்டுள்ள சிரியாவில் 33 வெடிகுண்டு தாக்குதல்களே நடைபெற்றுள்ளவேளை, இந்தியாவில் 190 முறை இத்தாக்குதல்கள் 2014ம் ஆண்டு நிகழ்ந்துள்ளதென NBDC தகவல் கூறுகிறது.
இந்தியாவில் நிகழ்ந்த 190 தாக்குதல்களில், பெரும்பாலானவை சட்டிஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்தன என்று இத்தகவல் வழியே தெரிய வந்துள்ளது.
வெடிமருந்துகள் விற்பனையில் நாடுதழுவிய கடுமையான சட்டங்கள் இல்லாதக் காரணத்தால், இந்தியாவில் வெடுகுண்டுகளின் பயன்பாடு பெருகிவிட்டது என்று இந்தியத் தேசியப் பாதுகாப்புத் துறையின் (NSG - National Security Guard) தலைவர், J.N.Choudhury அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : TOI / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...