Monday, 23 February 2015

செய்திகள் - 21.02.15

செய்திகள் - 21.02.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ், ஜெர்மன் சான்சிலர் Angela Merkel சந்திப்பு

2. திட்டமிட்டக் குற்றக் கும்பல்கள் மனந்திரும்ப திருத்தந்தை அழைப்பு

3. அரிச்சாவில் திருத்தந்தையின் ஆண்டு தியானம் - பிப்ரவரி 22-27

4. தலித் கிறிஸ்தவர்க்கு எதிரான பாகுபாட்டை நிறுத்துமாறு அரசுக்கு வேண்டுகோள்

5. கரகாஸ் மேயரின் கைது விவகாரம் சர்வாதிகாரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு

6. ஐரோப்பாவில் வளர்ந்துவரும் இனவெறி தடுத்து நிறுத்தப்பட ஆயர்கள் கோரிக்கை

7. 21 காப்டிக் கிறிஸ்தவர்களின் பெயர்கள் மறைசாட்சிகள் பட்டியலில் இணைப்பு

8. உலக தாய்மொழிகள் தினம் பிப்ரவரி 21

9. காற்று மாசுகேட்டைக் குறைத்தால் மனிதரின் வாழ்நாள் அதிகரிக்கும்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ், ஜெர்மன் சான்சிலர் Angela Merkel சந்திப்பு

பிப்.21,2015. ஜெர்மன் நாட்டுப் பிரதமர் Angela Merkel அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்பை முடித்து, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் Paul Richard Gallagher ஆகிய இருவரையும், தனது பிரதிநிதி குழுவுடன் சந்தித்துப் பேசினார் ஜெர்மன் பிரதமர் அதாவது அந்நாட்டு சான்சிலர் Angela Merkel.
பவேரியாவில் நடைபெறவிருக்கும் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு, மனித வர்த்தகம், பெண்களின் உரிமைகள் மீறப்படல், வறுமை மற்றும் பசிக்கெதிரான நடவடிக்கைகள்,  உலகம் எதிர்கொள்ளும் நலவாழ்வுச் சவால்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற  விவகாரங்கள் இச்சந்திப்புகளில் இடம்பெற்றன என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி சே.ச. அவர்கள் கூறினார்.
மேலும், உலகின் சில பகுதிகளின் மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திர நிலவரங்கள் பற்றியும், சமூக வாழ்வில் ஆன்மீக விழுமியங்களின் முக்கியத்துவம் பற்றியும் பேசிய இத்தலைவர்கள், ஐரோப்பாவின் நிலைமை, குறிப்பாக, உக்ரேய்னில் அமைதியான தீர்வு எட்டப்படுவதற்கு ஐரோப்பாவின் அர்ப்பணம் குறித்தும் பேசினர்.  
திருத்தந்தையுடன் 40 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ஜெர்மன் சான்சிலர் Angela Merkel அவர்கள், அகதிச் சிறாருக்கு உதவுவதற்கென நன்கொடையையும், Bach குறுந்தகடு ஒன்றையும் திருத்தந்தைக்கு வழங்கினார்.
திருத்தந்தையும் தனது பாப்பிறைப் பணி பதக்கம் ஒன்றை வழங்கி, அரசுகளின் தலைவர்களுக்கு இதைக் கொடுக்க விரும்புகிறேன், ஏனெனில் இதில் புனித மார்ட்டீன் தனது மேலாடையை ஏழைக்குக் கொடுத்த உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திட்டமிட்டக் குற்றக் கும்பல்கள் மனந்திரும்ப திருத்தந்தை அழைப்பு

பிப்.21,2015. திட்டமிட்டக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அல்லது பிறருக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிராக வன்முறைச் செயல்களை வேண்டுமென்றே நடத்துபவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ள இயலாது என்று இத்தாலிய விசுவாசிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் இத்தாலியின் Cassano allo Jonio மறைமாவட்டத்தின் ஏறக்குறைய ஏழாயிரம் விசுவாசிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இயேசுவை அன்புகூர்ந்து, அவரது வார்த்தையைக் கேட்பவர்கள் தீமையின் வேலைகளுக்குத் தங்களைக் கையளிக்க முடியாது என்று கூறினார்.
மரணக் கலாச்சாரத்தை எதிர்த்து வாழ்வின் நற்செய்திக்குச் சாட்சிகளாக வாழுங்கள், தன்னலத்தையும், வன்முறையையும், அநீதியையும் விதைக்கும் மக்கள் முன்னிலையில் உங்களை நிறுத்தாமல், ஒருமைப்பாட்டுணர்வை ஊக்குவிப்பவர்களாக வாழுங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பல இளையோரையும் குடும்பங்களையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள வறுமையின் பல புதிய வடிவங்களிலிருந்து மீண்டு வருவதற்கு தூய ஆவியாரின் துணையை நாடுங்கள் எனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பிறரின் மாண்பை மதிக்காமல் இருந்துகொண்டு கிறிஸ்தவர் என்று யாரும் தங்களை அழைக்க முடியாது என்றுரைத்தார்
வெளிப்படையான மத அடையாளங்கள், உண்மையான மற்றும் பொதுவான மனமாற்றத்தோடு சேர்ந்து செல்லவில்லையென்றால் அவை கிறிஸ்துவோடும் திருஅவையோடும் ஒன்றித்திருப்பதற்குப் போதுமானவையாக இருக்காது என்றும் உரைத்தார் திருத்தந்தை.
தீமையான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளவர்கள் மற்றும் குற்ற நிறுவனங்களோடு தொடர்புடையவர்கள் மனமாற்றப் பாதையைத் தேர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, உங்கள் இதயத்தை ஆண்டவருக்குத் திறங்கள், உங்களுக்காக இயேசு காத்திருக்கின்றார், நன்மைக்குப் பணிசெய்ய தெளிவாக இருந்தால் திருஅவையும் உங்களை வரவேற்கின்றது என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு ஜூனில், Cassano allo Jonio மறைமாவட்டத்திற்கு, திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. அரிச்சாவில் திருத்தந்தையின் ஆண்டு தியானம் - பிப்ரவரி 22-27

பிப்.21,2015. கடவுளால் மன்னிக்கப்பட முடியாத பாவம் என்று எதுவுமில்லை, நாம் அவரிடம் மன்னிப்புக்காக இறைஞ்சுவதே நம் அனைவருக்கும் தேவையானதுஎன்ற வார்த்தைகளை, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 
மேலும், பிப்ரவரி 22, இஞ்ஞாயிறிலிருந்து  பிப்ரவரி 27 வருகிற வெள்ளிக்கிழமைவரை திருப்பீட தலைமையக அதிகாரிகளுடன் இணைந்து ஆண்டு தியானம் செய்யவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகருக்கு தெற்கே ஏறக்குறைய இருபது மைல் தூரத்திலுள்ள அரிச்சா நகர் விண்ணகப் போதகர் தியான இல்லத்தில் தியானம் செய்யவிருக்கிறார் திருத்தந்தை.
இந்த வாரத்தில் திருத்தந்தையின் எந்தப் பொது நிகழ்வுகளும் இடம்பெறாது. கடந்த ஆண்டு இத்தியானத்தில், கர்தினால்கள், ஆயர்கள் என ஏறக்குறைய எண்பது பேர் திருத்தந்தையுடன் சேர்ந்து தியானம் செய்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. தலித் கிறிஸ்தவர்க்கு எதிரான பாகுபாட்டை நிறுத்துமாறு அரசுக்கு வேண்டுகோள்

பிப்.21,2015. இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சட்ட முறையான பாகுபாடு முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு இந்திய கத்தோலிக்கத் திருஅவை அரசைக் கேட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய டெல்லி பேராயர் அனில் கூட்டோ அவர்கள், இந்துமத தலித் மக்களைப் போலவே தலித் கிறிஸ்தவர்களும் சலுகைகளை அனுபவிக்கும் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு நேரம் இதுவே என்றும், அறுபது ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்கள் சலுகைகள் மறுக்கப்பட்டு வாழ்கிறார்கள் என்றும் கூறினார்.
தலித் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்வது, மதத்தின் அடிப்படையில் இடம்பெறும் அநீதியான பாகுபாட்டு விவகாரமாகும், சமயச் சார்பற்ற ஒரு நாட்டில் இந்நிலை இடம்பெறக் கூடாது என்றும் டெல்லி பேராயர் அனில் கூட்டோ கூறினார்.
1950ம் ஆண்டின் குடியரசுத்தலைவர் ஆணையைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர், தலித் சமூகங்களுக்கு கல்வி, வேலை மற்றும் சமூகநலப்பணித் துறைகளில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு உறுதிகளையும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் 1 கோடியே 70 இலட்சம் கத்தோலிக்கரில் 60 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் தலித்துகள் என பீதெஸ் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.    

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி

5. கரகாஸ் மேயரின் கைது விவகாரம் சர்வாதிகாரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு

பிப்.21,2015. வெனெசுவேலா நாட்டுத் தலைநகர் கரகாஸ் நகர் மேயர் Antonio Ledezma அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது, சர்வாதிகாரத்தை நிரூபிப்பதாய் உள்ளது என்று குறை கூறியுள்ளார் அந்நாட்டுக் கத்தோலிக்கப் பேராயர் ஒருவர்.
இக்கைது குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ள வெனெசுவேலா நாட்டின் Coro பேராயர் Roberto Lückert அவர்கள், நாட்டில் ஏற்கனவே எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு எண்ணெய் வார்ப்பது போன்று இது உள்ளது எனத் தெரிவித்தார்.
மேயர் Antonio Ledezma அவர்கள், ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு, ஏறக்குறைய நூறு காவல்துறையினர் அவரது வீட்டில் நுழைந்து கைது செய்தனர். நாட்டைக் கடுமையாய்ப் பாதித்துள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தேசிய அளவில் இடைக்கால அரசு அவசியம் என்பதை வலியுறுத்தும் அறிக்கையில் இவர் கையெழுத்திட்டுள்ளார். அந்த அறிக்கை எல் நாசியோன் தினத்தாளிலும் பிரசுரிக்கப்பட்டது எனச் சொல்லப்பட்டுள்ளது.
இக்கைது, நாட்டில் மக்களாட்சி குறைபடுவதையும், சர்வாதிகாரத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இது இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார் பேராயர் Lückert.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி

6. ஐரோப்பாவில் வளர்ந்துவரும் இனவெறி தடுத்து நிறுத்தப்பட ஆயர்கள் கோரிக்கை

பிப்.21,2015.  ஐரோப்பாவில் சிறுபான்மையினர்க்கெதிரான போக்குகள் அதிகரித்துவருவது குறித்து எச்சரித்துள்ள அதேவேளை, இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தி மனித விழுமியங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசியல் தலைவர்களைக் கேட்டுள்ளனர் ஐரோப்பிய ஆயர்கள்.
குடியேற்றதாரரைப் பயன்படுத்தி, கீழ்த்தரமான விளம்பரங்களையும், சுலோகங்களையும் EU ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக வெளியிடுவது, தங்களின் எதிர்காலம் குறித்து கவலைகொள்ளும் சிலர்மீது தாக்கங்களை ஏற்படுத்தலாம், ஆனால் இக்காலத்தின் குழப்பமிக்க சவால்களுக்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்று லக்சம்பர்க் பேராயர் Jean-Claude Hollerich  அவர்கள் கருத்து தெரிவித்தார்.
ஐரோப்பிய நீதி மற்றும் அமைதி அவைகளின் 2015ம் ஆண்டின் செயல்திட்டம் தொடங்கிய நிகழ்வில் இவ்வாறு உரைத்தார் பேராயர் Hollerich.
நீதி, அமைதி மற்றும் மனித மாண்பை மதித்தலை ஊக்குவிக்கும் நோக்கத்திற்குப் பணியாற்றுவதற்காக 1971ம் ஆண்டில், ஐரோப்பிய ஆயர் பேரவைகள் இணைந்து    ஐரோப்பிய நீதி மற்றும் அமைதி அவையை ஏற்படுத்தின. இந்த அவை, ஒவ்வோர் ஆண்டும் தனது செயல்திட்டத்தை வெளியிடுகின்றது.
அரசியல் கட்சிகள், தேர்தல் காலங்களில் குறுகிய தேசிய ஆதாயங்களுக்குப் பரிந்துரைக்காமல், உலகளாவிய மனித விழுமியங்கள் மற்றும் தங்களுக்கு இருக்கும் அனைத்துலகக் கடமைகள்மீது ஆர்வம் காட்டுமாறு, ஐரோப்பிய ஆயர்களின் இந்த அவை அரசியல் தலைவர்களைக் கேட்டுள்ளது.  

ஆதாரம் : EWTN/வத்திக்கான் வானொலி

7. 21 காப்டிக் கிறிஸ்தவர்களின் பெயர்கள் மறைசாட்சிகள் பட்டியலில் இணைப்பு

பிப்.21,2015. ஐ.எஸ். தீவிரவாதிகளால் லிபியாவில் கொலை செய்யப்பட்ட 21 காப்டிக் கிறிஸ்தவர்கள், அத்திருஅவையின் நாள்காட்டியில் மறைசாட்சிகளாக நினைவுகூரப்படுவர் என்று காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபை அறிவித்துள்ளது.
இது குறித்து அறிவித்த எகிப்தின் அலெக்சாந்திரியாவின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபை திருத்தந்தை 2ம் Tawadros அவர்கள், கொலை செய்யப்பட்ட 21 காப்டிக் கிறிஸ்தவர்களின் பெயர்கள் காப்டிக் மறைசாட்சிகள் பட்டியலில் இணைக்கப்படும் என அறிவித்தார்.
terrasanta.net என்ற இணையதளச் செய்தியின்படி, இந்த 21 காப்டிக் கிறிஸ்தவர்களும், காப்டிக் நாள்காட்டியில் 8வது Amshirல் சிறப்பிக்கப்படுவர். அதாவது கிரகோரியன் நாள்காட்டியின்படி அந்நாள் பிப்ரவரி 15 ஆகும். இந்த நாளில் காப்டிக் கிறிஸ்தவ சபை, குழந்தை இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவைச் சிறப்பிக்கின்றது.
சிலுவையின் நாட்டுக்கு குருதியில் கையெழுத்திடப்பட்ட செய்தி என்று தலைப்பிட்டு கொடுமையான காணொளியை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டு, தாங்கள் உரோம் நகருக்குத் தெற்கே இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளனர். அதன்பின்னர் 21 காப்டிக் கிறிஸ்தவர்களின் தலைகளை வெட்டியுள்ளனர். இக்கிறிஸ்தவர்களில் சிலர் இறக்கும் முன்னர் இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று உச்சரித்தனர் என்று கூறப்படுகின்றது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. உலக தாய்மொழிகள் தினம் பிப்ரவரி 21

பிப்.21,2015. அனைவருக்கும் கல்வி என்ற நம் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இன்னும் கல்வியறிவு பெறாமல் இருப்பவர்களுக்கு கல்வி வாய்ப்பை வழங்கவும், கற்கும் தரத்தை அதிகரிக்கவுமான முக்கியத்துவத்தை உலக தாய்மொழிகள் தினம் உணர்த்துகின்றது என்று யுனெஸ்கோ நிறுவனம் கூறியுள்ளது.
இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக தாய்மொழிகள் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள யுனெஸ்கோ நிறுவனத் தலைவர் Irina Bokova அவர்கள், தாய்மொழிவழிக் கல்வி, தரமான கல்விக்குச் சக்தியாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாருக்கும் கல்வி என்ற திட்டம், இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றது என்றும் கூறியுள்ள Irina Bokova அவர்கள், இன்னும் முழுமை பெறாத இத்திட்டம் புதிய சவால்களையும் எதிர்நோக்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
உலக மக்கள் தொகையில் பாதிப்பேர், மான்டரின், ஆங்கிலம், இந்தி உட்பட மிகவும் பரவியுள்ள 13 மொழிகளைப் பேசுகின்றனர். இன்று உலகில் 6,500 மொழிகள் வழக்கில் உள்ளன. ஆயினும், அவற்றில் இரண்டாயிரம் மொழிகளை, ஆயிரம் பேருக்குக் குறைவாகவே பேசுகின்றனர்.
பங்களா (வங்காள) மொழி அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 1952ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பங்களாதேஷ் மாணவர்கள் டாக்காவில் நடத்திய போராட்டத்தில் காவல்துறையால் கொல்லப்பட்டனர். அதன் நினைவாக, இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து உலக தாய்மொழிகள் தினம் பிப்ரவரி 21ம் தேதியன்று
கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

ஆதாரம்:UN/வத்திக்கான் வானொலி

9. காற்று மாசுகேட்டைக் குறைத்தால் மனிதரின் வாழ்நாள் அதிகரிக்கும்

பிப்.21,2015. சுற்றுச்சூழலில் காற்று மாசடைவதைக் குறைப்பதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், இந்தியாவில் வாழும் மக்களில் பாதிப்பேர், அதாவது 66 கோடிப் பேர் தங்களது வாழ்நாளில் 3.2 ஆண்டுகளை அதிகரிக்கலாம் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
உலகம் முழுவதிலும் நிலவும் காற்று மாசுகேடு குறித்து, சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் செயற்கைக் கோள்கள் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு சிகாகோ பல்கலைக்கழக பொருளாதார நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் இவ்வாறு தெரிய வந்துள்ளது. 
இந்தியாவின் மிக முக்கிய நோக்கம் தற்போது வளர்ச்சியாகவே உள்ளது. ஆனால், அந்நாடு பல ஆண்டுகளாக தனது வளர்ச்சிப் பாதையில் மக்களின் உடல் நலம் மற்றும் காற்று மாசு குறித்து அலட்சியம் செய்து வருகிறது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், வளர்ச்சியால் ஏற்படும் காற்று மாசு காரணமாக மனிதர்களின் ஆயுள்காலம் வெகுவாகக் குறைந்து வருவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.
உலக நலவாழ்வு நிறுவனத்தின் குறியீட்டில், உலகில் மிக மோசமான அளவில் காற்று மாசு அடைந்திருக்கும் இடங்களில் ஒன்றாக இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

ஆதாரம்: PTI /வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment