Wednesday, 11 February 2015

செய்திகள் - 11.02.15

செய்திகள் - 11.02.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீடத்தின் தலைமை அலுவலகங்களில் மாற்றங்கள்

2. நோயுற்றோர் உலக நாளையொட்டி வத்திக்கான் நிகழ்வுகள்

3. உலகப் பொருளாதார அமைப்புக்கள் உதவிகள் செய்யவேண்டும் - பேராயர் Auza

4. நன்னெறி விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள்

5. பாலியல் வன்கொடுமைகள், நவீன அடிமைத்தனத்தின் ஒரு வெளிப்பாடு

6. ISIS அடக்குமுறைகளைத் தடுக்க, பன்னாட்டு அரசுகளின் தலையீடு தேவை

7. வெறுப்பைக் களைந்து அன்பை வளர்க்க, குடும்பங்களே தகுந்த பள்ளிக்கூடங்கள்

8. இலங்கையில் நடந்தது இனஅழிப்பே: வடமாநில அவை தீர்மானம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீடத்தின் தலைமை அலுவலகங்களில் மாற்றங்கள்

பிப்.11,2015 திருப்பீடத்தின் தலைமை அலுவலகங்களில் மாற்றங்களைக் கொணர்வது குறித்து, உலகின் பல நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள 9 கர்தினால்கள் குழு திருத்தந்தையுடன் ஆலோசனைகள் நடத்தி வந்தனர் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், அருள்பணி பெதேரிகோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
பிப்ரவரி 9 முதல் 11ம் தேதி இப்புதன் முடிய வத்திக்கானில் நடைபெற்ற C9 என்றழைக்கப்படும் கர்தினால்கள் அவை கூட்டங்களில் பல்வேறு திருப்பீட அவைகளை இணைப்பது, மாற்றி அமைப்பது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அருள்பணி லொம்பார்தி எடுத்துரைத்தார்.
பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் அனைத்துக் கர்தினால்களின் கூட்டங்கள் இடம்பெறும் என்றும், இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 14ம் தேதி புதிய கர்தினால்களை இணைக்கும் நிகழ்வும், பிப்ரவரி 15, ஞாயிறன்று, புதிய கர்தினால்களுடன் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியும் நடைபெறும் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் அறிவித்தார்.
2014ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி, 16 கர்தினால்களை புதிதாக நியமித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு பிப்ரவரி 14ம் தேதி, 20 கர்தினால்களை நியமனம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. நோயுற்றோர் உலக நாளையொட்டி வத்திக்கான் நிகழ்வுகள்

பிப்.11,2015 பிப்ரவரி 11, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட 23வது நோயுற்றோர் உலக நாளையொட்டி, இச்செவ்வாய் மாலை, உலகமெங்கும் நலப்பணிகளில் ஈடுபட்டோருக்காக, குறிப்பாக, எபோலா நோயில் பாதிக்கப்பட்டவர்கள் நடுவே பணியாற்றி இறையடி சேர்ந்தவர்களுக்காக வத்திக்கானில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
23வது நோயுற்றோர் உலக நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள "Sapientia Cordis" அதாவது, 'இதயத்தின் அறிவாற்றல்' என்ற செய்தியை மையப்படுத்தி, உலகின் அனைத்து கத்தோலிக்க மறைமாவட்டங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று திருப்பீட நலப்பணியாளர் அவை அறிவித்துள்ளது.
நோயுற்றோர் உலக நாளையொட்டி, இப்புதனன்று புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் கர்தினால் Agostino Vallini அவர்கள் தலைமையேற்று நடத்திய ஒரு சிறப்புத் திருப்பலி நிகழ்ந்தது.
1992ம் ஆண்டு மேமாதம் 13ம் தேதியன்று திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள், பிப்ரவரி 11ம் தேதியை, நோயுற்றோர் உலக நாளாக அறிவித்து, மடல் ஒன்றை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. உலகப் பொருளாதார அமைப்புக்கள் உதவிகள் செய்யவேண்டும் - பேராயர் Auza

பிப்.11,2015 வளரும் நாடுகள் தங்கள் முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான பொருளாதார உதவிகளைப் பெறுவதற்கு உலகப் பொருளாதார அமைப்புக்கள் உதவிகள் செய்யவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.
2015ம் ஆண்டுக்குப்பின் முன்னேற்றத் திட்டம்என்ற தலைப்பில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுஅவைக் கூட்டம் ஒன்றில், திருப்பீட நிரந்தரப் பார்வையாளராகப் பங்கேற்ற பேராயர் Bernardito Auza அவர்கள் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.
தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாடு மேற்கொள்ளும் முன்னேற்ற முயற்சிகளுக்கு, வளரும் நாடுகள் மிக அதிக அளவு முதலீடுகளைச் செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றன என்பதையும் பேராயர் Auza அவர்கள் கவலையுடன் எடுத்துரைத்தார்.
பொருளாதார ஊற்றுகள், தொழில்நுட்ப வளர்ச்சி, உள்நாட்டுத் திறமைகளை வளர்த்தல் ஆகிய மூன்று அம்சங்களின் அடிப்படையில் முன்னேற்றத் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும் என்று பேராயர் Auza அவர்கள் தன் உரையில் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

4. நன்னெறி விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள்

பிப்.11,2015 சமுதாய முன்னேற்றம் என்பது, மனிதர்களையும் நன்னெறி விழுமியங்களையும் அடிப்படையாகக் கொண்ட திட்டங்களாக இருக்கவேண்டும் என்று ஐ.நா. அவைக் கூட்டங்களில், திருப்பீட நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் Bernardito Auza அவர்கள் கூறினார்.
ஐ.நா.வின் பொருளாதார, சமுதாயக் குழுவின் 53வது அமர்வில் இச்செவ்வாயன்று உரையாற்றிய பேராயர் Auza அவர்கள், அண்மையக் காலத்தில் உலகம் கண்டுவரும் பொருளாதார வளர்ச்சி அனைத்து தரப்பினரையும் சமமாகச் சென்று சேரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார வளர்ச்சியை மட்டும் மையப்படுத்தி பெருகிவரும் தொழில்கள், தனிமனிதரின் மதிப்பை வளர்க்காமல், அவர்களின் தன்மானத்தைக் குறைத்துவருகின்றன என்பதையும் பேராயர் Auza அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.
தனி மனிதர்களையும், குடும்பங்களையும் மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்களே முழுமையான முன்னேற்றப் பாதையில் இவ்வுலகை நடத்திச் செல்லும் என்று பேராயர் Auza அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. பாலியல் வன்கொடுமைகள், நவீன அடிமைத்தனத்தின் ஒரு வெளிப்பாடு

பிப்.11,2015 போர்களில் ஈடுபட்டிருக்கும் நாடுகள், பாலியல் வன்கொடுமைகளை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும்போது, இதனால் பாதிக்கப்பட்டோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் இக்கொடுமைகளின் காயங்கள் ஆறாமல் வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்று இங்கிலாந்து கர்தினால் ஒருவர் கூறினார்.
'போர்ச் சூழலில் பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்தல்' என்ற கருத்தில் இலண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய Westminster பேராயர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், பாலியல் வன்கொடுமைகள், நவீன அடிமைத்தனத்தின் ஒரு வெளிப்பாடு என்று எடுத்துரைத்தார்.
எந்தச் சூழலிலும் பாலியல் வன்கொடுமைகள் நன்னெறிக்கு முரணான ஒரு குற்றமே என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், போர்ச்சூழலில் இக்கொடுமையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது, இக்குற்றத்தை மேலும் கொடுமையாக்குகிறது என்று தெளிவுபடுத்தினார்.
இக்கொடுமையை நீக்க மனசாட்சியுள்ள அனைத்து மதத்தினரும் உழைக்கின்றனர் என்பதை எடுத்துரைத்த கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், குறிப்பாக, இக்கொடுமையில் சிக்கியவர்களுக்கு அருள் சகோதரிகள் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி

6. ISIS அடக்குமுறைகளைத் தடுக்க, பன்னாட்டு அரசுகளின் தலையீடு தேவை

பிப்.11,2015 ISIS இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவின் அடக்குமுறைகளைத் தடுக்க, பன்னாட்டு அரசுகளின் தலையீடு மிக அவசரத் தேவையாக உள்ளது என்று Erbil நகரில் பணியாற்றும் கல்தேய வழிபாட்டு முறை பேராயர் Bashar Warda அவர்கள் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விண்ணப்பித்தார்.
IS இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவினரால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களின் நிலையை விளக்கிக் கூறிய பேராயர் Warda அவர்கள், பன்னாட்டு இராணுவத்தினர் மேற்கொள்ளும் வான்வழித் தாக்குதல்கள் மட்டும் போதாது என்று கூறினார்.
ISIS தீவிரவாத அமைப்பில் இணைவதற்கு இளையோர் பலர் முன்வருவதால், இத்தீவிரவாத அமைப்பின் சக்தி கூடிவருகிறது என்பதை எடுத்துரைத்த பேராயர் Warda அவர்கள், இந்தச் சக்தியைக் குறைக்க அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையே, ISIS அமைப்பில் அண்மைய நாட்களில் 20,000த்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ISIS அமைப்பினர் சமூக வலைத்தளங்களில் மேற்கொண்டு வரும் விளம்பர முயற்சிகளும், மேற்கத்திய நாடுகளின் இளையோர், ஆபத்தை விரும்பித் தேடும் போக்கும் இந்த எண்ணிக்கை வளர்ச்சிக்குக் காரணம் என்று ஆசிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

7. வெறுப்பைக் களைந்து அன்பை வளர்க்க, குடும்பங்களே தகுந்த பள்ளிக்கூடங்கள்

பிப்.11,2015 அன்பைக் கற்றுக்கொள்ளவும், அனுபவிக்கவும், அன்பில் வளரவும் அடிப்படை உதவியாக இருப்பது குடும்பங்களே என்று பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறினார்.
பாகிஸ்தான் லாகூர் நகரில் அமைந்துள்ள உயிர்ப்புப் பேராலயத்தின் 128வது ஆண்டு நிறைவையொட்டி அங்கு நடைபெற்ற பல்சமயக் கூட்டத்தில் பேசிய லாகூர் பேராயர் செபாஸ்டின் பிரான்சிஸ் ஷா அவர்கள், வெறுப்பைக் களைந்து அன்பை வளர்க்க குடும்பங்களே தகுந்த பள்ளிக்கூடங்கள் என்று கூறினார்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பாகிஸ்தானில் நிலவும் பல்சமய உரையாடலைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் ஷா அவர்கள், கூடிவந்து செபிக்கும் கிறிஸ்தவக் குடும்பம் வாழும் என்று எடுத்துரைத்தார்.
கிறிஸ்தவர்களை ஒருவர் ஒருவரிடமிருந்து தூரப்படுத்தும் வேறுபாடுகளும், வன்முறைகளை எதிர்த்துப் பேசாமல் நாம் காக்கும் மௌனமும் நம்மைத் துன்புறுத்துகின்றன என்று பாகிஸ்தான் ஆங்கிலிக்கன் சபையின் தலைவர் ஆயர் அலெக்சாண்டர் மாலிக் அவர்கள் இக்கூட்டத்தில் உரையாற்றினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

8. இலங்கையில் நடந்தது இனஅழிப்பே: வடமாநில அவை தீர்மானம்

பிப்.11,2015 இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பே என்கிற தீர்மானம், இலங்கையின் வடமாநில அவையில் வாதங்களுக்கு உட்பட்டிருந்த நிலையில், இச்செவ்வாயன்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை, அவையில் சமர்ப்பித்த முதலமைச்சர், அது குறித்து தமிழில் விடேச அறிக்கையொன்றை வாசித்ததுடன், நீண்ட விளக்கம் ஒன்றை ஆங்கில மொழியில் வழங்கினார்.
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கை திட்டமிட்டபடி வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதால் அந்த்த் தீர்மானத்தைத் தள்ளிப்போடக் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம், உண்மையை உலகிற்கு உணர்த்தும் என்றும், உள்நாட்டு மக்களின் வெறியால் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை உலகத்திற்கு எடுத்துரைக்கும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் அவையில் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...