Wednesday, 25 February 2015

செய்திகள் - 23.02.15

செய்திகள் - 23.02.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : தீயோனுக்கு எதிரான இயேசுவின் வெற்றியை பாதுகாக்கும் கடமை நமக்குள்ளது

2. அரிச்சாவில் ஆண்டு தியானத்தில் திருத்தந்தை

3. ஆப்கானில் கடத்தப்பட்ட தமிழக அருள்பணி பிரேம் குமார் விடுதலை

4. மன்னார் ஆயர் : போரின்போது விஸ்வமடு அருகே 30,000 சடலங்கள்:

5. சிறுபான்மையினரின் குறைகளைத் தீர்க்க டில்லி காவல்துறை முயற்சிகள்

6. ISIS வன்முறைச் செயல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு அவை கண்டனம்

7. பதட்டநிலைகளைக் காரணம்காட்டி மலேசிய கிறிஸ்தவர்களின் எருசலேம் திருப்பயணத்திற்கு தடை
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : தீயோனுக்கு எதிரான இயேசுவின் வெற்றியை பாதுகாக்கும் கடமை நமக்குள்ளது

பிப்.23,2015. நம் வாழ்வில் நாம் ஆன்மீகப் பாலைவனங்களைச் சந்திக்கிறோம் என்பதையும், அவற்றை எதிர்கொள்ள உறுதியையும் விவிலிய உதவிகளையும் கைக்கொள்ளவேண்டும் என்பதையும் நினைவுறுத்தும் காலமாக 40 நாள் தவக்காலம் உள்ளது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தவக்காலத்தின் முதல் ஞாயிறாகிய இஞ்ஞாயிறன்று, தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு நண்பகல் மூவேளை செபஉரை வழங்கிய திருத்தந்தை, இயேசு, பாலைவனத்தில் செலவிட்ட 40 நாட்கள் பற்றி கூறும் இஞ்ஞாயிறு விவிலிய வாசகம் குறித்து எடுத்துரைத்தார்,.
பாலைவனத்தில் தீயோனுக்கு எதிரான போராட்டத்தில் கண்ட வெற்றியில் நாமும் பங்குபெறுகிறோம், அந்த வெற்றியைப் பாதுகாக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் உயிர்ப்பில் நம் பார்வையை நிலைநிறுத்தி, தீய சக்திகளுக்கு எதிரான நம் போராட்டத்தை இந்த தவக்காலத்தில் மேற்கொள்கிறோம், ஏனெனில் தீமைக்கும், பாவத்திற்கும், மரணத்திற்கும் எதிரான வெற்றியே உயிர்ப்பு எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமையை எதிர்கொள்ளும்போது, இறைவனின் குரலுக்கு செவிமடுப்பது நமக்கு உதவும் என்பதால், விவிலியத்தை அடிக்கடி வாசிப்போம் எனவும் கேட்டுக்கொணடார்.
இந்த மூவேளை செப உரையின் இறுதியில், தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, 'இதயத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள சிறு புத்தகம் ஒன்றும் இலவசமாக வழங்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. அரிச்சாவில் ஆண்டு தியானத்தில் திருத்தந்தை

பிப்.23,2015. இஞ்ஞாயிறு முதல் உரோம் நகருக்கு வெளியே அரிச்சா என்ற நகரில் தன் ஆண்டு தியானத்தை துவக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 22, இஞ்ஞாயிறிலிருந்து பிப்ரவரி 27 வெள்ளிக்கிழமைவரை திருப்பீட தலைமையக அதிகாரிகளுடன் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டு தியானம் செய்துவருவதால், இவ்வாரத்தில் திருத்தந்தையின் பொது நிகழ்வுகள் எதுவும் இடம்பெறாது.
உரோம் நகருக்கு தெற்கே ஏறக்குறைய இருபது மைல் தூரத்திலுள்ள அரிச்சா நகர் விண்ணகப் போதகர் தியான இல்லத்தில் திருத்தந்தையும் திருப்பீட தலைமையக அதிகாரிகளும் மேற்கொள்ளும் இத்தியானத்திற்கு 'வாழும் இறைவனின் பணியாளர்களும் இறைவாக்குரைஞர்களும்' என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
கார்மேல் துறவுசபையின் அருள்பணி Bruno Secondin என்பவர் இத்தியானத்தை வழிநடத்துகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. ஆப்கானில் கடத்தப்பட்ட தமிழக அருள்பணி பிரேம் குமார் விடுதலை

பிப்.23,2015.  ஆப்கானிஸ்தானில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட தமிழக இயேசு சபை அருள்பணியாளர் அலெக்சிஸ் பிரேம் குமார் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு, இஞ்ஞாயிறு மாலை இந்தியா வந்தடைந்தார்.
JRS என்ற இயேசு சபையினரின் அனைத்துலக புலம்பெயர்ந்தோர் பணி அமைப்பின் ஆப்கான் பொறுப்பாளரான அருள்பணி அலெக்சிஸ் பிரேம் குமார் அவர்கள், ஆப்கானிஸ்தானின் Zendjan மாவட்டத்தில் ஆப்கான் அகதி குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை சந்திக்கச் சென்றவேளையில் கடந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி முஸ்லிம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.
அருள்பணி பிரேம்குமாரை மீட்க, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என, பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்து, நடவடிக்கையும் எடுத்துள்ளதைத் தொடர்ந்து, இஞ்ஞாயிறன்று அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த விடுதலையைப் பெற்றுத்தர உதவிய மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அருள்பணி பிரேம்குமாரும், அவரது தந்தை, முன்னாள் தலைமையாசிரியர் அந்தோணிசாமி அவர்களும் நன்றியை வெளியிட்டுள்ளனர்.
ஈரான் மற்றும் பாகிஸ்தானில் வாழும் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாடு திரும்புவதற்கும், அவர்களைக் குடியமர்த்தவும் உதவிவரும் JRS அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய அருள்பணி பிரேம்குமார் அவர்கள், தான் கடத்தப்படுவதற்கு சில நாட்கள் முன்னர்தான் ஈரான் மற்றும் பாகிஸ்தானில் அகதி மக்களை சந்தித்துத் திரும்பியிருந்தார்.
2013ம் ஆண்டில் மட்டும் ஆப்கானிஸ்தானின் 6000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது இயேசுசபையின் JRS அமைப்பு.
இவர் கடத்தப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர்தான் ஹெராத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகம் நான்கு ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளால் வெடிகுண்டுகளாலும் இயந்திரத் துப்பாக்கிகளாலும் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தது.
தற்போது விடுவிக்கப்பட்டுள்ள இயேசுசபை அருள்பணி பிரேம்குமார், நான்காண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் வாழும் இலங்கையின் புலம்பெயர்ந்த மக்களோடு பணியாற்றியவர்.

ஆதாரம் : IANS /வத்திக்கான் வானொலி

4. மன்னார் ஆயர் : போரின்போது விஸ்வமடு அருகே 30,000 சடலங்கள்:

பிப்.23,2015. இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்குப் பிரேதப்பரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னரே தமக்கு இந்தத் தகவல் தெரியவந்ததாக பிபிசி வானொலியில் தெரிவித்த ஆயர் ராயப்பு ஜோசப் அவர்கள், இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்தது இனப்படுகொலையே என்று இலங்கையின் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியானதே என்றும் தெரிவித்தார்.
போரின் இறுதி எட்டுமாத காலத்தில் 1,46,679 பேர் என்ன ஆனார்கள் என்ற கணக்கு கொடுக்க முடியாமல் இருப்பதாகவும், அவர்கள் எங்கே என்று இன்றுவரை தெரியவில்லை என்றும் தெரிவித்த மன்னார் ஆயர், இலங்கையின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் போருக்குப் பின்னரும் தொடர்வதாக தெரிவித்தார்.
இலங்கையில் நடந்த போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு நடத்தப்போவதாக கூறும் புதிய உள்நாட்டு விசாரணையால் எந்த பயனும் ஏற்படாது என்று தெரிவித்த மன்னார் ஆயர், ஐ.நா. நிறுவனத்தின் மேற்பார்வையிலான அனைத்துலக விசாரணையே உண்மைகளை வெளியில் கொண்டுவர உதவும் என்றும் கூறினார்.

ஆதாரம் : BBC/வத்திக்கான் வானொலி

5. சிறுபான்மையினரின் குறைகளைத் தீர்க்க டில்லி காவல்துறை முயற்சிகள்

பிப்.23,2015 சிறுபான்மையினரின் குறைகளுக்குச் செவிமடுக்கும் நோக்கத்தில் 24 மணிநேரமும் தொடர்புகொள்ளக்கூடிய தொலைபேசி பணியையும், முகநூல் மற்றும் டுவிட்டர் வழி தொடர்புகளையும் துவக்கவுள்ளதாக டில்லி காவல்துறை அறிவித்துள்ளது.
அண்மைக் காலமாக கிறிஸ்தவ நிறுவனங்களும், கிறிஸ்தவர்களும் தாக்கப்படுவது டில்லியில் அதிகரித்துள்ள நிலையில், இவ்வன்முறைகளைத் தடுக்கும் நோக்கத்தில் டில்லி காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் குறித்து தங்கள் பாராட்டை வெளியிட்டுள்ள கிறிஸ்தவ சமூகங்கள், சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள், காவல்துறையால் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளன.
கடந்த காலங்களில் 206 இந்து கோவில்கள் தாக்கப்பட்டுள்ள நிலையில், 3 கிறிஸ்தவ கோவில்களே தாக்கப்பட்டுள்ளன என்ற ஒப்புமைப் புள்ளிவிவரங்களை டில்லியின் புதிய காவல்துறை உயர் அதிகாரி, Bhim Sain Bassi அவர்கள் செய்தியாக வெளியிட்டிருப்பது குறித்த கவலையையும், கிறிஸ்தவ சமூகம் வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : AsianAge / வத்திக்கான் வானொலி

6. ISIS வன்முறைச் செயல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு அவை கண்டனம்

பிப்.23,2015 லிபியாவின் Al-Qubbah என்ற இடத்தில், கடந்த வெள்ளியன்று IS இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் குறித்து, தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது, ஐ.நா. பாதுகாப்பு அவை.
வெள்ளி காலை இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இத்தாக்குதல் குறித்து கண்டனத்தை வெளியிட்ட ஐ.நா. பாதுகாப்பு அவை, IS தீவிரவாதிகள் தோற்கடிக்கப்படுவதொடு, வன்முறைகளும் பகைமையும், சகிப்பற்றத் தன்மையும் முற்றலுமாக அகற்றப்பட வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளது.
மனித குலத்திற்கு எதிராக தீவிரமான வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், ஐ.நா. பாதுகாப்பு அவை விண்ணப்பித்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

7. பதட்டநிலைகளைக் காரணம்காட்டி மலேசிய கிறிஸ்தவர்களின் எருசலேம் திருப்பயணத்திற்கு தடை

பிப்.23,2015. மத்தியக்கிழக்குப்பகுதியின் பாதுகாப்புப் பிரசனைகளைக் காரணம்காட்டி, மலேசியக் கிறிஸ்தவர்கள், எருசலேம் மற்றும் பாலஸ்தீனப்பகுதிகளுக்கு திருப்பயணம் மேற்கொள்வதற்கு தடைவிதித்துள்ளது மலேசிய அரசு.
இஸ்ராயேல், பாலஸ்தீன மோதல்களினால் எழுந்துள்ள பதட்ட நிலைகளையொட்டி, அனைத்து பயண முன் அனுமதிகளும் தற்போது நீக்கப்பட்டு, பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் துணை உள்துறை அமைச்சர் Wan Junaidi Jaafar உரைத்தார்.
பணக்கார மலேசியர்களைக் கடத்திச்செல்ல தீவிரவாத குழு ஒன்று திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் Ahmad Zahid Hamidi ஏற்கனவே கடந்த வாரத்தில் அறிவித்திருந்தார்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி

பிறருக்காக வாழ்வதில் சக்தி பிறக்கிறது

புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா அவர்கள் ஒரு முறை, படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியாத அளவுக்கு இதய வலியால் துடித்தார். அதனால் மருத்துவரை தனது வீட்டுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் மருத்துவரோ, அவரை, தனது மருத்துவமனைக்கு வரச் சொன்னார். டாக்டர், என்னால் கை கால்களை அசைக்கக்கூட முடியவில்லை, அதனால் தயவுசெய்து எனது வீட்டுக்கு நீங்கள் வாருங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் பெர்னார்ட் ஷா. சரி வருகிறேன் என்று சலிப்புடன் சொல்லி பெர்னார்ட் ஷாவின் வீட்டுக்குச் சென்றார் மருத்துவர். எழுந்து கதவைத் திறக்க முடியாது என்பதால் கதவைத் தாளிடாமலே படுத்திருந்தார் பெர்னார்ட் ஷா. சிறிதுநேரம் சென்று கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தார் மருத்துவர். உடனடியாக அங்கிருந்த சோபாவில் சாய்ந்த மருத்துவர், இங்கு லிஃப்ட் வேலை செய்யவில்லை, இத்தனை மாடி ஏறி வந்ததால் எனது இதயம் படபடவெனத் துடிக்கிறது, மயக்கம் வருகிறது என்று, வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே சொன்னார். அவரைப் பார்த்த பெர்னார்ட் ஷா பதறிப்போய், எதுவும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று பயந்து, படுக்கையைவிட்டு எழுந்து குடிப்பதற்குச் சூடாக காப்பி தயாரித்தார். பரபரவென ஆஸ்பிரின் மாத்திரைகளைத் தேடி எடுத்து மருத்துவருக்குக் கொடுத்தார். இதில் உற்சாகமான மருத்துவர் ஒரு தாளை எடுத்து பெர்னார்ட் ஷாவிடம் நீட்டினார். அதைப் பார்த்த ஷா புருவங்களை உயர்த்தினார். இது ஒன்றுமில்லை உங்களை நான் குணமாக்கியதற்குக் கட்டணம் என்றார் மருத்துவர். இது எப்படி இருக்கு டாக்டர், சொல்லப்போனால் நீங்கள்தான் எனக்குக் கட்டணம் செலுத்த வேண்டும், ஏனெனில் நான்தான் உங்களைக் குணமாக்கினேன் என்றார் ஷா. அதற்கு மருத்துவர், இல்லை இல்லை, கை கால்களைக்கூட அசைக்க முடியாமல் படுத்துக்கிடந்த உங்களை எழுந்து காப்பி போட வைத்து உங்களைக் குணமாக்கிவிட்டேன் அல்லவா, அதனால் எடுங்கள் கட்டணப் பணத்தை என்றார் மருத்துவர் கறாராக.
பிறர் துன்பம் துடைக்க, தன் துன்பம் மறைகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...