பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகங்களை அதிகரிக்க சீனா திட்டம்
சீன அரசாங்கம் சமீபகாலம் வரை ஒரு குழந்தை திட்டத்தை தீவிரமாகப் பின்பற்றி வந்தது. சமீபத்தில்தான் அந்நாட்டில் இந்தக் கொள்கை தளர்த்தப்பட்டுள்ளது.
சீனாவில் பெற்றோர்களால் கைவிடப்படும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கென்று பத்து பிராந்தியங்களில் அரசு குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இரண்டு நாள் குழந்தையிலிருந்து ஆறு வயதான குழந்தைகள் வரை இங்கே விட்டுச் செல்லப்படுகின்றன. நீண்ட காலமாக அந்நாட்டில் ஒரு குழந்தைத் திட்டம் தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வந்ததால் பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்களுக்குப் பிறக்கும் குறையுள்ள குழந்தைகளை இங்கு விட்டுச் செல்லுவது வழக்கமாக இருந்தது.
தற்போது அந்தத் திட்டம் தளர்த்தப்பட்டும் இவ்வாறு கைவிடப்படும் குழந்தைகள் அதிகரித்து வருவது அந்நாட்டு அரசாங்கத்திற்கு கவலை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக மாறியுள்ளது. முறையாகப் பராமரிக்கப்படும் ஒவ்வொரு காப்பகத்திலும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வளர்ந்து வருகின்றன.
இவை பெரும்பாலும் தீவிர நோய்த்தாக்கத்துடனோ, மனநிலை, மூளை வளர்ச்சி பாதிப்புடனோ காணப்படுகின்றன. இவ்வாறு குழந்தைகளைக் கைவிடுபவர்களைத் தண்டிக்க அங்கு சட்டங்கள் இருக்கும்போதும் பெற்றோர்கள் சிறிதும் தயக்கமின்றி அந்தக் குழந்தைகளை விட்டுச் செல்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போதுள்ள பராமரிப்பு முறையில் குழந்தைகளை எடுத்துவரும் பெற்றோர்கள் காப்பகங்களின் வெளியே இருக்கும் தொட்டிலில் குழந்தையைக் கிடத்திவிட்டு அங்குள்ள மணியை அடித்துவிட்டு நகர்ந்து விடுகின்றனர். அவர்கள் விட்டுச்சென்ற 5 முதல் 10 நிமிடங்களுக்குள் காப்பக ஊழியர்கள் குழந்தைகளை எடுத்துக் கொள்ளுகின்றனர்.
இதனால் பெற்றோர்களுக்கு எந்தத் தயக்கமோ, பயமோ ஏற்படுவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இருப்பினும், பெருகிவரும் இந்தக் காப்பகங்களின் தேவைக்கேற்ப இன்னும் 18 பிராந்தியங்களில் இதன் கிளைகளைத் திறக்கக் சீன அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
வரவிருக்கும் சில மாதங்களுக்குள் இந்தக் காப்பகங்களின் எண்ணிக்கை 25-லிருந்து 75-ஆக மாற உள்ளதென்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment