சோமாலியாவில் 8.5 லட்சம் மக்களுக்கு உணவு இல்லை: ஐ.நா. தகவல்
சோமாலியாவில் தற்போது சுமார் 8,50,000 பேர் உணவின்றி தவித்து வருவதாகவும், நாடு நெருக்கடியில் இருப்பதாகவும் ஐ.நா. மனித உரிமை திட்டங்களின் இயக்குனர் ஜான் ஜிங் தெரிவித்துள்ளார்.
சோமாலியாவில் மூன்று நாள் சுற்றுப் பயணத்திற்கு பிறகு அவர் கூறியதாவது:-
சுமார் 8,57,000 சோமாலியர்கள் நெருக்கடியான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு உடனடியாக மனிதநேய உதவி தேவை. உணவு கிடைக்காதது, மோதல், பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
கடந்த 2011ல் சோமாலியாவில் சுமார் 2,60,000 பேர் பஞ்சத்தால் உயிரிழந்தனர். மோசமான பாதுகாப்பு மற்றும் சூழ்நிலைகளுக்கு மத்தியில் அவர்கள் பஞ்சத்திலிருந்து மீண்டு வர நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்.
சோமாலியாவின் இந்த மனிதநேய பிரச்சினைக்கு இந்த ஆண்டு 933 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்ட ஐ.நா. கோரிக்கை வைத்தது. ஆனால், இதுவரை வெறும் 36 மில்லியன் டாலரே வந்துள்ளது.
சோமாலியா கடந்த 25 வருடங்களாக பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து அவர்களை மீட்க நிதி தேவைப்படுகிறது. நாம் சோமாலியா மீது கவனத்துடன் இருக்க வேண்டும். 2011ல் நடந்ததை போன்று மீண்டும் நடப்பதை நாம் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment