1. புதிய திருப்பீடச் செயலர் பேராயர் பரோலின்
2. புதிய திருப்பீடச் செயலர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவை எப்பொழுதும் பின்பற்றுவதற்கு அன்னைமரியின் உதவியைக் கேட்போம்
4. திருப்பீடச் செயலகம் மற்றும் பாப்பிறை இல்ல நிர்வாகிகளின் பதவிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன
5. சிரியாவுக்கெதிரான மேற்கத்திய நாடுகளின் இராணுவத் தாக்குதல்களுக்கு மேற்கத்திய திருஅவைத் தலைவர்கள் எதிர்ப்பு
6. பேராயர் Roham : இராணுவத் தாக்குதல்களை நடத்துவது எளிது, அதன் பின்விளைவுகளை நிறுத்துவது கடினம்
7. இலங்கை சர்வாதிகாரப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது, ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர்
8. காணாமல்போனோரின் உரிமைகளுக்காகப் போராடுவோருக்குப் பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டும், ஐ.நா.வல்லுனர்கள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. புதிய திருப்பீடச் செயலர் பேராயர் பரோலின்
ஆக.,31,2013. புதிய திருப்பீடச் செயலராக பேராயர் பியத்ரோ பரோலின் (Pietro Parolin) அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தற்போதைய
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அவர்களின் பதவி
விலகலை திருஅவை சட்ட எண் 354ன்படி ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், 58 வயதாகும் பேராயர் பரோலின் அவர்களை புதிய திருப்பீடச் செயலராக நியமித்துள்ளார்.
பேராயர் பரோலின், 2013ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியன்று திருப்பீடச் செயலர் பணியைத் தொடங்குவார் எனவும், அதுவரை அப்பணியைச் செய்யுமாறு கர்தினால் பெர்த்தோனே அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுள்ளார் எனவும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
இத்தாலியின் விச்சென்சாவுக்கு அருகிலுள்ள Schiavonல் 1955ம் ஆண்டு சனவரி 17ம் தேதி பிறந்த பேராயர் பரோலின், 1986ம்
ஆண்டு ஜூலை முதல் தேதி திருப்பீடத் தூதரகப் பணியில் சேர்ந்தார்.
திருப்பீடச் செயலகத்தின் நாடுகளுக்கு இடையேயான உறவுகள் துறையில் நேரடிப்
பொதுச் செயலராக 2002ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி நியமிக்கப்பட்ட இவர்,
2009ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதியன்று தென் அமெரிக்க நாடான வெனெசுவேலா
நாட்டுக்குத் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டார். இவர் மெக்சிகோ மற்றும்
நைஜீரியத் திருப்பீடத் தூதரங்களிலும் பணியாற்றியுள்ளார்.
வத்திக்கான் மற்றும் திருப்பீடத்தின் அனைத்து அரசியல் மற்றும் தூதரகப் பணிகள் திருப்பீடச் செயலகத்தின்கீழ் இயங்குகின்றன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. புதிய திருப்பீடச் செயலர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றி
ஆக.,31,2013.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்மீது வைத்துள்ள அளவிடமுடியாத
நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் புதிய திருப்பீடச் செயலர் பேராயர்
பியத்ரோ பரோலின்.
இறைவனின் அதிமிக மகிமைக்காகவும், திருஅவையின் நன்மைக்காகவும், மனித
சமுதாயத்தின் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்காகவும் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டுதலின்கீழ் அவரோடு சேர்ந்து பணி செய்வதற்குத்
தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்துள்ளார் பேராயர் பரோலின்.
மேலும், புதிய
திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின் அவர்களுக்குத் தனது
நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ
நாப்போலித்தானோ.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவை எப்பொழுதும் பின்பற்றுவதற்கு அன்னைமரியின் உதவியைக் கேட்போம்
ஆக.,31,2013.
இயேசுவின்மீது நம் கண்களை ஆர்வமுடன் பதித்து அவரை எப்பொழுதும்
பின்பற்றுவதற்குச் சவாலாக இருக்கும்போதும்கூட அவரைப் பின்பற்றுவதற்கு
அன்னைமரியின் உதவியைக் கேட்போம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில்
இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில், @Pontifex என்ற தனது டுவிட்டர் முகவரியில் ஏறக்குறைய தினமும் எழுதி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், ஜப்பானின் டோக்கியோ சோஃபியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் முதல் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்கென, தனது பிரிதிநிதியாக, சலேசியக் கர்தினால் Raffaele Farina அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டோக்கியோ சோஃபியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் முதல் நூற்றாண்டு விழா, வருகிற நவம்பர் முதல் தேதியன்று இடம்பெறுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருப்பீடச் செயலகம் மற்றும் பாப்பிறை இல்ல நிர்வாகிகளின் பதவிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன
ஆக.,31,2013.
திருப்பீடச் செயலகம் மற்றும் பாப்பிறை இல்ல நிர்வாகிகளின் பதவிகளை
இச்சனிக்கிழமையன்று உறுதிசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒரு
திருத்தந்தையின் தலைமைப் பணிக்காலம் முடியும்போது திருப்பீடத்தில்
அத்திருத்தந்தை நியமனம் செய்த தலைவர்களின் பதவி புதிய திருத்தந்தையால்
உறுதி செய்யப்பட வேண்டும்.
அதன்படி
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தலைமைப்பணியின்போது
செயலாற்றிய சிலரின் பதவிகளை இச்சனிக்கிழமையன்று உறுதிசெய்துள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத்தின் பொது விவகாரத்துறைச் செயலர் பேராயர் Giovanni Angelo Becciu; திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் Dominique Mamberti; பாப்பிறை இல்லத் தலைவர் பேராயர் Georg Gänswein; திருப்பீடத்தின் பொது விவகாரத் துறை ஆலோசகர் பேரருள்திரு Peter Wells; திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் நேரடிப் பொதுச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri ஆகியோரின் பதவிகளை உறுதிசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. சிரியாவுக்கெதிரான மேற்கத்திய நாடுகளின் இராணுவத் தாக்குதல்களுக்கு மேற்கத்திய திருஅவைத் தலைவர்கள் எதிர்ப்பு
ஆக.,31,2013. சிரியாவுக்கெதிரான மேற்கத்திய நாடுகளின் இராணுவத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் என்று அஞ்சப்படும்வேளை, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கத்தோலிக்கத் தலைவர்கள், இந்தத் தாக்குதல்கள் போர்க்கானச் சூழல்களை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர்.
அனைத்துலக சமுதாயத்தின் ஒத்துழைப்பின் பேரில் சிரியாவில் போரிடும் தரப்புக்களுக்கு இடையே இடம்பெறும் உரையாடலும், பேச்சுவார்த்தையுமே அந்நாட்டில் இடம்பெறும் சண்டைக்கு ஒரே தீர்வு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஜோர்டன் அரசரும் கூறியதையே அமெரிக்க ஆயர்களும் வலியுறுத்த விரும்புவதாக, அமெரிக்க ஆயர் Richard E. Pates, அமெரிக்க அரசுச் செயலர் John Kerryக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆஸ்ட்ரியாவின் Heute நாளிதழில் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ள வியன்னா கர்தினால் Christoph Schonborn, ஈராக்கிலும்
ஆப்கானிஸ்தானிலும் பிற பகுதிகளிலும் நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்கள்
அந்நாடுகளுக்கு அமைதியைக் கொண்டு வந்துள்ளனவா என்ற கேள்வியை
எழுப்பியுள்ளார்.
இன்னும், இந்த இராணுவத் தாக்குதல்கள் குறித்து எச்சரித்துள்ள ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவர் Rober Zollitsch, தமாஸ்கு நகருக்கு அருகில் வேதிய ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிவதற்கு, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஐ.நா. ஆதரவுடன் விசாரணை நடத்த வேண்டுமெனக் கூறியுள்ளார்.
ஆதாரம் : CNA/CNS
6. பேராயர் Roham : இராணுவத் தாக்குதல்களை நடத்துவது எளிது, அதன் பின்விளைவுகளை நிறுத்துவது கடினம்
ஆக.,31,2013. சிரியாவுக்கெதிராக இராணுவத் தாக்குதல்களை நடத்துவது எளிது, ஆனால் போரையும், மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் இந்தத் தாக்குதல்களின் பின்விளைவுகளையும் நிறுத்துவது கடினம் என்று Jazirah மற்றும் Euphrates சிரிய-ஆர்த்தடாக்ஸ் பேராயர் Eustathius Matta Roham கூறியுள்ளார்.
சிரியாவின் தற்போதைய நிலை குறித்து கவலையுடன் Fides செய்தி நிறுவனத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ள பேராயர் Roham, வெளிநாட்டு இராணுவத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடாது எனவும், சிரியாவில்
அமைதி திரும்ப வேண்டுமெனவும் அந்நாட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும்
மக்கள் செபித்துக்கொண்டிருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.
இன்னும், எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறைத் தலைவர் முதுபெரும் தந்தை Fouad Twal சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துவரும் நடவடிக்கைகளுக்குத் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அப்பாவி மக்கள்மீது வேதிய ஆயுதத் தாக்குதல்களை நடத்தியது சிரியா அரசுதான், புரட்சிக் குழுக்கள் அல்ல என்பது இன்னும் உறுதியாகவில்லை, இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அனைத்துலக அளவில் அதிகாரம் தரப்படவில்லை, மக்களாட்சியின் காவல்துறையாக அமெரிக்கர்கள் செயல்படக்கூடாது, புதிய இராணுவத் தாக்குதல்களின் விளைவு சிரியாவில் மேலும் இரத்தம் சிந்த வைக்கும், இத்தாக்குதல்கள் கவனமாக நடத்தப்பட்டால்கூட மத்திய கிழக்குப் பகுதியின் நிலையற்றதன்மையை மேலும் மோசமடையச் செய்யும் என விளக்கியுள்ளார் முதுபெரும் தந்தை Twal.
ஆதாரம் : Fides /CWN
7. இலங்கை சர்வாதிகாரப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது, ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர்
ஆக.,31,2013. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து நான்காண்டுகள் ஆகியும் மக்கள் இன்னும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின் றனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர் நவி பிள்ளை கூறினார்.
இலங்கையின்
தற்போதைய வளர்ச்சி குறித்து அறிவதற்காக அந்நாட்டுக்குச் சுற்றுப்பயணம்
மேற்கொண்ட நவி பிள்ளை இச்சனிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 26
வருட உள்நாட்டுப் போருக்குப் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு
வழங்கப்பட்ட வாய்ப்புக்களுக்கு மத்தியில் அந்நாடு சர்வாதிகாரப் பாதையில்
வழிநடத்தப்பட்டுக்கொண்டிருப் பதற்கான அடையாளங்கள் தெரிவதாகக் குறை கூறினார்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,
திரிகோணமலையின் கிழக்கு மாவட்டங்கள் போன்ற இடங்களைப் பார்வையிட்டதோடு
கொழும்புவில் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷ உட்பட பல தலைவர்களையும்
சந்தித்துள்ளார் நவி பிள்ளை.
மேலும், இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது காணாமல்போனோர் பற்றி ஆராய ஐ.நா. மனித உரிமைகள் அவையின் தூதுக்குழு ஒன்றை அனுப்புவதாக, காணாமல்போனோரின் உறவினர்களிடம் உறுதியளித்துள்ளார் நவி பிள்ளை.
தங்களது தூதுக்குழுவுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், பொது
மக்களிடையே சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கைகளை
மேற்கொள்வது அவசியம் என்றும் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷவிடம் தான்
கூறியதாகவும் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஆதாரம் : Reuters
8. காணாமல்போனோரின் உரிமைகளுக்காகப் போராடுவோருக்குப் பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டும், ஐ.நா.வல்லுனர்கள்
ஆக.,31,2013. கட்டாயமாக காணாமல்போனோரின் உரிமைகளுக்காகப் போராடும் அவர்களின் உறவினர்களுக்கும், அரசு-சாரா குழுக்களுக்கும் பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் வல்லுனர்கள் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது.
இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட காணாமல்போனோரின் அனைத்துலக நாள் நிகழ்வின்போது இவ்வாறு அக்குழு பரிந்துரைத்தது.
கட்டாயமாக காணாமல்போனோரின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் அவர்களின் உறவினர்களும், அரசு-சாரா குழுக்களுமே என்றுரைத்துள்ள அக்குழு, காணாமல்போனவர்கள் குறித்த உண்மை மற்றும் நீதியை வெளிப்படுத்தவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்று கூறியது.
காணாமல்போனவர்களின்
நெருக்கடிநிலை குறித்து தேசிய மற்றும் அனைத்துலக அளவில் விழிப்புணர்வையும்
அவர்கள் ஏற்படுத்தி வருவதாக அக்குழு கூறியது.
No comments:
Post a Comment