Saturday 28 September 2013

பான் கீ மூனின் அறிக்கை தமிழர் காவியத்திற்கு முகவுரை அல்ல

பான் கீ மூனின் அறிக்கை தமிழர் காவியத்திற்கு முகவுரை அல்ல

Source: TAmil CNN
ஐ.நா.சபையின் 68 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் ஐ.நா.சபையின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளதை ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அதனைத் தெரியப்படுத்தியுள்ளார்.
வன்னிப் போர் முடிவுற்ற கையோடு போர் தந்த இழப்புகளை அவதானிப்பதற்காக வருகை தந்த பான் கீ மூன், உலங்குவானூர்தியில் வன்னிப் பிராந்தியத்துக்குச் சென்று யுத்தம் நடந்த பகுதிகளைப் பார்வையிட்டிருந்தார். உலங்குவானூர்தியிலிருந்து அவர் எதனை அவதானித்தார் என்பதை நாம் முன்மொழிய முடியாவிட்டாலும் வன்னி மண்ணில் வதைப்பட்ட மக்களின் அழுகுரலை, மரண ஓலத்தை நிச்சயம் அவர் கேட்டிருக்க முடியாது.
இலங்கையில் நடந்த இறுதிப்போரின் போது ஐ.நா. சபையின் செயற்பாடுகள் தோல்வியில் முடிந்தது என்பதை இன்று ஏற்றுக்கொள்ளும் பான் கீ மூன் அன்று தமிழ் மக்களுக்கு மகா துரோகம் இழைத்தார் என்பதை இந்த உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும். பான் கீ மூன் தவிர்ந்த வேறொருவர் ஐ.நா. சபை யின் பொதுச் செயலாளராக இருந்திருந்தால், நிச்சயம் அவர் தமிழ் மக்களைக் காப்பாற்றியிருப்பார். என்ன செய்வது! எங்களின் பரார்த்த வினைப்பயனாக பான் கீ மூன் ஐ.நாவின் செயலாளராக இருந்து விட்டார்.
முள்ளிவாய்க்காலில் நடந்த மனித வதைப் படலம் அதனைத் தொடர்ந்து முட்கம்பி வேலிக்குள் சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்களை அடைத்து, உலகில் எங்கும் இல்லாதவாறு பகிரங்கமாக மனித உரிமை மீறலை அரங்கேற்றி, மார்தட்டி நின்ற சிங்கள ஆட்சியாளர்களின் கொட்டம் என எதனையும் கண்டுகொள்ளாத அளவில், பான் கீ மூன் நடந்து கொண்டார். உலகின் மிக உன்னதமான அமைப்பாகிய ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அன்று எதுவும் பேசாமல் இருந்தமைக்குக் காரணம் என்ன?
இலங்கைக்கு வந்த அவருக்கு மகா திரவிய அபிசேகம் நடந்ததா? அல்லது சுவர்ணபுஷ்ப மாலைகள் அணியப்பட்டனவா? வன்னியில் நடந்த அவலத்தை அந்தக் கணத்தில் தடுத்து நிறுத்தாமல், ஏதோ வியட்நாம் போர் காலத்தில் நடந்த கொடூரத்தை இப்போது கூறுவது போல, வெறும் மூன்றே ஆண்டுகளுக்குள் இலங்கையில் நடந்த சம்பவத்தை அவர் கூறி நிற்பது அவரின் நேர்மைத்தனத்திற்கும் நிர்வாகச் செயற்திறனுக்கும் இழுக்கானது.
எதுவாயினும் வன்னிப் போரின் போது ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறிய ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு அவர் இழைத்த அநீதிக்காக என்றோ ஒரு நாள் அவர் வருந்த வேண்டி வரும் என்றும் இப்பகுதியில் 2009ம் ஆண்டில் எழுதிய விடயங்களை மீட்டுப் பார்க்கின்றோம்.
ஆம், பான் கீ மூன் இப்போது கவலை கொள்ளலாம். நாம் இலங்கையில் தோற்றுப்போனோம் என்று சொல்லி முடிக்கலாம். ஆனால் கொன்றவன் வென்றவனாகவும் உயிரிழந்தவன் தோற்றவனாகவும் முடிந்து போன எங்கள் காவியத்திற்கு ஐ.நாவின் செயலாளர் கூறுவது முகவுரையல்ல. எங்கள் கதைக்கு முகவுரை எழுதும் தகைமை ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களுக்கே உண்டு.
நீயே! உன்னை விசாரி அல்லது விசாரிக்கப்படுவாய்! என்ற அம்மையாரின் வாசகம் எங்களைப் பற்றி எழுதும் அத்திப்பட்டி போன்ற மிகத் துயரமான – வரலாற்றுக் காவியத்திற்குப் பொன்மொழியாக முன்னிற்கும்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...