Saturday 28 September 2013

செய்திகள் - 27.09.13

 செய்திகள் - 27.09.13
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : ஓர் உண்மையான கிறிஸ்தவர், இகழ்ச்சிகளை மகிழ்வோடும் பொறுமையோடும் ஏற்றுக்கொள்ள வேண்டும்

2. திருத்தந்தை பிரான்சிஸ், OPCW நிறுவன இயக்குனர் சந்திப்பு

3. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனின் கொடையாகிய விசுவாசம்  திருஅவை வழியாக நமக்குக் கொடுக்கப்படுகிறது

4. உலகிலுள்ள அணு ஆயுதங்கள் அனைத்தும் முழுமையாகக் களையப்பட வேண்டும், பேராயர் மம்பர்த்தி

5. உலகில் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கு நாடுகள் தங்களின் முயற்சிகளைப் புதுப்பிக்க வேண்டும், ஐ.நா.

6. இனப்பாகுபாட்டு வன்முறையை அகற்றுவதற்கு பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பேராயர் கூட்ஸ்

7. சுற்றுலா மேற்கொள்பவர்கள் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழிக்க ஐ.நா. பரிந்துரை

8. கத்தார் கால்பந்து அரங்கக் கட்டுமானப் பணிகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : ஓர் உண்மையான கிறிஸ்தவர், இகழ்ச்சிகளை மகிழ்வோடும் பொறுமையோடும் ஏற்றுக்கொள்ள வேண்டும்

செப்.,27,2013. நாம் நமக்கு ஏற்படும் இகழ்ச்சிகளை எவ்வளவு மகிழ்வோடும் பொறுமையோடும் ஏற்றுக்கொள்கிறோமோ, அதுவே நாம் உண்மையான கிறிஸ்தவர்கள் என்பதற்குச் சான்றாகும் என்று இவ்வெள்ளியன்று  கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவ வாழ்வில் தியாகங்கள் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
தன்னை யார் என்று மக்கள் சொல்கிறார்கள் என இயேசு கேட்கும் புனித லூக்கா நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு தம் சீடர்களுக்குத் தமது பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்புப் பற்றி எடுத்துச் சொன்னார், ஆனால் புனித பேதுரு இதைக் கேட்டுப் பயந்தார் என்று விளக்கினார்.
மேலும், இத்தகைய துன்பங்கள் இடம்பெறவே கூடாது என்று இயேசுவிடம் சொன்ன பேதுரு பல கிறிஸ்தவர்கள் போன்று இடருக்கு உள்ளானார் என்றும் கூறினார் திருத்தந்தை.
பல கிறிஸ்தவர்கள் சிலுவையின் பாதையைப் பின்செல்வதற்கு சிலுவையின் இடர் அவர்களைத் தடை செய்து வருகிறது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், உண்மையான கிறிஸ்தவர்கள், தங்களுக்கு நேரிடும் இகழ்ச்சிகளை மகிழ்வோடும் பொறுமையோடும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சிலுவைவழி சென்ற இயேசுவை நெருங்கிப் பின்செல்வது நாம் ஒவ்வொருவரையும் பொருத்தது என்றும் திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ், OPCW நிறுவன இயக்குனர் சந்திப்பு

செப்.,27,2013. என்ற வேதிய ஆயுதத் தடை நிறுவனமான OPCWன் இயக்குனர் Ahmet Uzumcu அவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் தனியாகச் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, உலகில் வேதிய ஆயுதங்கள் தடை செய்யப்படுவதற்கு OPCW நிறுவனம் எடுத்துவரும் முயற்சிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார் என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த பின்னர், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் நேரடிப் பொதுச்செயலர் பேரருள்திரு Antoine Camilleri அவர்களையும்  OPCWன் இயக்குனர் Uzumcu சந்தித்தார் என அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதி ஏற்பட வேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் அழைப்பு விடுத்தபோது உலகில் வேதிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை வன்மையாய்க் கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனின் கொடையாகிய விசுவாசம்  திருஅவை வழியாக நமக்குக் கொடுக்கப்படுகிறது
செப்.,27,2013.  நாம், நாமாகவே கிறிஸ்தவர்களாக மாறுவதில்லை. விசுவாசம், அனைத்துக்கும் மேலாக, இறைவனின் கொடை, இது திருஅவையிலும்,  திருஅவை வழியாகவும் நமக்குக் கொடுக்கப்படுகிறது என்று இவ்வெள்ளியன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Pope Francis @Pontifex_en என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவையின் மகத்துவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு விரைவில் அழைக்கப்படுவார் என்று கத்தோலிக்க ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் Martin Schulz, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வருகிற அக்டோபர் 11ம் தேதியன்று வத்திக்கானில் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/CWN

4. உலகிலுள்ள அணு ஆயுதங்கள் அனைத்தும் முழுமையாகக் களையப்பட வேண்டும், பேராயர் மம்பர்த்தி
செப்.,27,2013. உலகில் அணு ஆயுதப் போரின் ஆபத்தை அகற்றுவதற்கு, உலகிலுள்ள அனைத்து அணு ஆயுதங்களும் ஒழிக்கப்படுவது இன்றியமையாதது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
உலகில் அணு ஆயுதங்களை அகற்றும் விவகாரம் குறித்து ஐ.நா.பொது அவையில் முதல் தடவையாக இவ்வியாழனன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி இவ்வாறு கூறினார்.
அணு ஆயுதப் போர் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளவேளை, இந்த ஆயுதங்களைக் களைவதற்கு நம்பிக்கை நிறைந்த சூழலில் நேர்மையான உரையாடல் அவசியம் என்றும் பேராயர் மம்பர்த்தி கூறியுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. உலகில் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கு நாடுகள் தங்களின் முயற்சிகளைப் புதுப்பிக்க வேண்டும், ஐ.நா.

செப்.,27,2013. உலகில் அணு ஆயுதங்களை அகற்றும் விவகாரம் குறித்த ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள், உலகை அணு ஆயுதங்களற்ற இடமாக மாற்றுவதற்கு நாடுகள் புத்துணர்வுடன் செயல்படுமாறு கேட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், உலகில் அணு ஆயுதங்களைக் களைவது பகல் கனவு என்று சிலர் புகார் செய்யலாம், ஆனால் இத்தகைய புகார்கள், அணு ஆயுதங்களைக் களைவதால் மனித சமுதாயம் அடையவிருக்கும் உறுதியான நன்மைகளைப் புறக்கணிப்பதாக இருக்கின்றது என்று கூறினார்.
அணு ஆயுதச் சோதனைகளைத் தடைசெய்யும் உடன்படிக்கை 1996ம் ஆண்டு செப்டம்பரில் உருவாக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் அமல்படுத்தப்படாமலே உள்ளது எனவும் பான் கி மூன் கவலை தெரிவித்தார்.
இன்று உலகில் 17,300 அணு ஆயுதங்கள் இருப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.   

ஆதாரம் : UN

6. இனப்பாகுபாட்டு வன்முறையை அகற்றுவதற்கு பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பேராயர் கூட்ஸ்

செப்.,27,2013. பாகிஸ்தானில் அதிர்ச்சியளிக்கக்கூடிய அளவில் வளர்ந்துவரும் சமய மற்றும் இனப்பாகுபாட்டு வன்முறை அகற்றப்படுவதற்கு அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தானில் அதிர்ச்சியளிக்கக்கூடிய அளவில் சமய மற்றும் இனப்பாகுபாட்டு வன்முறை வளர்ந்துவருவதற்கு, Peshawar ஆலயத்தில் நடந்துள்ள வன்முறை எடுத்துக்காட்டாய் உள்ளது என்று Fides செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவரான பேராயர் கூட்ஸ்.
செப நேரத்தில் அப்பாவி மக்களைக் கொலைசெய்வது, கோழைகளின் வெட்கத்துக்குரிய செயல் என்று கூறியுள்ள பேராயர் கூட்ஸ், Peshawar வன்முறைக்குப் பொறுப்பானவர்கள் கைது செய்யப்படுவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசை வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், அந்நாட்டிலுள்ள அனைத்துச் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாக்கப்படுவதற்கும் அரசு ஆவன செய்யுமாறு கேட்டுள்ளார் பேராயர் கூட்ஸ்.  

ஆதாரம் : Fides                        

7. சுற்றுலா மேற்கொள்பவர்கள் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழிக்க ஐ.நா. பரிந்துரை

செப்.,27,2013. சுற்றுலா மேற்கொள்பவர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வைக் கொண்டிருக்கவும், தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழிக்கவும் வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
இவ்வெள்ளியன்று அனைத்துலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், தண்ணீரைக் கவனமுடன் நிர்வகிப்பதில் சுற்றுலா நிறுவனங்களுக்கு இருக்கும் பொறுப்பையும், கடமையையும் சுட்டிக்கட்டியுள்ளார்.
மேலும், உலக அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றபோதிலும், 2012ம் ஆண்டில் நூறு கோடிக்கு மேற்பட்டவர்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். இவ்வெண்ணிக்கை 2011ம் ஆண்டில் 98 கோடியாக இருந்தது என, ஐ.நா. சுற்றுச்சூழல் நிறுவனம் (UNWTO) கூறியுள்ளது.
2013ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 49 கோடியே 40 இலட்சமாக உள்ளது. இது, 2012ம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில் இருந்த எண்ணிக்கையைவிட 5 விழுக்காடு அதிகம். மேலும், தென்கிழக்கு ஆசியாவில் இந்த 2013ம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 விழுக்காடு அதிகம் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 27 அனைத்துலக சுற்றுலா தினமாகும்.
UNWTO என்ற ஐ.நா. சுற்றுச்சூழல் நிறுவனத்தில் 156 நாடுகள் உறுப்புக்களாக உள்ளன.

ஆதாரம் : UN
8. கத்தார் கால்பந்து அரங்கக் கட்டுமானப் பணிகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

செப்.,27,2013. கத்தாரில் 2022ம் ஆண்டில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டு அரங்கக் கட்டுமானப் பணிகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், குறிப்பாக நேபாளிகள், கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்தப் பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை குறித்து வெளியாகியுள்ள ஒரு புலனாய்வு அறிக்கை தங்களைப் பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று FIFA எனப்படும் அனைத்துலகக் கால்பந்து விளையாட்டு அமைப்பினர் கூறியுள்ளனர்.
நேபாளத்திலிருந்து வேலைக்காக கத்தார் நாட்டுக்கு வந்துள்ளவர்கள் மிகவும் மோசமான வகையில் நடத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்றும் FIFA அமைப்பு கூறியுள்ளது.
இலண்டனிலிருந்து வெளியாகும் தி கார்டியன் பத்திரிகையில், இந்தக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நேபாளத் தொழிலாளர்கள் பெருமளவுக்கு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, கத்தார் அரசு இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இக்கட்டுமானப் பணிகளில் இரண்டு மாதங்களில் 44 பேர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

ஆதாரம் : BBC/Express

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...