Wednesday, 25 September 2013

செய்திகள் -25.09.13

செய்திகள் - 25.09.13
------------------------------------------------------------------------------------------------------
1. மதச் சுதந்திரம் இவ்வுலகில் நிறைவேறாமல் இருப்பது, நமது கலாச்சார வளர்ச்சியில் ஒரு பின்னடைவே - கர்தினால் பெர்த்தோனே

2. நோய்களைக் குணமாகும் வழிகள், அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் கிடைக்கவேண்டும், பேராயர் Zimowski

3. பெஷாவர் நகரில் தாக்குதலுக்குள்ளான அனைத்துப் புனிதர்கள் கிறிஸ்தவக் கோவிலில் பல்சமய வழிபாடு

4. கென்யா ஆயர்களுக்கு கிழக்கு ஆப்ரிக்க ஆயர் பேரவைகள் அமைப்பின் ஆதரவு

5. அருணாச்சல் பிரதேச கத்தோலிக்கர் முதன்முறையாக திருமுழுக்கு பெற்ற நாளின் 50வது ஆண்டு விழா

6. உலகச் சுற்றுச் சூழல் குறித்து, Christian Aid அமைப்பு வெளியிடவிருக்கும் அறிக்கை

7. மில்லென்னிய இலக்குகளை அடைய இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் - ஐ.நா. உயர் அதிகாரி Helen Clark

8. இணையத்தில், மகிழ்வைவிட கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு - சீன ஆய்வு


------------------------------------------------------------------------------------------------------

1. மதச் சுதந்திரம் இவ்வுலகில் நிறைவேறாமல் இருப்பது, நமது கலாச்சார வளர்ச்சியில் ஒரு பின்னடைவே - கர்தினால் பெர்த்தோனே

செப்.25,2013. பேரரசர் Constantine காலத்தில் கட்டப்பட்டு, இன்னும் நிலைத்து நிற்கும் புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் அமர்ந்து, கிறிஸ்தவ அகழ்வியல் குறித்து சிந்திப்பது பொருத்தமாகத் தெரிகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
செப்டம்பர் 22 கடந்த ஞாயிறு முதல், வருகிற சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறும் 16வது அகில உலக கிறிஸ்தவ அகழ்வியல் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு, இச்செவ்வாய் மாலை புனித இலாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி ஆற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அவர்கள் இவ்வாறு கூறினார்.
பேரரசர் Constantine மத வழிபாட்டுத் தலங்களை மட்டுமல்ல, மாறாக, மதச் சுதந்திரம் என்ற ஆணையின் வழியாக, மத நம்பிக்கையையும் இவ்வுலகில் கட்டியெழுப்பினார் என்று கர்தினால் பெர்தோனே அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
கற்களால் எழுப்பப்படும் ஆலயங்கள் நாம் எழுப்பவேண்டிய ஆன்மீக ஆலயங்களின் ஓர் எடுத்துக்காட்டு என்றும், நாம் எழுப்பும் இந்த ஆலயத்தின் மூலைக்கல்லாக கிறிஸ்து விளங்கவேண்டும் என்றும் கர்தினால் பெர்தோனே அவர்கள் எடுத்துரைத்தார்.
17 நூற்றாண்டுகளுக்கு முன்னர் பேரரசர் Constantine வழங்கிய மதச் சுதந்திரம் இன்னும் இவ்வுலகில் முற்றிலும் நிறைவேறாமல் இருப்பது, நமது இன்றையக் கலாச்சார வளர்ச்சியில் ஒரு பின்னடைவே என்பதையும் கர்தினால் பெர்தோனே அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. நோய்களைக் குணமாகும் வழிகள், அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் கிடைக்கவேண்டும், பேராயர் Zimowski

செப்.25,2013. மனித சமுதாயத்தில் காணப்படும் பொதுவான அல்லது அரிதான நோய்கள் அனைத்திலிருந்தும் குணமாகும் வழிகள், அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் கிடைக்கவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அரிதான நோய்களை மையப்படுத்தி, செப்டம்பர் 25, இப்புதனன்று உரோம் நகரில் நடைபெற்ற ஒரு மருத்துவக் கருத்தரங்கில், நலப்பணியாளர்கள் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
தகுதி, வயது, நலமற்ற நிலை என்ற பல காரணிகளின் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளும் வேறுபடுவதைக் குறித்து பல்வேறு திருத்தந்தையர் வருத்தம் தெரிவித்துள்ளனர் என்பதை பேராயர் Zimowski அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
மருத்துவத் துறை இலாபத்தின் அடிப்படையில் செயல்படுவதை விடுத்து, மக்களைக் காக்கும் பணியில் இன்னும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்ற கருத்தை, திருப்பீடம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்பதையும் பேராயர் Zimowski அவர்கள் எடுத்துரைத்தார்.
வயது முதிர்ந்தோர் மற்றும் நரம்பு தொடர்பான நோயுற்றோர் ஆகியோரை மையப்படுத்தி, இவ்வாண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி முதல் 23ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள பேராயர் Zimowski அவர்கள், அங்கிருந்தோர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. பெஷாவர் நகரில் தாக்குதலுக்குள்ளான அனைத்துப் புனிதர்கள் கிறிஸ்தவக் கோவிலில் பல்சமய வழிபாடு

செப்.25,2013. பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அனைத்துப் புனிதர்கள் கிறிஸ்தவக் கோவிலில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பின், இச்செவ்வாயன்று அக்கோவிலில் பல்சமய வழிபாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
34 பெண்கள், 7 குழந்தைகள் உட்பட 82 பேர் உயிர் இழந்ததற்கும், 145 பேர் காயமடைந்ததற்கும் காரணமாக அமைந்த தற்கொலைப் படையினரின் இத்தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பலவேறு நகரங்களில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இணைந்து அமைதி ஊர்வலங்களையும், செபங்களையும் மேற்கொண்டனர் என்று Fides செய்திக் குறிப்பு கூறுகிறது.
இத்தாக்குதலின் முழு உண்மையைக் கண்டறிவது அரசின் கடமை என்றும், கிறிஸ்தவர்கள் இந்நிகழ்ச்சியை அடுத்து அமைதி காக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பின் தலைவர் பேராயர் Joseph Coutts அவர்கள் கூறியுள்ளார்.
1883ம் ஆண்டு பெஷாவரில் கட்டப்பட்ட அனைத்துப் புனிதர்களின் ஆலயம், இஸ்லாமியத் மசூதிகளைப் போலவே கட்டப்பட்டுள்ளது என்றும், கிறிஸ்தவ இஸ்லாமிய நல்லுறவை வளர்க்கும் வண்ணம் கட்டப்பட்ட இந்த ஆலயமும் ஏனைய இஸ்லாமிய மசூதிகளைப் போலவே Meccaவை நோக்கியவண்ணம் கட்டப்பட்டுள்ளது என்றும் ICN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / ICN / AsiaNews

4. கென்யா ஆயர்களுக்கு கிழக்கு ஆப்ரிக்க ஆயர் பேரவைகள் அமைப்பின் ஆதரவு

செப்.25,2013. செப்டம்பர் 21, கடந்த சனிக்கிழமையன்று நைரோபி நகரில் Westgate வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கித் தாக்குதலை அடுத்து, கிழக்கு ஆப்ரிக்க ஆயர்கள் இணைந்து, கென்யா ஆயர்களுக்கு தங்கள் ஒருங்கிணைப்பையும், செபங்களையும் தெரிவித்து, மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
கென்யா ஆயர்கள் பேரவையின் தலைவர் கர்தினால் John Njue அவர்களுக்கு, கிழக்கு ஆப்ரிக்க ஆயர் பேரவைகள் அமைப்பின் தலைவர் பேராயர் Tarcisius Ziyaye அவர்கள் அனுப்பியுள்ள இம்மடலில், இத்தாக்குதலில் இறந்தோருக்குத் தங்கள் செபங்களையும், பாதிக்கப்பட்டோருக்கு தங்கள் ஆறுதலையும், ஒருங்கிணைப்பையும் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இத்தாக்குதலில், இதுவரை, 69 பேர் இறந்துள்ளனர் என்றும், 175 பேர் காயமுற்றுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வர்த்தக வளாகத்திலிருந்து இராணுவத்தினரால் 1000க்கும் அதிகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ஆதாரம் : Zenit

5. அருணாச்சல் பிரதேச கத்தோலிக்கர் முதன்முறையாக திருமுழுக்கு பெற்ற நாளின் 50வது ஆண்டு விழா

செப்.25,2013. இந்தியாவின் அருணாச்சல் பிரதேச கத்தோலிக்கர், முதன்முறையாக தாங்கள் திருமுழுக்கு பெற்ற நாளின் 50வது ஆண்டு விழாவை அண்மையில் கொண்டாடினர்.
1963ம் ஆண்டு ஜூன் மாதம், Apatani என்ற பழங்குடியினர் குலத்தைச் சார்ந்த Joseph Tage Moda, William Tage Tatun, Athanasius Roto Tajo என்ற மூன்று பெரும் திருமுழுக்கு பெற்றதன் 50வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் திருப்பலி அண்மையில் Ziro என்ற பங்குத்தளத்தில் கொண்டாடப்பட்டது.
1963ம் ஆண்டு திருமுழுக்கு பெற்ற இந்த முதல் மூவரும் கலந்துகொண்ட திருப்பலியை Tezpur மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் Robert Kerketta அவர்கள் நிறைவேற்றினார்.
அருணாச்சல் பிரதேசத்தில் வாழும் 9 இலட்சத்திற்கும் அதிகமான பழங்குடியினர் மத்தியில், அரசு விதித்துவரும் பல்வேறு தடுப்புச் சட்டங்களையும் மீறி, தற்போது 2 இலட்சத்திற்கும் அதிகமான கத்தோலிக்கர்கள் திருமுழுக்கு பெற்றுள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN   

6. உலகச் சுற்றுச் சூழல் குறித்து, Christian Aid அமைப்பு வெளியிடவிருக்கும் அறிக்கை

செப்.25,2013. மனித சமுதாயத்தின் செயல்பாடுகளால் உருவாகும் கார்பன் வெளிப்பாட்டின் அளவைக் குறைக்கத் தவறினால், மனிதர்கள் அனைவரும், குறிப்பாக, ஏழை மக்கள் அதிகத் துன்பங்களுக்கு உள்ளாவர் என்று Christian Aid எனப்படும் பிறரன்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகச் சுற்றுச்சூழல் குறித்து, செப்டம்பர் 27, வருகிற வெள்ளிக்கிழமையன்று Christian Aid அமைப்பு வெளியிடவிருக்கும் ஓர் அறிக்கையில், கடந்த 6 ஆண்டுகளில் சுற்றுச்சூழலில் இன்னும் ஆபத்தான அளவு மாற்றங்கள் உருவாகியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாற்றங்களால் இதுவரை நாம் காணாத பூச்சி வகைகள் உருவாகியுள்ளன என்பதையும், இவை, பயிர்களுக்கு விளைவிக்கும் ஆபத்து நம்மைப் பாதிக்கின்றது என்பதையும் ஓர் எடுத்துக்காட்டாக இவ்வறிக்கை கூறுகிறது.
கடந்த 6 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் மாற்றங்களால், ஆப்ரிக்கக் கண்டமும், ஆசிய கண்டமும் மிக அதிகப் பாதிப்புக்களைச் சந்தித்து வருகின்றன என்பதையும் இவ்வறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : ICN

7. மில்லென்னிய இலக்குகளை அடைய இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் - ஐ.நா. உயர் அதிகாரி Helen Clark

செப்.25,2013. மில்லென்னிய இலக்குகளை அடைய இன்னும் 830 நாட்களே உள்ள நிலையில் நமது முயற்சிகளைக் கைவிடும் மனநிலையைத் தவிர்த்து, இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில் உலகம் பல்வேறு வழிகளில் முன்னேறி வந்திருந்தாலும், தேவைகளில் உள்ள வறியோரின் வாழ்வுத்தரம் இன்னும் உயராமல் இருக்கின்றது என்று ஐ.நா. முன்னேற்ற செயல்திட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் Helen Clark அவர்கள், இச்செவ்வாயன்று சிறப்பான ஒரு வேண்டுகோளை உலக அரசுகளுக்கு விடுத்தார்.
மிக வறியச் சூழலில் வாழ்வோரின் எண்ணிக்கையைக் குறைப்பது, அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது, சேரிகளில் குடியிருப்போரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்பன 2000மாம் ஆண்டில் ஒரு கனவாக இருந்தாலும், தற்போது இவை ஓரளவு நனவாக மாறியுள்ளது என்று உலக வங்கியின் தலைவர் Jim Yong Kim அவர்கள் கூறினார்.
இருப்பினும், மில்லென்னிய இலக்குகளை முற்றிலும் அடைவதற்கு அரசு, தனியார் துறை, அரசு சாரா அமைப்புக்கள், பொது மக்கள் என்று அனைவரும் இணைந்து இன்னும் தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் Yong Kim அவர்கள் கூறினார்.

ஆதாரம் : UN

8. இணையத்தில், மகிழ்வைவிட கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு - சீன ஆய்வு

செப்.25,2013. உலகை ஒன்றாக இணைத்திருப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இணையத்தில், கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு என்று சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்கள் வாழ்வுடன் வெகுவாக ஒன்றிப்போயிருக்கும் ஒரு சமூக இணையதளம் Twitter. குறிப்பிட்ட ஒரு விடயத்தைப் பற்றி, மக்கள் தூண்டப்பட்டதும், தமது கருத்துக்களை அவர்கள் Twitter வழியே பதிந்து விடுகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட விவகாரம் குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் மத்தியில் என்ன கருத்துகள் நிலவுகின்றன என்பதை அறிய விரும்பும் ஆய்வாளர்கள், முதலில் நாடுவது Twitter போன்ற இணையதளங்களைத்தான்.
இப்படிபட்ட சமூக இணையதளங்களில் ஒன்று, சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படும் Weibo. Twitterக்கு இணையான Weiboவை சீனாவில் 50 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
10 கோடி கருத்துகள் தினமும் பதிவாகும் Weibo இணையதளம் பற்றி, தலைநகர் Beijingகிலுள்ள Beihang பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் சில சுவையான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Weibo பயனீட்டாளர்களின் சொற்பிரயோகம், உணர்வுகளை வெளிப்படுத்தும் emoticon எனப்படும் அடையாளப் பயன்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தவர்கள், கோபம், சோகம், மகிழ்வு, விரக்தி ஆகிய உணர்வுகளில், கோபமூட்டும் பதிவுகளே மக்கள் மத்தியில் அதிக அளவில் பகிர்ந்து கொள்ளப்பட்டதைக் கண்டறிந்தனர்.
2010ம் ஆண்டில் ஆறு மாத காலம் சுமார் இரண்டு இலட்சம் Weibo பயனீட்டாளர்களின் ஏழு கோடி பதிவுகள் ஆய்வுசெய்யப்பட்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...