Saturday 28 September 2013

செய்திகள் - 26.09.13

 செய்திகள் - 26.09.13
------------------------------------------------------------------------------------------------------

1. இயேசுவை அறிந்துகொள்ள அறிவு, இதயம், செயல்கள் என்ற மூன்று மொழிகள் தேவை - திருத்தந்தை பிரான்சிஸ்

2. லெபனான், சிரியா, புனிதபூமி ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயர்களுடன் திருத்தந்தையின் கூட்டுத் திருப்பலி

3. திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் 'Pacem in Terris' வழியே இவ்வுலகிற்கு வழங்கியுள்ள அற்புதமான பாடம் - கர்தினால் பீட்டர் டர்க்சன்

4. "மனிதப் பிறவியை, கடவுள் பெண்ணிடம் ஒப்படைக்கிறார்" - பொதுநிலையினர் பணி திருப்பீட அவையின் கருத்தரங்கு

5. கனடா ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில் Honduras கர்தினால் Maradiaga

6. வாழ்வு மிகவும் புனிதமானது, அதைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை - நைரோபி பேராயர்

7. புனித Thekla துறவு மடத்தில் சிக்கியிருக்கும் அருள் சகோதரிகளையும், ஏழைக் குழந்தைகளையும் காப்பாற்றவேண்டும் - முதுபெரும் தந்தை Ignatius Zakka

8. அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு மேலும் நிதியுதவிகள் தேவை - ஐ.நா.

------------------------------------------------------------------------------------------------------

1. இயேசுவை அறிந்துகொள்ள அறிவு, இதயம், செயல்கள் என்ற மூன்று மொழிகள் தேவை - திருத்தந்தை பிரான்சிஸ்

செப்.26,2013. இயேசுவை அறிந்துகொள்ள 'முதல் தரமான' அறிவைவிட, ஒவ்வொருநாள் வாழ்வில் அவருடன் நாம் ஆழ்ந்த வகையில் ஈடுபடுவதால் உருவாகும் அனுபவமே தலைச்சிறந்ததென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை, புனித மார்த்தா சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், இயேசுவை அறிந்துகொள்ள அறிவு, இதயம், செயல்கள் என்ற மூன்று மொழிகள் தேவை என்று திருத்தந்தை மறையுரை வழங்கினார்.
இவ்வியாழன் வழங்கப்பட்டுள்ள நற்செய்தியில் (லூக்கா 9: 7-9) ஏரோது தன் அறிவுப் பசியை மட்டும் தீர்த்துக்கொள்ளும் வகையில், இயேசு யார் என்று தெரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகள், மேலோட்டமாக அமைந்தன என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இத்தகைய அறிவைவிட, இயேசுவுடன் ஆழ்ந்ததொரு உறவில் ஈடுபடும்போது உருவாகும் அறிவே தலைசிறந்ததேனக் கூறினார்.
மறைக்கல்வி வழியாக நம் அறிவை மட்டும் நிரப்பிய இயேசு போதாது, நம் செபங்கள் வழியாக அவரை மனதார உணர்வதற்கும் முயற்சிகள் செய்யவேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
அறிவு, மனம் இவை இரண்டையும் தாண்டி, நாம் தெருவில் நடக்கும்போது, இயேசுவை நம் செயல்பாடுகளில் உணர்வதும், வெளிப்படுத்துவதும் மிக உயர்ந்த அறிவு என்று திருத்தந்தை தன் மூன்றாவது கருத்தை வெளிப்படுத்தினார்.
ஈடுபாடு ஏதுமில்லாமல்இயேசுவைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டு நம் அறிவை மட்டும் நிரப்புவது ஆபத்தானது என்ற தெளிவையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வெளிப்படுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. லெபனான், சிரியா, புனிதபூமி ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயர்களுடன் திருத்தந்தையின் கூட்டுத் திருப்பலி

செப்.26,2013. கடவுள் நம்மை என்றும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையை ஆயர்களாகிய நாம் மக்களுக்கு இடைவிடாமல் வழங்கக் கடமைப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இப்புதனன்று, புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலை திருப்பலியாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் முன் தலைகுனிந்து நிற்பது, இறைவனின் கருணையைத் தொடர்ந்து வேண்டுவதுஆண்டவரிடம் முழு நம்பிக்கை கொள்வது என்ற மூன்று கருத்துக்களில் தன் மறையுரையை வழங்கினார்.
கீழை வழிபாட்டு முறை திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri, அந்தியோக்குவின் மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் Bechara Boutros Rai, ஆகிய இருவரும், திருத்தந்தையுடன் நிறைவேற்றியத் திருப்பலியில், லெபனான், சிரியா, புனிதபூமி ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த பல ஆயர்களும் கூட்டுத் திருப்பலியாற்றினர்.
இப்புதனன்று வழங்கப்பட்டிருந்த வாசகங்களின் அடிப்படையில் (எஸ்ரா 9: 5-9; லூக்கா 9: 1-6) மறையுரை வழங்கியத் திருத்தந்தை, தன் குற்றங்களால் இறைவன் முன் தலைகுனிந்து நின்ற இறைவாக்கினர் எஸ்ராவைப் போல, நாமும் போலியான தெய்வங்களை வணங்கியதால், இறைவனை ஏறெடுத்துக் காணமுடியாமல் நிற்கிறோம் என்று கூறினார்.
இறைவாக்கினர் எஸ்ராவைப்போல நாம் இறைவனை நோக்கி செபங்களை எழுப்பவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குறிப்பாக, சிரியா, லெபனான், மத்தியக்கிழக்குப் பகுதி நாடுகளுக்காகச் செபிப்போம் என்று விண்ணப்பித்தார்.
திருப்பலியில் இறுதியில், கர்தினால் Boutros Rai அவர்கள், திருத்தந்தைக்குச் சிறப்பான முறையில் நன்றி தெரிவித்தார். செப்டம்பர் 7ம் தேதியன்றும், இன்னும் பல தருணங்களிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியாவின் மீதும், மத்தியக்கிழக்குப் பகுதி நாடுகள் மீதும் காட்டிவந்துள்ள அக்கறையால், அப்பகுதி மக்கள் மனதில் அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வளர்ந்திருப்பதாக கர்தினால் Boutros Rai அவர்கள், தன் நன்றி உரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் 'Pacem in Terris' வழியே இவ்வுலகிற்கு வழங்கியுள்ள அற்புதமான பாடம் - கர்தினால் பீட்டர் டர்க்சன்

செப்.26,2013. போர்ச் சூழலில் அமைதியை எவ்வாறு உருவாக்குவது என்ற கேள்விக்குப் பதில் கூறாமல், மனித மாண்பின் அடிப்படையில், இவ்வுலகம் எவ்வாறு நிரந்தர அமைதியைக் காணமுடியும் என்பதே முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் இவ்வுலகிற்கு வழங்கியுள்ள அற்புதமான பாடம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
1963ம் ஆண்டு, திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் 'உலகில் அமைதி' என்ற மையக்  கருத்துடன் வெளியிட்ட 'Pacem in Terris' என்ற புகழ்பெற்ற சுற்றுமடலின் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வண்ணம், உரோம் நகரில் நடைபெறவிருக்கும் ஒரு கருத்தரங்கைக் குறித்து, நீதி அமைதி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அக்டோபர் 2ம் தேதி முதல் 4ம் தேதி முடிய நடைபெறவுள்ள இக்கருத்தரங்கின்போது, அமைதியை நிலைநாட்டும் மூன்று வழிகள் குறித்து கருத்தரங்கில் பேசப்படும் என்று கர்தினால் டர்க்சன் விளக்கினார்.
அமைதியை நிலைநாட்ட அரசுகளும் உலக அமைப்புக்களும் மேற்கொள்ளவேண்டிய முயற்சிகள் முதல் கருத்தாகவும், புதிய வழிகளில் அமைதியைக் கொணரும் முயற்சிகளை ஆய்வு செய்வது இரண்டாவது கருத்தாகவும், அமைதியை இன்றைய கல்வித் திட்டங்களின் இன்றியமையாத அங்கமாக்குவது மூன்றாவது கருத்தாகவும் இக்கருத்தரங்கில் அமையும் என்று கர்தினால் டர்க்சன் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. "மனிதப் பிறவியை, கடவுள் பெண்ணிடம் ஒப்படைக்கிறார்" - பொதுநிலையினர் பணி திருப்பீட அவையின் கருத்தரங்கு

செப்.26,2013. பெண்மை என்ற பண்பு இறைவாக்கினை இவ்வுலகிற்கு அறிவிப்பதில் தனி இடம் பெறுகின்றது என்று பொதுநிலையினர் பணி திருப்பீட அவை கூறியுள்ளது.
வருகிற அக்டோபர் மாதம் 10, 11 ஆகிய தேதிகளில், உரோம் நகரில் நடைபெறவிருக்கும் ஒரு கருத்தரங்கைக் குறித்து, பொதுநிலையினர் பணி திருப்பீட அவை வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில், "மனிதப் பிறவியை, கடவுள் பெண்ணிடம் ஒப்படைக்கிறார்" என்பது இக்கருத்தரங்கின் மையப்பொருளாக அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'பெண்களின் மாண்பு' என்று பொருள்படும் Mulieris dignitatem’ என்ற சுற்றுமடலை, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள், மரியன்னையின் ஆண்டான 1988ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று வெளியிட்டார்.
இச்சுற்றுமடல் வெளியிடப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பொதுநிலையினர் பணி திருப்பீட அவை இக்கருத்தரங்கை நடத்துகிறது.
சமுதாயம், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் என்ற பல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு கூடிவருவதைக் காணும் இக்காலக் கட்டத்தில், இன்னும் ஆண்-பெண் என்ற இருபால் உறவில் சமத்துவம் உருவாகாமல் இருப்பது இக்கருத்தரங்கில் பேசப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. கனடா ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில் Honduras கர்தினால் Maradiaga

செப்.26,2013. செப்டம்பர் 24, இச்செவ்வாய் முதல் கனடாவின் ஆயர் பேரவை நடத்தி வரும் ஆண்டுக் கூட்டத்தின் இரண்டாம் நாளான இப்புதனன்று, Honduras நாட்டின் கர்தினால் Oscar Rodriguez Maradiaga அவர்கள், கனடா ஆயர்களைச் சந்தித்துப் பேசினார்.
கத்தோலிக்கத் திருஅவையின் நிர்வாகத் துறைகளை மறுபரிசீலனை செய்து, அவற்றில் தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்க எட்டு கர்தினால்கள் கொண்ட குழு ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.
அக்டோபர் மாதத் துவக்கத்தில் தங்கள் ஆலோசனைக் கூட்டங்களைத் துவங்கவிருக்கும் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக கர்தினால் Maradiaga அவர்களை, திருத்தந்தை நியமித்துள்ளார்.
திருஅவையின் மைய நிர்வாகத்திலும், தலத்திருஅவைகளின் நிர்வாகத்திலும் உருவாக வேண்டிய மாற்றங்கள் குறித்து, கனடா நாட்டு ஆயர்களுடன் கர்தினால் Maradiaga அவர்கள் பேசினார் என்று Zenit கத்தோலிக்கச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் எழுதிய 'Pacem in Terris' என்ற சுற்றுமடலின் 50ம் ஆண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், நீதி, அமைதி, அன்பு ஆகிய உயர்ந்த விழுமியங்களை இவ்வுலகில் வளர்க்க, குறிப்பாக கனடா நாட்டில் வளர்க்க, ஆயர்கள் ஆற்றவேண்டிய பணிகள் என்ற தலைப்பில் கனடா ஆயர்களின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.

ஆதாரம் : Zenit

6. வாழ்வு மிகவும் புனிதமானது, அதைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை - நைரோபி பேராயர்

செப்.26,2013. வாழ்வு மிகவும் புனிதமானது, எனவே அதனை மதிப்பதற்கு மட்டுமே நாம் அழைக்கப்பட்டுள்ளோம், வாழ்வைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று நைரோபி பேராயர் கர்தினால் John Njue கூறினார்.
கடந்த சனிக்கிழமையன்று நைரோபியின் ஒரு வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோரை இப்புதனன்று இரு மருத்துவமனைகளில் சென்று சந்தித்த பேராயர் இவ்வாறு கூறினார்.
அடிப்படைவாதக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலைத் தொடர்ந்து, கென்யாவின் இராணுவம் வர்த்தக வளாகத்தில் நுழைந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது என்று கென்யா அரசு அறிவித்துள்ளது.
அர்த்தமற்ற இந்த வன்முறை, இஸ்லாமியக் கொள்கைகள், படிப்பினைகள் அனைத்திற்கும் முரணானது என்று SUPKEM எனப்படும் கென்யா உயர்மட்ட இஸ்லாமியக் குழு ஒன்று அறிக்கை விடுத்துள்ளது.

ஆதாரம் : Fides

7. புனித Thekla துறவு மடத்தில் சிக்கியிருக்கும் அருள் சகோதரிகளையும், ஏழைக் குழந்தைகளையும் காப்பாற்றவேண்டும் - முதுபெரும் தந்தை Ignatius Zakka

செப்.26,2013. தமஸ்கு நகரின் வடக்கே, Maaloula என்ற கிராமத்தில் அமைந்துள்ள புனித Thekla துறவு மடத்தில் சிக்கியிருக்கும் 40 அருள் சகோதரிகளையும், ஆதரவற்ற பல ஏழைக் குழந்தைகளையும் காப்பாற்றவேண்டும் என்று தமஸ்குவில் உள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை Ignatius Zakka அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
சிரியா அரசுக்கும், போராளிகளுக்கும் இடையே நிகழும் வன்மையான தாக்குதல்களால், இந்த மடத்தில் தங்கியிருக்கும் யாரும் வெளியேற முடியாதச் சூழல் உருவாகியிருப்பதாகவும், அங்கு வாழ்வோர் கடந்த இரு வாரங்களாக உணவு பற்றாக் குறையால் அவதியுறுவதாகவும் முதுபெரும் தந்தை Zakka அவர்கள் கூறியுள்ளார்.
புனித Thekla துறவுமடம் மிகப் பழமை வாய்ந்த ஒரு இடம் என்றும், Maaloula கிராமத்தில் அமைந்திருந்த பல பழமையான கோவில்கள் இந்தப் போரினால் சிதைந்துள்ளன என்றும் ICN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இதற்கிடையே, Aleppo நகரைச் சுற்றி உருவாகியுள்ள அழிவுகளைக் குறித்து, அங்குள்ள கிரேக்கக் கத்தோலிக்கப் பேராயர் Jean-Clément Jeanbart அவர்கள் Fides செய்திக்கு புள்ளிவிவரங்களை அனுப்பியுள்ளார்.
அண்மைய மாதங்களில், Aleppo நகரில் மட்டும், 1400க்கும் அதிகமான தொழிற்சாலைகளும் கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்றும், நாடு முழுவதிலும் 2000க்கும் அதிகமான பள்ளிகளும், 37 மருத்துவ மனைகளும் சேதமடைந்துள்ளன என்றும் பேராயர் Jeanbart அவர்களின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : ICN / Fides

8. அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு மேலும் நிதியுதவிகள் தேவை - ஐ.நா.

செப்.,26,2013. அனைத்துச் சிறாருக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கு உறுதியான தலைமைத்துவமும், நிதியுதவியும் அவசியம் என்று ஐ.நா. கூட்டம் ஒன்றில் வலியுறுத்தப்பட்டது.
உலகளாவிய கல்வி முதல் முயற்சிஎன்ற விருதுவாக்குடன் கடந்த செப்டம்பரில் தொடங்கப்பட்ட நடவடிக்கை குறித்துப் பரிசீலிப்பதற்கென நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் இப்புதனன்று கூட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இவ்வாறு கூறினர்.
இன்றும் உலகில் ஏறக்குறைய 5 கோடியே 70 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லாமலும், தரமான கல்வி வழங்கப்படாததால் 25 கோடிச் சிறார் கல்வியறிவின்றியும் உள்ளனர் என இக்கூட்டத்தில் அறிவித்தார் யுனெஸ்கோ இயக்குனர் இரினா போக்கோவா.
பல நாடுகளில் பள்ளிக்குச் செல்லும் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், பாதியிலேயே படிப்பை நிறுத்தும் சிறாரின் எண்ணிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத அளவு உயர்ந்திருப்பதாகவும் போக்கோவா மேலும் தெரிவித்தார்.
அனைத்துச் சிறாரும் பள்ளி செல்லவும், கற்கும் திறனை மேம்படுத்தவும், உலகளாவிய குடியுரிமையை ஊக்குவிக்கவுமென உலகளாவிய கல்வி முதல் முயற்சிஎன்ற நடவடிக்கையை கடந்த ஆண்டில் தொடங்கி வைத்தார்  ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...