பெருங்கடல் சுனாமி அலை 800 கி.மீ. தொலைவுக்குப் பயணிக்கும்:தஞ்சைப் பல்கலைக் கருத்தரங்கில் தகவல்
ஆழமான பெருங்கடலில் ஏற்படும் சுனாமி அலை 800 கி.மீ. தொலைவுக்குப் பயணிக்கும் சக்தியுடையது என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொழிலகங்கள் மற்றும் நில அறிவியல் துறைத் தலைவர் ஆர். பாஸ்கரன். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் பொருளியல் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வங்கக் கடலில் சுனாமி, தானே புயல் தாக்கத்துக்குப் பிறகு பொருளாதார நிலை என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:
சாதாரண காற்று அலைகள் 100 மீட்டர் நீளமும், 2 மீட்டர் உயரமும் உடையவை. ஆழமான பெருங்கடலில் ஒரு சுனாமி அலை 200 கி.மீ. நீளமும், 800 கி.மீ. தொலைவுக்குப் பயணிக்கும் சக்தியும் உடையது. சுனாமி கரையைக் கடக்கும்போதும், நீர் ஆழமற்ற இடத்திலிருக்கும் போதும் அதன் வேகம் ஒரு மணிக்கு 80 கி.மீ.க்குக் கீழ் குறைகிறது. அதன் அலை நீளமும் 20 கிலோ மீட்டராக குறைகிறது. ஆனால், அதன் வீச்சு மிகுந்த அளவில் வளரும். சில நிமிஷங்களில் சுனாமி அதன் முழு உயரத்தை அடைந்துவிடும்.
விரிகுடாக்கள் மற்றும் மிகவும் அழமான நீர் அருகில் சுனாமிகள் உருவானால் அவை சுனாமியை ஒரு படிக்கட்டு போன்றும், ஒரு செங்குத்தான அலையாகவும் மாற்றுகிறது. சில நேரங்களில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீன் பிடிக்கும்போது எந்த அசாதாரண அலையையும் உணராமல் கரைக்குத் திரும்பி வந்த பின்பு கிராமமே பெரிய கடல் அலையால் அழிவுற்றதைக் கண்டுள்ளனர். சுனாமியின் உச்ச அலை கரையை அடையும்போது கடல் மட்டம் தாற்காலிகமாக உயரும். இது, கடல் மட்டத்துக்கு மேலிருந்து அளக்கப்படுகிறது. அலை உச்சிகளுக்கு இடையில் பல மடங்கு அலைகள் பல மணி நேரங்கள் தொடர்ந்து வந்தால் அதைப் பெரிய சுனாமி எனக் கூறுகிறோம்.
நிகழ் நூற்றாண்டில் 2004 ஆம் ஆண்டு டிச. 26ம் திகதி கடுமையான சுனாமியில் இந்து மகா சமுத்திரத்தில் குறிப்பாக இந்தோனேஷிய நாட்டின் தீவுகளில் ஒன்றான சுமத்திரா பகுதியில் கடலுக்கு அடியில் நிகழ்ந்த மிகப் பெரிய பூமி அதிர்வு காரணமாக ஆழிப் பேரலை உருவானது.யுரேஷியன் நிலத் தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ – ஆஸ்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியான இந்திய நிலத்தட்டும் இந்தோனேஷியாவின் வடக்கே சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் மோதியது.என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment