Saturday, 28 September 2013

அமைதிப் பெருங்கடல்

அமைதிப் பெருங்கடல்

உலகின் மிகப் பெரிய நீர்த் தொகுதியாகிய பசிபிக் பெருங்கடலே அமைதிப் பெருங்கடல் என அழைக்கப்படுகிறது. போர்த்துக்கீசிய நாடுகாண் பயணி Ferdinand Magellan என்பவர், 1521ம் ஆண்டில் இப்பெருங்கடலை அடைந்தபோது சாதகமான காற்று வீசியதால் Mar Pacifico அதாவது "அமைதியான கடல்" என்ற பெயரை இப்பெருங்கடலுக்குச் சூட்டினார். மேற்கில் ஆசியாவும், ஆஸ்திரேலியாவும், கிழக்கில் அமெரிக்காவும் இதன் எல்லைகளாகும். ஏறக்குறைய 18 கோடி  சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இப்பெருங்கடல், பூமியின் அனைத்துக் கண்டங்களின் கூட்டு நிலப்பரப்பைவிட மிகப் பெரியதாகும். உலக நீர்ப்பரப்பில் ஏறக்குறைய 46 விழுக்காட்டையும், உலகின் பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியையும் இது கொண்டுள்ளது. உலகின் மிக ஆழமான பகுதியான, 10,911 மீ. ஆழமுடைய Mariana அகழியை இக்கடல் பகுதி உள்ளடக்கியுள்ளது. இப்பெருங்கடலின் சராசரி ஆழம் 4,300 மீட்டராகும். இப்பெருங்கடலில் ஏறத்தாழ 2,500 தீவுகள் உள்ளன. இது மற்ற அனைத்து பெருங்கடல்களிலுள்ள தீவுகளின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகம். அமைதிப் பெருங்கடலின் நடுவில், கிழக்கையும் மேற்கையும் முடிவுசெய்யும் ± 180° தீர்க்க ரேகை செல்வதால், இதன் ஆசியப் பக்கம் கிழக்கு அமைதிப் பெருங்கடல் எனவும் எதிர்ப்புறம் மேற்கு அமைதிப் பெருங்கடல் எனவும் வழங்கப்படுகின்றன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் அமைதிப் பெருங்கடல் பகுதியில் முக்கிய மனித இடப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. அவைகளில் முக்கியமானதாக, அமைதிப் பெருங்கடலின் ஆசிய ஓரத்திலிருந்து பாலினேசியர்கள் இடம்பெயர்ந்து தாகிட்டிக்கும் பின்னர் ஹவாய்க்கும், நியுசிலாந்துக்கும் சென்றுள்ளனர். இப்பெருங்கடலின் தாது வளங்கள், மனித ஆக்கிரமிப்புக்குரியதாக இருக்கிறது. ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து ஆகிய நாடுகளில் இக்கடலின் நீர் ஆழமற்ற பகுதிகளிலிருந்து பெட்ரோல், இயற்கை வாயு ஆகியன எடுக்கப்படுகின்றன. மேலும் ஆஸ்திரேலியா, ஜப்பான், பாப்புவா நியூகினியா, நிக்கராகுவா, பானமா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்கரையோரங்களில் முத்து எடுக்கப்படுகின்றன. அமைதிப் பெருங்கடலின் மிகப்பெரிய சொத்து அதன் மீன்களாகும். இதன் கடற்கரையோரங்களில் பல அரிய வகை மீன்கள் கிடைக்கின்றன. இங்கு அணுசக்திக் கழிவுகள் குவிவதைத் தடுக்க, தெற்கு அமைதிப் பெருங்கடல் மன்றத்தின் உறுப்பு நாடுகள் 1986ம் ஆண்டில் இப்பகுதியை அணுசக்தி பயன்பாடற்ற பகுதியாக அறிவித்தது. 28 வயது Sarah Outen என்ற பிரித்தானியப் பெண், பசிபிக் அமைதிப் பெருங்கடலில் 3,750 மைல்கள் தனது படகில் தனியாகப் பயணம் செய்த முதல் பெண் என்ற பெருமையை இத்திங்களன்று பெற்றுள்ளார்.  

ஆதாரம் : விக்கிப்பீடியா

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...