Friday, 3 May 2013

Catholic News in Tamil - 02/05/13


1. திருத்தந்தை - இறைவனின் அன்புக்கு 'ஆம்' என்று சொல்லும் திருஅவை, தன் கதவுகளை அனைவருக்கும் திறந்துவிடும்

2. வேலைவாய்ப்பு ஏதுமின்றி வாழும் அனைவரையும் நான் மீண்டும் இன்று எண்ணிப் பார்க்கிறேன் - திருத்தந்தையின் Twitter செய்தி

3. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் மீண்டும் வத்திக்கான் வந்தடைந்தார்

4. புத்த திருநாளான Wesak நாளுக்கென பல்சமய உரையாடல் திருப்பீட அவை வெளியிட்டுள்ள செய்தி

5. திருத்தந்தையும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரும் சந்திப்பது, கிறிஸ்துவ ஒருமைப்பாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்

6. சிரியாவில் கடத்தப்பட்ட பேராயர் உடல் நிலையைக் குறித்த கவலைகள்

7. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கள் நாட்டுக்கு வருவது மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது பிரேசில் சேரி மக்கள்

8. இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றும் - ஐ.நா. உயர் அதிகாரி

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - இறைவனின் அன்புக்கு 'ஆம்' என்று சொல்லும் திருஅவை, தன் கதவுகளை அனைவருக்கும் திறந்துவிடும்

மே,02,2013. தூய ஆவியாரின் செயலாற்றலுக்கு இடம்தராமல் மூடிக்கொள்ளும் திருஅவை தனக்குள் பிளவுகளை உருவாக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலைத் திருப்பலியை நிகழ்த்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் துவக்கத்தில் எழுந்த கருத்து வேறுபாடுகளை நினைவுறுத்தும் திருத்தூதர் பணிகள் நூல் பகுதியை, தன் மறையுரையின் மையப்பொருளாக எடுத்துக்கொண்டார்.
இலங்கைக் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும், வத்திக்கான் அருங்காட்சியக பணியாளர்களும் கலந்து கொண்ட இத்திருப்பலியில், 'ஆம்' என்று சொல்லும் திருஅவை வளர்ச்சி காணும் என்பதை வலியுறுத்தினார் திருத்தந்தை.
புறவினத்தாரை திருஅவைக்குள் வரவேற்பது குறித்து எருசலேமில் எழுந்த கருத்து வேறுபாடுகளில், 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் கூறிய குழுக்கள் இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை, ஏனையச் சீடர்கள் மீது சுமத்தக் கூடாது என்று புனிதர்கள் பேதுருவும், யாக்கோபும் கூறிய அறிவுரையை வலியுறுத்திப் பேசினார்.
இன்றையச் சூழலில் நுகத்தைச் சுமப்பது என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பி, எவ்வகை பாரங்களையும் இயேசுவின் அன்பு குறைத்துவிடும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவனின் அன்புக்கு 'ஆம்' என்று சொல்லும் திருஅவை, தன் கதவுகளை அனைவருக்கும் திறந்துவிடும் என்றும், இவ்விதம் வாழும் சமுதாயத்தில் அன்பின் வழியாக அனைத்து வேறுபாடுகளையும் நாம் வெற்றிகொள்ள முடியும் என்றும் திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. வேலைவாய்ப்பு ஏதுமின்றி வாழும் அனைவரையும் நான் மீண்டும் இன்று எண்ணிப் பார்க்கிறேன் - திருத்தந்தையின் Twitter செய்தி

மே,02,2013. வேலைவாய்ப்பு ஏதுமின்றி வாழும் அனைவரையும் நான் மீண்டும் இன்று எண்ணிப் பார்க்கிறேன். எவ்வகையிலாயினும் இலாபம் ஒன்றையே ஈட்ட வேண்டும் என்று என்னும் சுயநல மனங்களால், வேலைவாய்ப்பின்மை உலகில் உருவாகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று Twitter செய்தியொன்றை வெளியிட்டார்.
@pontifex என்ற திருத்தந்தையின் Twitter பக்கத்தில் ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலியம், இஸ்பானியம், அரேபியம் உட்பட ஒன்பது மொழிகளில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், திருத்தந்தையின் பெயரால் திருப்பீட அலுவலகம் வெளியிட்டுள்ள மற்றொரு Twitter செய்தியில், வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் அனைவரும், தங்களால் இயன்ற அளவு வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, உழைப்பாளர்கள் உள்ளத்தில் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்பதே நான் விடுக்கும் வேண்டுகோள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் மீண்டும் வத்திக்கான் வந்தடைந்தார்

மே,02,2013. பிப்ரவரி 28ம் தேதி திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி, திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான Castel Gandolfoவுக்குச் சென்ற முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இவ்வியாழன் மாலை உரோம் நேரம் 4.30 மணியளவில் மீண்டும் வத்திக்கான் வந்தடைந்தார்.
ஹெலிகாப்டர் மூலம் வத்திக்கான் வந்தடைந்த முன்னாள் திருத்தந்தையை, தற்போதையத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் ஹெலிகாப்டர் தளத்தில் வரவேற்றார். இருவரும் சிறிது நேரம் உரையாடியபின், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வத்திக்கான் தோட்டத்தில் அமைந்துள்ள "Mater Ecclesiae" என்ற துறவு மடத்தில் தங்கச் சென்றார்.
திருத்தந்தையருக்கு தங்கள் முழு நேரச் செபங்களால் அருள் சகோதரிகள் ஆதரவு தரவேண்டும் என்ற எண்ணத்துடன் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு முழுநேர தியான இல்லம் "Mater Ecclesiae".
1994ம் ஆண்டிலிருந்து, 2012ம் ஆண்டு முடிய நான்கு துறவுச் சபைகளைச் சேர்ந்த அருள் சகோதரிகள் இவ்வில்லத்தில் தங்கி, திருத்தந்தையருக்கு முழு நாளும் செபங்களை எழுப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்துறவு இல்லத்தில் தங்கி, தன் வாழ்வை இனி செபங்களில் செலவிடப் போவதாக முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்தபடி, அவ்வில்லத்தில் இவ்வியாழன் தங்கச்சென்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. புத்த திருநாளான Wesak நாளுக்கென பல்சமய உரையாடல் திருப்பீட அவை வெளியிட்டுள்ள செய்தி

மே,02,2013. உயிர்களுக்கு மதிப்பளிக்கும் அடிப்படையில் எழுப்பப்பட்டுள்ள புத்த மதத்தைப் பின்பற்றும் அனைவருக்கும் கத்தோலிக்கத் திருஅவையின் அன்பு வாழ்த்துக்கள் என்று பல்சமய உரையாடல் பணியில் ஈடுபட்டுள்ள திருப்பீட அவை, புத்த மதத்தினருக்கு வாழ்த்துக்களை அனுப்பியுள்ளது.
மேமாதத்தில் நிகழும் முழு நிலவு நாளையொட்டி கொண்டாடப்படும் புத்த திருநாளான Wesak நாளுக்கென பல்சமய உரையாடல் பணி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean Louis Tauran வெளியிட்டுள்ள செய்தியில், மனித உயிரை அன்பு செய்து, மதித்து, காப்பாற்றுதல் என்பது மையப்பொருளாக அமைந்துள்ளது.
உலக உயிர்களையும், சிறப்பாக, வறுமையில் இருக்கும் மனிதர்களையும் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து சமயங்களும் இணைந்து செயல்படவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப் பணியின் துவக்கத்திலிருந்து சொல்லி வருவதை கர்தினால் Tauran தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்களைக் காக்கவேண்டும் என்பது பழம்பெரும் மதங்கள் அனைத்திலும் சொல்லப்பட்டிருந்தாலும், உயிர்களுக்கு எதிராகச் செயலாற்றும் தீய சக்திகள் உலகில் வளர்ந்து வருவதைக் காணமுடிகிறது என்றும், இச்சக்திகளுக்கு எதிராக நாம் உயிர்களைக் காக்கும் பணியில் இன்னும் தீவிரமாக ஈடுபட அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் இச்செய்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் 23ம் தேதி முதல் 26ம் தேதி முடிய உலகின் பல நாடுகளில், சிறப்பாக, ஆசியாவின் அனைத்து நாடுகளிலும் Wesak புத்த விழா கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தையும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரும் சந்திப்பது, கிறிஸ்துவ ஒருமைப்பாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்

மே,02,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros அவர்களுக்கும் இடையே இம்மாதம் 11ம் தேதி நடைபெறவிருக்கும் சந்திப்பு, கிறிஸ்துவ ஒருமைப்பாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எகிப்தின் காப்டிக் கத்தோலிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
மனுவான வார்த்தையாம் கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கத்தோலிக்கத் திருஅவையும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையும் பல்வேறு கருத்துக்களில் இணைந்து வந்தாலும், இன்னும் முழுமையான ஒருமைப்பாடு உருவாக வேண்டியுள்ளது என்று, Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் சுட்டிக்காட்டினார் எகிப்தின் மின்யா பகுதியின் ஆயர் Botros Fahim Awad Hanna.
40 ஆண்டுகளுக்கு முன்னர், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவராக இருந்த மூன்றாம் Shenouda அவர்கள், திருத்தந்தை 6ம் பவுல் அவர்களை வத்திக்கானில் சந்தித்த வரலாற்று நிகழ்வுக்குப் பின், இவ்வாண்டு மே மாதம் 11ம் தேதி மீண்டும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நிகழவிருப்பதாக Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides

6. சிரியாவில் கடத்தப்பட்ட பேராயர் உடல் நிலையைக் குறித்த கவலைகள்

மே,02,2013. பத்து நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட சிரியாவின் இரு பேராயர்களில் ஒருவர் இரத்த அழுத்தம், மற்றும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவராதலால் அவருடைய உடல் நிலையைக் குறித்த கவலைகளை தலத் திருஅவை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 22ம் தேதி Aleppo நகரில் ஆயுதம் தாங்கிய ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட பேராயர் John Ibrahim, பேராயர் Paul Yagizi ஆகிய இருவரைக் குறித்த எவ்விதத் தகவலும் இதுவரைக் கிடைக்காதச் சூழலில், பேராயர் Ibrahim அவர்களின் உடல்நிலை குறித்த கவலைகளை Aleppo உயர்மறை மாவட்ட பிரதிநிதி ஒருவர் CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்டார்.
பிப்ரவரி 9ம் தேதி கடத்திச் செல்லப்பட்ட இரு குருக்களின் விடுதலையைக் குறித்து முயற்சிகளை மேற்கொண்டிருந்த இவ்விரு பேராயர்களும் நாட்டின் ஒற்றுமைக்காக அயராது உழைத்தவர்கள் என்று இப்பிரதிநிதி கூறினார்.
நாட்டின் அமைதிக்காகப் பாடுபட்ட இவ்விரு பேராயர்களும் அந்த இலக்கை அடைய மிக உயர்ந்த வகையில் தங்கள் உயிரையே பணயம் வைத்துள்ளனர் என்று அலெப்போ உயர் மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : CNA

7. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கள் நாட்டுக்கு வருவது மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது பிரேசில் சேரி மக்கள்

மே,02,2013. "உண்மைக்காகவும், அநீதிக்கு எதிராகவும் போராடும் மக்களுடன் கத்தோலிக்கத் திருஅவை தன்னையே இணைத்துக்கொள்ளும்" என்று முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் தங்களைச் சந்தித்தபோது கூறிய வார்த்தைகளை ரியோ டி ஜெனீரோ நகரின் சேரி ஒன்றில் வாழும் ஒரு கத்தோலிக்க கோவில் பணியாளர் கூறினார்.
1980ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பிரேசில் நாட்டுக்கு மெய்ப்புப் பணி பயணம் மேற்கொண்டபோது, ரியோ டி ஜெனீரோ நகரின் Vidigal என்ற சேரியைப் பார்வையிட்டபோது, அவர்களுக்குத் தான் அணிந்திருந்த மோதிரத்தைப் பரிசளித்தார் என்று அச்சேரியின் கோவிலில் பணியாற்றும் Carlos Rojas, CNS செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
ஜூலை மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரேசில் நாட்டுக்கு வருவது தங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது என்று திருவாளர் Rojas எடுத்துரைத்தார்.
கடற்கரையைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ள ஒரு மலைச்சரிவில் Vidigal சேரி அமைந்திருப்பதால், தற்போது பன்னாட்டு நிறுவனங்களின் கவனத்தை அது ஈர்த்துள்ளது என்றும், அங்குள்ள ஏழைகளை அப்புறப்படுத்தும் முயற்சிகளில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என்றும் திருவாளர் Rojas கூறினார்.
ஏழைகள் மீது அக்கறை கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சொற்கள் திருஅவையின் எண்ணங்களை ஏழைகள் மீது திருப்பியுள்ளது குறித்து திருவாளர் Rojas தன் மகிழ்வையும் வெளியிட்டார்.

ஆதாரம் : CNS

8. இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றும் - ஐ.நா. உயர் அதிகாரி

மே,02,2013. இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கு ஓர் அரசு செலவிடும் தொகை, பேரிடர்களின் விளைவுகளிலிருந்து காப்பாற்ற செலவிடும் தொகையை விட குறைவாகவே இருக்கும் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இயற்கைப் பேரிடர்களும் பொருளாதார நெருக்கடியும் என்ற தலைப்பில் இப்புதனன்று பாங்காக் நகரில் நடைபெற்ற ஓர் ஐ.நா. கருத்தரங்கில் ஆசியா பசிபிக் பகுதியின் ஐ.நா. பொருளாதார ஆலோசகர் Noeleen Heyzer இவ்வாறு கூறினார்.
கட்டப்படும் கட்டிடங்களில் குறைபாடுகள் எழாமல் காப்பது, வலுவிழந்த கட்டிடங்களை மறு பரிசிலீனை செய்து அவற்றை உறுதி செய்ய அல்லது இடித்து விட முயற்சிகள் எடுப்பது போன்ற அரசின் நடவடிக்கைகள் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றும் என்று திருவாளர் Heyzer எடுத்துரைத்தார்.
2004ம் ஆண்டு ஆசிய நாடுகளைத் தாக்கிய சுனாமி, 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம், 2010ம் ஆண்டு அதே நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவை இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...