1. திருத்தந்தை : பணி உட்பட வாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் இறை அன்பிற்குச் சாட்சி பகருங்கள்
2. திருத்தந்தை : கிறிஸ்தவர்கள் திருமுழுக்கின் அழகை மீண்டும் கண்டுணர அழைப்பு
3. ஜோர்டன் திருஅவைக கட்டிடங்களில் சிரியாவின் அகதிகள் தஞ்சம்
4. கராச்சியில் நடைபெறும் தலிபான் வன்முறைகள் குறித்து தலத்திருஅவை கவலை
5. லாவோஸ் நாட்டில் கிறிஸ்தவக் குடும்பங்கள் திடீர் திடீரென காணாமல்போகின்றன
6. ஒரேபாலின திருமணத்தை எதிர்த்து பிரான்ஸில் பெரும் ஊர்வலம்
7. 313 முன்னாள் விடுதலைப் புலிகள் விடுதலை
8. இந்தியாவில் 33,000 சிறார்கள் மீது 2011ம் ஆண்டில் வழக்கு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : பணி உட்பட வாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் இறை அன்பிற்குச் சாட்சி பகருங்கள்
சன.14,2013. திருத்தந்தையையும், அப்போஸ்தலர்களுள்
தலைமையானவரான தூய பேதுருவின் கல்லறையையும் தரிசிக்க வரும் பல்வேறு
நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் நன்முறையில்
வரவேற்று ஆற்றிவரும் பணிகளுக்கென தன் பாராட்டைத் தெரிவிப்பதாக வத்திக்கான்
நகர் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையிடம் கூறினார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட்.
புத்தாண்டு
வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வண்ணம் வத்திக்கான் காவல்துறை
அதிகாரிகளை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய
திருத்தந்தை, தான் உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற வகையில் பங்குதளங்களைச் சந்திக்கச் செல்லும்போதும், இத்தாலியில் திருப்பயணம் மேற்கொள்ளும்போதும், காவல்துறை
அதிகாரிகள் ஆற்றும் சிறப்புச் சேவையைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
உறுதியான கிறிஸ்தவ விசுவாசத்தால் தூண்டப்பட்டு இவர்கள் ஆற்றும்
பணியிலிருந்து பிறக்கும் உயரிய மதிப்பீடுகள் மற்றவர்களுக்கும்
வழங்கப்படட்டும் எனவும் எடுத்துரைத்தார் பாப்பிறை. தங்கள் பணி
உட்பட வாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் இறை அன்பிற்கு சாட்சிபகர
இந்த நம்பிக்கை ஆண்டில் அழைப்புப் பெற்றுள்ளதையும் காவல்துறை
அதிகாரிகளிடம் எடுத்தியம்பினார் பாப்பிறை.
2. திருத்தந்தை : கிறிஸ்தவர்கள் திருமுழுக்கின் அழகை மீண்டும் கண்டுணர அழைப்பு
சன.14,2013. கிறிஸ்தவர்கள் தங்களின் திருமுழுக்கை நினைக்கவும், மீண்டும் பிறப்பதன் அழகைக் கண்டுணரவும், இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவான இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கானின்
சிஸ்டீன் சிற்றாலயத்தில் இருபது குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கி
ஆற்றிய மறையுரையில் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, புதிதாகப் பிறந்துள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் தனது செபத்தையும் ஆசீரையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.
மேலும், நித்திய வாழ்வுக்கானப் பாதையைத் திறந்துவிட்ட ஆன்மீக மறுபிறப்பான திருமுழுக்கை நினைக்குமாறு ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுப்பதாக, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறிய திருத்தந்தை, ஒவ்வொரு கிறிஸ்தவரும், கடவுளின் அன்பிலிருந்து மீண்டும் பிறப்பதன் அழகை கண்டுணருமாறும், கடவுளின் குழந்தையாக வாழுமாறும் கேட்டுக் கொண்டார்.
கிறிஸ்தவர் என்பது, திருவருளால் கடவுளிடமிருந்து மீண்டும் பிறப்பதை ஈடுபடுத்தும் ஒரு வாழ்வுமுறையைக் கொண்டிருப்பது என்று பொருள் எனவும் அவர் கூறினார்.
திருமுழுக்கு யோவானிடம் இயேசு திருமுழுக்குப் பெற்றது குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இயேசு ஒருபோதும் பாவம் செய்யவில்லையெனினும், தபம் மற்றும் மனமாற்றத்தின் அடையாளமாக,
மெசியாவின் வருகைக்காகத் தங்களையே தயார் செய்ய விரும்பிய பலரோடு அவரும்
பொதுவில் திருமுழுக்குப் பெற விரும்பினார் என்றும் கூறினார் திருத்தந்தை .
மேலும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர், இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட 99வது அனைத்துலக குடியேற்றதாரர் தினம் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, குடியேற்றதாரர்கள்
இவ்வுலகில் விசுவாசம் மற்றும் நம்பிக்கையைத் தாங்கிச் செல்கிறவர்கள் என்று
கூறினார். உரோமையிலுள்ள குடியேற்றதாரருக்குத் தனது வாழ்த்துக்களையும்
தெரிவித்தார்.
1914ம் ஆண்டு திருத்தந்தை 10ம் பத்திநாதர் இந்தக் அனைத்துலக குடியேற்றதாரர் தினத்தைத் தொடங்கி வைத்தார்.
3. ஜோர்டன் திருஅவைக கட்டிடங்களில் சிரியாவின் அகதிகள் தஞ்சம்
சன.14,2013. ஜோர்டனில் Zaatari என்ற பகுதியில் அமைந்திருந்த அகதிகள் முகாம்கள் பனிப்புயலாலும் பெருமழையாலும் சேதமடைந்துள்ளதைத் தொடர்ந்து, சிரியாவின்
அகதிகள் தங்குவதற்கெனத் தலத்திருஅவை தன் பள்ளிகளையும் ஏனையக்
கட்டிடங்களையும் திறந்துவிட்டுள்ளதாக அறிவித்தார் ஜோர்டனுக்கான எருசலேம்
இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவரின் பிரதிநிதி பேராயர் Maroun Laham.
கிறிஸ்தவர்கள்
இஸ்லாமியர்கள் என அனைவருக்கும் அடைக்கலம் தர தலத்திருஅவையின் கட்டிடங்கள்
எப்போதும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார் அவர்.
ஜோர்டனில் உள்ள Zaatari அகதிகள் முகாம் சூறாவளிகளால் முற்றிலுமாக சேதமானததைத் தொடர்ந்து, பொருளாதார உதவிகளையும் வழங்கி வரும் தலத்திருஅவை, கலவரங்களைத் தடுக்கும் நோக்கில் அமைதிப்பணிகளையும் ஆற்றி வருகிறது.
சிரியாவில்
நடைபெற்றுவரும் உள்நாட்டுச் சண்டைகளால் மத்தியக்கிழக்கு நாடுகளில்
அடைக்கலம் தேடியுள்ள ஆறு இலட்சம் அகதிகளுள் இரண்டு இலட்சத்து எண்பதாயிரம்
பேர் ஜோர்டனில் வாழ்ந்து வருகின்றனர்.
4. கராச்சியில் நடைபெறும் தலிபான் வன்முறைகள் குறித்து தலத்திருஅவை கவலை
சன.14,2013. வன்முறைகள் குறித்த அச்சத்தின் பிடியிலிருக்கும் கராச்சியில், தலிபான்
தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை உடனடியாக கட்டுப்படுத்தவேண்டிய காலம்
வந்துள்ளது என அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் அப்பகுதி கத்தோலிக்கத்
தலைவர்கள்.
ஒவ்வொரு
நாளும் கராச்சி நகரில் 10 முதல் 12 பேர் கொல்லப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட
பல குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி வருவதாகவும்
தெரிவித்தார் அந்நகர் பேராயர் ஜோசப் கூட்ஸ்.
கராச்ச்சி
நகரில் வன்முறைகளால் தங்கள் உறவினர்களை இழந்த ஐந்து கத்தோலிக்கக்
குடும்பங்களுக்கு தலத்திருஅவையின் நீதி மற்றும் அமைதி அவை 50,000 ரூபாயை வழங்கியுள்ளதாகவும் அறிவித்தார் பேராயர்.
அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 1,725 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
5. லாவோஸ் நாட்டில் கிறிஸ்தவக் குடும்பங்கள் திடீர் திடீரென காணாமல்போகின்றன
சன.14,2013. லாவோஸ்
நாட்டில் கிறிஸ்தவக் குடும்பங்கள் திடீர் திடீரென காணாமல்போதல் அதிகரித்து
வருவதாக அந்நாட்டிலுள்ள பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் தங்கள்
ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.
லாவோசின் Luang Namtha மற்றும் Udomsay மாநிலங்களில் கிறிஸ்தவக் குடும்பங்கள் காணாமற்போதல் அதிகரித்துள்ளதாகக் கூறும் கிறிஸ்தவத் தலைவர்கள், அரசின் விசாரணைகளுக்கும் விளக்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த பிரச்சினையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக லாவோஸ் அரசுத்தலைவர் Choummaly Sayasoneக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது 'உலகளாவிய கிறிஸ்தவ ஒருமைப்பாடு' என்ற அமைப்பு.
மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, லாவோஸ் நாட்டில் அண்மைக் காலங்களில் மத சுதந்திரம் குறித்தவைகளில் முன்னேற்றமும், மனச்சன்ன்று கைதிகளின் எண்ணிக்கை குறைவும் இடம்பெற்றுள்ள போதிலும், கிறிஸ்தவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாவோஸ் நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிரிவினை சபை கிறிஸ்தவர்களும், ஏறத்தாழ 45,000 கத்தோலிக்கர்களும் வாழ்கின்றனர்.
6. ஒரேபாலின திருமணத்தை எதிர்த்து பிரான்ஸில் பெரும் ஊர்வலம்
சன.14,2013. ஒருபாலின திருமணத்தை எதிர்த்து பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.
ஒரு பாலின உறவையும், ஒரே பாலினத் தம்பதியர் குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்வதையும் ஜூன் மாதத்தையொட்டி, பிரான்ஸில் சட்டபூர்வமாக்க, அந்நாட்டு அரசுத்தலைவர் பிரான்ஸுவா ஒலந்த் திட்டமிட்டு வருவதை எதிர்த்து, தலைநகர் பாரிஸுக்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், ஈஃபில் கோபுரத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.
தலத்திருஅவையும், வலதுசாரி
அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கியிருந்த இந்த எதிர்ப்பு ஊர்வலத்தில்
கலந்துகொண்டோர் குடும்ப மதிப்பீடுகள் காக்கப்படுமாறு அழைப்புவிடுத்துச்
சென்றனர்.
7. 313 முன்னாள் விடுதலைப் புலிகள் விடுதலை
சன.14,2013. இலங்கையில், இறுதி போரின் பின்னரும், நலன்புரி
நிலையத்தில் இருந்த போதும் இராணுவத்தினரிடம் சரணடைந்து ஒரு வருட
புனர்வாழ்வுப் பயற்சியளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள்
313 பேர் ஞாயிற்றுக்கிழமையன்று வவுனியாவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் 12,000 பேர் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் இதுவரையில் சமூகத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும், இன்னும்
புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று வருபவர்களில் 430 பேர் விடுதலை
செய்யப்படவுள்ளதாகவும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில்
கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுப் பயற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ள 4 யாழ்
பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வேறாக புனர்வாழ்வுப் பயற்சியளிக்கப்பட்டு
வருவதாகப் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்ததிருக்கின்றார்.
பொங்கலுக்கு முன்னர் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் இன்னும் விடுதலை செய்யய்படாத நிலையில், அவர்கள் தொடர்ந்து புனர்வாழ்வுப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்த புனர் வாழ்வு ஆணையாளர் நாயகம், அவர்கள் தங்களைத் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்வதற்குத் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுத்திருப்பதாகவும், அவர்களின் சுயவிருப்பத்தின் பேரில் அவர்களுக்குச் சிங்கள மொழி கற்பிக்கப்படுவதாகவும், வேறு புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் கூறினார்.
8. இந்தியாவில் 33,000 சிறார்கள் மீது 2011ம் ஆண்டில் வழக்கு
சன.14,2013. இந்தியாவில் சிறார்கள், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது, சமீபகாலமாக அதிகரித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் கூறுகிறது.
2011ம் ஆண்டில் மட்டும், நாடு முழுவதும், 16லிருந்து, 18 வயதுக்குட்பட்ட 33,000 சிறார்கள் மீது, குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், இவற்றில் பெரும்பாலானவை, கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, 1419 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான், சிறார்கள் மீது, அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment