Monday, 14 January 2013

Catholic news in Tamil - 12/01/13

1. Monaco இளவரசர், திருத்தந்தை சந்திப்பு

2. வத்திக்கான் காவல்துறையினரிடம் திருத்தந்தை : ஒவ்வொரு திருப்பயணியிலும் இறைவனின் முகத்தைக் காண வேண்டும்

3. திருப்பீடச் செயலர் : திருமுழுக்கு யோவானைப் பின்பற்றிச் செயல்பட வத்திக்கான் நீதிமன்ற நிர்வாகத்தினருக்கு அழைப்பு

4. டிவிட்டர் இணையதளத்தில் திருத்தந்தையின் இருப்பு, நற்செய்தி அறிவிப்புக்குப் புதிய பாதையைத் திறந்துள்ளது

5. குடியேற்றதாரர்களுக்கு நாடுகளின் எல்லைகளை மூடுவது, தீர்வு அல்ல, கர்தினால் மரிய வேலியோ

6. அருள்தந்தை Gazzola : குடியேற்றதாரர் விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு

7. ஈராக்கில் மதம் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது, கிர்குக் பேராயர் சாக்கோ

8. இலங்கையில் நீதி அமைப்பின் கறுப்பு வெள்ளிக்கிழமை கடைப்பிடிப்பு

9. சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள்

------------------------------------------------------------------------------------------------------

1. Monaco இளவரசர், திருத்தந்தை சந்திப்பு

சன.12,2013. Monaco நாட்டின் இளவரசர் 2ம் Alberto, அவரது மனைவி இளவரசி Charlène ஆகிய இருவரையும் இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் இளவரசர் 2ம் Alberto.
இச்சந்திப்பில், Monaco நாட்டின் சமூகநலத்துக்கு கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் குறித்துப் பாராட்டினார் இளவரசர் 2ம் Alberto. மேலும், தற்போதைய சில அனைத்துலக விவகாரங்கள் குறித்த கருத்துப் பரிமாற்றங்களும் இச்சந்திப்பில் இடம்பெற்றதாகத் திருப்பீட பத்தரிகை அலுவலகம் கூறியது.
மேற்கு ஐரோப்பாவில், மூன்று பக்கங்கள் பிரான்ஸ் நாட்டையும், ஒரு பக்கம் மத்தியதரைக் கடலையும் எல்லைகளாகக் கொண்டிருக்கும் Monaco நாடு, உலகில் இரண்டாவது சிறிய நாடாகும். இது இத்தாலிக்கு ஏறக்குறைய 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
மேலும், இயேசுவின் திருமுழுக்கு விழாவான இஞ்ஞாயிறன்று வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் இருபது குழந்தைகளுக்குத் திருமுழுக்குத் திருவருட்சாதனத்தை வழங்குவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. வத்திக்கான் காவல்துறையினரிடம் திருத்தந்தை : ஒவ்வொரு திருப்பயணியிலும் இறைவனின் முகத்தைக் காண வேண்டும்

சன.12,2013. வத்திக்கானைப் பார்வையிட வரும் ஒவ்வொரு திருப்பயணியும் மாபெரும் மனிதக் குடும்பத்தின் ஓர் அங்கம் என்பதை அறிந்து, அப்பயணிகளில் கடவுளின் திருமுகத்தைக் கண்டு, அவர்களைக் கனிவோடு ஏற்று உதவி செய்யுமாறு வத்திக்கான் காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கானில் பணியாற்றும் காவல்துறையினரை இவ்வெள்ளி மாலை சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தியாகத்துடன் அவர்கள் செய்து வரும் திறமையான நற்பணிகளுக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
தினமும் தூய பேதுருவின் கல்லறையைத் தரிசிக்க வரும் எண்ணற்ற திருப்பயணிகளைக் காணும்போது, வத்திக்கான் காவல்துறையினரின் ஆன்மீக வாழ்வும், கிறிஸ்தவ விசுவாசமும் ஆழப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
அமைதி, சகோதரத்துவம், அன்பு ஆகியவற்றுக்கான மனிதரின் ஆழமான தேடல், மீட்பளிக்கும் மற்றும் விடுதலையளிக்கும் கடவுளைச் சந்திப்பதில் கிடைக்கும் என்பதை நம்பி அதை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி இருக்கின்றது என்பதை உணருவதற்கு இந்த விசுவாச ஆண்டு மிகப்பெரிய அளவில் உதவும் என்றும் திருத்தந்தை கூறினார்.


3. திருப்பீடச் செயலர் : திருமுழுக்கு யோவானைப் பின்பற்றிச் செயல்பட வத்திக்கான் நீதிமன்ற நிர்வாகத்தினருக்கு அழைப்பு

சன.12,2013. வத்திக்கானுக்கு உள்ளே இடம்பெறும் நீதிமன்ற நிர்வாகத்தை தாழ்ச்சியோடும், உண்மையிலும் ஒவ்வொருவரும் செய்வதற்கு இறைவனிடம் செபிப்போம் என்று வத்திக்கான் நாட்டின் நீதிமன்ற உறுப்பினர்களிடம் கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே.
வத்திக்கான் நாட்டில் நீதிமன்ற ஆண்டைத் தொடங்கி வைக்கும் திருப்பலியை இச்சனிக்கிழமை காலை நிகழ்த்தி மறையுரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே, கடவுளோடு நெருங்கிய உறவு கொண்டு அவரது அருளை ஏற்று வாழாமல் இருந்தால், நல்லிணக்கம், நீதி, அமைதி ஆகிய பண்புகளை முழுமையாய் அடைய முடியாது என்றும் கூறினார்.
கடும் தப வாழ்க்கை வாழ்ந்து ஓய்வின்றி கடவுளைத் தேடுவதில் தம் வாழ்வைச் செலவழித்த திருமுழுக்கு யோவான் பற்றி மறையுரையில் விளக்கிய கர்தினால் பெர்த்தோனே, விசுவாசிகள் ஒவ்வொருவரும் திருமுழுக்கு யோவானின் எடுத்துக்காட்டான மற்றும் சான்று பகரும் வாழ்வைப் பின்பற்றி இயேசுவின் அன்பிலும் பிறரன்பிலும் வளருமாறு கேட்டுக் கொண்டார். 


4. டிவிட்டர் இணையதளத்தில் திருத்தந்தையின் இருப்பு, நற்செய்தி அறிவிப்புக்குப் புதிய பாதையைத் திறந்துள்ளது

சன.12,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிகழ்த்திய திருப்பலி குறித்த விபரங்களை ஆண்டின் இந்த முதல் மாதத்தில் 25 இலட்சம் பேர் எட்டு மொழிகளில் டிவிட்டர் இணையதளம் வழியாகப் பார்வையிட்டிருக்கும்வேளை, டிவிட்டர் இணையதளத்தில் திருத்தந்தையின் இருப்பு, நற்செய்தி அறிவிப்பின் ஒரு புதிய எல்லையாக இருக்கின்றது என, திருப்பீட அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.
டிவிட்டர் இணையதளத்தில் திருத்தந்தையின் இருப்பு குறித்து கருத்து தெரிவித்த திருப்பீடச் சமூகத்தொடர்பு அவையின் அருள்பணி Paolo Padrini,  திருத்தந்தையை அதிகம்பேர் பின்பற்றுகிறார்கள், அதிலும் சிறப்பாக,  டிவிட்டர் இணையதளத்தில் அவர் இருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக இருக்கின்றது என்று கூறினார்.
140 எழுத்துக்களையே அனுப்பும் வசதி கொண்ட சமூக ஊடகச் சேவையான டிவிட்டரில் முதன்முறையாக, கடந்த டிசம்பர் 12ம் தேதி குவாதாலூப்பே அன்னை மரியா திருவிழாவன்று திருத்தந்தை செய்தி அனுப்பினார். இந்தத் தொடக்கச் செய்தியை ஆங்கில மொழியில் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், இஸ்பானியத்தில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


5. குடியேற்றதாரர்களுக்கு நாடுகளின் எல்லைகளை மூடுவது, தீர்வு அல்ல, கர்தினால் மரிய வேலியோ

சன.12,2013. குடியேற்றதாரர்களுக்கு நாடுகளின் எல்லைகளை மூடுவது, சட்டத்துக்குப் புறம்பே குடியேறுகின்றவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையாது என்று, திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வோர் அவைத் தலைவர் கர்தினால் அந்தோணியோ மரிய வேலியோ  கூறினார்.
இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் 99வது கத்தோலிக்க அனைத்துலக குடியேற்றதாரர் தினத்தை முன்னிட்டு, லொசர்வாத்தோரே ரொமானோ என்ற திருப்பீடச்சார்பு தினத்தாளுக்குப் பேட்டியளித்துள்ள கர்தினால் மரிய வேலியோ  இவ்வாறு கூறினார்.
கடும் சண்டை இடம்பெற்றுவரும் சிரியாவை விட்டுச் சென்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில் 5 இலட்சத்து 25 ஆயிரமாக இருந்தது, சிரியாவில் ஏற்கனவே நாற்பது இலட்சம் பேருக்கு உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் கூறினார் கர்தினால் மரிய வேலியோ.
குடியேற்றதாரர்களுக்கு நாடுகளின் எல்லைகளை மூடுவது, குடியேற்றதாரருக்கு எதிரானத் தீர்வைக் கொண்டுவரும், அத்துடன், மக்களைச் சட்டத்துக்குப் புறம்பே குடியேறுவதற்குத் தூண்டும் எனவும் கர்தினால் மரிய வேலியோ கூறினார்.


6. அருள்தந்தை Gazzola : குடியேற்றதாரர் விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு

சன.12,2013. 99வது கத்தோலிக்க அனைத்துலக குடியேற்றதாரர் தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்ட ஸ்கலபிரினி துறவு சபையின்  அதிபர் அருள்தந்தை Alessandro Gazzola, தனது இயல்பிலே மனித சமுதாயத்தின் தாயாக இருக்கும் திருஅவை, நம்பிக்கையிழந்த பலரின் வாழ்வுப் பாதையை மாற்றுவதற்கு ஒவ்வொரு நாளும் முயற்சித்து வருகிறது எனக் கூறினார்.
ஸ்கலபிரினி துறவு சபையினர், குடியேற்றதாரர்களின் மறைப்பணியாளர்கள் எனவும், கடந்த 125 ஆண்டுகளாக இச்சபை இம்மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து சேவை செய்து வருகின்றது எனவும் அருள்தந்தை Gazzola தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கணிப்புப்படி, இன்று உலகில் 21 கோடியே 40 இலட்சம் குடியேற்றதாரரும், ஏறக்குறைய 3 கோடியே 50 இலட்சம் அகத்கிளும் உள்ளனர், அதோடு, புகலிடம் தேடுவோரும், நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்தவர்களும் எண்ணிக்கையற்று இருக்கின்றனர் எனவும்  அருள்தந்தை Gazzolaன் செய்தி கூறுகிறது. 
குடியேற்றம் தொடர்புடைய பல விவகாரங்கள் இருக்கின்றன, திருஅவையும் திருஅவை நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு குடியேற்றதாரர் பிரச்சனைகளைக் களைவதற்கு முயற்சிக்குமாறு அவரின் செய்தி அழைப்பு விடுக்கிறது.


7. ஈராக்கில் மதம் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது, கிர்குக் பேராயர் சாக்கோ

சன.12,2013. ஈராக்கில் மதம் முக்கிய அங்கம் வகித்தாலும், அது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் இது வகுப்புவாதப் பிளவின் ஆபத்தை முன்வைக்கின்றது என, அந்நாட்டின் கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ கூறினார்.
ஈராக்கில் சாதம் ஹூசேன் ஆட்சி வீழ்ந்த பின்னர் அந்நாட்டில் வகுப்புவாதப் போக்கு உருவாகியுள்ளது, இது தேசிய ஒன்றிப்பை ஊக்குவிப்பதைவிட வகுப்புவாத தனித்துவத்தை உந்தித்தள்ளுகிறது என்றும் கவலை தெரிவித்தார் பேராயர் சாக்கோ.
ஈராக் ஆக்ரமிக்கப்பட்டு ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆகியுள்ளன, அந்நாட்டின் பழைய உறுதியான மனிதர் வீழ்த்தப்பட்டார், சனநாயகமும், சம உரிமைகளும் சுதந்திரமும் மக்களின் கனவுகள், ஆனால் மக்கள் ஊக்கமிழந்து இருக்கின்றார்கள் என்றும் கிர்குக் பேராயர் கூறினார்.


8. இலங்கையில் நீதி அமைப்பின் கறுப்பு வெள்ளிக்கிழமை கடைப்பிடிப்பு

சன.12,2013. இலங்கையில் நீதிஅமைப்பு இறந்துவிட்டது என்பதற்காக அழும் கறுப்பு வெள்ளிக்கிழமையாக”, சமயத் தலைவர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அந்நாட்டின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க அவர்கள் மீதான அரசியல்சார்ந்த குற்றச்சாட்டுக்களுக்குப் பின்னர், அவருக்கு எதிரான கண்டனப் பதவி நீக்கத் தீர்மானம் இவ்வியாழனன்று நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
ஷிராணிக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகள் அனைத்தும் நீதிமன்ற விவகாரங்களில் அரசு தலையிடுவதற்கு வழி அமைத்துள்ளன என்று கத்தோலிக்க மற்றும் புத்தமதத் தலைவர்கள் உட்பட பல சமூக ஆர்வலர்கள் குறை கூறியுள்ளனர்.
அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரும்பான்மை வகிக்கும் நாடாளுமன்றத்தில் அரசு முன்னெடுத்த இந்தக் கண்டனப் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேறியிருப்பதில் வியப்பேதும் இல்லை என ஊடகங்கள் கூறுகின்றன. .


9. சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள்

சன12,2013. இந்திய ஆன்மீகத் துறவி சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் சனவரி 12, இச்சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி கொல்கத்தாவில் பிறந்த சுவாமி விவேகானந்தர், இந்து மதத்தத்துவங்களை, அதிலும் குறிப்பாக வேதாந்த சிந்தனைகளை மேற்குலகுக்கு கொண்டு சென்றவர்களுள் முதன்மையானவர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிகாகோவில் 1893ம் ஆண்டு நடைபெற்ற உலக சமயப் பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை இன்றளவும் பெருமையாகப் பேசப்படுகிறது.
இராமக்கிருஷ்ண பரமஹம்ஷரின் சீடரான விவேகானந்தர், தனது குருவின் பெயரில் கல்வி, மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக இராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார். கிறிஸ்தவ மதப்பாணியில் அது இறைத் தொண்டுடன், மக்கள் தொண்டையும் ஆற்றி வருகிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள் விவேகானந்தரின் பேச்சாலும் எழுத்தாலும் கவரப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
 

No comments:

Post a Comment