Saturday, 12 January 2013

Catholic News in Tamil - 11/01/13

1. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு கர்தினால் கிரேசியஸ் முயற்சி

2. கர்தினால் டோலன் : மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்கு உறுதியான அமெரிக்க ஐக்கிய நாட்டு தலைமைத்துவம் தேவை

3. மியான்மாரில் ஜூபிலி ஆண்டில் சுதந்திரமும் ஒப்புரவும் ஏற்படும், யாங்கூன் பேராயர் நம்பிக்கை

4. மலேசியக் கிறிஸ்தவ சபைகள் : “அல்லா என்ற பெயரைப் பயன்படுத்த அரசியலமைப்பிலுள்ள உரிமையைச் செயல்படுத்துவோம்

5. பங்களாதேஷில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தேசியமயமாக்கப்படவுள்ளன

6. ஆசியாவில் வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள், ILO அறிக்கை

7. சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் செல்லும் மக்கள் குறித்த விதிமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்

8. சுற்றுச்சூழலில் கொட்டப்படும் பாதரசம் மனித வாழ்வுக்கு அச்சுறுத்தல்

9. உலகளவில் உணவுப் பொருட்கள் பெருமளவு வீணாக்கப்படுகின்றது

------------------------------------------------------------------------------------------------------

1. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு கர்தினால் கிரேசியஸ் முயற்சி

சன.11,2013. சமுதாயத்தில் நீதி, விழிப்புணர்வு, பாலியல் சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் நோக்கத்தில், இம்மாதம் 27ம் தேதியன்று மும்பை உயர்மறைமாவட்டம் ஒருமைப்பாட்டு தினத்தைக் கடைப்பிடிக்கும் என மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் கூறினார்.
23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் புதுடெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்த பின்னர் நாடெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விவாதங்கள் இடம்பெற்றுவரும்வேளை, இந்த ஒருமைப்பாட்டுத் தினத்தை அறிவித்துள்ளார் கர்தினால் கிரேசியஸ்.
கடவுளை மனித வாழ்விலிருந்து ஒதுக்கி வைப்பதே, கொடூரமான வன்செயல்களுக்கு, குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு மனிதரை இட்டுச் செல்கின்றது என்றும் கர்தினால் கிரேசியஸ் குறை கூறினார்.
இந்தியத் திருஅவை பல்வேறு வழிகள் மூலமாக, குறிப்பாக, தனது கல்வி நிறுவனங்கள் வழியாகப் பாலியல் சமத்துவத்தை வலியுறுத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், இம்மாதம் 27ம் தேதி ஞாயிறன்று மும்பை உயர்மறைமாவட்டம் முழுவதும் கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் என, 24 மணி நேரங்களுக்கு இடம்பெறும். மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஒவ்வொரு பங்கிலும், துறவியர் இல்லங்களிலும், குருத்துவக் கல்லூரிகளிலும் செபவழிபாடும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள 20,370 கல்வி நிறுவனங்களில் 58.5 விழுக்காடு கிராமங்களில் இருப்பதாகவும், இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 54.4 விழுக்காடு சிறுமிகள் எனவும் அண்மைப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. 

2. கர்தினால் டோலன் : மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்கு உறுதியான அமெரிக்க ஐக்கிய நாட்டு தலைமைத்துவம் தேவை

சன.11,2013. மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்கு உறுதியான அமெரிக்க ஐக்கிய நாட்டு தலைமைத்துவம் தேவைப்படுகின்றது என்று நியுயார்க் கர்தினால் திமோத்தி டோலன் கூறினார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே நீதியையும் நிலையான அமைதியையும் கட்டியெழுப்புவதில் அவ்விரு தரப்பினருக்கும் இருக்கின்ற கடமையை ஆணித்தரமாக வலியுறுத்துவதற்கு, உறுதியான அமெரிக்க ஐக்கிய நாட்டு தலைமைத்துவம் தேவை என்று கர்தினால் டோலன் மேலும் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் டோலன் மற்றும் அந்த ஆயர் பேரவையின் அனைத்துலக நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுத் தலைவர் ஆயர் Richard Pates ஆகிய இருவரும் இணைந்து அரசுத்தலைவர் பாரக் ஒபாமாவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளனர்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரண்டு நாடுகளின் தீர்வுக்கு அரசுத்தலைவர் ஒபாமா உறுதியான ஆதரவு அளிப்பார் எனவும், மத்திய கிழக்குப் பகுதியின் அமைதிக்கான அமெரிக்கத் தலைமைத்துவத்துக்கு ஆயர்களாகிய தாங்கள் ஆதரவளிப்போம் எனவும் அக்கடிதத்தில் ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

3. மியான்மாரில் ஜூபிலி ஆண்டில் சுதந்திரமும் ஒப்புரவும் ஏற்படும், யாங்கூன் பேராயர் நம்பிக்கை

சன.11,2013. மியான்மாரில் ஐம்பது வருட காலமாய் மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டிருந்த இருளான காலத்துக்குப் பின்னர், தற்போது பிரகாசமான ஒளி வீசத் தொடங்கியிருக்கின்றது என்று அந்நாட்டு ஆயர் பேரவையின் பொதுச் செயலர் யாங்கூன் பேராயர் Charles Maung Bo கூறினார்.
Fides செய்தி நிறுவனத்துக்கு 2013ம் புத்தாண்டுச் செய்தி அனுப்பியுள்ள பேராயர் Bo, மியான்மாரில் 1962ம் ஆண்டில் சர்வாதிகார ஆட்சி தொடங்கியபோது மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை நினைவுகூர்ந்துள்ளார்.
அச்சமயத்தில் மியான்மாரை இருள் வளைத்திருந்தது, நாட்டின் வரலாறு உறைந்து போனது, சிறார் அமைதியின் அடிமைத்தனத்தில் முடக்கப்பட்டனர், பலர் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர், இலட்சக்கணக்கானோர் புலம் பெயர்ந்து அகதிகளாகினர், அப்பாவிச் சிறுமிகள் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டனர், பலருக்குக் கண்ணீரிலே இரவு கழிந்தது என, மக்கள் அனுபவித்த நெருக்கடிகளை விவரித்துள்ளார் பேராயர் Bo.
தற்போது மியான்மார் மக்கள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்குவதாகவும், உண்மையின் ஒளி அம்மக்கள்மீது வீசத் தொடங்கியிருப்பதாகவும், சுதந்திர ஒளியில் அவர்கள் மெதுவாக விழிப்படைந்து வருவதாகவும் யாங்கூன் பேராயரின் செய்தி கூறுகிறது.   

4. மலேசியக் கிறிஸ்தவ சபைகள் : “அல்லா என்ற பெயரைப் பயன்படுத்த அரசியலமைப்பிலுள்ள உரிமையைச் செயல்படுத்துவோம்

சன.11,2013. மலேசியாவின் செலாங்கர் (Selangor) மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லா என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ள தடையை கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கமாட்டார்கள் என்று CFM என்ற மலேசிய கிறிஸ்தவக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
செலாங்கர் மாநிலத்தின் இவ்வறிவிப்பு குறித்து Fides செய்தி நிறுவனத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ள CFM கிறிஸ்தவக் கூட்டமைப்பு,  மலாய் மொழி விவிலியங்களில் நானூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அல்லா என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, தங்களின் கடவுளை அல்லா என்ற பெயரில் அழைப்பதற்கு மலேசிய அரசியலமைப்பில் உரிமை உள்ளதையும்  குறிப்பிட்டுள்ளது.
1631ம் ஆண்டிலும் அண்மையிலும் வெளியிடப்பட்ட மலாய்-இலத்தீன், இலத்தீன்-மலாய் அகராதிகள் போன்ற வரலாற்று ஏடுகளையும் மலேசியக் கிறிஸ்தவ சபைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதற்கிடையே, செலாங்கர் மாநில அரசின் இந்த உத்தரவை மீறுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

5. பங்களாதேஷில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தேசியமயமாக்கப்படவுள்ளன

சன.11,2013. பங்களாதேஷில் கத்தோலிக்கப் பள்ளிகள் தவிர மற்ற அனைத்து அரசு-சாரா ஆரம்பப் பள்ளிகளைத் தேசியமயமாக்கத் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அரசின் இத்திட்டம் அடுத்த சனவரியில் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று அறிவித்த பங்களாதேஷின் ஆரம்பக் கல்வி அமைச்சகம், ஆண்டுக்கு 1,200 கோடி டாக்கா பணத்துக்கும் மேற்பட்ட செலவில் முழுவதும் அரசின் உதவியுடன் இயங்கும் 26,193 அரசு-சாரா ஆரம்பப் பள்ளிகள் தேசியமயமாக்கப்படும் எனக் கூறியது. 
எனினும், கத்தோலிக்கர் நடத்தும் ஏறக்குறைய 302 ஆரம்பப் பள்ளிகள் இத்திட்டத்தின்கீழ் வராது என்றும், அவை முழு சுதந்திரத்தோடு செயல்படும் எனவும் அவ்வமைச்சகம் கூறியது.

6. ஆசியாவில் வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள், ILO அறிக்கை

சன.11,2013. உலக அளவில், ஆசியாவிலே வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்று, ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனம் இவ்வியாழனன்று வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.
ஆசிய-பசிபிக் பகுதியில் வீட்டுவேலை செய்யும் 2 கோடியே 15 இலட்சம் தொழிலாளர்களில் மூன்று விழுக்காட்டினருக்கு மட்டுமே, வாரத்தில் ஒருநாள் விடுமுறை கிடைக்கின்றது எனவும் ILO நிறுவன அறிக்கை கூறுகிறது.
அதேபோல், மகப்பேறுகால விடுமுறைச் சலுகைகளும் ஆசியாவில் மோசமான நிலையில் உள்ளன எனக்கூறும் அவ்வறிக்கை, 12 விழுக்காட்டினரே இத்தகைய சலுகைகளை அனுபவிக்கின்றனர் எனவும் கூறியது.
உலக அளவில் வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள்.
ஆசியாவில்  வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களில் 42 இலட்சம் பேர் இந்தியர்கள், 24 இலட்சம் பேர் இந்தோனேசியர்கள் மற்றும் 19 இலட்சம் பேர் பிலிப்பீன்ஸ் நாட்டவர்.

7. சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் செல்லும் மக்கள் குறித்த விதிமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்

சன.11.2013. சவுதி அரேபியாவுக்குத் தனது குடிமக்களை வேலைக்கு அனுப்பும் அரசுகள், தங்கள் நாட்டின் குடியேற்றதாரர் விதிமுறைகளை ஒழுங்குபடுத்தாவிட்டால் மற்றுமோர் Rizana Nafeek இறக்க வேண்டியிருக்கும் என சவுதி அரேபிய நபர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் நான்கு மாதக் குழந்தை ஒன்றைக் கொலை செய்த குற்றத்திற்காக, Rizana Nafeek என்ற இலங்கைப் பெண்ணின் கழுத்தை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு ஆசியச் செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் அந்த சவுதி அரேபிய நபர்.
மேலும், சவுதி அரசின் இந்நடவடிக்கை குறித்து இலங்கை உட்பட பல நாடுகளும், அனைத்துலக மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Rizana Nafeek, 2005ம் ஆண்டில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டபோது அவருக்கு 17 வயதே ஆகியிருந்தது என்றும், 2007ம் ஆண்டில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது அவர் தனக்கென வழக்கறிஞரை வைத்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
Rizana Nafeek, தான் இக்கொலையைச் செய்யவில்லை என்றே கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

8. சுற்றுச்சூழலில் கொட்டப்படும் பாதரசம் மனித வாழ்வுக்கு அச்சுறுத்தல்

சன.11,2013. தங்கச் சுரங்களில் தங்கத்தைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் பாதரசத்தால் ஆப்ரிக்க, ஆசியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலுள்ள மக்கள், நலவாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை அதிகம் எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா.சுற்றுச்சூழல் நிறுவனம் எச்சரித்துள்ளது.
தங்கச் சுரங்களில் பயன்படுத்தப்படும் நச்சுகலந்த பாதரசம் சுற்றுப்புறச்சூழலில் கொட்டப்படும் அளவு 2005ம் ஆண்டிலிருந்து இரண்டு மடங்காக அதிகரித்திருக்கின்றது என்று UNEP என்ற ஐ.நா.சுற்றுச்சூழல் நிறுவனத்தின் புதிய அறிக்கை கூறுகிறது.
மேலும், தற்போது 260 டன்கள் பாதரசம் ஆறுகளிலும் ஏரிகளிலும் கொட்டப்பட்டுள்ளது எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.

9. உலகளவில் உணவுப் பொருட்கள் பெருமளவு வீணாக்கப்படுகின்றது

சன.11,2013. உலக அளவில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில், பாதியளவுக்கு வீணாக்கப்படுகின்றது என்று பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்டுள்ள ஒரு பொறியியல் அமைப்பு கூறியுள்ளது.
ஏழை நாடுகளில் உணவுப் பொருட்களின் உற்பத்திகள் திறம்பட இல்லாததும், செல்வந்த நாடுகளில் இருக்கும் நுகர்வோர்கள்,  பொருட்கள் மிக நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுமே இதற்கு முக்கிய காரணங்கள் என்று பிரிட்டனிலுள்ள இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் மெக்கானிக்கல் இஞ்ஜினியர்ஸ் எனும் அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகளவில் படிப்படியாக விவசாய நிலங்களும் நீர்வளங்களும் குறைந்து வரும் நிலையில் உணவு தானிய விரயம் என்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
செல்வந்த நாடுகளில் கடைகளில் காய்கனிகள் வாங்கும் போது அவை பார்ப்பதற்குச் சீராகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்கிற மனநிலையும், அதிகமாகப் புலால் உண்ணும் பழக்கமும்கூட இதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
 

No comments:

Post a Comment