Saturday, 12 January 2013

cATHOLIC nEWS IN tAMIL - 10/01/13

1. கொத்தமங்கலம் சீரோ மலபார் ரீதி பேராயராக பேரருள்திரு George Madathikandathil நியமனம்

2. உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் எகிப்து நாட்டு இளையோர் கலந்து கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் - கர்தினால் Leonardo Sandri

3. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு ஆயர் பிரதிநிதிகள் அளித்துள்ள புனித பூமி அறிக்கை

4. அரசுத் தலைவர் Hugo Chavez அவர்களின் உடல் நிலை பற்றிய உண்மையான விவரங்களை மக்களுக்குச் சொல்வது அரசின் தார்மீகக் கடமை - Venezuela ஆயர்கள்

5. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் உலக அமைதி நாள் செய்திக்கு இந்தியாவில் உள்ள மனித உரிமைகள் ஆர்வலர் Raguvanshiன் பாராட்டு

6. பிலிப்பின்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட 'கருப்பு நாசரேத்தூர் மனிதன்' திருவிழாவில் 80 இலட்சம் மக்கள்

7. சிரியாவில் இருந்து புலம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியிருந்த ஒரு முகாம் பகுதி பனிப் புயலால் சேதமடைந்துள்ளது

8. உலகப் புகழ்பெற்ற Louvre அருங்காட்சியகத்தின் மறு பிரதி அபு தாபியில் கட்டப்படுகிறது

------------------------------------------------------------------------------------------------------

1. கொத்தமங்கலம் சீரோ மலபார் ரீதி பேராயராக பேரருள்திரு George Madathikandathil நியமனம்

சன.10,2013. சீரோ மலபார் ரீதி ஆயர்கள் நடத்திய ஒரு கூட்டத்தில், கொத்தமங்கலம் பேராயராகப் பணியாற்றிய George Punnakottil ஒய்வு பெறுவதை ஏற்றுக்கொண்டதையும், அப்பணிக்கென பேரருள்திரு George Madathikandathil அவர்களைத் தேர்ந்தெடுத்ததையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வியாழனன்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள பேரருள்திரு George Madathikandathil, 1956ம் ஆண்டு Purapuzha எனுமிடத்தில் பிறந்தவர். தன் குருத்துவ பயிற்சியை முடித்தபின், இவர் 1980ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
உரோமையில் உள்ள கீழைரீதி பாப்பிறை நிறுவனத்தில் திருஅவை சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்ற இவர், 1990ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு முடிய Vadavathoor புனித தாமஸ் பாப்பிறைக் குருமடத்தில் பேராசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றினார்.
பேரருள்திரு George Madathikandathil மலையாளம், ஆங்கிலம், இத்தாலியம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.


2. உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் எகிப்து நாட்டு இளையோர் கலந்து கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் - கர்தினால் Leonardo Sandri

சன.10,2013. எகிப்தில் உள்ள இளையோர் தங்கள் நம்பிக்கையில் வளர்வதற்கு உதவியாக, அவர்களில் பலர் பிரேசில் நாட்டில் நடைபெறும் உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கு தான் முயற்சிகள் மேற்கொள்ளப் போவதாக வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இம்மாதம் 6ம் தேதி முதல், 11ம் தேதி முடிய எகிப்தில் பயணம் மேற்கொண்டுள்ள கீழைரீதி திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri, கெய்ரோவில் உள்ள இலத்தீன் ரீதி பேராலயத்தில் இப்புதனன்று ஆயர்கள், பொது நிலையினர் ஆகியோருடன் மேற்கொண்ட ஒரு கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
கிரேக்க ஆர்த்தடாக்ஸ், காப்டிக் ரீதி மற்றும் இலத்தீன் ரீதி திருஅவைகள் இடையே வளரவேண்டிய நல்லுணர்வையும், ஒத்துழைப்பையும் குறித்து கர்தினால் தன் உரையில் வலியுறுத்தினார்.
எகிப்து அரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே இன்னும் சுமுகமான உறவுகள் வளர்வதையே திருத்தந்தை விரும்புகிறார் என்று கூறிய கர்தினால் Sandri, உறவுகள் வளரவும், அமைதி பெருகவும் நாம் அனைவரும் செபத்தில் இணைவது சிறந்த வழி என்று தன் உரையின் இறுதியில் கூறினார்.


3. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு ஆயர் பிரதிநிதிகள் அளித்துள்ள புனித பூமி அறிக்கை

சன.10,2013. புனித பூமியில் வளர்ந்து வரும் பிரிவினை உணர்வுகளும், இறுக்கமானச் சூழலும் அங்கு வாழும் இஸ்ரயேல் மக்கள், பாலஸ்தீனியர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் எண்ணிக்கையில் குறைந்துவரும் கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் ஆழமான பதட்டங்களை உருவாக்கி வருகின்றன என்று ஐரோப்பிய, அமெரிக்க ஆயர்கள் கூறினர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆயர்களின் சார்பில், ஒவ்வோர் ஆண்டும் ஆயர் பிரதிநிதிகள் குழுவொன்று புனித பூமிக்குச் செல்வது வழக்கம்.
13வது முறையாக இவ்வாண்டு சனவரி 5ம் தேதி முதல், 10ம் தேதி இவ்வியாழன் முடிய புனித பூமியில் தங்கள் பயணத்தை முடித்த எட்டு ஆயர்கள் இணைந்து அளித்துள்ள ஓர் அறிக்கையில், புனித பூமியில் நிலவும் அமைதியற்றச் சூழலைக் குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய  இருபகுதிகளிலும் வாழும் இளையோர் தங்களிடையே உறவுகளை வளர்த்துக்கொள்ள விழைந்தாலும், அதற்குரியச் சூழலை பெரியவர்கள் உருவாக்கித் தராமல் இருப்பது வருங்காலத்திற்கு நல்லதல்ல என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஜெர்மனி, இஸ்பெயின், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து சென்றுள்ள இரு பேராயர்கள், மற்றும் ஆறு ஆயர்கள் அடங்கிய இக்குழு, இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளுக்கிடையே கட்டப்பட்டு வரும் மதில் சுவர், தொடர்புகளை வளர்த்துவரும் இன்றைய கலாச்சாரத்திற்கு ஓர் அவமானச் சின்னம் என்று தங்கள் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.


4. அரசுத் தலைவர் Hugo Chavez அவர்களின் உடல் நிலை பற்றிய உண்மையான விவரங்களை மக்களுக்குச் சொல்வது அரசின் தார்மீகக் கடமை - Venezuela ஆயர்கள்

சன.10,2013. Venezuela நாட்டின் அரசுத் தலைவர் Hugo Chavez அவர்களின் உடல் நிலை பற்றிய உண்மையான, தெளிவான விவரங்களை மக்களுக்குச் சொல்வது அரசின் தார்மீகக் கடமை என்று அந்நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
Cubaவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள Chavez அவர்களின் உடல்நிலையைப் பற்றிக் கூற தகுதியான மருத்துவர் குழு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என்று ஆயர்கள் தங்கள் ஆண்டு கூட்டத்தின் இறுதியில் வலியுறுத்தியுள்ளனர்.
Chavez அவர்களின் உடல்நிலை தளர்ந்துள்ள நிலையில், Venezuela நாட்டின் அரசியலில் நிலையற்ற தன்மை உருவாகியிருப்பது குறித்தும் ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
அரசுத் தலைவர் பதவி காலியாகி உள்ளதென்றும், அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சிகள் இவ்வியாழனன்று நடைபெறும் என்றும் அந்நாட்டில் வதந்திகள் உலவி வரும் வேளையில், ஆயர்கள் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


5. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் உலக அமைதி நாள் செய்திக்கு இந்தியாவில் உள்ள மனித உரிமைகள் ஆர்வலர் Raguvanshiன் பாராட்டு

சன.10,2013. உலக அமைதிக்கும், ஏழை செல்வந்தரிடையே உள்ள இடைவெளிக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு என்று தனது 46வது உலக அமைதி நாள் செய்தியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியிருப்பதை இந்தியாவில் உள்ள மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர் பாராட்டியுள்ளார்.
சுயநலமும், ஒவ்வொருவரும் தனி என்ற உணர்வும் உலகில் இன்று பரவி வரும் போக்கைதிருத்தந்தை தன் உலக அமைதி நாள் செய்தியில் கூறியிருப்பதைச் சுட்டிக் காட்டிய Lenin Raguvanshi என்ற சமூக ஆர்வலர், இந்தியாவில் ஆண்களின் சுயநலம் கட்டுப்பாடின்றி வளர்ந்து வருவதைக் காண முடிகிறது என்று கூறினார்.
மனித உரிமைகள் பற்றிய மக்களின் கண்காணிப்பு (People's Vigilance Committee on Human Rights) என்ற அமைப்பின் இயக்குனராகப் பணியாற்றி வரும் Raguvanshi, ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த இயேசு, ஏழைகளின் தேவைகளை மட்டும் இவ்வுலகிற்கு உணர்த்தவில்லை, அவர்களுக்கு உரிய மதிப்பையும் நாம் வழங்க வேண்டும் என்பதை உணர்த்தினார் என்று எடுத்துரைத்தார்.
அமைதி என்பது இறைவன் வழங்கும் ஒரு பரிசு என்று திருந்தந்தை தன் செய்தியில் கூறியிருப்பதைச் சுட்டிக் காட்டிய Raguvanshi, அனைத்து விதமான அடிப்படைவாதக் கொள்கைகளும் இறைவன் தரும் இப்பரிசை அலட்சியப்படுத்துகின்றன என்று கூறினார்.


6. பிலிப்பின்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட 'கருப்பு நாசரேத்தூர் மனிதன்' திருவிழாவில் 80 இலட்சம் மக்கள்

சன.10,2013. சனவரி 9ம் தேதி, இப்புதனன்று பிலிப்பின்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட 'கருப்பு நாசரேத்தூர் மனிதன்' (Black Nazarene) திருவிழாவில் ஏறத்தாழ 80 இலட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வோர் ஆண்டும் சனவரி 9ம் நாள் பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலா பெருநகரில் நடைபெறும் இந்த ஊர்வலத்தில் இலட்சக்கணக்கானோர் கலந்து கொள்வர்.
இப்புதன் காலை, மணிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle அவர்களால் நிறைவேற்றப்பட்டத் திருப்பலியுடன் ஆரம்பமான ஊர்வலம், நாள் முழுவதும் மணிலா நகரின் பல சாலைகளிலும் தொடர்ந்து, இவ்வியாழன் அதிகாலையில் Quiapo கோவிலை அடைந்தது.
1606ம் ஆண்டு புனித அகுஸ்தீன் துறவுச் சபையைச் சேர்ந்த துறவிகளால் சிலுவை சுமந்து செல்லும் இயேசுவின் திருஉருவம் மெக்சிகோ நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டது. வரும் வழியில் கப்பலில் நிகழ்ந்த தீவிபத்தில் இந்த உருவம் கருகிவிட்டது. எனவே, இவ்வுருவம் கருப்பு நாசரேத்தூர் மனிதன் என்ற பெயர் பெற்றது.
இத்திரு உருவம் புதுமைகள் ஆற்றும் வல்லமை பெற்றது என்று சொல்லப்படுவதால், ஊர்வலாமாய் இவ்வுருவம் கொண்டு செல்லப்படும்போது, இதனைத் தொடுவதற்குக் கூட்டம் அலைமோதும்.
கடந்த ஆண்டு நடைபெற்றத் திருவிழாவின்போது 700க்கும் அதிகமானோர் நெரிசலில் காயமுற்றனர். இவ்வாண்டு நடைபெற்ற ஊர்வலம் கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டதென்றும், காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமில்லை என்றும் கூறப்படுகிறது.


7. சிரியாவில் இருந்து புலம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியிருந்த ஒரு முகாம் பகுதி பனிப் புயலால் சேதமடைந்துள்ளது

சன.10,2013. சிரியாவில் இருந்து புலம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியிருந்த ஒரு முகாம் பகுதி பனிப் புயலால் சேதமடைந்துள்ளது என்று ஜோர்டான் காரித்தாஸ் இயக்குனர் Wael Suleiman கூறினார்.
Zaatari எனும் பகுதியில், பாலை நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த 500 கூடாரங்கள் பனிப் புயலால் சேதமடைந்துள்ளன என்றும், இதனால் 50,000க்கும் அதிகமான மக்கள் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் உள்ளனர் என்றும் Suleiman எடுத்துரைத்தார்.
கடந்த மூன்று நாட்களாக அங்கு பெய்துவரும் மழையாலும், பனிப் புயலாலும் இதுவரை யாரும் இறக்கவில்லை எனினும், இம்மக்கள், முக்கியமாக, குழந்தைகள் பல்வேறு நோய்களால் தாக்கப்படும் ஆபத்து அதிகம் உள்ளதென்று காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது.
ஜோர்டான் பகுதியில் தற்போது 2,80,000 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும், இவர்களில் பலர் சிரியாவுக்கேத் திரும்பிவிடும் எண்ணத்தில் உள்ளனர் என்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
Zaatari பகுதியில் மிகவும் கடினமானச் சூழலில் வாழும் இம்மக்களுக்கும், அங்கு பணியாற்றும் ஐ.நா. தொண்டர்களுக்கும் மோதல் உருவானது என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.


8. உலகப் புகழ்பெற்ற Louvre அருங்காட்சியகத்தின் மறு பிரதி அபு தாபியில் கட்டப்படுகிறது

சன.10,2013. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற Louvre அருங்காட்சியகத்தின் மறு பிரதி ஒன்று அபு தாபியில் கட்டப்படும் என்ற அறிக்கை இச்செவ்வாயன்று வெளியானது.
65 கோடியே 40 இலட்சம் டாலர்கள் மதிப்பில் உருவாக்கப்படும் இந்த அருங்காட்சியகம் 2015ம் ஆண்டு  மக்கள் பார்வைக்குத் திறந்து  விடப்படும்.
உலகப் புகழ்பெற்ற Louvre என்ற பெயரையே இந்த அருங்காட்சியகமும் முதல் 30 ஆண்டுகள் தாங்கி நிற்கும் என்றும், இதற்காக, Louvre அருங்காட்சியகத்திற்கு 130 கோடி டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன.
Louvre என்ற பெயர் அபு தாபி நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு பிரான்ஸ் நாட்டின் அறிஞர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எண்ணெய் வள முதலாளிகளுக்கு பிரான்ஸ் தன் ஆன்மாவை விற்றுவிட்டதென்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
அபு  தாபியில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஏழைகளின் உழைப்பு சுரண்டப்படும் என்றும், இத்தொழிலாளிகள் மிகக் குறைந்த ஊதியத்திற்கு கட்டாயப்படுத்தப்படுவர் என்றும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

No comments:

Post a Comment