செய்திகள் - 21.02.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. மிகுந்த இன்னல்களை எதிர்நோக்கும் Ukraine நாட்டு மக்களுடன் திருத்தந்தை ஒருமைப்பாட்டுணர்வு
2. பணிகளில் பலன்தராத விசுவாசம் விசுவாசமே இல்லை, திருத்தந்தை பிரான்சிஸ்
3. திருத்தந்தை பிரான்சிஸ் : உறுதிபூசுதல் அருளடையாளம் கிறிஸ்தவர்களுக்கு முக்கியமானது
4. நாம் அடுத்தவரைச் சார்ந்து வாழ்வது, பிறர்மீது கருணைகாட்டத் தூண்ட வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்
5. Ukraineல் இடம்பெறும் இரத்தும் சிந்தும் மோதல்களுக்கு கத்தோலிக்க முதுபெரும் தந்தை கண்டனம்
6. இந்தியாவில் பாதிப்பேர் வறுமையில் வாழ்கின்றனர், இந்தியத் திருஅவையின் அர்ப்பணம்
7. பிப்ரவரி 21 அனைத்துலக தாய்மொழி தினம்
8. பாக்கெட் உணவுகளால் ஆபத்து
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. மிகுந்த இன்னல்களை எதிர்நோக்கும் Ukraine நாட்டு மக்களுடன் திருத்தந்தை ஒருமைப்பாட்டுணர்வு
பிப்.21,2014. இந்நாள்களில் மிகுந்த நெருக்கடிகளையும் இன்னல்களையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் Ukraine நாட்டு மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானில் இவ்வெள்ளி காலை தொடங்கிய கர்தினால்கள் அவையின் சிறப்புக் கூட்டத்தில், இந்த ஒருமைப்பாட்டுணர்வுச் செய்தியை, அனைத்துக் கர்தினால்களின் பெயரில், Ukraine நாட்டின் கர்தினால்களுக்குத் தெரிவிப்பதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இச்சிறப்புக் கூட்டத்தில் இவ்வியாழன் காலை அமர்வில் கர்தினால் வால்ட்டர் காஸ்பர் அவர்கள், குடும்பம்
குறித்து ஆற்றிய உரை இறையியல் சிந்தனைகளை அதிகம் கொண்டிருந்ததாகச் சொல்லி
கர்தினால் காஸ்பர் அவர்களுக்குத் தனது பாராட்டையும் நன்றியையும் இவ்வெள்ளி
காலை அமர்வில் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியாழன் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர், கர்தினால் காஸ்பர் அவர்களின் உரையை மீண்டும் மீண்டும் தான் வாசித்ததாகவும் கூறினார் திருத்தந்தை.
மேலும், தென் சூடான், நைஜீரியா
போன்ற நாடுகள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் விசுவாசத்துக்காகத்
துன்புறும் எண்ணற்ற கிறிஸ்தவர்களுக்காக இக்கூட்டத்தில் கர்தினால்கள்
செபித்தனர் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ
லொம்பார்தி அவர்கள் கூறினார்.
இவ்வியாழன், இவ்வெள்ளி ஆகிய இரு தினங்களில் நடந்த கர்தினால்கள் அவையின் சிறப்புக் கூட்டங்களில் ஏறத்தாழ 150 கர்தினால்கள் கலந்து கொண்டனர்.
மேலும், குடும்பத்தின் நற்செய்தி குறித்து நாம் மீண்டும் கண்டுணர வேண்டுமென்று உரையாற்றிய, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் முன்னாள் தலைவர் கர்தினால் காஸ்பர், தொடக்க நூலிலும் கடவுளின் திட்டத்திலும் குடும்பம் பற்றிய கண்ணோட்டம், கடவுளின் படைப்பில் குடும்பத்தின் இடம், குடும்பப் பிரச்சனைகள் போன்றவை குறித்து விளக்கினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. பணிகளில் பலன்தராத விசுவாசம் விசுவாசமே இல்லை, திருத்தந்தை பிரான்சிஸ்
பிப்.21,2014. பணிகளில் பலன்தராத விசுவாசம் விசுவாசமே இல்லை என்று, இவ்வெள்ளி காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளியன்று தனது 90வது பிறந்தநாளைச் சிறப்பித்த, பிளாரன்ஸ் நகரின் முன்னாள் பேராயர் கர்தினால் Silvano Piovanelli அவர்களுக்காக நன்றித் திருப்பலி நிறைவேற்றி அவரின் பணிகள், சாட்சிய வாழ்வு மற்றும் அவரின் நன்மைத்தனத்துக்காக நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வுலகம், நம்பிக்கைதரும் வார்த்தைகளைப் பேசும் கிறிஸ்தவர்களை அதிகமாகக் கொண்டிருக்கின்றது, ஆனால் அவர்களில் வெகுசிலரே அவற்றை நடைமுறைப்படுத்துகின்றனர் என்று மறையுரையில் உரைத்த திருத்தந்தை, ஒருவர் அனைத்துக் கட்டளைகளையும், அனைத்து இறைவாக்குகளையும், விசுவாசத்தின் அனைத்து உண்மைகளையும் கற்கலாம், ஆனால் அவற்றை நடமுறையிலும், தனது பணியிலும் பயன்படுத்தாவிட்டால் அவை பயனற்றவை என்று கூறினார்.
கோட்பாடுகளைத் தெரியாத மக்கள் விசுவாசத்தை அதிகமாகக் கொண்டிருந்ததற்கு நற்செய்திகளில் எடுத்துக்காட்டுகள் உள்ளன என்றுரைத்தவேளை, இதற்கு சமாரியப் பெண், கனானேயப் பெண், பார்வையிழந்தவர் ஆகிய மூவரைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, விசுவாசமும் சாட்சிய வாழ்வும் பிரிக்க முடியாதவை என்று கூறினார்.
விசுவாசம் என்பது, இயேசு கிறிஸ்துவோடும் கடவுளோடும் கொள்ளும் சந்திப்பாகும், இதிலிருந்தே விசுவாசம் பிறக்கின்றது, இதிலிருந்து இது நம்மை சாட்சிய வாழ்வுக்கு இட்டுச்செல்கின்றது என்றும், இதனாலே
திருத்தூதர் யாக்கோபு செயல்கள் இல்லாத விசுவாசம் விசுவாசமே அல்ல என்றும்
கூறினார் என மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : உறுதிபூசுதல் அருளடையாளம் கிறிஸ்தவர்களுக்கு முக்கியமானது
பிப்.21,2014. உறுதிபூசுதல் அருளடையாளம் கிறிஸ்தவர்களுக்கு முக்கியமானது. அது, நம் விசுவாசத்தைப் பாதுகாத்து, துணிச்சலுடன் நற்செய்தியைப் பரப்புவதற்கு நம்மை உறுதிப்படுத்துகின்றது என்று, தனது டுவிட்டர் செய்தியில் இவ்வெள்ளியன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும்,
இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் முற்பகல் 11 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு
பசிலிக்காவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தும் திருப்பலியில்
19 புதிய கர்தினால்களுக்குச் சிவப்புத் தொப்பி, மோதிரம் ஆகியவற்றை வழங்குவதோடு, புதிய கர்தினால்களுக்குரிய ஆலயத்தையும் அறிவிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய
கர்தினால்களுடன் இணைந்து இஞ்ஞாயிறு காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய
பேதுரு பசிலிக்காவில் திருப்பலியும் நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
19 புதிய கர்தினால்களுள் இருவர் ஆசியர்கள். தென் கொரியாவின் செயோல் பேராயர் Andrew Yeom Soo jung அவர்களும், பிலிப்பின்சின் Cotabato பேராயர் Orlando Quevedo அவர்களும் இவ்விருவர் ஆவர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. நாம் அடுத்தவரைச் சார்ந்து வாழ்வது, பிறர்மீது கருணைகாட்டத் தூண்ட வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்
பிப்.21,2014. ஒவ்வொரு மனிதரும் எப்போதும் அடுத்தவரைச் சார்ந்து வாழ்கின்றனர் என்ற உண்மைநிலை, ஒவ்வொருவரும் அடுத்தவரை ஒதுக்கிவிடாமலும், அடுத்தவர்மீது கருணையுடனும் வாழத் தூண்டுகின்றது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானில் திருப்பீட வாழ்வு அவை நடத்திய இரண்டு நாள் கூட்டத்துக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதர் மத்தியிலான உறவுகள் ஒருவர் ஒருவரை எப்போதும் சார்ந்துள்ளன என்பதை நாம் எளிதில் மறந்துவிடுகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மனிதரும் அவரவர் இருக்கும் நிலையில் அவரவருக்குத் தேவைப்படும் உதவிகளை மற்றவர்கள் செய்யுமாறு கேட்டுள்ள திருத்தந்தை, வயதுமுதிர்தல், உடல்உறுப்புக் குறைபாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனிதரின் மாண்பு மதிக்கப்பட வேண்டுமென்று வலிறுத்தியுள்ளார்.
வயதுமுதிர்தல்
மற்றும் உடல்உறுப்புக் குறைபாடு என்ற தலைப்பில் திருப்பீட வாழ்வு அவை
நடத்திய இரண்டு நாள் கூட்டம் இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. Ukraineல் இடம்பெறும் இரத்தும் சிந்தும் மோதல்களுக்கு கத்தோலிக்க முதுபெரும் தந்தை கண்டனம்
பிப்.21,2014. Ukraine நாட்டில் அரசுக்கும், அரசை எதிர்ப்பவர்களுக்கும் இடையே இரத்தம் சிந்தும் கடும் மோதல்கள் அதிகரித்துவருவது குறித்து கவலை தெரிவித்துள்ள அதேவேளை, நாட்டின் அமைதிக்காக, செபத்துக்கும் உண்ணாநோன்புக்கும் அழைப்பு விடுத்துள்ளார் Ukraine கிரேக்க வழிபாட்டுமுறை கத்தோலிக்க முதுபெரும் தந்தை.
வன்முறைகள், கடவுளின் திருச்சட்டத்துக்கும், நற்செய்தியின்
உண்மைகளுக்கும் முரணாக இருப்பதால் வன்முறையைத் தூண்டும் அனைத்துவிதச்
செயல்களுக்கு எதிரான தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் முதுபெரும் தந்தை Sviatoslav Shevchuk.
மனித உயிர்களைத் தியாகம் செய்வது குறித்து எவரும் தீர்மானம் எடுக்க முடியாது என்றுரைத்துள்ள முதுபெரும் தந்தை Shevchuk, ஆயுதப் போராட்டங்களைப் புறக்கணித்து அமைதியைக் கட்டியெழுப்ப திருஅவை விரும்புகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, Ukraine அரசுத்தலைவருக்கும், அரசு எதிர்ப்பாளர்களுக்கும் இடையே இப்புதன் இரவு அமைதி ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டிருந்தாலும், இவ்வியாழன்
காலையில் வன்முறைகள் வெடித்தன. அந்நாட்டில் தொடர்ந்து நீடித்துவரும்
கலவரத்தில் இதுவரையில் 75 பேர் பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியமும் Ukraineக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறது.
ஆதாரம் : CNA
6. இந்தியாவில் பாதிப்பேர் வறுமையில் வாழ்கின்றனர், இந்தியத் திருஅவையின் அர்ப்பணம்
பிப்.21,2014. பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் ஏழைகளுக்கு உதவும் வகையில், தனது பணிகளை மேம்படுத்துவதற்கு இந்திய கத்தோலிக்க சமுதாயம் திட்டமிட்டு வருவதாக இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய மக்களின் கலாச்சார நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், ஊழலுக்கு எதிராகப் போராடி உணவு பாதுகாப்பு மசோதாவை ஊக்குவிக்கவும் இந்த நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் முயற்சித்து வருகின்றது.
இந்திய மக்கள் தொகையில் 56 விழுக்காட்டினர், அதாவது
ஏறக்குறைய 68 கோடிப் பேர் தங்களின் அன்றாட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற
இயலாமல் உள்ளனர் என்று புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இந்திய அரசால் நியமிக்கப்பட்ட "McKinsey Global Institute" என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், நலவாழ்வு, குடிநீர் போன்ற வசதிகள், குறைந்தது 40 விழுக்காட்டு மக்களுக்குக் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
ஆதாரம் : Fides
7. பிப்ரவரி 21 அனைத்துலக தாய்மொழி தினம்
பிப்.21,2014.
உலகின் அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பலமொழித் தன்மையை ஊக்குவிக்க
வேண்டுமென்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
பிப்ரவரி 21, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக தாய்மொழி தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில், நல்லதோர் உலகை அமைக்கவும், அனைவரும்
மாண்புடைய வாழ்வைப் பெறுவதற்குமான நமது முயற்சியில் மொழிகளின்
பன்மைத்தன்மை ஊக்குவிக்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளார் பான் கி மூன்.
ஒருவர் புரிந்துகொள்ளும் மொழியில் அவரிடம் பேசினால் அது அவரது மூளைக்குச் செல்கின்றது என்றும், ஒருவரின்
தாய் மொழியில் அவரிடம் பேசினால் அது அவரது இதயத்துக்குச் செல்கின்றது
என்றும் மெல்சன் மண்டேலா அவர்கள் கூறியதையும் பான் கி மூன் தனது செய்தியில்
சுட்டிக்காட்டியுள்ளார்.
பல மொழிக் குடும்பங்களைக் கொண்ட இந்தியாவில் 74 விழுக்காட்டு மக்கள் இந்தோ-ஆர்யன் மொழியையும், 24
விழுக்காட்டு மக்கள் தமிழ் மொழியை உள்ளடக்கிய திராவிட மொழியையும்
பேசுகின்றனர். இந்தியாவில் 22 மொழிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
ஆதாரம் : UN
8. பாக்கெட் உணவுகளால் ஆபத்து
பிப்.21,2014. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகள் ஆபத்தை விளைவிக்கும் என, பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட அண்மை ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
உணவுப் பொருட்களைப் பாக்கெட்டுகளில் அடைக்கும்போது, அவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்கும், பதப்படுத்துவற்குமென பார்மால்டிஹைடு என்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என அந்த ஆய்வு கூறுகிறது.
தாகத்தைத்
தணிப்பதற்காகக் குடிக்கும் குளிர்பானங்களைச் சேமிக்கும் பிளாஸ்டிக்
பாட்டில்கள் மற்றும் சாப்பாட்டு மேஜையில் உள்ள தட்டுகள் போன்ற பொருட்களில்
பார்மால்டிஹைடு வேதிப்பொருள் சிறிய அளவில் சேர்க்கப்படுகின்றது எனவும்
ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதுதவிர உணவைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களின் எண்ணிக்கை நான்காயிரத்தைத் தாண்டும் எனவும், தற்போது உணவுப்பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவது அதிகரித்துவரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து இடங்களிலும் பரவலாகக் காணப்படும் இந்த வேதிப்பொருட்கள் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment