1. திருத்தந்தையின் மறையுரைகளில் திருஅவையின் துவக்ககாலம் சொல்லித்தரும் பாடங்கள்
2. காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros அவர்கள் உரோம் நகருக்கு வருகை
3. ஐரோப்பா நாளையொட்டி ஐரோப்பிய ஆயர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தி
4. தேர்தல் மூலம் பாகிஸ்தானில் புதிய மாற்றங்கள் உருவாக வேண்டும் - ஆயர் Rufin Anthony
5. உலக இளையோர் நாள் நிகழ்வுகள் புனித பாத்திமா அன்னைக்கு அர்ப்பணம் - ரியோ டி ஜெனீரோ பேராயர் Tempesta
6. "தொழுநோயாளர் பல்மருத்துவர்" என்று அழைக்கப்படும் Kang Dae-gun அவர்களுக்கு Seoul உயர்மறை மாவட்டம் பாராட்டு விழா
7. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளைக் களையும் சட்டங்களுக்காக Tanzania பெண் அமைப்புக்கள் போராட்டம்
8. மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதைத் தடுக்கும் தார்மீகப் பொறுப்பை பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்கவேண்டும் - ஐ.நா. உயர் அதிகாரி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் மறையுரைகளில் திருஅவையின் துவக்ககாலம் சொல்லித்தரும் பாடங்கள்
மே,09,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பணியை ஏற்று இருமாதங்கள் நிறைவுறவிருக்கும் இவ்வேளையில், அவர்
ஒவ்வொருநாளும் காலையில் புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில்
நிறைவேற்றி வரும் திருப்பலிகளில் திருஅவையின் பண்புகளை தன் மறையுரைகளில்
கூறி வருகின்றார்.
உயிர்ப்புக் காலத்திற்குப் பின்வரும் இந்நாட்களில், திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வழங்கப்பட்டு வரும் பகுதிகளை மையப்படுத்தி, திருஅவையின் துவக்ககாலம் நமக்குச் சொல்லித் தரும் பாடங்களை தன் மறையுரையில் கூறி வருகிறார் திருத்தந்தை.
திருஅவை ஒரு சமுதாயப் பணி அமைப்பு அல்ல, திரு அவை ஒரு செவிலித் தாயல்ல, மாறாக, ஓர் உண்மைத் தாய், சமுதாயத்தின்
விளிம்புகளில் வாழ்வோரைத் தேடிச்செல்லும் திருஅவையே பொருளுள்ள திருஅவை
என்ற எண்ணங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரைகளில்
வலியுறுத்தி வந்துள்ளார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூட்டப்பட்டதன் 50ம் ஆண்டைச் சிறப்பிக்கும் இந்த நம்பிக்கை ஆண்டில், திருஅவை இன்னும் எவ்வழிகளில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற கேள்வியை, திருத்தந்தை முன் வைத்துள்ளார்.
தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்குச் செவி மடுத்து, கிறிஸ்தவர்களாகிய
நாம் அனைவரும் மனித சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பாலங்களைக் கட்ட
அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் மறையுரைகளில்
சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், கடவுளின் அன்பிலும் கருணையிலும் நம்பிக்கைக் கொள்ளும் மிக உன்னதக் கொடையை தூய ஆவியார் நமது உள்ளங்களுக்குத் தருகிறார் என்ற Twitter செய்தியை இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros அவர்கள் உரோம் நகருக்கு வருகை
மே,09,2013. அலெக்சாந்திரியாவின் திருத்தந்தை என்றும், எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் என்றும் அழைக்கப்படும் இரண்டாம் Tawadros அவர்கள் இவ்வியாழன் உரோம் நகருக்கு வருகை தந்துள்ளார்.
இவ்வியாழன் நண்பகல் வேளையில் உரோம் நகர் அடைந்த இரண்டாம் Tawadros அவர்கள், வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருத்தந்தையின் இல்லத்தில் சந்திக்கிறார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தில் அடுத்த ஐந்து நாட்களும் தங்கும் இரண்டாம் Tawadros அவர்களின் உரோம் வருகை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று சொல்லப்படுகிறது.
1973ம் ஆண்டு மே மாதம் அப்போதைய காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவராகப் பணியாற்றிய மூன்றாம் Shenouda அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் அப்போதையத் தலைவரான திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களைச் சந்தித்த நிகழ்வுக்குப் பின், இவ்விரு தலைவர்களுக்கும் இடையே நிகழும் சந்திப்பு இது.
இரண்டாம் Tawadros அவர்களின் உரோம் நகர் பயணத்தின்போது, புனித பேதுருவின் கல்லறை, புனித பவுல் தலை வெட்டப்பட்ட இடம், Colosseum ஆகிய முக்கிய தலங்களைப் பார்வையிடுகிறார்.
கர்தினால் Kurt Koch அவர்களின் தலைமையில் பணியாற்றும் கிறிஸ்துவ ஒன்றிப்பு திருப்பீட அவை உறுப்பினர்களையும், கர்தினால் Leonardo Sandri அவர்களின் தலைமையில் பணியாற்றும் கீழை வழிபாட்டுமுறை திருப்பீடப் பேராயத்தின் உறுப்பினர்களையும் இரண்டாம் Tawadros வரும் நாட்களில் சந்திக்கிறார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. ஐரோப்பா நாளையொட்டி ஐரோப்பிய ஆயர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தி
மே,09,2013. ஐரோப்பியக் கண்டத்தின் அனைத்து நாடுகளிலும் வாழும் மக்களுடன், சிறப்பாக, ஐரோப்பாவின்
எதிர்காலத்தில் அதிகம் பங்கேற்கவிருக்கும் இளையோருடன் ஐரோப்பியத்
திருஅவையும் பயணம் செய்கிறது என்று ஐரோப்பிய ஆயர்கள் கூட்டமைப்பு
கூறியுள்ளது.
மே மாதம் 9ம் தேதி, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படும் ஐரோப்பா நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஆயர்கள் கூட்டமைப்பு, பொருளாதார நெருக்கடியாலும், வேறு பல பிரச்சனைகளாலும் சூழப்பட்டுள்ள ஐரோப்பிய மக்களுடன் திருஅவையும் இணைந்து பயணிக்கிறது என்று கூறியுள்ளது.
இரண்டாம் உலகப் போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் கழித்து, 1950ம் ஆண்டு பிரெஞ்ச் நாட்டின் வெளியுறவு அமைச்சர் Robert Schuman, ஐரோப்பிய
நாடுகள் அனைத்தும் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற
அழைப்பை விடுத்தார். அவர் விடுத்த அழைப்பின் விளைவாக உருவாக்கப்பட்ட
ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாண்டு தன் 63ம் ஆண்டைக் கொண்டாடுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் என்ற எண்ணத்தைத் தொடர்ந்து, 1971ம் ஆண்டு, ஐரோப்பாவின் 33 ஆயர்கள் பேரவைகளும் இணைந்து ஐரோப்பிய ஆயர்கள் கூட்டமைப்பை உருவாக்கின. ஐரோப்பிய ஆயர்கள் கூட்டமைப்பின் தற்போதையத் தலைவராகப் பணியாற்றுபவர் Esztergom-Budapest உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Péter Erdõ அவர்கள்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. தேர்தல் மூலம் பாகிஸ்தானில் புதிய மாற்றங்கள் உருவாக வேண்டும் - ஆயர் Rufin Anthony
மே,09,2013. பாகிஸ்தானில் நிலவிவரும் சகிப்பற்றதன்மை, ஊழல்கள், வன்முறைகள், ஆகிய அனைத்து குறைபாடுகளும் நடைபெறவிருக்கும் தேர்தல் மூலம் நீங்கி, புதிய மாற்றங்கள் உருவாக வேண்டும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
மே மாதம் 11, வருகிற சனிக்கிழமையன்று பாகிஸ்தானில் நிகழவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் அந்நாட்டில் நிலவி வரும் வலுவற்ற பொருளாதார நிலை, மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத போக்குகள் ஆகியவற்றிற்கு ஒரு மாற்றாக அமையவேண்டும் என்று இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி ஆயர் Rufin Anthony கூறினார்.
பாகிஸ்தான் தற்போது தேடி வருவது அமைதியும், உலக நாடுகளிடையே நல்லுறவு, மதிப்பு ஆகிய நல்ல அம்சங்களே என்று கூறிய ஆயர் Anthony,
இந்த நிலை உருவாக சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களுடன் இஸ்லாமியர்களும்
பாடுபடுகின்றனர் என்று ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில்
கூறினார்.
பாகிஸ்தானில் உண்மையான மாற்றங்கள் உருவாக, கிறிஸ்தவத் தலைவர்கள் அரசியலில் இன்னும் அதிகமாய் பங்கேற்க வேண்டும் என்று ராவல்பிண்டியில் பணியாற்றும் அருள் பணியாளர் Anwar Patras கூறினார்.
ஆதாரம் : AsiaNews
5. உலக இளையோர் நாள் நிகழ்வுகள் புனித பாத்திமா அன்னைக்கு அர்ப்பணம் - ரியோ டி ஜெனீரோ பேராயர் Tempesta
மே,09,2013. நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளை புனித பாத்திமா அன்னைக்கு அர்ப்பணிக்கப்போவதாக ரியோ டி ஜெனீரோ பேராயர் Orani João Tempesta கூறினார்.
மே 13ம் தேதி, வருகிற திங்களன்று கொண்டாடப்படும் பாத்திமா அன்னை திருநாளையொட்டி அங்கு மே 12, 13 ஆகிய நாட்கள் நிகழும் கொண்டாட்டங்களை தலைமையேற்று நடத்த அழைக்கப்பட்டிருக்கும் பேராயர் Tempesta, இவ்வாறு கூறினார்.
ஒவ்வோர்
ஆண்டும் பாத்திமா அன்னையின் திருநாளைச் சிறப்பிக்க உலகின் பல
பகுதிகளிலிருந்தும் ஆயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாண்டு
நிகழ்வுகளுக்குத் தலைமைத் தாங்கி, திருப்பலியாற்ற தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தனக்குக் கிடைத்த அருள் என்று ரியோ டி ஜெனீரோ பேராயர் Tempesta எடுத்துரைத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப் பணியை பாத்திமா அன்னைக்கு அர்ப்பணித்துள்ளதாக அறிவித்தது தன்னையும் ஊக்குவித்தது என்றும், எனவே அந்த அன்னையிடம் உலக இளையோர் நாளையும் தான் அர்ப்பணிக்க இருப்பதாக பேராயர் Tempesta, கத்தோலிக்கச் செய்தி நிறுவனமான Zenitக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரம் : Zenit
6. "தொழுநோயாளர் பல்மருத்துவர்" என்று அழைக்கப்படும் Kang Dae-gun அவர்களுக்கு Seoul உயர்மறை மாவட்டம் பாராட்டு விழா
மே,09,2013. கடந்த 33 ஆண்டுகளாக ஏழைகள் மத்தியில், சிறப்பாக, தொழுநோய் எனப்படும் Hansen நோயுற்றோருக்கு
இலவசமாக பல் மருத்துவம் செய்து வந்த ஒரு கத்தோலிக்க மருத்துவருக்கு
தென்கொரிய தலத் திருஅவை பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
"தொழுநோயாளர் பல்மருத்துவர்" என்று அழைக்கப்படும் மருத்துவர் Kang Dae-gun அவர்கள், தன் 82வது வயதில் பணி ஒய்வு பெறுவதாகக் கூறியதைத் தொடர்ந்து, Seoul உயர்மறை மாவட்டம் அவருக்கு பாராட்டு விழா ஒன்றை அண்மையில் நடத்தியது.
Hansen நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 1979ம் ஆண்டு முதல் சிறப்பான முறையில் பல் மருத்துவம் செய்து வந்துள்ள மருத்துவர் Dae-gun அவர்கள், இதுவரை 15,000க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக இச்சேவையைச் செய்துள்ளார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
எவ்வித விருதையும் விரும்பாத மருத்துவர் Dae-gun அவர்கள், Hansen நோயுற்றோரை சமுதாயம் புறக்கணிப்பதைக் கண்டபின், அவர்களுக்கு இலவசமாகச் சேவைகள் செய்ய ஆரம்பித்தார் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
ஆதாரம் : AsiaNews
7. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளைக் களையும் சட்டங்களுக்காக Tanzania பெண் அமைப்புக்கள் போராட்டம்
மே,09,2013. Tanzania நாட்டில் மேற்கொள்ளபட்டுள்ள சட்டச் சீர்த்திருந்தங்களில், பெண்களுக்கு
எதிராக இழைக்கப்படும் அநீதிகளைக் களையும் சட்டங்கள் இணைக்கப்பட வேண்டும்
என்று அந்நாட்டின் பெண் அமைப்புக்கள் போராடி வருகின்றன.
Tanzaniaவில்
சட்டச் சீர்த்திருத்தங்கள் குறித்த முயற்சிகள் அண்மையில்
மேற்கொள்ளப்பட்டன. இம்மாத இறுதிக்குள் முடிவடைய வேண்டும் என்ற காலக்
கெடுவுடன் துவக்கப்பட்டுள்ள இந்தச் சீர்திருத்த முயற்சிகள் குழுவின்
தலைவராக முன்னாள் பிரதமர் Joseph Warioba நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்களின் பிறப்பு உறுப்புக்களை முடமாக்கும் செயல்பாடுகளை நாட்டிலிருந்து முற்றிலும் அகற்றுதல், மற்றும் பெண்களுக்கு பொது வாழ்வில் இணையான உரிமைகள் வழங்குதல் ஆகிய உரிமைகளைக் கோரி, பெண் அமைப்புக்கள் குரல் எழுப்பி வருகின்றன.
மாற்றங்களை
உள்ளடக்கிய புதிய சட்ட வரைவுகள் இம்மாத இறுதிக்குப் பின்னர் மக்களின் பொது
வாக்கெடுப்புக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : MISNA
8. மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதைத் தடுக்கும் தார்மீகப் பொறுப்பை பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்கவேண்டும் - ஐ.நா. உயர் அதிகாரி
மே,09,2013. ஆடைகள் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதைத் தடுக்கும் தார்மீகப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பங்களாதேஷ் தலைநகரான டாக்காவுக்கருகே Rana Plaza என்ற
8 மாடிக் கட்டிடம் ஏப்ரல் 24ம் தேதி இடிந்து விழுந்ததில் இதுவரை 900க்கும்
அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொடிய விபத்தில் இறந்த பெரும்பாலான
தொழிலாளிகள் பன்னாட்டு ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களுக்கு உழைத்து
வந்தவர்கள்.
இவ்விபத்தையொட்டி, இப்புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. உயர் அதிகாரி Pavel Sulyandziga அவர்கள், பங்களாதேஷ் அரசுடன் பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய தார்மீகக் கடமைகளைச் சுட்டிக்காட்டினார்.
பங்களாதேஷ் நாட்டில் ஆடைகள் உற்பத்தியில் 50 இலட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்; இவர்களில் பெரும்பாலானோர் மிகக் குறைவான ஊதியம் பெறும் பெண் தொழிலாளிகள் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
இதற்கிடையே, இவ்வியாழனன்று டாக்காவின் புறநகர் பகுதியில் ஆடை உற்பத்தி செய்யும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று Reuters செய்தி கூறுகிறது.
No comments:
Post a Comment