Saturday, 18 May 2013

Catholic News in Tamil - 17/05/13


1. திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் பாவிகள் என்பது பிரச்சனையல்ல, ஆனால் நாம் அதற்காக மனம் வருந்தாமல் இருப்பதே பிரச்சனை

2. திருத்தந்தை பிரான்சிஸ் : நற்செய்தி அறிவிக்கும் திருஅவையின் பணி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்

3. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையின் கனிவு உலகுக்குத் தேவைப்படுகின்றது

4. திருத்தந்தை பிரான்சிஸ் : நமது வாழ்வு உண்மையிலேயே இறைவனின் பிரசன்னத்தால் நிறைந்துள்ளதா?

5. பேராயர் சுள்ளிக்காட் : மனித வியாபாரத்தின் வடு

6. அலெப்போ ஆயர்களின் விடுதலையை வலியுறுத்தி கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம்

7. அனைத்துலகத் தொலைத்தொடர்பு தினம், ஐ.நா.பொதுச்செயலரின் செய்தி

8. இலங்கை இராணுவம் : மீள்குடியேற்றத்துக்கு உதவியாக கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் பாவிகள் என்பது பிரச்சனையல்ல, ஆனால் நாம் அதற்காக மனம் வருந்தாமல் இருப்பதே பிரச்சனை

மே,10,2013. நாம் அனைவரும் பாவிகள், நாம் பாவிகள் என்பது பிரச்சனையல்ல, ஆனால் நாம் மனம் வருந்தாமல் பாவநிலையிலே இருப்பதும், நம் ஆண்டவரைச் சந்திப்பதற்குத் திறந்தமனது இல்லாமல் இருப்பதுமே பிரச்சனை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை, பேதுரு போன்று இயேசுவால் உருவாக்கப்படுவதற்கு நாமும் நம்மை அனுமதிக்காமல் இருப்பதே பிரச்சனை என்று கூறினார்.
உயிர்த்த கிறிஸ்து பேதுருவிடம், நீ என்னை அன்பு செய்கிறாயா? என்று மூன்று முறை கேட்ட இந்நாளின் நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், நம் ஆண்டவருக்கும், அவரின் சீடர் பேதுருவுக்கும் இடையே இடம்பெற்றது அன்பின் உரையாடல் என்றும் கூறினார். 
பேதுருவுக்கும் இயேசுவுக்கும் இடையே இடம்பெற்ற பல சந்திப்புகள் குறித்து விளக்கிய திருத்தந்தை, இச்சந்திப்புகளில் இயேசு, பேதுருவின் ஆன்மாவையும், இதயத்தையும் பக்குவப்படுத்தினார், பேதுருவை அன்பில் பக்குவப்படுத்தினார் என்றும் கூறினார்.
யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? என்று பேதுருவிடம் மூன்று முறை கேட்டு, தான் ஒரு பாவி என்பதை பேதுருவை உணரச் செய்கிறார் இயேசு, அதேபோல் நம்மையும் பாவி என உணரச் செய்கிறார், ஆனால், நமது பாவத்திற்காக நாம் மனம் வருந்தாததே, நாம் செய்தவைகளை நினைத்து வெட்கப்படாததே பிரச்சனை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் ஆண்டவர் நம்மைக் கைவிடுவதில்லை, இயேசுவால் தான் மாற்றமடைய பேதுரு தன்னை அனுமதித்தார், பேதுரு நல்லவர் என்பதால் அவர் பெரியவர் அல்ல, ஆனால் அவர் நேர்மையானவர், நேர்மையான இதயத்தைக் கொண்டிருந்தார், இந்த நேர்மையே, அவரைக் கண்கலங்க வைத்தது, அவரை வேதனையடையச் செய்தது, இதனாலே அவரால் தமது மந்தையை மேய்க்கும் பணியைச் செய்ய முடிந்தது என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த மனிதரின் எடுத்துக்காட்டான வாழ்வை நாமும் பின்செல்ல ஆண்டவரிடம் அருள் கேட்போம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நம் ஆண்டவரைச் சந்திப்பதற்கு நம்மைத் திறந்து வைப்பதே முக்கியமானது என்று தனது மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : நற்செய்தி அறிவிக்கும் திருஅவையின் பணி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்

மே,17,2013. நற்செய்தி அறிவிக்கும் திருஅவையின் பணி தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது, இந்தப் பணியைச் செய்வதில் பாப்பிறை மறைப்பணிக் கழகங்களுக்குச் சிறப்பான பங்கு உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
பாப்பிறை மறைப்பணிக் கழகங்களின் தேசிய இயக்குனர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வந்திருக்கும் இவர்களை முதன்முறையாகச் சந்திப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும்  கூறினார்.
உலகில் பலர் இன்னும் கிறிஸ்துவை அறியாமலும் சந்திக்காமலும் இருக்கின்றனர் என்றும், ஒவ்வொரு மனிதரின் இதயங்களையும்  இறைவனின் அருள் தொடுவதற்குப் புதிய வழிகளையும் புதிய முறைகளையும் உடனடியாகக் காண வேண்டியது அவசியம் என்றும் கூறினார் திருத்தந்தை.
நற்செய்தி அறிவிப்புப் பணி சவால் நிறைந்தது மற்றும் எழுச்சியூட்டுவது என்றுரைத்த திருத்தந்தை, பாப்பிறை மறைப்பணிக் கழகங்களின் தேசிய இயக்குனர்கள் தங்களது நாடுகளில் இப்பணியை ஊக்கமுடன் செய்வதற்குத் தங்களைத் தொடர்ந்து அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையின் கனிவு உலகுக்குத் தேவைப்படுகின்றது

மே,17,2013. திருஅவையின் இன்றியமையாத அங்கமாக விளங்குகின்ற பிறரன்பு, திருஅவையில் அன்பை நிறுவனமாக்குகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் Oscar Andrés Rodríguez Maradiaga மற்றும் காரித்தாஸ் நிறுவனப் பணியாளர்களை இவ்வியாழனன்று சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, பிறரன்பு இல்லாமல் திருஅவை இயங்க முடியாது என்று கூறினார்.
காரித்தாஸ் நிறுவனத்தின் இரு கூறுகளான செயல்கள் மற்றும் விண்ணகத்தன்மை குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், போர் அல்லது நெருக்கடி காலங்களில் அவசரகால உதவிகளைச் செய்வது மட்டுமல்ல, அதற்குப் பின்னும்  பாதிக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது காரித்தாஸின் பணி என்பதையும் சுட்டிக்காட்டினார்.
திருஅவை தனது மக்களுக்கு, தாய்த் திருஅவை தனது குழந்தைகளுக்குத் தனது கனிவையும் பற்றையும் காட்டும் நிறுவனமாக காரித்தாஸ் அமைந்துள்ளது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, கரீபியன், மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, ஓசியானியா ஆகிய பகுதிகளின் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் பசியை ஒழிப்பதற்கு உறுதி எடுத்துள்ளதைத் திருத்தந்தையிடம் தெரிவித்தார் கர்தினால் Rodríguez Maradiaga.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : நமது வாழ்வு உண்மையிலேயே இறைவனின் பிரசன்னத்தால் நிறைந்துள்ளதா?

மே,17,2013. நமது வாழ்வு உண்மையிலேயே இறைவனின் பிரசன்னத்தால் நிறைந்துள்ளதா? எனது அன்றாட வாழ்வில் கடவுளின் இடத்தை எத்தனைப் பொருள்கள் எடுத்துக் கொள்கின்றன? என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி, இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இச்சனி, இஞ்ஞாயிறு ஆகிய இரு தினங்களில் திருஅவையின் பல்வேறு பொதுநிலை பக்த இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளார் திருத்தந்தை.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இச்சனிக்கிழமை மாலை 6 மணிக்குத் துவங்கும் தூய ஆவிப் பெருவிழாவின் திருவிழிப்புச் செபவழிபாடு மற்றும் இஞ்ஞாயிறன்று காலையில் இடம்பெறும் தூய ஆவிப் பெருவிழாத் திருப்பலியில், ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. பேராயர் சுள்ளிக்காட் : மனித வியாபாரத்தின் வடு

மே,17,2013. மனிதர்கள் வியாபாரம் செய்யப்படுவது, வெறுப்புக்குரிய மற்றும் அறநெறிக்கு முரணான நடவடிக்கை என்று உலக சமுதாயம் முழுவதும் ஒட்டுமொத்தமாக கண்டனம் செய்ய வேண்டும், அதேநேரம், அவ்வியாபாரத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்.
நியுயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்தில் இவ்வாரத்தில் நிறைவடைந்த மனித வியாபாரம் குறித்த இரண்டு நாள் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சுள்ளிக்காட், மனித வியாபாரத்தை ஒழிப்பதற்கு அனைத்துலக சமுதாயம் முன்னுரிமை கொடுத்துச் செயல்படுமாறு வலியுறுத்தினார்.
மனித வியாபாரத்தின் ஓர் அங்கமாக பெண்களும் சிறாரும் பாலியல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது அவர்களின் மனித மாண்பை அவமதிப்பதாகும் என்றும் பேராயர் சுள்ளிக்காட் கூறினார்.
மனித வியாபாரத்திற்குப் பலியாகும் மக்களில் 25 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் கட்டாய வேலைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் கூறிய அவர், உலகெங்கும் மனித வியாபாரத்திற்குப் பலியாகும் மக்களுக்கு கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகளையும் குறிப்பிட்டார்.
மேலும், சிரியாவில் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமுதாயம் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஐ.நா. கூட்டத்தில் கேட்டுக்கொண்டார் பேராயர் சுள்ளிக்காட்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. அலெப்போ ஆயர்களின் விடுதலையை வலியுறுத்தி கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம்

மே,17,2013. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரு அலெப்போ ஆயர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவதை வலியுறுத்தி வருகிற செவ்வாயன்று Ammanல் கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த ஊர்வலம் குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜோர்டன் பேராயர் Maroun Laham, இந்த ஊர்வலத்தில் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் கலந்து கொள்வார்கள் என்று கூறினார்.
கடந்த மாதம் 22ம் தேதி தங்களது மனிதாபிமானப் பணிகளை முடித்துவிட்டுத் திரும்பியபோது அலெப்போவின் Syrian ஆர்த்தடாக்ஸ் பேராயர் Mar Gregorios Yohanna Ibrahim, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் Boulos al-Yazigi ஆகிய இருவரும் கடத்தப்பட்டனர்.
மேலும், தமஸ்கு மற்றும் அலெப்போ நகரப் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்களிடமிருந்து சிரியாவின் புரட்சிக்குழுக்கள் பணம் கேட்பதாகவும், இப்பணம் ஆயுதங்கள் வாங்கப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார் பேராயர் Jacques Behnan Hindo.

ஆதாரம் : Fides                         

7. அனைத்துலகத் தொலைத்தொடர்பு தினம், ஐ.நா.பொதுச்செயலரின் செய்தி

மே,17,2013. இவ்வாண்டு அனைத்துலகத் தொலைத்தொடர்பு தினம் சாலை பாதுகாப்பு குறித்துச் சிந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளவேளை, போக்குவரத்துக்களில் இடம்பெறும் விபத்துக்களைத் தடுப்பதற்குத் நவீனத் தொழில்நுட்பங்களை நன்றாகப் பயன்படுத்துவோம் எனக் கூறியுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
இவ்வெள்ளிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலகத் தொலைத்தொடர்பு தினத்திற்கென செய்தி வெளியிட்ட பான் கி மூன், ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் ஏறக்குறைய 13 இலட்சம் பேர் இறக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
சாலை விபத்துக்களால் மேலும் இலட்சக்கணக்கானோர் காயமடைகின்றனர் மற்றும் ஆயுள் முழுவதும் மாற்றுத்திறனாளிகளாகி விடுகின்றனர், இந்நிலை குடும்பங்கள் மற்றும் நாடுகளில் பெரும் பொருளாதாரப் பளுவைச் சுமத்துகின்றன என்றும் அவரின் செய்தி கூறுகிறது.     
சாலைப் பாதுகாப்புக் குறித்தத் தொழில்நுட்பங்களும் தகவல்களும் தேவைப்படுகின்றன என்றும் அச்செய்தி வலியுறுத்தியுள்ளது.
2011ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான சாலைப் பாதுகாப்பு குறித்த ஐ.நா.வின் பத்தாண்டு திட்டம், உலகில் சாலைகள் மற்றும் வாகனங்கள் பாதுகாப்புக்கு உதவி செய்யும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

1969ம் ஆண்டு மே 17ம் தேதியன்று அனைத்துலகத் தொலைத்தொடர்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதை நினைவுப்படுத்தும் விதமாக இத்தினம் தொடங்கப்பட்டது.

ஆதாரம் : UN                             

8. இலங்கை இராணுவம் : மீள்குடியேற்றத்துக்கு உதவியாக கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளது

மே,17,2013. இலங்கையில் சண்டை இடம்பெற்ற பகுதிகளில், மக்கள் மீண்டும் குடியேறுவதற்கும் வேளாண்மை செய்வதற்கும் தேவைப்படும் அனைத்து இடங்களிலிருந்தும் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் Ruwan Wanigasooriya கூறியுள்ளார்.
வெடிக்கப்படாமல் இருந்த ஏறக்குறைய 10 இலட்சம் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இவ்வியாழனன்று தெரிவித்த Wanigasooriya,  நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்பட்ட 2,064 சதுர கி.மீ. பரப்பளவில் 95 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பகுதியில் இவை அகற்றப்பட்டுள்ளன என அறிவித்தார்.
நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஒரு படைவீரர் இறந்துள்ளார் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என்று  இலங்கை இராணுவம் கூறியுள்ளது.
இலங்கையில், இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, 1972ம் ஆண்டில் தொடங்கிய சண்டையில் ஏறக்குறைய ஒரு இலட்சம் பேர் இறந்துள்ளனர் என ஐ.நா. கூறுகிறது.

ஆதாரம் : AFP

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...