Thursday, 16 May 2013

Catholic News in Tamil - 15/05/13

1. மக்களுக்குப் பணிபுரிவதே ஆயர்களுக்கும், அருள் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள முதன்மையான கடமை - திருத்தந்தை பிரான்சிஸ்

2. மும்பை உயர்மறைமாவட்டத்திற்கு இரு துணை ஆயர்கள் நியமனம்

3. வெனிஸ் நகரில் நடைபெறும் அகில உலக கலைக் கண்காட்சியில் திருப்பீடமும் பங்கேற்கும் - வத்திக்கான் உயர் அதிகாரி

4. தொடர்ந்து வளர்ந்துவரும் தீவிரவாத சக்தி மனித குலத்திற்கே பெரும் அவமானம் - வத்திக்கான் உயர் அதிகாரி

5. கத்தோலிக்கத் திருஅவையிலும் ஆங்கிலிக்கன் சபையிலும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகளில் தூய ஆவியாரின் வழிநடத்துதலைக் காண முடிந்தது - வியன்னா பேராயர்

6. Boko Haram போன்ற தீவிரவாதக் குழுக்களை அடக்க நைஜீரிய அரசு தயங்குகிறது - ஆயர் Stephen Dami Mamza

7. குழந்தைகளைத் தாக்கும் நோய் கிருமிகளை அழிக்கும் விலை குறைவான ஒரு மருந்தை இந்தியா கண்டுபிடித்துள்ளது

8. மாலியின் மறுசீரமைப்புக்கு ஐரோப்பிய நாடுகள் 52 கோடி யூரோக்கள் வழங்க திட்டம்

------------------------------------------------------------------------------------------------------

1. மக்களுக்குப் பணிபுரிவதே ஆயர்களுக்கும், அருள் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள முதன்மையான கடமை - திருத்தந்தை பிரான்சிஸ்

மே,15,2013. திருஅவையில் ஆயராகவோ, அருள் பணியாளராகவோ பணிபுரிவோர் அவரவர் சுய இலாபங்களுக்காகப் பணி புரிபவர்கள் அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இப்புதன் காலையில் புனித  மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் வத்திக்கான் வானொலி பணியார்களின் ஒரு குழுவினருக்குத் திருப்பலியாற்றிய திருத்தந்தை, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
திருத்தூதர் பணிகள் 20ம் பிரிவில், எபேசு நகர் மூப்பர்களுக்கு புனித பவுல் அடியார் அளித்த பிரியாவிடை உரையை தன் மறையுரையின்  மையமாக்கியத் திருத்தந்தை, மக்களுக்குப் பணிபுரிவது ஒன்றே ஆயர்களுக்கும், அருள் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள முதன்மையான கடமை என்பதை வலியுறுத்தினார்.
தன் தேவைகளுக்கு, தானே உழைத்த புனித பவுல் அடியாரை எடுத்துக்காட்டாகக் கூறியத் திருத்தந்தை, பணம், புகழ், பதவி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாடுபடும் திருஅவைப் பணியாளர்கள் இறைவனின் உண்மையான பணியாளர்கள் அல்ல என்பதையும் தெளிவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. மும்பை உயர்மறைமாவட்டத்திற்கு இரு துணை ஆயர்கள் நியமனம்

மே,15,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மும்பை உயர்மறைமாவட்டத்திற்கு இரு துணை ஆயர்களை இப்புதனன்று நியமித்துள்ளார்.
மும்பை உயர்மறை மாவட்டத்தின் Chancellor ஆகப் பணியாற்றிவரும் அருள் பணியாளர் Dominic Savio Fernandes அவர்களையும், Goregaonல் உள்ள புனித பத்தாம் பத்திநாதர் குருத்துவக் கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றிவரும் அருள் பணியாளர் John Rodrigues அவர்களையும் துணை ஆயர்களாக திருத்தந்தை நியமித்துள்ளார்.
இந்த நியமனங்கள் உரோம் நேரம் 12 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. வெனிஸ் நகரில் நடைபெறும் அகில உலக கலைக் கண்காட்சியில் திருப்பீடமும் பங்கேற்கும் - வத்திக்கான் உயர் அதிகாரி

மே,15,2013. இவ்வாண்டு ஜூன் மாதம் 1ம் தேதி முதல், நவம்பர் மாதம் 24ம் தேதி முடிய இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெறவிருக்கும் 55வது அகில உலக கலைக் கண்காட்சியில் திருப்பீடமும் பங்கேற்கும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஈராண்டுகளுக்கு ஒரு முறை வெனிஸ் நகரில் நடைபெறும் இந்த அகில உலக கலைக் கண்காட்சியில், திருப்பீடத்தின் சார்பில் உருவாக்கப்படும் கலைப் படைப்புக்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று திருப்பீட கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
'தொடக்கத்தில்' என்ற வார்த்தையைத் தலைப்பாகக் கொண்டு, விவிலியத்தின் முதல் நூலான தொடக்க நூலின் முதல் 11 பிரிவுகளை மையப்படுத்தி உருவாக்கப்படும் கலைப் படைப்புக்கள், இந்த கண்காட்சியில் வைக்கப்படும் என்று கர்தினால் Ravasi கூறினார்.
மிலான் நகரில் திருப்பீடம் தெரிவு செய்துள்ள Studio Azzuro என்ற கலை நிறுவனம், தன் புகைப்படங்கள், கணனிவழி ஓவியங்கள் வழியாக இந்தப் படைப்புக்களை உருவாக்கும் என்றும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆதாரம் : Zenit / VIS

4. தொடர்ந்து வளர்ந்துவரும் தீவிரவாத சக்தி மனித குலத்திற்கே பெரும் அவமானம் - வத்திக்கான் உயர் அதிகாரி

மே,15,2013. தீவிரவாதம் அடிப்படையில் மனித உயிரையும், மனித மாண்பையும் துச்சமாக மதிப்பதால், தொடர்ந்து வளர்ந்துவரும் இந்த அழிவு சக்தி மனித குலத்திற்கே பெரும் அவமானம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
'ஆப்ரிக்காவில் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் - அகில உலகில் அமைதியை நிலைநாட்டுதல்' என்ற தலைப்பில் ஆப்ரிக்காவின் Togo நாடு ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில், திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராக ஐ.நா.வில் பணியாற்றும் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
உலகெங்கும், முக்கியமாக ஆப்ரிக்க நாடுகளில் அண்மைக் காலங்களாக வெகு விரைவில் தீவிர வாதம் வளர்ந்துள்ளதைக் கண்டனம் செய்யவும், தடுத்து நிறுத்தவும் உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று பேராயர் சுள்ளிக்காட் கூறினார்.
உயிர்களை அழிக்கும் தீவிரவாத முயற்சிகளைத் தடுக்கவும், உயிர்களை மதிக்கவும், பேணிக் காக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஆதரிக்கவும் திருஅவை என்றும் உறுதியாக உள்ளது என்பதையும் பேராயர் சுள்ளிக்காட் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. கத்தோலிக்கத் திருஅவையிலும் ஆங்கிலிக்கன் சபையிலும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகளில் தூய ஆவியாரின் வழிநடத்துதலைக் காண முடிந்தது - வியன்னா பேராயர்

மே,15,2013. கத்தோலிக்கத் திருஅவையிலும் ஆங்கிலிக்கன் சபையிலும் அண்மையக் காலங்களில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகளில் தூய ஆவியாரின் வழிநடத்துதலைத் தெளிவாக காண முடிந்தது என்று வியன்னா பேராயர் கர்தினால் Christoph Schönborn கூறினார்.
இலண்டனில் இச்செவ்வாயன்று ஆங்கிலிக்கன் சபையினர் நடத்திய ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் Schönborn, கத்தோலிக்கத் திருஅவையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டதிலும், Canterbury பேராயராக Justin Welby அவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டதிலும் தூய ஆவியாரின் செயல்பாட்டை எளிதில் காண முடிகிறது என்று கூறினார்.
கான்கிளேவ் அவையில் தான் பங்கேற்கச் செல்வதற்கு முன்னர் பொது நிலையினர் இருவரை தான் சந்தித்ததைக் குறித்துப் பேசிய கர்தினால் Schönborn, அவர்களே தன் மனதில் கர்தினால் Borgoglio அவர்களின் பெயரைப் பதித்தனர் என்பதையும் எடுத்துரைத்தார்.
இவ்விரு தலைவர்களின் தேர்தலிலும் உறுதுணையாக இருந்த தூய ஆவியார், இவ்விரு சபைகளையும் இன்னும் கிறிஸ்தவ ஒன்றிப்பில் ஆழப்படுத்துவார் என்ற தன் நம்பிக்கையையும் கர்தினால் Schönborn தன் உரையில் வெளியிட்டார்.

ஆதாரம் : The Telegraph

6. Boko Haram போன்ற தீவிரவாதக் குழுக்களை அடக்க நைஜீரிய அரசு தயங்குகிறது - ஆயர் Stephen Dami Mamza

மே,15,2013. Boko Haram போன்ற தீவிரவாதக் குழுக்களை அடக்குவதற்கு நைஜீரிய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்குகிறது என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
2015ம் ஆண்டு வரவிருக்கும் தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடன், நைஜீரிய அரசின் ஆளும் கட்சியும், அரசுத் தலைவர் Goodluck Jonathan அவர்களும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க தேவையான முடிவுகளை எடுக்கத் தயங்குகின்றனர் என்று Yola மறைமாவட்ட ஆயர் Stephen Dami Mamza கூறினார்.
நைஜீரிய நாட்டில் அவசரகால அறிக்கையொன்றை அரசு வெளியிட்டு, போர்கால அடிப்படையில் செயல்பாடுகளில் இறங்க வேண்டும் என்று ஆயர் Mamza, Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பிற்கு அளித்த பேட்டியொன்றில் எடுத்துரைத்தார்.
2015ம் ஆண்டு தேர்தலில் வென்றுவிட வேண்டுமென்று அரசு தன் செயல்பாடுகளை நிறுத்தினால், Boko Haram போன்ற தீவிரவாத குழுக்களின் பிடியில் முழு நாடும் சிக்கிவிடும் ஆபத்து உள்ளது என்று ஆயர் Mamza தன் கவலையை வெளியிட்டார்.

ஆதாரம் : ICN / ACN

7. குழந்தைகளைத் தாக்கும் நோய் கிருமிகளை அழிக்கும் விலை குறைவான ஒரு மருந்தை இந்தியா கண்டுபிடித்துள்ளது

மே,15,2013. உலகின் பல நாடுகளிலும் குழந்தைகளைத் தாக்கும் நோய் கிருமிகளை அழிக்கும் ஒரு மருந்தை விலை குறைவான வழியில் உருவாக்கும் முறையை இந்தியா கண்டுபிடித்துள்ளது.
சுத்தமற்ற சூழலில் வாழும் இலட்சக்கணக்கான குழந்தைகள், வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் நீரற்று போகும் நிலை ஆகிய குறைபாடுகளால் ஆண்டுதோறும் இறக்கின்றனர். இத்தகையச் சூழல் ஆசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன.
இக்குறையைத் தடுக்கும் Rotavac என்றழைக்கப்படும் மருந்தை 54 ரூபாய் விலை அளவில் உருவாக்கும் வழிகளை இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள Bharat Biotech என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இதே போன்ற தடுப்பு மருந்தை பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களான GlaxoSmithKline மற்றும் Merck போன்ற நிறுவனங்கள் 1000 ரூபாய் என்ற விலை அளவில் விற்கின்றன.
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இந்நோயினால் இறக்கின்றனர் என்றும், விலை மலிவான இந்த மருந்தால், பல இலட்சம் குழந்தைகளின் உயிர்களைக் காக்க முடியும் என்றும், இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி Vijay Raghavan செய்தியாளர்களிடம் கூறினார்.
Rotavac மருந்தைத் தயாரிக்கும் உரிமம் இன்னும் எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் இந்த நிறுவனத்துக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருந்தை தஙகளால் பெரிய அளவில் தயாரிக்க முடியும் என்று Raghavan கூறினார்.

ஆதாரம் : BBC

8. மாலியின் மறுசீரமைப்புக்கு ஐரோப்பிய நாடுகள் 52 கோடி யூரோக்கள் வழங்க திட்டம்

மே,15,2013 மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி, கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மற்றும் உள்நாட்டுக் கலவரங்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவ்வாண்டு ஜனவரி மாதம் பிரான்ஸ் அரசு, மாலி அரசிற்கு உதவுவதற்காக தனது படைகளை அந்நாட்டிற்கு அனுப்பியது. இஸ்லாமியப் புரட்சியாளர்கள் கைப்பற்றியிருந்த தலைநகர் Bamako மற்றும் சில முக்கிய நகரங்களை பிரான்ஸ் அரசு மீட்டு, மாலி அரசிடம் ஒப்படைத்தது.
மேலும் ஐரோப்பிய கூட்டமைப்பின் இராணுவ வீரர்கள் உதவியுடன் நாட்டில் அமைதியை நிலைநாட்டி, வருகின்ற ஜூலை மாதம் தேர்தல் நடக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே, மாலியின் வளர்ச்சி குறித்த ஒரு மாநாடு பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் அண்மையில் நடைபெற்றது.
சர்வதேச நன்கொடையாளர்களுடன் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில், மாலியின் மறுசீரமைப்பிற்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் 52 கோடி யூரோக்கள் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அரசு அலுவலகங்களையும், இராணுவத்தையும் புதுப்பித்தல், பாழடைந்த கட்டமைப்பு வசதிகளை சீராக்குதல், அரசுத்தலைவர் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துதல், வடக்கில் உள்ள புரட்சியாளர்களுடன் அமைதியை நிலை நிறுத்துதல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துதல் போன்ற பல திட்டங்களுக்கு உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாலி நாட்டின் அரசுத்தலைவர் Dioncounda Traoré, இந்த உதவி ஒரு நல்ல ஆரம்பமாக விளங்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : Businessweek

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...