Monday, 13 May 2013

Catholic News in Tamil - 13/05/13


1. தூய ஆவியார் அதிகம் அறியப்படாத, அல்லது அதிகம் மறக்கப்பட்ட இறைவனாக விளங்குகிறார் - திருத்தந்தை

2. கொலம்பியா நாட்டு அரசுத்தலைவர் Santos Calderón, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு

3. புனிதர்பட்ட திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

4. திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை

5. திருஅவையின் புள்ளிவிவரப்புத்தகம் வெளீயிடப்பட்டது

6. கேரள இளையோரின் இலக்கிய ஆர்வத்தைத் தூண்ட கேரள திருஅவையின் கருத்தரங்கு

7. யாழ். குருநகர் கார்மேல் மாதா ஆலயம் இடி மின்னல் தாக்கி தரைமட்டம்!


------------------------------------------------------------------------------------------------------

1. தூய ஆவியார் அதிகம் அறியப்படாத, அல்லது அதிகம் மறக்கப்பட்ட இறைவனாக விளங்குகிறார் - திருத்தந்தை

மே,13,2013. நம் நம்பிக்கை வரலாற்றையும், இறைவனிடமிருந்து நாம் பெறும் கொடைகளையும் நினைவுறுத்தும் தூய ஆவியாரின் அருளின்றி, நாம் சிலை வழிபாட்டில் ஈடுபடும் ஆபத்து உள்ளதென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
"தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்று கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே" என்று திருத்தூதர் பணிகள் நூலில் (19 : 2) எபேசு சீடர்கள் புனித பவுல் அடியாரிடம் கூறிய வார்த்தைகளை மையப்படுத்தி, இத்திங்கள் காலை புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கியத் திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.
கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமான மூவொரு கடவுள் என்ற மறையுண்மையில், தூய ஆவியார் அதிகம் அறியப்படாத, அல்லது அதிகம் மறக்கப்பட்ட இறைவனாக விளங்குகிறார் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
இறைவனையும் அவர் வழங்கும் கொடைகளையும் மறந்துவிட்டு வாழும் நமக்கு மீண்டும் இவற்றை நினைவுறுத்தி வழிநடத்துபவர் தூய ஆவியாரே என்றும், இவரை மறந்து வாழ்வது இறைவனை சிலையாக மட்டுமே காணும் ஓர் ஆபத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் என்றும் திருத்தந்தை தன் மறையுரையில் விளக்கினார்.
"என் தினசரி வாழ்வில் கிறிஸ்துவுக்கு நான் நம்பிக்கையுள்ள மனிதராக வாழ்கிறேனா? மதிப்போடும், அதேநேரம், துணிவோடும் என் நம்பிக்கையை மற்றவர்களுக்கு 'வெளிக்காட்ட' என்னால் முடிகிறதா?" என்ற கேள்விகள் அடங்கிய Twitter செய்தியை இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எட்டு மொழிகளில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கொலம்பியா நாட்டு அரசுத்தலைவர் Santos Calderón, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு

மே,13,2013. கொலம்பியா நாட்டு அரசுத்தலைவர் Juan Manuel Santos Calderón அவர்களை இத்திங்கள் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்தில் வரவேற்று உபசரித்தார்.
சுமுகமானச் சூழலில் நடைபெற்ற இச்சந்திப்பில், முதல் கொலம்பிய புனிதரான அன்னை Laura Montoya Upegui அவர்களைப் பற்றியும், கொலம்பிய நாட்டில் பல நூற்றாண்டுகளாக வேரூன்றியுள்ள கிறிஸ்தவ நம்பிக்கையின் வரலாறும் பேசப்பட்டன என்று வத்திக்கான் செய்தி அலுவலகம் கூறியது.
கொலம்பிய அரசு சந்திக்கும் பல்வேறு சவால்கள் குறித்தும், சிறப்பாக, அந்நாட்டின் முழுமையான முன்னேற்றத்திற்கு இளையோர் அளிக்கக்கூடிய பங்கு குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.
திருத்தந்தையைச் சந்தித்தபின், கொலம்பிய அரசுத் தலைவர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. புனிதர்பட்ட திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

மே,13,2013.  முத்திப்பேறுபெற்ற Antonio Primaldo மற்றும் அவரோடு சேர்ந்த 800 மறைசாட்சிகள், முத்திப்பேறுபெற்ற Laura Montoya, முத்திப்பேறுபெற்ற Maria Guadalupe García Zavala ஆகியோரை இஞ்ஞாயிறன்று புனிதர்கள் என அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திருப்பலியை இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நிகழ்த்திய‌ திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் பலபகுதிகளில் இன்றும் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் மக்கள், தீமைகளுக்கு நன்மையால் பதிலுரை வழங்க தேவையான மனவுறுதியை இறைவன் வழங்கவேண்டும் என இறைஞ்சுவோம் என தன் மறையுரையின்போது குறிப்பிட்டார்.
நம் கிறிஸ்தவ சமூகங்களையும் இதயங்களையும் சுயநலக் கோட்பாடுகள் அரித்துச் செல்கின்றன என்ற திருத்தந்தை, நோயாளிகள், ஏழைகள் மற்றும் இறக்கும்தருவாயில் இருப்போரைத் தொட்டு பணியாற்றுவது என்பது  இயேசுவின் உடலையேத் தொடுவதற்கு ஒப்பாகும் என்றார்.
பிற‌ர‌ன்பின் சாட்சிய‌ங்க‌ள் இல்லாத‌ ம‌றைசாட்சிய‌ வாழ்வுகூட‌ கிறிஸ்த‌வ‌ சுவையை, அத‌ன் முக்கிய‌த்துவ‌த்தை இழ‌ந்துவிடும் என‌வும் கூறினார் திருத்த‌ந்தை.
முத்திப்பேறுபெற்ற Antonio Primaldo மற்றும் அவரோடு சேர்ந்த 800 மறைசாட்சிகளும் இசுலாமுக்கு மதம் மாற மறுத்ததால் 1480ம் ஆண்டில் தென் இத்தாலியில் Otranto என்ற சிறிய துறைமுக நகரில் ஒட்டமான் படைகளால் கொல்லப்பட்டவர்கள்.
கொலம்பிய நாட்டின் முத்திப்பேறுபெற்ற Laura Montoya, அந்நாட்டின் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தவர். இவர் கொலம்பியாவின் முதல் புனிதராகிறார்.
மெக்சிகோ நாட்டு முத்திப்பேறுபெற்ற Maria Guadalupe García Zavala, புனித மார்கிரேட் மேரி மற்றும் ஏழைகளின் பணியாளர் சபையைத் தோற்றுவித்தவர். இவர் தனது 85வது வயதில், 1963ம் ஆண்டு இறந்தார்.
இத்தாலி, கொலம்பியா, மெக்சிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த இவர்கள் புனிதர்கள் என அறிவிக்கப்பட்ட இத்திருப்பலியில், இத்தாலிய நீதித்துறை அமைச்சர் Anna Maria Cancellieri தலைமையில் 6 பேர், கொலம்பிய அரசுத்தலைவர் Juan Manuel Santos Calderon தலைமையில் 20 பேர், மெக்சிகோவின் சமய விவகாரத்துறையின் இயக்குனர் Roberto Herrera Mena தலைமையில் ஒரு குழுவினர் உட்பட பல்லாயிரக்கணக்கான விசுவாசிகள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை

மே,13,2013. தாயின் கருவில் உருவானது முதல், மனித உயிர், மாண்புடன் மதிக்கப்பட்டு காப்பாற்றப்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
இஞ்ஞாயிறு திருப்பலியின் இறுதியில், அவ்வாளகத்தில் கூடியிருந்த அனைவருக்கும் நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, அதே ஞாயிறன்று உரோம் நகரில் வாழ்விற்கான ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டதையும், கருவில் வளரும் குழந்தைகளுக்கு சட்ட பாதுகாப்பு வேண்டி இத்தாலியின் பங்கு தளங்களில் கையெழுத்து திரட்டும் பிரச்சாரம் இடம்பெற்று வருவதையும் குறிப்பிட்டு, வாழ்வை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
நம்பிக்கை ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அடுத்த மாதம், அதாவது ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் 'Evangelium Vitae நாள்' என்ற பெயரில் வத்திக்கானில் மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது குறித்தும் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது எடுத்துரைத்த திருத்தந்தை, இது மனித வாழ்வின் புனிதத்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் சிறப்புக்கவனம் செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான தருணமாக இருக்கும் என மேலும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருஅவையின் புள்ளிவிவரப்புத்தகம் வெளீயிடப்பட்டது

மே,13,2013.  உலகில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க மாற்றமின்றி, 121 கோடியே 40 இலட்சமாக இருப்பதாக இத்திங்களன்று திருப்பீடத்தில் வெளியிடப்பட்ட ஆண்டு புள்ளிவிவரப் புத்தகம் தெரிவிக்கிறது.
2010ம் ஆண்டில் 119 கோடியே 60 இலட்சமாக இருந்த கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, 2011ம் ஆண்டில் 121 கோடியே 40 இலட்சமாக உயர்ந்தது, 1.5 விழுக்காட்டு வளர்ச்சியைக் குறிக்கின்றது எனக் கூறும் திரு அவையின் புள்ளிவிவரம், இக்காலக்கட்டத்தில் உலக மக்கள்தொகை வளர்ச்சி 1.23 விழுக்காடாக இருந்தது எனவும் தெரிவிக்கிறது.
உலக மக்கள்தொகையில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 17.5 விழுக்காடாக உள்ளது. 2011ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, மொத்த கத்தோலிக்கர்களுள் 48.8 விழுக்காட்டினர் அமெரிக்கக்கண்டத்திலும், 23.5 விழுக்காட்டினர் ஐரோப்பாவிலும், 16 விழுக்காட்டினர் ஆப்ரிக்காவிலும், 10.9 விழுக்காட்டினர் ஆசியாவிலும், 0.8 விழுக்காட்டினர் ஓசியானியாவிலும் உள்ளனர்.
உலகில் கத்தோலிக்க ஆயர்களின் எண்ணிக்கை 2010ம் ஆண்டில் 5104 ஆக இருந்தது 2011ல் 5132 ஆகவும், குருக்களின் எண்ணிக்கை 2001ம் ஆண்டு இறுதியில் 4இலட்சத்து 5ஆயிரத்து 67ஆக இருந்தது 2011ம் ஆண்டு இறுதியில் 4இலட்சத்து 13ஆயிரத்து 418 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நிரந்தர தியாக்கியோன்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது எனக்கூறும் இப்புள்ளிவிவர புத்தகம், பெண்துறவிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 10 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. 2001ம் ஆண்டு 7இலட்சத்து 92ஆயிரமாக இருந்த பெண் துறவறத்தாரின் எண்ணிக்கை 2011ம் ஆண்டில் 7 இலட்சத்து 13 ஆயிரமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, மறைமாவட்ட மற்றும் துறவுசபைகளின் குருத்துவக்கல்லூரிகளில் குருவாவதற்கு பயிற்சிபெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2001ம் ஆண்டு ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 244 ஆக இருந்தது 2011ம் ஆண்டில் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 616 ஆக, அதாவது 7.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. கேரள இளையோரின் இலக்கிய ஆர்வத்தைத் தூண்ட கேரள திருஅவையின் கருத்தரங்கு

மே,13,2013. கேரள இளையசமுதாயத்தில் விவிலியம் குறித்த ஆர்வத்தை அதிகரிக்கவும், அவர்களின் இலக்கிய ஆர்வத்தை தூண்டவும் திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்த உள்ளது கேரள திருஅவை.
15 முதல் 20 வயதிற்குட்பட்ட இளையோருக்கென கொச்சியின் மேய்ப்புப்பணி மையத்தில் இம்மாதம் 23ம் தேதி இரண்டு நாள் கருத்தரங்கை துவக்கி வைக்க உள்ளார் பேராயர் பிரான்சிஸ் கல்லரக்கல்.
இக்கருத்தரங்கில் ஏழுக்கும் மேற்பட்ட கேரள எழுத்தாளர்கள் கத்தோலிக்க இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்க உள்ளனர்.
கத்தோலிக்க இளையோரிடையே ஓவியத்திறமையை அதிகரிக்கும் நோக்கில்  கடந்த ஆண்டு கேரள ஆயர்பேரவை, கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் - UCAN

7. யாழ். குருநகர் கார்மேல் மாதா ஆலயம் இடி மின்னல் தாக்கி தரைமட்டம்!

மே,13,2013. யாழ்ப்பாணம், குருநகரில் அமைந்துள்ள கார்மேல் மாதா தேவாலயம் இத்திங்கள் காலை மின்னல் தாக்கி இடிந்து சேதமடைந்துள்ளது.
யாழில் காலநிலை மாற்றம் காரணமாக மழையும் இடிமின்னலும் தொடர்ந்த வண்ணம் உள்ளதால், திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்த வேளை இந்த ஆலயம் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது
இந்த ஆலய முகப்பில் இருந்த கார்மேல் மாதாவின் முகம் மின்னல் காரணமாக சிதைவடைந்துள்ளது.  மாதா கையில் ஏந்தியிருந்த பாலன் இயேசுவுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை
இந்த ஆலயத்தின் பெருவிழா வரும் ஜூலை மாதம் 16ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் - TamilWin

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...