Sunday, 12 May 2013

Catholic News in Tamil - 11/05/13


1. திருத்தந்தை பிரான்சிஸ் : உண்மையான செபம் தேவையில் இருப்போருக்கு நம்மைத் திறக்க வைக்கின்றது

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கம்

3. 800க்கும் மேற்பட்ட புதிய புனிதர்கள்

4. இயேசு சபைத் தலைவர் : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்கள் இயேசு சபையின் ஆன்மீகத்தை வெளிப்படுத்துகின்றன

5. கிறிஸ்தவர்கள் காஷ்மீரைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது அதன் கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும், ஓர் இசுலாமியர்

6. உணவுப் பாதுகாப்பில் வனங்களின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது ஐ.நா.கருத்தரங்கு

7. இந்தியாவில் 35 தாதியருக்கு விருது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : உண்மையான செபம் தேவையில் இருப்போருக்கு நம்மைத் திறக்க வைக்கின்றது

மே,11,2013. உண்மையான செபம், நம்மை நம்மிலிருந்து வெளியே வரச்செய்து வானகத்தந்தைக்கும் தேவையில் இருப்போருக்கும் நம்மையே வழங்க வைக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என்று இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய இந்நாளின் நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவின் வார்த்தைகளைச் சிந்திக்கும்போது செபத்தில் ஒரு புதியகூறு தெரிகின்றது என்று கூறினார்.
தந்தை நமக்கு எல்லாவற்றையும் தருவார், ஆனால் அவற்றை எப்போதும் இயேசுவின் பெயரில்.. என்றுரைத்த திருத்தந்தை, தந்தையிடம் செல்லும் ஆண்டவர் விண்ணகத் திருத்தலத்தில் நுழைந்து கதவுகளைத் திறக்கிறார், அவற்றை எப்போதும் திறந்தே வைக்கிறார், ஏனெனில் அவரே கதவு மற்றும் அவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்று கூறினார்.
பல நேரங்களில் செபத்தில் நமக்குச் சோர்வு ஏற்படுகின்றது, ஆண்டவரே, இதைக் கொடு, அதைக்கொடு என்று கேட்பது செபமல்ல, ஆனால் செபம் என்பது இயேசு தந்தையிடம் நமக்காகப் பரிந்து பேசுவது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவின் பெயரால் தந்தையிடம் செபிப்பது நம்மிலிருந்து நம்மை வெளியே வரச் செய்கின்றது என்றும் கூறினார்.
இச்சனிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை நிகழ்த்திய திருப்பலியில் வத்திக்கான் காவல்துறையினரும், அர்ஜென்டினா நாட்டு சில ஊடகத்துறையினரும் அவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கம்

மே,11,2013. பிறரைப் புத்தம்புதிய கண்களோடு பார்க்கவும், இயேசுவில் அவர்களை எப்போதும் சகோதர சகோதரிகளாக நோக்கவும், அவர்கள் மதிக்கப்படவும் அன்புசெய்யப்படவும் வேண்டியவர்கள் என்று உணரவும்  தூய ஆவி நமக்கு உதவி செய்கிறார்
இவ்வாறு இவ்வெள்ளிக்கிழமை இரவில் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், உரோம் Pio XI மருத்துவமனைக்கு இச்சனிக்கிழமை முற்பகலில் திடீரெனச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ், அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கர்தினால் Javier Lozano Barragánஐ சந்தித்து நலம் விசாரித்தார். அம்மருத்துவமனையின் பணியாளர்களையும் சந்தித்து வாழ்த்தினார் திருத்தந்தை.
கடந்த சனவரி 26ம் தேதியன்று தனது 80வது வயதை நிறைவுசெய்த மெக்சிகோ நாட்டுக் கர்தினால் Barragán, திருப்பீட நலவாழ்வு அவையின் முன்னாள் தலைவராவார்.
இன்னும், இவ்வெள்ளிக்கிழமையன்று, CCEE என்ற ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர் கர்தினால் Peter Erdo மற்றும் அக்கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து பல விவகாரங்கள் குறித்து கலந்து பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சமய சுதந்திரம், கிறிஸ்தவர்களுக்கு எதிரான சகிப்பற்றதன்மை உட்பட பல விவகாரங்கள் இச்சந்திப்பில் இடம்பெற்றதாக அக்கூட்டமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான Susy Hodges நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. 800க்கும் மேற்பட்ட புதிய புனிதர்கள்

மே,11,2013.  முத்திப்பேறுபெற்ற Antonio Primaldo மற்றும் அவரோடு சேர்ந்த 800 மறைசாட்சிகள், முத்திப்பேறுபெற்ற Laura Montoya, முத்திப்பேறுபெற்ற Maria Guadalupe García Zavala ஆகியோரை இஞ்ஞாயிறன்று புனிதர்கள் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலி, கொலம்பியா, மெக்சிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த இவர்கள் புனிதர்கள் என அறிவிக்கப்படவிருக்கும் திருப்பலியில், இத்தாலிய நீதித்துறை அமைச்சர் Anna Maria Cancellieri தலைமையில் 6 பேர், கொலம்பிய அரசுத்தலைவர் Juan Manule Santos Calderon தலைமையில் 20  பேர், மெக்சிகோவின் சமய விவகாரத்துறையின் இயக்குனர் Roberto Herrera mena தலைமையில் ஒரு குழுவினர் உட்பட பல்லாயிரக்கணக்கான விசுவாசிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இத்திருப்பலியை இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நிகழ்த்தவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முத்திப்பேறுபெற்ற Antonio Primaldo மற்றும் அவரோடு சேர்ந்த 800 மறைசாட்சிகளும் இசுலாமுக்கு மதம் மாற மறுத்ததால் 1480ம் ஆண்டில் தென் இத்தாலியில் Otranto என்ற சிறிய துறைமுக நகரில் ஒட்டமான் படைகளால் கொல்லப்பட்டவர்கள்.
கொலம்பிய நாட்டின் முத்திப்பேறுபெற்ற Laura Montoya அந்நாட்டின் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தவர். சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ள மக்களை முன்னேற்றவதற்கென ஒரு துறவு சபையையும் ஆரம்பித்த Laura Montoya கொலம்பியாவின் முதல் புனிதராக விளங்கவுள்ளார்.
மெக்சிகோ நாட்டு முத்திப்பேறுபெற்ற Maria Guadalupe García Zavala, புனித மார்கிரேட் மேரி மற்றும் ஏழைகளின் பணியாளர் சபையைத் தோற்றுவித்தவர். இவர் தனது 85வது வயதில் 1963ம் ஆண்டு இறந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. இயேசு சபைத் தலைவர் : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்கள் இயேசு சபையின் ஆன்மீகத்தை வெளிப்படுத்துகின்றன

மே,11,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்கள்  அவரை 100 விழுக்காடு இயேசு சபை துறவியாக வெளிப்படுத்துகின்றன என்று இயேசு சபைத் தலைவர் அருள்தந்தை Adolfo Nicolás கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது உலகளாவிய இயேசு சபையினர் உட்பட பலருக்கு வியப்பைத் தந்தது என்று ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த அருள்தந்தை Nicolás, இத்திருத்தந்தையின் நடவடிக்கைகளில் அவர் சார்ந்துள்ள இயேசு சபையின் ஆன்மீகத்தைக் காண முடிகின்றது என்று கூறினார்.
இயேசு சபையைச் சார்ந்தவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அச்சபையின் உறுப்பினர்கள் மீது எந்த எதிர்விளைவுகளையும் கொண்டிருக்கவில்லை என்றும் அருள்தந்தை Nicolás கூறினார்.
ஏழ்மை வார்த்தைப்பாடு இயேசு சபையினருக்கு எப்போதும் முக்கிய கோட்பாடாக இருந்தாலும், இச்சமயத்தில் திருஅவைக்குள்  இக்கருத்து முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது எனவும் தெரிவித்தார் இயேசு சபைத் தலைவர் அருள்தந்தை Adolfo Nicolás.

ஆதாரம் : Romereports

5. கிறிஸ்தவர்கள் காஷ்மீரைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது அதன் கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும், ஓர் இசுலாமியர்

மே,11,2013. காஷ்மீர் பள்ளத்தாக்கைவிட்டு அனைத்துக் கிறிஸ்தவ மறைபோதகர்களும் வெளியேற வேண்டும், இல்லையெனில் அதனால் ஏற்படும் விளைவுகளால் துன்புற வேண்டியிருக்கும் என்று ஓர் இசுலாமியத் தீவிரவாத அமைப்பின் பேச்சாளர் எச்சரித்துள்ளார் என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் கிறிஸ்தவர்கள், அங்கு வாழும் ஏழைகளுக்குப் பொருளாதார உதவிகளைச் செய்து அவர்களை மதம் மாற்றுகின்றனர் எனக் குற்றம் சாட்டியுள்ளார், ஜம்மு-காஷ்மீர் ஜிகாத் குழுக்களில் ஒன்றான, ஒன்றிணைந்த ஜிகாத் கழகத்தின் பேச்சாளர் Sadagat Hussain Syed.
Sadagat விடுத்துள்ள இந்த எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அனைத்திந்திய கிறிஸ்தவர்களின் உலக அமைப்பின் தலைவர் Sajan George, கிறிஸ்தவர்கள் வாழ்ந்துவரும் நெருக்கடியான சூழலை இது காட்டுகின்றது எனத் தெரிவித்தார்.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான சகிப்பற்றதன்மை வளர்ந்து வருவது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள Sajan George, விவிலியங்களையும், கிறிஸ்தவம் சார்ந்த பொருள்களையும் விநியோகித்தற்காக இரு தென்கொரியர்கள் ஒரு கூட்டத்தினரால் அடிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews                 

6. உணவுப் பாதுகாப்பில் வனங்களின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது ஐ.நா.கருத்தரங்கு

மே,11,2013. வனங்களில் காணப்படும் பறவைகள், விலங்குகள், மரங்கள், போன்றவை, உலகில் உணவுப் பாதுகாப்பையும் ஊட்டச்சத்தையும் மேம்படுத்துவதில் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்று FAO எனப்படும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கூறியது.
FAO நிறுவனத்தின் உரோம் தலைமையகத்தில் வருகிற திங்கள் முதல் புதன் வரை நடைபெறவிருக்கின்ற உணவுப் பாதுகாப்பு குறித்த அனைத்துலக கருத்தரங்கையொட்டி செய்தி வெளியிட்ட அந்நிறுவனம், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பழங்குடி இன கலாச்சாரங்கள் உட்பட ஏறக்குறைய 160 கோடிப்பேர் தங்கள் வாழ்வுக்கு காடுகளை நம்பியிருக்கின்றனர் என்று கூறியது.
உலகின் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருக்கும்வேளை, இவை மதிப்பிடமுடியாத சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நலன்களை வழங்குகின்றன என்றும் FAO நிறுவனம் தெரிவித்தது.
உலகில் கிடைக்கும் சுத்தமான நீரில் நான்கில் மூன்று பகுதிக்கு காடுகளே காரணம் என்றும், 300 கோடிக்கு மேற்பட்ட மக்கள் அடுப்பெரிக்கவும், வீடுகளை வெப்பப்படுத்தவும் தேவையான விறகுகளுக்குக் காடுகளைச் சார்ந்துள்ளனர் என்றும் அந்நிறுவனம் கூறியது.
ஆதாரம் : UN                             

7. இந்தியாவில் 35 தாதியருக்கு விருது

மே,11,2013. இந்தியாவில் சிறப்பாகப் பணியாற்றிய தாதியர்களைக் கவுரவிக்கும் விதமாக, அனைத்துலக தாதியர் தினமான இஞ்ஞாயிறன்று 35 தாதியர்களுக்கு விருது வழங்கவுள்ளார் இந்தியக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி.
தேசிய Florence Nightingale என்ற இவ்விருது, தங்களது பணிகளில் மிகுந்த அர்ப்பணத்தோடும், நேர்மையோடும், பரிவோடும் பணிசெய்த தாதியருக்கு அனைத்துலக தாதியர் தினமான மே 12ம் தேதியன்று ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இந்திய நலவாழ்வு அமைச்சகம் 1973ம் ஆண்டில் இவ்விருதை உருவாக்கியது. 50 ஆயிரம் ரூபாய் காசோலை, ஒரு சான்றிதழ், ஒரு பதக்கம் ஆகியவற்றைக் கொண்ட இவ்விருதை இதுவரை 237 தாதியர் பெற்றுள்ளனர். இஞ்ஞாயிறன்று மேலும் 35 தாதியர் பெறவுள்ளனர்.
1820ம் ஆண்டு மே 12ம் தேதி பிறந்த Florence Nightingale, நவீன தாதியர் மருத்துவத்தின் நிறுவனராவார். 1965ம் ஆண்டிலிருந்து அனைத்துலக தாதியர் கழகம் Nightingaleன் பிறந்தநாளை அனைத்துலக தாதியர் தினமான கடைப்பிடித்து வருகிறது.

ஆதாரம் : UCAN                       

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...