Sunday, 12 May 2013

Catholic News in Tamil - 10/05/13


1. காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் : உரையாடல் முழு ஒன்றிப்புக்கு வழிவகுக்கும்

2. முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எகிப்துக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு

3. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்களின் மகிழ்ச்சி, வெறுமனே சிரித்துப்பேசுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியிலிருந்து வேறுபட்டது

4. திருத்தந்தை பிரான்சிஸ் : ஜெனோவா துறைமுக விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் செபம்

5. திருத்தந்தை பிரான்சிஸ் : உங்கள் சமூகங்களை ஏழைகளுக்குத் திறந்து விடுங்கள்

6. உரோம் நகரில் 15,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் ஊர்வலம்

7. பசுமை வளத்தை உறுதி செய்யும் உற்பத்தி வழிகள், அனைவருக்கும் பயன்தரும் - ஐ.நா. உயர் அதிகாரி

------------------------------------------------------------------------------------------------------

1. காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் : உரையாடல் முழு ஒன்றிப்புக்கு வழிவகுக்கும்

மே,10,2013. நமது இடைவிடாத செபம், நம்மிடையே இடம்பெறும் உரையாடல், அன்பில் நாளுக்குநாள் கட்டி எழுப்பப்படும் ஒன்றிப்பு ஆகியவை முழு ஒன்றிப்பை நோக்கிய முக்கியமான முயற்சிகளை மேலும் எடுப்பதற்கு நமக்கு வழிவகுக்கும் என்று காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros அவர்களை வத்திக்கானில் இவ்வெள்ளிக்கிழமையன்று சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், 40 ஆண்டுகளுக்குமுன், கத்தோலிக்கத் திருஅவை, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபை ஆகியவற்றின் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட பொதுவான அறிக்கை கிறிஸ்தவ ஒன்றிப்புப் பாதையில் ஒரு மைல்கல் எனவும் குறிப்பிட்டார்.
இவ்விரு சபைகளுக்கு இடையே முழு ஒன்றிப்பு ஏற்படுவதற்கான பாதை இன்னும் நீண்டதாக இருப்பதை நாம் நன்கு அறிந்திருந்தாலும், இவ்வொன்றிப்பை நோக்கிய பாதையில் குறிப்பிடத்தக்க தூரத்தை ஏற்கனவே நடந்துவந்துள்ளதை நாம் மறக்க விரும்பவில்லை என்றும்  திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இவ்வியாழனன்று உரோம் வந்துள்ள முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros, வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தில் ஐந்து நாள்கள்வரை தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவரான இரண்டாம் Tawadros, அலெக்சாந்திரியா மற்றும் புனித மாற்குத் திருப்பீடத்தின் 118வது திருத்தந்தையாவார். 
1973ம் ஆண்டு மே மாதம் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களை, அப்போதைய காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் மூன்றாம் Shenouda அவர்கள் சந்தித்த நிகழ்வுக்குப்பின், இவ்விரு சபைகளின் தலைவர்களுக்கு இடையே நிகழும் சந்திப்பாக இது அமைந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எகிப்துக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு

மே,10,2013. மேலும், இவ்வெள்ளிக்கிழமையன்று வத்திக்கானில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க இச்சந்திப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை எகிப்துக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்புவிடுத்தார் அந்நாட்டின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros.
1973ம் ஆண்டு மே 4ம் தேதி முதல் 10ம் தேதிவரை அப்போதைய காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் மூன்றாம் Shenouda, திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களை வத்திக்கானில் சந்தித்தது மற்றும் இவ்விரு தலைவர்களும் பொதுவான அறிக்கையில் கையெழுத்திட்டது குறித்தும் குறிப்பிட்டார் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros.
கத்தோலிக்கத் திருஅவைக்கும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே நிலவும் சகோதரத்துவ அன்பைக் கொண்டாடும் நாளாக, ஒவ்வோர் ஆண்டும் மே 10ம் தேதி கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்ற தனது ஆவலை வெளியிட்டார் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros.
கத்தோலிக்கத் திருஅவைக்கும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே தற்போது உருவாகியிருக்கும் சிறப்பான உறவுகள் இன்னும் உறுதியும் வளமையும் பெற வேண்டும் என்ற தனது ஆவலைத் தெரிவித்த முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros, இப்பூமியில் அமைதி மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதற்கு சேர்ந்து உழைப்பதை, இவ்விரு சபைகளும் பொதுவான நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
அலெக்சாந்திரியா காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபை முதல் நூற்றாண்டில் நற்செய்தியாளர் புனித மாற்கு அவர்களால் நிறுவப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்களின் மகிழ்ச்சி, வெறுமனே சிரித்துப்பேசுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியிலிருந்து வேறுபட்டது

மே,10,2013. கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியின் மக்கள், இம்மகிழ்ச்சி ஒரு கொடை, இம்மகிழ்ச்சி இயேசு நம்மோடும், வானகத்தந்தையோடும் இருக்கிறார் என்ற உறுதியில் கிடைப்பதாகும், இதுவே எப்போதும் முன்னோக்கிச் செல்லும் பண்போடு, நம்பிக்கையும், தாராளத்தன்மையும் கொண்டவர்களாகக் கிறிஸ்தவர்களை ஆக்குகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவர்களின் மகிழ்ச்சி, வெறுமனே சிரித்துப்பேசுவதிலிருந்து கிடைக்கும் மேலெழுந்தவாரியான மகிழ்ச்சி அல்ல என்று கூறினார்.
வத்திக்கான் வானொலியின் இயக்குனர் தலைமையில் அவ்வானொலியின் பணியாளர்களில் சிலர் கலந்துகொண்ட இத்திருப்பலியில் மகிழ்ச்சியான சீடர்களின் மனப்பான்மை குறித்து மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு விண்ணேற்பு அடைவதற்கும் பெந்தெகோஸ்தேவுக்கும் இடைப்பட்ட நாள்களில் சீடர்களிடம் இருந்த மகிழ்ச்சியான மனப்பான்மை குறித்துப் பேசிய திருத்தந்தை, ஒரு கிறிஸ்தவர் மகிழ்ச்சியானவராக இருக்கவேண்டும், இதையே இயேசு நமக்குப் போதிக்கிறார் என்றும் கூறினார்.
மகிழ்ச்சி ஒரு திருப்பயணம், கிறிஸ்தவர் மகிழ்ச்சியோடு பாடுகிறார், நடக்கிறார், இதனைத் தன்னோடு எடுத்துச் செல்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, இம்மகிழ்ச்சி ஒரு கொடை, இம்மகிழ்ச்சியை ஆண்டவரிடம் கேட்குமாறு திருஅவையும் நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்று தனது மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : ஜெனோவா துறைமுக விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் செபம்

மே,10,2013. இத்தாலியின் ஜெனோவா துறைமுகத்தில் சரக்கு கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானது மற்றும் அவ்விபத்தினால் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்கள் குறித்த தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செவ்வாய் இரவு ஜெனோவா துறைமுகத்தில் 40 ஆயிரம் டன் எடைகொண்ட Jolly Nero என்ற சரக்குக் கப்பல், 50 மீட்டர் உயரமான கட்டுப்பாட்டுக் கோபுரத்தை இடித்ததில் அக்கோபுரம் சரிந்து வீழ்ந்தது. அதில் குறைந்தது ஏழு பேர் இறந்துள்ளனர்.
திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், இவ்விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதுகாவல் அன்னைமரியிடம் அர்ப்பணித்துச் செபிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் காணாமற்போயுள்ள இன்னும் இருவரை மீட்புப்பணியினர் தொடர்ந்து தேடி வருகின்றனர் எனச் சொல்லப்பட்டுள்ளது.

5. திருத்தந்தை பிரான்சிஸ் : உங்கள் சமூகங்களை ஏழைகளுக்குத் திறந்து விடுங்கள்

மே,10,2013. அன்பின் திருவருள்சாதனத்தால் தூண்டப்பட்டவர்களாய் உங்கள் சமூகங்களைத் திறந்துவிடுங்கள், ஏனெனில் சகோதரத்துவ கரத்தைத் தேடும் அனைவரும் சந்திக்கும் மற்றும் பிறரன்பின் இடங்களாக இவை மாறும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் சகோதரத்துவத் தொண்டு 2013 என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் 3 நாள்கள் கருத்தரங்குக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, பிரான்ஸ் மக்கள் ஏழைகள்மீது கொண்டிருக்கும் கரிசனையை வெளிப்படுத்துவதாக இக்கருத்தரங்கு இருக்கும் என்று கூறியுள்ளார்.
இச்செய்தியை, திருப்பீடச்செயலர் கர்தினால் பெர்த்தோனே திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளார்.
அக்கருத்தரங்கில் கலந்துகொள்பவர்கள், பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த உலகத்தில், விசுவாசத்தால் தூண்டப்பட்டவர்களாய் படைப்பாற்றல் மிக்க அன்பினால் ஏழைகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று அச்செய்தியில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அருகிலும் தூரத்திலும் துன்பநிலையில் வாழும் மக்களோடு சகோதரத்துவ உணர்வுடன் வாழ்வதற்கு ப்ரெஞ்ச் ஆயர்கள் 2009ம் ஆண்டில் விடுத்த அழைப்பையொட்டி, 2011ம் ஆண்டில் ப்ரெஞ்ச் கத்தோலிக்கத் திருஅவையின் தேசிய சகோதரத்துவ அவை உருவாக்கப்பட்டது.
இவ்வவையில் பிரான்சின் ஏறத்தாழ அனைத்து மறைமவாட்டங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட இயக்கங்களும் துறவுசபை நிறுவனங்களும் சேர்ந்து செயல்பட்டு வருகின்றன.
இந்தத் தேசிய அவை லூர்து நகரில் இவ்வியாழனன்று மூன்று நாள்கள் கருத்தரங்கு ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. உரோம் நகரில் 15,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் ஊர்வலம்

மே,10,2013. மே மாதம் 12ம் தேதி இஞ்ஞாயிறன்று உயிர்களை மதிக்கும் நடைபயணம் என்ற கருத்தில் உரோம் நகரில் நடைபெறும் ஊர்வலத்தில் 15,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலத்திற்கு முன்னதாக, சனிக்கிழமையன்று, உயிரியல் நன்னெறி என்ற கருத்தில் Regina Apostolorum எனும் பாப்பிறை நிறுவனத்தில் நடைபெறும் கருத்தரங்கில், திருப்பீட நீதித் துறையின் தலைவர் கர்தினால் Raymond Burke கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உரோம் நகரின் முக்கியமான ஓர் அடையாளமான Coloseum திடலிலிருந்து கிளம்பும் இந்த ஊர்வலத்தில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள முக்கியமான் நபர்கள் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருவில் வளரும் குழந்தைகளை அழிக்கும் சட்டம் 1978ம் ஆண்டு இத்தாலி நாட்டில் அமலாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 50 இலட்சம் குழந்தைகள் கருவில் அழிக்கப்பட்டுள்ளனர் என்று இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்துள்ள Virginia Coda Nunciante அவர்கள் CNA செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.

ஆதாரம் : CNA

7. பசுமை வளத்தை உறுதி செய்யும் உற்பத்தி வழிகள், அனைவருக்கும் பயன்தரும் - ஐ.நா. உயர் அதிகாரி

மே,10,2013. பசுமை வளத்தை உறுதி செய்யும் உற்பத்தி வழிகளுக்கு மாறுவது வளர்ந்து வரும் நாடுகளுக்கும், உலக வர்த்தகத்திற்கும் நன்மை தரும் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பல லட்சம் கோடி டாலர்கள் மதிப்புள்ள வர்த்தகங்கள் உலகெங்கும் ஒவ்வொரு நாளும் வலம்வரும் இக்காலக் கட்டத்தில், கார்பன் வாயு வெளியாவதைக் குறைக்கும் உற்பத்தி வழிகளைப் பெருக்குவது பயனளிக்கும் என்று UNEP எனப்படும் ஐ.நா. சுற்றுச்சூழல் நடவடிக்கைகளின் இயக்குனர் Achim Steiner இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
வளரும் நாடுகள் பொருள் உற்பத்தியில் பெருமளவு ஈடுபட்டிருப்பதால், உற்பத்தி வழிகள், பொருட்களின் விலை நிர்ணயம் போன்ற வழிகளில் இந்நாடுகள் தகுந்த வழிகளை சட்டமாக்கும்போது, உலகின் வளங்களை சரியான அளவு பயன்படுத்தும் உற்பத்தி வழிகள், அனைவருக்கும் பயன்தரும் வகையில் அமையும் என்று Steiner எடுத்துரைத்தார்.
வேளாண்மை, மீன்பிடித் தொழில், காடுகள், சுற்றுலா ஆகியத் துறைகளில் பசுமை வழிகளைப் பின்பற்றும் வாய்ப்புக்கள் பெருகி வருகின்றன என்றும், இவ்வழிகளால் 2020ம் ஆண்டுக்குள் 2.2 ட்ரில்லியன் டாலர்கள், அதாவது, 2 இலட்சத்து 20 ஆயிரம் கோடி டாலர்கள் வர்த்தக வாய்ப்புக்கள் பெருக வாய்ப்புள்ளதென்று ஐ.நா.வின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...