Thursday, 9 May 2013

Catholic News in Tamil - 08/05/13


1. அருள் சகோதரி சபைகளின் அகில உலகத் தலைவர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு

2. கிறிஸ்தவர்கள் பாலங்களைக் கட்ட அழைக்கப்பட்டுள்ளோம் சுவர்களைக் கட்டுவதற்கு அல்ல - திருத்தந்தை

3. மெக்சிகோ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

4. திருப்பீடத்திற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் நிதித்துறை தொடர்பான ஒப்பந்தம்

5. சிரியாவில் கடத்தப்பட்ட இரு ஆயர்களின் தகவலைப் பொருத்தவரை இன்னும் இருளில் இருக்கிறோம் - அலெப்போ பேராயர்

6. ஆப்ரிக்காவின் Gabon நாட்டில் மனிதப் பலிகளை முற்றிலும் ஒழிக்க ஆயர்கள் முயற்சி

7. குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினர் இரண்டாம் தர குடிமக்களாய் நடத்தப்படுகின்றனர் - அருள் பணியாளர் செட்ரிக் பிரகாஷ்

8. சூரிய ஒளி நமது உடலுக்கு விளைவிக்கும் கெடுதலை விட, நன்மைகளே அதிகம்

------------------------------------------------------------------------------------------------------

1. அருள் சகோதரி சபைகளின் அகில உலகத் தலைவர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு

மே,08,2013. துறவற வாழ்வில் தங்களை அர்ப்பணிக்கும் ஒவ்வொருவரும் தான் என்ற மையத்திலிருந்து, இயேசு என்ற மையத்தை நோக்கிச் செல்லும் விடுதலைப் பயணத்தை மேற்கொள்பவர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மே மாதம் 3ம் தேதி முதல் 7ம் தேதி முடிய உலகின் 76 நாடுகளிலிருந்து 900க்கும் அதிகமாய் வந்துள்ள அருள் சகோதரி சபைகளின் தலைவர்களை திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் இப்புதன் காலை சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அகில உலகக் கூட்டத்தில், இவ்வாண்டு "உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது, உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்" என்ற மத்தேயு நற்செய்தி வார்த்தைகள் மையக் கருத்தாய் அமைந்தன.
கீழ்ப்படிதல், ஏழ்மை, கற்பு ஆகிய மூன்று வாக்குறுதிகள் வழியாக, தான் என்ற மையத்திலிருந்து கிளம்பி, கிறிஸ்துவை நோக்கி மேற்கொள்ளப்படும் பயணத்தைப் பற்றி திருத்தந்தை எடுத்துரைத்தார்.
உண்மையான அதிகாரம் என்பது பணியில் மட்டுமே அமைகின்றது என்றும், அதிகாரத்தில் இருப்பவர்களின் கண்கள் எப்போதும் சிலுவையில் இருக்கும் கிறிஸ்துவை நோக்கியபடி இருப்பது, அதிகாரத்தின் முழு பொருளை உணர்த்தும் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
கிறிஸ்துவை முழு அன்புடன் பின்பற்றுங்கள் என்று தன் உரையின் இறுதியில் வலியுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சபைத் தலைவர்கள் அனைவரையும் தனக்காக செபிக்கும்படி கூறியபின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கிறிஸ்தவர்கள் பாலங்களைக் கட்ட அழைக்கப்பட்டுள்ளோம் சுவர்களைக் கட்டுவதற்கு அல்ல - திருத்தந்தை

மே,08,2013. கிறிஸ்தவர்கள் யாரையும் கண்டனம் செய்யாமல், அனைவரையும் இணைக்கும் பாலங்களைக் கட்ட அழைக்கப்பட்டுள்ளோம், சுவர்களைக் கட்டுவதற்கு அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் காலைத் திருப்பலியில் கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில், வத்திக்கான் நீதித் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு திருப்பலி ஆற்றிய திருத்தந்தையுடன், கர்தினால் Francesco Coccopalmerio அவர்களும் கூட்டுத் திருப்பலி ஆற்றினார்.
அரயோப்பாகு மன்றத்தில் புனித பவுல் அடியார் இறைவனை எடுத்துரைத்ததைக் கூறும் திருத்தூதர் பணிகள் பகுதியை தன் மறையுரையின் மையப்பொருளாக்கிய திருத்தந்தை, யாரையும் புறக்கணிக்காமல், அனைவருக்கும் உண்மையை எடுத்துரைக்க வேண்டும் என்பதை பவுல் அடியார் கற்றுத் தருகிறார் என்று குறிப்பிட்டார்.
பாவிகள், வரிதண்டுவோர், திருச்சட்ட அறிஞர் என்று பலரையும் சந்தித்து உரையாடிய கிறிஸ்துவைப் போலவே, புனித பவுல் அடியாரும் செயல்பட்டார் என்பதைக் கூறியத் திருத்தந்தை, இதுவே கிறிஸ்துவர்களின் அழைப்பு என்றும் எடுத்துரைத்தார்.
உண்மை என்பது அனைவரையும் ஒருங்கிணைக்கும் தளமாக அமையவேண்டுமே தவிர, மக்களைப் பிரிக்கும் கருவியாக இருக்க முடியாது என்பதை திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. மெக்சிகோ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

மே,08,2013. மெக்சிகோ பேரு நகரின் Ecatepec பகுதியில் இப்புதனன்று நிகழ்ந்த விபத்தில் இறந்தவர்களுக்கும், காயமடைந்தோருக்கும் தன் செபங்களையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தன் அனுதாபங்களையும் தெரிவித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.
எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி ஒன்று வீடுகள் மத்தியில் மோதி, வெடித்ததால், பத்து குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் காயப்பட்டுள்ள 26 பேரில் 13 பேரின் நிலை மிகவும் ஆபத்தாக உள்ளதென்று ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமுற்றோர் அனைவருக்கும் திருத்தந்தையின் பெயரால் அனுதாபத் தந்தியை Ecatepec ஆயர் Roberto Dominguez Couttolenc அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அனுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைவரையும் குவாதலுப்பே அன்னை மரியாவின் அரவணைப்பில் ஒப்படைப்பதாகவும் திருத்தந்தை தன் தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருப்பீடத்திற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் நிதித்துறை தொடர்பான ஒப்பந்தம்

மே,08,2013. திருப்பீடத்தின் நிதி ஆய்வுத்துறை அதிகாரிகளுக்கும், நிதித்துறை தொடர்பான குற்றங்களைக் கண்காணிக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே, இச்செவ்வாயன்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகரான வாஷிங்டனில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
கறுப்புப் பணத்தை வெளிச்சந்தைக்குக் கொணரும் முயற்சிகளைத் தடுக்கவும், தீவிரவாத குழுக்களுக்கு நிதி உதவிகள செய்யும் முயற்சிகளைத் தடுக்கவும் இவ்விரு அமைப்புக்களும் உழைக்கும் என்ற உறுதிப்பாட்டுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத் திடப்பட்டது என்று திருப்பீடச் செய்தி அலுவலகம் அறிவித்தது.
திருப்பீடத்தின் சார்பில் René Brülhart அவர்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் சார்பில் Jennifer Shasky Calvery அவர்களும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, திருப்பீடமும், அமெரிக்க ஐக்கிய நாடும் உலகெங்கும் நிதித் துறையில் தெளிவான வழிமுறைகளை உருவாக்க ஒத்துழைப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீடத்தின் நிதி ஆய்வுத்துறை 2010ம் ஆண்டு முதல், பெல்ஜியம், இஸ்பெயின், சுலோவேனியா ஆகிய நாடுகளுடனும், தற்போது, அமெரிக்க ஐக்கிய நாட்டுடனும்  இத்தகைய ஒப்பந்தங்களை நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. சிரியாவில் கடத்தப்பட்ட இரு ஆயர்களின் தகவலைப் பொருத்தவரை இன்னும் இருளில் இருக்கிறோம் - அலெப்போ பேராயர்

மே,08,2013. சிரியாவில் ஏப்ரல் 22ம் தேதி கடத்தப்பட்ட இரு ஆயர்கள் குறித்த எவ்வித தகவலும் இல்லாததால், அவர்கள் தேடலைப் பொருத்தவரை இன்னும் இருளில் இருக்கிறோம் என்று அலெப்போவின் கிரேக்க மெல்கத்திய வழிபாட்டு முறை பேராயர் Jeanclement Jeanbart கூறினார்.
இரு வாரங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிரிய ஆர்த்தடாக்ஸ் ஆயர் Yohanna Ibrahim அவர்களையும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆயர் Boulos Yaziji அவர்களையும் மீட்பதற்கு கத்தோலிக்கத் திருஅவையும் ஏனைய கிறிஸ்தவ சபைகளும் இணைந்து உழைத்து வருவதாக Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
இவ்விரு ஆயர்களையும், மற்றும் பிப்ரவரியில் கடத்திச் செல்லப்பட்ட இரு குருக்களையும் விடுவிக்கவேண்டும் என்று பல நாடுகளிலிருந்து விண்ணப்பங்களும், வேண்டுதல்களும் எழுப்பப்பட்டுள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாக சிரியாவில் இணையதளமும் துண்டிக்கப்பட்டிருப்பதால், வெளி உலகிற்கும் அந்நாட்டிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர் என்றும், இந்தத் தொடர்பு துண்டிப்புக்கு காரணம் தெரியாமல் இருக்கின்றனர் என்றும் ஊடகங்கள் கூறியுள்ளன.

ஆதாரம் : Fides / AsiaNews

6. ஆப்ரிக்காவின் Gabon நாட்டில் மனிதப் பலிகளை முற்றிலும் ஒழிக்க ஆயர்கள் முயற்சி

மே,08,2013. ஆப்ரிக்காவின் Gabon நாட்டில், மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் நிகழ்ந்துவரும் மனிதப் பலிகளை முற்றிலும் ஒழிக்கும் எண்ணத்தை வலியுறுத்தி, இம்மாதம் 11ம் தேதி அந்நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களிலும் ஊர்வலங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஆயர்கள் அறிவித்துள்ளனர்.
பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்ற தவறான எதிர்ப்பார்ப்புடன், அந்நாட்டில் இளம் வயதினர் பலர் பலியாக கொல்லப்படுகின்றனர், மற்றும் அவர்களது கண்கள், மூளை, இரத்தம் ஆகியவை நீக்கப்பட்டு, பலிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
பலி என்ற பெயரில் நடைபெறும் இந்தக் கொலைகளை நிறுத்துவதற்கு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் வருகிற சனிக்கிழமையன்று அனைத்து மறைமாவட்டங்களிலும் ஊர்வலங்களும், கூட்டங்களும் நடத்த அந்நாட்டு ஆயர்கள் அண்மையில் தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Gabon நாட்டில் முக்கியமாக 4 பகுதிகளில் நடைபெற்று வரும் இத்தகையக் கொடுமைகளால், 2010ம் ஆண்டு 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 2011ம் ஆண்டு 62 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides

7. குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினர் இரண்டாம் தர குடிமக்களாய் நடத்தப்படுகின்றனர் - அருள் பணியாளர் செட்ரிக் பிரகாஷ்

மே,08,2013. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினர் இன்னும் இரண்டாம் தர குடிமக்களாய் நடத்தப்படுகின்றனர் என்று மனித உரிமை ஆர்வலரும், இயேசு சபை அருள் பணியாளருமான செட்ரிக் பிரகாஷ் கூறினார்.
அமெரிக்காவில் பணியாற்றும் அகில உலக சமயச் சுதந்திரம் கண்காணிப்புக் குழு இரு நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட ஓர் அறிக்கையில், மதச் சுதந்திரத்தைப் பொருத்தவரை இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதென்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது.
இவ்வறிக்கையைக் குறித்து, தன் கருத்துக்களை வெளியிட்ட அருள் பணியாளர் பிரகாஷ், மதமாற்றத் தடைச் சட்டம் என்ற பெயரில் குஜராத் மாநிலத்தில் பல்வேறு வேண்டத்தகாத அடக்கு முறைகள் அரசால் கடைபிடிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.
2002ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரங்களுக்குப் பலியானவர்கள் இன்னும் தகுந்த நீதி கிடைக்காமல் துன்புறுகின்றனர் என்றும், கிறிஸ்தவ நிறுவனங்கள் காவல் துறையினரால் பல்வேறு  தேவையற்ற சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன என்றும் அருள் பணியாளர் பிரகாஷ் கூறினார்.
2002ம் ஆண்டு கலவரங்களில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் ஈடுபாடு இருந்ததென்று, மோடி அவர்களுக்கு அந்நாட்டுக்குள் நுழையும் அனுமதியை அமெரிக்க ஐக்கிய நாடு மறுத்தது. அவருக்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் தொடரவேண்டும் என்று அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

ஆதாரம் : AsiaNews

8. சூரிய ஒளி நமது உடலுக்கு விளைவிக்கும் கெடுதலை விட, நன்மைகளே அதிகம்

மே,08,2013. சூரிய ஒளி நமது உடலுக்கு விளைவிக்கும் கெடுதலை விட, நன்மைகளே அதிகம் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
Edinburgh பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வின் அடிப்படையில், சூரிய ஒளிக்கு உட்படுத்தப்படும் உடலில், இரத்த அழுத்தம் குறைந்து, இதயம் தொடர்பான குறைகள் நீங்க வழி உண்டு என்று தெரிய வந்துள்ளது.
சூரிய ஒளியிலிருந்து உடலில் விழும் Ultra Violet - அதாவது, புற நீலக் கதிர்கள், வெளிப்படுத்தும் ஒருவகை வேதியல் மாற்றம் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்றும், இதனால் மாரடைப்பு நோயைத் தடுக்க முடியும் என்றும், அதேநேரம், உடலில் D வைட்டமின் அதிகமாகிறது என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்புதன் முதல் சனிக்கிழமை முடிய Edinburgh நகரில் நடைபெறும் அகில உலக தோல் நிபுணர்கள் கருத்தரங்கில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்படும் என்று BBC செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...