Wednesday, 22 May 2013

Catholic Newa in Tamil - 23/05/13


1. நன்மை செய்யும் எவரையும் தடுப்பது நம் பணியல்ல - திருத்தந்தை

2. வரவேற்பும், குடும்ப உணர்வும் உள்ள ஓர் இடத்தையே நாம் இல்லம் என்று அழைக்கிறோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

3. Oklahoma சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள அனுதாபத் தந்தி

4. "புலம் பெயர்ந்தோர் மற்றும் நாட்டுக்குள் இடம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளானோரின் வடிவில் கிறிஸ்துவை வரவேற்றல்" வத்திக்கான் கருத்தரங்கம்

5. உயிர் காக்கும் மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கும் வழிகளை திருஅவை எதிர்பார்க்கிறது - பேராயர் Zygmunt Zimowski

6. "மிக்கேலாஞ்சலோவின் Pieta: 1972ம் ஆண்டு மே 21ன் நினைவாக - ஒரு முழுமையாக்கும் கதை"

7. பாகிஸ்தானில் 250 கிறிஸ்தவக் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு அச்சத்தில் வெளியேறும் கட்டாயம்

8. ஆப்ரிக்காவில் HIV நோய்க்குரிய மருத்துவம் பெறுவோரின் எண்ணிக்கை 71 இலட்சமாக உயர்ந்துள்ளது

------------------------------------------------------------------------------------------------------

1. நன்மை செய்யும் எவரையும் தடுப்பது நம் பணியல்ல - திருத்தந்தை

மே,22,2013. 'நன்மை புரிவது' என்ற கொள்கை, மதம் மற்றும் அனைத்து வேறுபட்ட கோட்பாடுகளையும் கடந்து செயல்படும் ஒரு கொள்கை என்றும், அதுவே மனித கலாச்சாரத்தில் அமைதிக்கு அடிப்படை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இப்புதன் காலை புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், மாரனைட் வழிபாட்டு முறை, அந்தியோக்கு முதுபெரும் தலைவர் கர்தினால் Bechara Boutros Rai அவர்களுடன் திருப்பலியாற்றிய திருத்தந்தை, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
தங்களைச் சாராத ஒருவர், இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டுவதைத் தடுக்கப் பார்த்ததாகக் கூறிய சீடர்களிடம், அவரைத் தடுக்கவேண்டாம் என்று இயேசு கூறியதாக மாற்கு நற்செய்தியில் (9:38-40) காணப்படும் பகுதியை தன் மறையுரையின் மையமாக்கினார் திருத்தந்தை.
கத்தோலிக்கர்களை மட்டுமல்ல, வேறு மக்களையும், ஏன்? கடவுளை நம்பாதவர்களையும் கிறிஸ்து தன் இரத்தத்தால் மீட்டுள்ளார் என்றும், எனவே, நன்மை செய்யும் எவரையும் தடுப்பது நம் பணியல்ல என்பதையும் திருத்தந்தை தன் மறையுரையில் விளக்கினார்.
நன்மை புரிவதென்பது மத நம்பிக்கையைச் சார்ந்தது அன்று, மாறாக, இறைவனின் சாயலில் படைக்கப்பட்டுள்ள அனைத்து மனிதருக்கும் அது ஒரு கடமை என்று வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. வரவேற்பும், குடும்ப உணர்வும் உள்ள ஓர் இடத்தையே நாம் இல்லம் என்று அழைக்கிறோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மே,22,2013. மனமார்ந்த வரவேற்பும், நலமுடன் வாழ்வதற்குரிய சூழலும், குடும்ப உணர்வும் உள்ள ஓர் இடத்தையே நாம் இல்லம் என்று அழைக்கிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தையொட்டி அமைந்துள்ள 'Dono di Maria' அதாவது 'மரியாவின் கொடை' என்று அழைக்கப்படும் இல்லத்திற்கு இச்செவ்வாய் மாலை சென்றிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு வாழ்வோர், மற்றும் பணிபுரிவோருக்கு ஆற்றிய சிறு உரையில் இவ்வாறு கூறினார்.
முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா உருவாக்கிய துறவறச்சபை அருள் சகோதரிகளின் பணிகளுக்கென, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள், அச்சகோதரிகளுக்கு வழங்கிய இல்லம் 'Dono di Maria'. இவ்வில்லத்தின் 25ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவ்வில்லத்திற்குச் சென்றிருந்தார்.
இறையன்பு வெறும்  ஏட்டளவு எண்ணமல்ல, அது உடலும் உயிரும் கொண்ட ஓர் உண்மை என்பதை, முத்திப்பேறு பெற்ற இருவரின் கொடையாக அமைந்துள்ள இவ்வில்லம் உலகிற்குப் பறைசாற்றுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.
இவ்வில்லத்தில் தங்கி பணியாற்றும் அருள் சகோதரிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக பணியாற்றும் பல தன்னார்வத் தொண்டர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டினார்.
இச்செவ்வாய் மாலை 'Dono di Maria' இல்லத்திற்குச் சென்ற திருத்தந்தை அவர்களை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் முதன்மை குரு, கர்தினால் Angelo Comastri அவர்களும், பிறரன்புப்பணி அருள் சகோதரிகளின் தலைவி Prema Pierick அவர்களும் வரவேற்றனர்.
இவ்வில்லத்தில் 25க்கும் அதிகமான பெண்கள் தங்கியுள்ளனர், மற்றும் ஒவ்வொரு நாளும் இவ்வில்லம் 60க்கும் அதிகமானோருக்கு உணவு வழங்கி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. Oklahoma சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள அனுதாபத் தந்தி

மே,22,2013. Oklahoma சூறாவளியில் உயிரிழந்த அனைவரையும், சிறப்பாக, அங்கு உயிரிழந்த குழந்தைகளையும் தான் சிறப்பாக நினைவுகூர்வதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுதாபத் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.
இத்திங்கள் பிற்பகல் 3 மணியளவில் Oklahoma நகரின் தென் பகுதியிலும், Moore என்ற இடத்திலும் 210 மைல் வேகத்தில் வீசிய சூறாவளியில் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டோரை தன் செபத்தில் நினைவுகூர்வதாக திருத்தந்தை இத்தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Oklahoma பேராயர் Paul Coakley அவர்களுக்கு திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே இந்தத் தந்தியை அனுப்பியுள்ளார்.
இந்த இயற்கைப் பேரிடரின் விளைவுகளைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும் தான் மனதார வாழ்த்துவதாகவும், அவர்களுக்குத் தன் ஆசீரை வழங்குவதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சூறாவளியில் இறந்தோரின் எண்ணிக்கை 100ஆக இருக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டாலும், இச்செவ்வாய் மாலையில் இறந்தோரின் எண்ணிக்கை 24 என்று உறுதி  செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / NYTimes

4. "புலம் பெயர்ந்தோர் மற்றும் நாட்டுக்குள் இடம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளானோரின் வடிவில் கிறிஸ்துவை வரவேற்றல்" வத்திக்கான் கருத்தரங்கம்

மே,22,2013. வலுவற்றோர், அன்னியர் ஆகியோரை, திறந்த மனதுடன் வரவேற்கும் பண்பு கிறிஸ்தவ வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்று திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
புலம் பெயர்ந்தோர் மற்றும் பயணிகள் பணியில் ஈடுபட்டுள்ள திருப்பீட அவை, மே மாதம் 22ம் தேதி, இப்புதன் முதல் 24ம் தேதி வெள்ளிக்கிழமை முடிய வத்திக்கானில் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில், அந்த அவையின் தலைவரான கர்தினால் Antonio Maria Veglio துவக்க உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
ஆபிரகாம், மோசே, இயேசுவின் பெற்றோர் என்று, விவிலியத்தின் பல நூல்களில், நாடு விட்டு நாடு, அல்லது ஊர்விட்டு ஊர் செல்லும் பலர் கூறப்பட்டிருப்பதால், இந்தப் பிரச்சனையை கிறிஸ்தவர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிகிறது என்று கர்தினால் Veglio எடுத்துரைத்துரைத்தார்.
அரசியல், மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளாலும், போர்களாலும் நாடு விட்டு நாடு செல்வோர், உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்துள்ளோர் ஆகியோரின் எண்ணிக்கை கூடிவருவது மனித சமுதாயத்தை விழித்தெழச் செய்யவேண்டும் என்று கர்தினால் Veglio தன் உரையில் வலியுறுத்தினார்.
"புலம் பெயர்ந்தோர் மற்றும் நாட்டுக்குள் இடம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளானோரின் வடிவில் கிறிஸ்துவை வரவேற்றல்" என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இக்கருத்தரங்கில் பங்கேற்போர், இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்திக்க உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. உயிர் காக்கும் மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கும் வழிகளை திருஅவை எதிர்பார்க்கிறது - பேராயர் Zygmunt Zimowski

மே,22,2013. உயிர் காக்கும் மருந்துகள் அனைவருக்கும் இலவசமாக, அல்லது மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் வழிகளை அனைத்து அரசுகளும் தீவிரமாகத் தேடுவதையே கத்தோலிக்கத் திருஅவை எதிர்பார்க்கிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேமாதம் 22ம் தேதி முதல் 28ம் தேதி முடிய Geneva வில் நடைபெற்றுவரும் உலக நலவாழ்வு நிறுவனத்தின் 66வது மாநாட்டில் உரையாற்றிய திருப்பீட நலவாழ்வுத் துறையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski இவ்வாறு கூறினார்.
மாநாட்டின் தலைவருக்கும், பங்கேற்கும் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்திருப்பதாக கூறி, பேராயர் Zimowski, தன் உரையைத் துவக்கினார்.
ஒவ்வொருவரின் முழுமையான நலனை வளர்ப்பதன் வழியாகவே உலகம் முன்னேற முடியும் என்பதை, திருஅவை எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்று குறிப்பிட்ட பேராயர் Zimowski, உலகெங்கும் அனைவருக்கும் அடிப்படை நலனை உறுதி செய்யும் மில்லென்னிய இலக்கினை அடைய அனைவருமே இணைந்து உழைக்க வேண்டும் என்று கூறினார்.
நலவாழ்வும் முன்னேற்றமும் ஒவ்வொரு மனிதரின் உடல் தேவைகளை மட்டுமல்ல, அவர்களது உணர்வுபூர்வ, ஆன்மீக, சமுதாய, மற்றும் பொருளாதாரத் தேவைகளிலும் கவனம் செலுத்துவதன் வழியாக முழுமையான வளர்ச்சி பெற முடியும் என்பதை பேராயர் Zimowski வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. "மிக்கேலாஞ்சலோவின் Pieta: 1972ம் ஆண்டு மே 21ன் நினைவாக - ஒரு முழுமையாக்கும் கதை"

மே,22,2013. "மிக்கேலாஞ்சலோவின் Pieta: 1972ம் ஆண்டு மே 21ன் நினைவாக - ஒரு முழுமையாக்கும் கதை" என்ற தலைப்பில் வத்திக்கானில் ஒரு கருத்தரங்கம் இச்செவ்வாயன்று நடைபெற்றது.
1972ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி, மனநலம் பாதிக்கப்பட்ட Laszlo Toth என்ற ஆஸ்திரேலிய பயணி ஒருவரால் உலகப் புகழ்பெற்ற Pieta என்ற கன்னி மரியாவின் திரு உருவம் சுத்தியல் கொண்டு பழுதாக்கப்பட்டது.
1972, 1973 ஆகிய ஈராண்டுகள் இத்திரு உருவத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொணரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சிகளின் 40ம் ஆண்டையொட்டி, வத்திக்கான் அருங்காட்சியகம் இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
உலகப் புகழ்பெற்ற Pieta திரு உருவம், 1964ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது மட்டுமே, இந்த உருவம் வத்திக்கானை விட்டு வெளியே கொண்டுசெல்லப்பட்ட ஒரே தருணம். அத்தருணத்தில், இந்த உருவத்தைப் பார்வையிட்டவர்கள் 2 கோடியே 10 இலட்சம் பேர் என்று சொல்லப்படுகிறது.
மிக்கேலாஞ்சலோ உருவாக்கிய பல படைப்புக்களின் சிகரம் Pieta எனப்படும் மரியாவின் திரு உருவம் என்று சொல்லப்படுகிறது.
மிக்கேலாஞ்சலோ உருவாக்கிய மற்றொரு புகழ்பெற்ற படைப்பான தாவீதின் சிலை, 1991ம் ஆண்டு மனநலம் குன்றிய மற்றொருவரால் பழுதாக்கப்பட்டு, மீண்டும் பழைய நிலைக்கு சீரமைக்கப்பட்டது.

ஆதாரம் : VIS

7. பாகிஸ்தானில் 250 கிறிஸ்தவக் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு அச்சத்தில் வெளியேறும் கட்டாயம்

மே,22,2013. பாகிஸ்தானில் தெற்கு பஞ்சாப் பகுதியில் Khanewal என்ற மாவட்டத்தில் 250 கிறிஸ்தவக் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு அச்சத்தில் வெளியேறும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இரு மாதங்களுக்கு முன்னர் இலாகூர் பகுதியில் புனித யோசேப்பு குடியிருப்பில் நிகழ்ந்த வன்முறையில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதுபோல், மீண்டும் தற்போது நிகழ்ந்துள்ளது, அந்நாட்டில் கிறிஸ்துவர்களுக்கு எதிராக வளர்ந்துவரும் வன்முறையை சுட்டிக்காட்டுகிறது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
15 நாட்களுக்கு முன், Asher Yaqoob என்ற ஒரு கிறிஸ்தவ வர்த்தகருடன் சில இஸ்லாமியர்கள் மேற்கொண்ட ஒரு வாக்குவாதம் இந்த வன்முறைக்கு வழிவகுத்தது என்று Fides செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
தற்போதைய வன்முறையில் 1500க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும், இந்த மோதல்களில் இதுவரை 20 கிறிஸ்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் Fides செய்தி அறிவித்துள்ளது.

ஆதாரம் : Fides

8. ஆப்ரிக்காவில் HIV நோய்க்குரிய மருத்துவம் பெறுவோரின் எண்ணிக்கை 71 இலட்சமாக உயர்ந்துள்ளது

மே,22,2013. HIV நோய்க்குரிய மருத்துவம் பெற்று வரும் மனிதர்கள் ஆப்ரிக்காவில் 70 இலட்சம் பேர் என்றும், சென்ற ஆண்டு மட்டும் 10 இலட்சம் பேர் இந்த மருத்துவம் பெற ஆரம்பித்துள்ளனர் என்றும் ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், பத்து லட்சம் பேர் HIV நோய்க்குரிய மருத்துவம் பெற்று வந்த வேளையில், தற்போது அந்த எண்ணிக்கை 71 இலட்சமாக உயர்ந்துள்ளது என்று UNAIDS நிறுவனம் இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
AIDS நோய்க்கு எதிராக ஆப்ரிக்க நாடுகள் மேற்கொண்டுள்ள தீவிரமான போராட்டம் பாராட்டுக்குரியது என்று UNAIDS நிறுவனத்தின் உயர் அதிகாரி Michel Sidibé கூறினார்.
ஆப்ரிக்க ஒருமைப்பாட்டின் 50ம் ஆண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், HIV நோயைக் கட்டுப்படுத்த ஆப்ரிக்க நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள், அடுத்தத் தலைமுறையினரை இந்த நோயினின்று காப்பாற்றும் மிக உயர்ந்த முயற்சி என்று Sidibé கூறினார்.
Botswana, Ghana, Gambia, Gabon, Mauritius, Mozambique ஆகியவை உட்பட 16 நாடுகளில் HIV நோயுற்ற பெண்கள் கருவில் வளரும் குழந்தைகளுக்கு அந்த நோயை அளிக்காத வகையில் மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்று ஐ.நா.வின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
அடுத்து வரும் ஆண்டுகளில், AIDS நோய் ஒழிப்புடன், TB எனப்படும் காசநோய், மற்றும் மலேரியா ஆகிய நோய்களையும் அறவே நீக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இவ்வறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...