Wednesday, 20 March 2013

Catholic News in Tamil - 20/03/13


1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் தொலைபேசியில் தொடர்பு

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு முதுபெரும் தலைவர் Bartholomew வழங்கிய வரவேற்புரை

3. இத்தாலிய ஆயர் பேரவையின் உயர்மட்டக் குழு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பியுள்ளச் செய்தி

4. இறைவனின் பேரருள் கருணையில் திருத்தந்தை பிரான்சிஸ் அளவற்ற நம்பிக்கை கொண்டுள்ளார் - அயர்லாந்தின் தலைமை ஆயர்

5. திருத்தந்தை பிரான்சிஸ் மக்களின் திருத்தந்தை என்ற பெயரை தனக்கு
உரிமையாக்கிக்கொண்டுள்ளார் - இந்தியத் திருப்பீடத் தூதர்

6. திருத்தந்தையுடன் இயேசு சபையின் அகில உலகத் தலைவரின் முதல் சந்திப்பு

7. மேய்ப்புப் பணிக்கென தன்னை வழங்கும் ஒரு திருத்தந்தையை நாம் பெற்றுள்ளோம் - பிரேசில் நாட்டு ஆயர்

8. குரலிழந்த குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் சார்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் குரல்கொடுப்பார் - FAOவின் தலைமை இயக்குனர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் தொலைபேசியில் தொடர்பு

மார்ச்,20,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாய் காலை திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றபின்னர், மாலை 5 மணியளவில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
பல நிமிடங்கள் நீடித்த இவ்வுரையாடலில், திருத்தந்தை பிரான்சிஸ், யோசேப்பு என்ற பெயரைத் தாங்கிய முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நாம நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
முன்னாள் திருத்தந்தை திருஅவையின் தலைவராக ஆற்றிய  பணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் நன்றி தெரிவித்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணியேற்பு விழா நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி வழியாக, தான் கூர்ந்து கவனித்ததாகவும், அவருடைய பணிவாழ்வில் தான் செபத்துடன் ஒன்றியிருப்பதாகவும் 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறினார்.

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு முதுபெரும் தலைவர் Bartholomew வழங்கிய வரவேற்புரை

மார்ச்,20,2013. இறையருளால் தூண்டப்பட்டு, தாங்கள் உரோமையின் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து பேரு மகிழ்வடைகிறோம் என்று Constantinople முதுபெரும் தலைவர் Bartholomew கூறினார்.
பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளையும், யூத மற்றும் வேறுபல மதங்களின் பிரதிநிதிகளையும் இப்புதனன்று திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்த வேளையில், அவருக்கு வரவேற்புரை வழங்கிய முதுபெரும் தலைவர் Bartholomew இவ்வாறு கூறினார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் உன்னதமான எண்ணங்கள் கொண்டவர் என்பதையும் சுட்டிக்காட்டிய முதுபெரும் தலைவர் Bartholomew, தற்போது பணியேற்றிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளிப்படுத்தும் எளிமையையும் சிறப்பாகச் சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்துவின் படிப்பினைகளை, கடந்த 2000 ஆண்டுகள் போதித்துவரும் பல்வேறு சபைகள், தவறான வழிகளில் மக்களை நடத்திச்செல்லும் ஆபத்தையும் முதுபெரும் தலைவர் Bartholomew தன் உரையில் எடுத்துரைத்தார்.
அன்பிலும், தாழ்ச்சியிலும், ஒருவரை ஒருவர் முழுமையாக மதித்து மேற்கொள்ளப்படும் உரையாடல்களே பலனளிக்கும் என்பதையும் Constantinople முதுபெரும் தலைவர் Bartholomew தன் வரவேற்புரையில் வலியுறுத்தினார்.

3. இத்தாலிய ஆயர் பேரவையின் உயர்மட்டக் குழு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பியுள்ளச் செய்தி

மார்ச்,20,2013. எங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்த எம் சகோதர கர்தினால்கள் உலகின் எல்லையிலிருந்து தங்களைத் தேர்ந்துள்ளனர் என்பது மிகுந்த மகிழ்வைத் தருகிறது என்று இத்தாலிய ஆயர் பேரவையின் உயர்மட்டக் குழு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.
இலத்தீன் அமெரிக்கக் கண்டம் நம்பிக்கை தரும் ஒரு கண்டம் என்று 2007ம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இலத்தீன் அமெரிக்க ஆயர்களின் கூட்டத்தில் பேசியதைச் சுட்டிக்காட்டியுள்ள இத்தாலிய ஆயர்கள், அந்த நம்பிக்கையின் ஒரு வெளிப்பாடு தற்போது நிகழ்ந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே, ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 3ம் தேதி முடிய மிலான் பேராயர் கர்தினால் Angelo Scola தலைமையில், மிலான் உயர்மறைமாவட்டத்திலிருந்து 10,000 பேர் உரோம் நகர் வந்து திருத்தந்தையைச் சந்திப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயணத்தில் கலந்துகொள்ளும் 10,000 பேரில், 6,000 பேர் 14 வயதுக்குட்பட்ட இளையோர் என்றும், இவர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் கர்தினால் Scola திருப்பலி நிகழ்த்துவார் என்றும், திருப்பயணிகள் அனைவரையும் ஏப்ரல் 3ம் தேதி பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4. இறைவனின் பேரருள் கருணையில் திருத்தந்தை பிரான்சிஸ் அளவற்ற நம்பிக்கை கொண்டுள்ளார் - அயர்லாந்தின் தலைமை ஆயர்

மார்ச்,20,2013. இவ்வுலக வாழ்வு கிறிஸ்துவுடன் நாம் மேற்கொள்ளும் ஒரு பயணம் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த ஒருவாரமாக நமக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வருகிறார் என்று அயர்லாந்தின் தலைமை ஆயர் கர்தினால் Seán Brady கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிஎற்பு திருப்பலியில் கலந்துகொண்ட கர்தினால் Brady, கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ளவர்களை காப்பது நம் கடமை என்று திருத்தந்தை கூறியதை ஒரு முக்கியமான வேண்டுகோளாக எடுத்துச்செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.
உலக மதிப்பீடுகள் நமது ஆன்மீகத்தில் கலந்து வருவதை பெரும் ஆபத்தென்று தன் ஆயர் பணிக்காலத்தில் திருத்தந்தை எடுத்துரைத்ததைச் சுட்டிக் காட்டிய கர்தினால் Brady, இவ்வகை ஆன்மீகம், கிறிஸ்து தேவையில்லை என்று உணர்த்தும் ஆன்மீகமாக மாறும் ஆபத்தையும் திருத்தந்தை கூறியுள்ளார் என்று குறிப்பிட்டார்.
இறைவனின் பேரருள் கருணையில் திருத்தந்தை பிரான்சிஸ் கொண்டுள்ள அளவற்ற நம்பிக்கையை அவர் தெரிவு செய்துள்ள விருதுவாக்கு தெளிவாக்குகிறது என்பதையும் கர்தினால் Brady எடுத்துரைத்தார்.
சவால்கள் நிறைந்துள்ள இக்காலத்தில் திருஅவையை வழிநடத்தும் பணியை மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, அயர்லாந்தில் உள்ள அனைத்து விசுவாசிகளும் தன்னுடன் இணைந்து செபிக்கும்படியாக கர்தினால் Brady தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

5. திருத்தந்தை பிரான்சிஸ் மக்களின் திருத்தந்தை என்ற பெயரை தனக்கு உரிமையாக்கிக்கொண்டுள்ளார் - இந்தியத் திருப்பீடத் தூதர்

மார்ச்,20,2013. மக்களின் திருத்தந்தை என்ற பெயரை ஏற்கனவே தனக்கு உரிமையாக்கிக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்கச் சூழலில் ஆற்றிய பணிகள் அவரது தலைமைப் பணிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று இந்தியத் திருப்பீடத் தூதர் பேராயர் Salvatore Pennacchio கூறினார்.
இச்செவ்வாயன்று திருத்தந்தையின் பணியேற்பு திருப்பலி நிகழ்ந்த அதே நாளில், டில்லியில் பல்லாயிரம் மக்களுடன் கூடி நன்றித் திருப்பலி நிறைவேற்றிய பேராயர் Pennacchio இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்க ஆயர் பேரவையும், டில்லி உயர்மறை மாவட்டமும் இணைத்து ஏற்பாடு செய்திருந்த இத்திருப்பலியில், ஆயர் பேரவையின் தலைமைச் செயலர் Albert D' Souza அவர்களும், டில்லி பேராயர் Anil Couto அவர்களும், டில்லி முன்னாள் பேராயர் Vincent Concessao அவர்களும் கலந்துகொண்டனர்.
இத்திருப்பலியில் கலந்துகொண்ட பல அரசுத் தலைவர்களும், பல்வேறு அமைப்புக்களின் தலைவர்களும் திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வாழ்த்தி, செய்திகள் வழங்கினர்.

6. திருத்தந்தையுடன் இயேசு சபை அகில உலகத் தலைவரின் முதல் சந்திப்பு

மார்ச்,20,2013. இயேசு சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பணியும், இயேசு சபையின் அனைத்து செல்வங்களும் திருஅவையின் பணிக்கே என மீண்டும் ஒருமுறை அர்ப்பணிக்கிறோம் என்று இயேசு சபையின் அகில உலகத் தலைவர் திருத்தந்தையிடம் தெரிவித்தார்.
இஞ்ஞாயிறு மாலை திருத்தந்தையைத் தனிப்பட்ட முறையில் சந்தித்த இயேசு சபை தலைவர் Adolfo Nicolas, இச்சந்திப்பின்போது, மிக எளிய முறையில் தன்னுடன் திருத்தந்தை பழகியதை மகிழ்வுடன் நினைவு கூர்ந்தார். இயேசு சபையின் தலைமை இல்லத்திற்கு திருத்தந்தையை அழைத்தபோது, அவர் கூடியவிரைவில் அங்கு வருவதாகக் கூறியதையும் அருள்தந்தை Nicolas நினைவு கூர்ந்தார்.
இதற்கிடையே, இயேசு சபையின் தென் கிழக்குப் பகுதியின் தலைவராக பணியாற்றும் அருள்தந்தை Edward Mudavassery, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிக்காலத்தில், திருஅவை அதிகாரப் பகிர்வில் அதிகம் வளரும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.
வத்திக்கானில் செயலாற்றும் பலரும் இன்னும் எளிய முறையில் செயலாற்றி, அனைத்து மக்களையும் வரவேற்கும் பாங்கினை வளர்த்துக்கொள்வர் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்தார் அருள்தந்தை Mudavassery.

7. மேய்ப்புப் பணிக்கென தன்னை வழங்கும் ஒரு திருத்தந்தையை நாம் பெற்றுள்ளோம் - பிரேசில் நாட்டு ஆயர்

மார்ச்,20,2013. சென்ற இடமெல்லாம் பிரபலம் அடைந்த இரண்டாம் ஜான்பால் அவர்களையும், ஆழ்ந்த எண்ணங்களுக்குப் பேர்பெற்ற 16ம் பெனடிக்ட் அவர்களையும் தொடர்ந்து, மேய்ப்புப் பணிக்கென தன்னை வழங்கும் ஒரு திருத்தந்தையை நாம் பெற்றுள்ளோம் என்று பிரேசில் நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
16ம் நூற்றாண்டில் இலத்தீன் அமெரிக்க மக்களுக்குக் கிறிஸ்துவை அறிமுகப்படுத்திய இயேசு சபையினரில் ஒருவர் தற்போது திருத்தந்தையாக பணி எற்றிருப்பது நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு கிடைத்துள்ள ஒரு பெரும் கோடை என்று அமேசான் பகுதியில் உள்ள Parintins மறைமாவட்டத்தில் பணிபுரியும் PIME பாப்பிறைக் கழகத்தைச் சேர்ந்த ஆயர் Giuliano Frigeni கூறினார்.
2007ம் ஆண்டு இலத்தீன் அமெரிக்க ஆயர்களின் பொது அவை நிகழ்ந்தபோது, அங்கு வெளியான ஓர் அறிக்கையில் ஆயர்கள் மேற்கொள்ள வேண்டிய மறைபரப்புப் பணி குறித்த தெளிவான கருத்துக்கள் கூறப்பட்டன என்றும், இவ்வறிக்கையை வடிவமைக்க அப்போது கர்தினாலாகப் பணியாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் பெரிதும் உதவினார் என்றும் ஆயர் Frigeni நினைவு கூர்ந்தார்.
இலத்தீன் அமெரிக்காவில் நிலவும் ஏழ்மையும், அந்நாடுகள் அனுபவிக்கும் பின்தங்கிய நிலையும் திருத்தந்தையின் தலைமைப் பணிக்கு புதிய வழிகளைத் திறக்கும் என்றும் ஆயர் Frigeni தன் நம்பிக்கையை வெளியிட்டார்.

8. குரலிழந்த குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் சார்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் குரல்கொடுப்பார் - FAOவின் தலைமை இயக்குனர்

மார்ச்,20,2013. பசி, உணவு பற்றாக்குறை, மற்றும் கொடிய வறுமை ஆகியவற்றை உலகினின்று நீக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலையீட்டை நாங்கள் நம்பியிருக்கிறோம் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இச்செவ்வாயன்று வத்திக்கானில் இடம்பெற்ற திருத்தந்தையின் பணியேற்பு விழாவில், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் சார்பில் கலந்துகொண்ட ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் தலைமை இயக்குனர் Jose’ Graziano da Silva செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
வலுவிழந்த, குரலிழந்த குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் சார்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் குரல்கொடுப்பார் என்று நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று Graziano da Silva கூறினார்.
பணியேற்புத் திருப்பலிக்குப் பின், தான் திருத்தந்தையைச் சந்தித்தபோது, ஏழைகளின் சார்பில் உழைக்கும் வத்திக்கானின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று திருத்தந்தை தன்னிடம் உறுதி அளித்ததாகவும் FAO இயக்குனர் கூறினார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...