Tuesday, 19 March 2013

திருத்தந்தையரின் முடிசூட்டு (பணியேற்பு) விழா

திருத்தந்தையரின் முடிசூட்டு (பணியேற்பு) விழா

திருஅவையின் தலைமைப் பொறுப்பை, திருத்தந்தையர் ஏற்கும் நாள், முடிசூட்டு விழா என்றே பல நூற்றாண்டுகள் அழைக்கப்பட்டது. 1143ம் ஆண்டு, அக்டோபர் 3ம் தேதி, திருத்தந்தை 2ம் செலஸ்தீன் அவர்களே முதன் முறையாக முடிசூட்டப்பட்டார். மூன்றடுக்கு கொண்ட இந்த மகுடம் அவருக்குப் பின் வந்த திருத்தந்தையர்களுக்குச் சூட்டப்பட்டது. பல நூறு ஆண்டுகள் திருஅவையில் கடைபிடிக்கப்படும் இந்த முடிசூட்டு விழாவில் நடைபெறும் ஒரு சடங்கு, கருத்துள்ளதாக அமைந்திருந்தது.
முடிசூட்டும் சடங்கிற்கு முன்னதாக, திருத்தந்தையாகப் பொறுப்பேற்பவர் ஓர் அரியணையில் அமர்ந்திருக்க, அவ்வரியணையை பலர் சுமந்த வண்ணம் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் ஊர்வலம் வந்தனர். இந்த ஊர்வலம் மூன்று முறை நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு நிறுத்தத்தின்போதும் மெல்லிய இறகுகள் போன்ற பொருள்களால் அமைந்த ஒரு பந்தம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அப்போது, ஊர்வலத்தை முன்னின்று நடத்தியவர் இலத்தீன் மொழியில், "Pater sancte, sic transit gloria mundi" அதாவது, "பரிசுத்தத் தந்தையே, இவ்வுலகப் பெருமை இதுபோலக் கடக்கும்" என்று சொன்னார். மும்முறை இவ்விதம் நடந்தபின், ஊர்வலம் பீடத்தை அடைந்து, அங்கு திருத்தந்தைக்கு மகுடம் அணிவிக்கப்பட்டது.
திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் 1963ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி இந்த மகுடத்தை அணிந்ததே இறுதி முறையாக அமைந்திருந்தது. இவ்விழாவுக்குப்பின் அவர் அதை மீண்டும் அணியவில்லை. அவருக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் ஜான்பால், மகுடம் அணியும் சடங்குக்குப் பதிலாக, 'Pallium' எனப்படும் கழுத்துப்பட்டை அணியும் சடங்கை அறிமுகப்படுத்தினார். திருத்தந்தை தலைமைப் பொறுப்பை ஏற்கும் நாள், அண்மைக் காலங்களில், முடிசூட்டு விழா என்பதற்குப் பதிலாக, பணியேற்பு விழா என்றே அழைக்கப்படுகிறது. திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்களுக்குப் பின் வந்த இரண்டாம் ஜான்பால், 16ம் பெனடிக்ட் இருவரும் 'Pallium' அணியும் சடங்கையே பின்பற்றினர். 2013ம் ஆண்டு, மார்ச் 19ம் தேதி, திருஅவையின் 266வது திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற திருத்தந்தை பிரான்சிஸ்'Pallium' அணியும் திருப்பலியுடன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...