Saturday, 23 March 2013

ராஜபக்சவுக்கு தூக்கு தண்டனை: சர்வதேச மாதிரி நீதிமன்றம் தீர்ப்பு !

ராஜபக்சவுக்கு தூக்கு தண்டனை: சர்வதேச மாதிரி நீதிமன்றம் தீர்ப்பு !


இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்குற்றவாளியாக அறிவித்து அவரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்” என்ற கோரிக்கை வலுவடைந்து வரும் நிலையில் மதுரையில் இன்று மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட‌ சர்வதேச மாதிரி நீதிமன்றத்தில் ராஜபக்சேக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
madurai 2
மதுரை கோர்ட் வளாகத்தில் சாமியானா பந்தல் போட்டு, நீதிபதிகள் இருக்கை, வழக்கறிஞர்கள் மேஜை, குற்றவாளிக் கூண்டு என்று பக்கா அசல் போல் ‘மாதிரி நீதிமன்றம்’ அமைக்கப்பட்டிருந்தது. வழக்கறிஞர் சங்க செயலாளர் ஏ.கே.ராமசாமி, மூத்த வழக்கறிஞர் காராளன் ஆகியோர் சிறப்பு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். சர்வதேச விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்ட ராஜபக்சேவை (கொடும்பாவியை) குற்றவாளிக் கூண்டிற்குள் நிறுத்தி இருந்தார்கள்..
madurai 3
சரியாக காலை 11 மணிக்கு மாதிரி நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. நீதிபதிகள் தங்கள் இருக்கைக்கு வந்த போது, வழக்கறிஞர்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். பின்னர், குற்றவாளிக்கூண்டில் நின்ற ராஜபக்சேவைப் பார்த்து காறித் துப்பினார்கள். “அவன் கேடுகட்ட கொடியவன் தான். ஆனால் வழக்கறிஞர்கள் நீதி மன்றத்தின் மாண்பைக் காப்பாற்ற வேண்டும்” என்று நீதிபதிகள் கேட்டுக் கொண்டதால், அந்தச் செயலை வக்கீல்கள் நிறுத்திக் கொண்டனர்.
madurai 5
இதைத் தொடர்ந்து ஈழத்தமிழர்கள் சார்பில் வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் ஓ.செல்வராஜ் ஆகியோர் வாதாடினார்கள். “கடந்த 15 ஆண்டுகளில் இலங்கை ராணுவம், 3 லட்சத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது. இந்தக் கொடியவன் ராஜபக்சே ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே வருடத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 40 ஆயிரம் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
உயிர் பிழைப்பதற்காக மருத்துவமனைகளிலும், கோவில்களிலும், மசூதிகளிலும் தஞ்சமடைந்த மக்களையும் கூட, சர்வதேச விதிகளை மீதி கொன்று குவித்திருக்கிறார்கள். பாதுகாப்பு பகுதி என்று நயவஞ்சமாக அறிவித்துவிட்டு, நம்பிச் சரணடைந்த மக்களை குண்டு போட்டு கூண்டோடு அழித்து ஒழித்திருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்கள் இதோ ( புகைப்பட, வீடியோ ஆதாரங்களை நீதிபதியிடம் கொடுத்தனர்.)
இவை எல்லாம் ராஜபக்சே எவ்வளவு கொடூரமான, குருரமான குற்றவாளி என்பதைக் காட்டுகிறது. இவனுக்கு மன்னிப்பு வழங்கினால், எஞ்சியிருக்கும் தமிழ் இனத்தையும் அழித்துவிடுவான். எனவே இவனுக்கு மிகக்கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்” என்று வக்கீல்கள் வாதாடினார்கள்.
madurai4(2)
ஈழத்தமிழர் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ராஜபக்சேவை குறுக்கு விசாரணை செய்தார். அப்போது அவன் சார்பில் ஆஜராக எந்த வக்கீலும் முன்வரவில்லை. உடனே நீதிபதி, “குற்றவாளிக்கும் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்க உரிமை இருக்கிறது. எனவே இலவச சட்ட உதவி மையம் சார்பில் அவனுக்கு ஒரு வக்கீலை ஏற்பாடு செய்யும்படி உத்தரவிடப்படுகிறது” என்றார்கள். இதைத் தொடர்ந்து இலவச சட்ட உதவி மையம் சார்பில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.
நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு ராஜபக்சே சார்பில் அவர் பதில் அளிக்கையில், ”இலங்கையின் பூர்வீகக் குடி மக்களாக தமிழர்கள் இருந்திருக்கலாம். ஆனால், சிங்களர்கள் மட்டும் தான் அங்கே வாழ வேண்டும். அதற்காகத் தான் தமிழ் இனத்தை அழித்தோம். இன்னும் அழிப்போம். அதற்கு உதவ இந்திய அரசாங்கமே தயாராக இருக்கிறது. சோனியாவும், மன்மோகனும் எங்களுக்கு உதவுவார்கள். தமிழர்களைக் கொல்வது எங்களின் பொழுது போக்கு. யார் தடுத் தாலும், அதைக் கைவிடமாட்டோம்” என்று ராஜபக்சே சொல்வதாக அந்த வழக்கறிஞர் கோர்ட்டில் சொன்னார். உடனே மற்ற வழக்கறிஞர்கள் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் நின்ற ராஜபக்சேவை அடிக்கப்பாய்ந்தார்கள்.
அவர்களை சமாதானப்படுத்திய நீதிபதிகள் ஏ.கே.ராமசாமி, காராளன் ஆகியோர், ராஜபக்சேவுக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு எழுதினார்கள். தீர்ப்பு எழுதிய கையோடு பேனாவை கீழே போட்டு உடைத்தார்கள். ”இலங்கையில் நடத்தப்பட்ட சுதந்திரமான விசாரணை அறிக்கையின் படியும், வழக்கறிஞர்களின் வாதங்களின் படியும் ராஜபக்சே கொடூரமான கொலைகாரன். அவன் இனஅழிப்புப் போரில் ஈடுபட்டுள்ளான் என்பது நிருபணமாகிறது. எனவே அவனை கல்லால் அடித்து, சாகும் வரை தூக்கில் போட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பை வாசித்ததுமே வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து, கூண்டில் நிறுத்தப்பட்டிருந்த ராஜபக்சேவை கல்லாலும், செருப் பாலும் தாக்கினார்கள்.
இதையடுத்து, சிறப்பு நீதிமன்றம் அருகே அமைக்கப்பட்டிருந்த தூக்குமேடையில் ராஜபக்சேவின் உருவ பொம்மை ஏற்றப்பட்டு, சாகும் வரை தூக்கில் போடப்பட்டது. தூக்கில் தொங்கிய உடலையும் வழக்கறிஞர்கள் வெறிகொண்டு தாக்கினார்கள். அங்கு வந்த‌ டாக்டர் (அவரும் வக்கீல் தான்) ஒருவர் ராஜபக்சே செத்துவிட்டதாக அறிவித்ததும், உடல் தூக்குக் கயிற்றில் இருந்து இறக்கப்பட்டு தரதரவென்று ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்டது. பிறகு கோர்ட் முன்பு நடுரோட்டில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.
தனி ஈழமே கிடைத்துவிட்ட வெற்றிக் களிப்பில் வழக்கறிஞர்கள் அங்கிருந்து ஆர்ப்பாட்டத்துடன் கலைந்து சென்றனர். இந்த விநோத போராட்டத்தை மதுரையே வேடிக்கை பார்த்தது

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...