Friday, 25 January 2013

Catholic News in Tamil - 25/01/13

1. திருத்தந்தை மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்பட செபம்

2. குருத்துவக் கல்லூரிகள், மறைக்கல்வி குறித்த திருத்தந்தையின் அப்போஸ்தலிக்கக் கடிதங்கள்

3. கர்தினால் Glemp அவர்கள் நீதியில் பிறரன்பு வாழ்வை நினைவுகூர்ந்தார் -  திருத்தந்தை

4. பேராயர் சிமோஸ்கி : தொழுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் அதற்குச் சிகிச்சை அளிப்பதற்கும்  இன்னும் போதுமான வசதிகள் இல்லை

5. கர்தினால் டோப்போ : இந்தியக் கிறிஸ்தவர்களின் விசுவாசம் உலகுக்கு ஓர் எடுத்துக்காட்டு

6. எருசலேம் முதுபெரும் தலைவர் : புதிய இஸ்ரேல் அரசு பாலஸ்தீனியர்களை மறக்கக்கூடாது

7. வியட்னாமில் ஒரு கட்சி ஆட்சி முடிவுக்கு வர கத்தோலிக்கர் வலியுறுத்தல்

8. இலங்கையில் இருமொழிக் கலப்பில் தேசிய கீதம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்பட செபம்

சன.25,2013. இறைவனின் மீட்புத் திட்டத்தில் மிக முக்கியமான இடமாக இருந்த மத்திய கிழக்குப் பகுதி, வருங்காலத்தில் நீதியையும் நிலைத்த அமைதியையும் அனுபவிப்பதற்கு, அப்பகுதி ஆக்கப்பூர்வமான உரையாடல் மற்றும் ஒத்துழைப்புப் பாதையில் வழிநடத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கத்தோலிக்கத் திருஅவை மற்றும் கீழைரீதி ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையே இறையியல் உரையாடலுக்கானப் பன்னாட்டுக் குழுவின் 30 பிரதிநிதிகளை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, மத்திய கிழக்குப் பகுதி விசுவாசிகளுடன் ஆன்மீகரீதியில் தான் மிக நெருக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தப் பன்னாட்டுக் குழுவில் பலர், கிறிஸ்தவர்கள், தனியாகவும், சமூகமாகவும் துன்புறும் பகுதிகளிலிருந்து வந்திருப்பதைக் குறிப்பிட்ட அவர், துன்புறும் கிறிஸ்தவர்களின் நிலைமை நம் அனைவருக்கும் மிகுந்த கவலை தருகின்றது என்றும் கூறினார்
கிறிஸ்தவ வரலாற்றில் முதல் 500 ஆண்டுகள், கிறிஸ்தவர்களுக்கு இடையே முழு ஒன்றிப்பும், உறவுகளும் இருந்தது குறித்து, இக்குழு, இந்தக் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் ஆய்வு செய்துள்ளது என்றும் உரைத்த திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவை மற்றும் கீழைரீதி ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையே நிலவும் உறவுகள், சகோதரத்துவ ஒத்துழைப்பில் தொடர்ந்து வளருமாறும் ஊக்குவித்தார்.
இம்மாதம் 18ம் தேதி தொடங்கிய கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது.


2. குருத்துவக் கல்லூரிகள், மறைக்கல்வி குறித்த திருத்தந்தையின் அப்போஸ்தலிக்கக் கடிதங்கள்

சன.25,2013. குருத்துவக் கல்லூரிகளை வழிநடத்தும் பொறுப்பை திருப்பீடக் குருக்கள் பேராயத்திடமும், மறைக்கல்வி குறித்த மறைப்பணியை மேற்பார்வையிடும் பொறுப்பை, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவையிடமும் ஒப்படைக்கும் இரண்டு அப்போஸ்தலிக்கக் கடிதங்களை இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
“Motu Proprio” அதாவது திருத்தந்தையின் சொந்த எண்ணத்தின்படி என்ற இரண்டு தனித்தனியான அப்போஸ்தலிக்கக் கடிதங்களில் இந்த பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
திருத்தந்தையின் “Fides per doctrinam” என்ற அப்போஸ்தலிக்கக் கடிதத்தின்படி, குருக்கள் பேராயத்திடம் இருந்த மறைக்கல்வி குறித்த மறைப்பணியை மேற்பார்வையிடும் பொறுப்பு, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவையிடம் ஒப்படைக்கப்படுகின்றது.
திருத்தந்தையின் “Ministrorum institutio” என்ற அப்போஸ்தலிக்கக் கடிதத்தின்படி, குருத்துவக் கல்லூரிகளை வழிநடத்தும் பொறுப்பு, கத்தோலிக்கக் கல்விப் பேராயத்திடமிருந்து குருக்கள் பேராயத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களின் மூலம், அகில உலகத் திருஅவை மற்றும் தலத்திருஅவைகளின் நன்மைக்கும், பணிக்குமெனத் திருத்தந்தைக்கு உதவும் திருப்பீடத் தலைமையகத்திலுள்ள துறைகளின் பணிகளில்  மாற்றங்கள் இடம்பெறும்.
இந்த மாற்றங்கள் இடம்பெறும் என, ஏற்கனவே கடந்த அக்டோபர் 27ம் தேதி உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவுற்றபோது திருத்தந்தை தெரிவித்திருந்தார்.


3. கர்தினால் Glemp அவர்கள் நீதியில் பிறரன்பு வாழ்வை நினைவுகூர்ந்தார் -  திருத்தந்தை

சன.25,2013. போலந்தின் வார்சா உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Józef Glemp தனது வாழ்நாள் முழுவதும், நீதியில் பிறரன்பு என்ற தனது விருதுவாக்கின்படி வாழ்ந்தார் எனப் பாராட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
83 வயதாகும் கர்தினால் Glemp இறைவனடி சேர்ந்ததை முன்னிட்டு, வார்சாவின் இந்நாள் பேராயர் கர்தினால் Kazimierz Nycz அவர்களுக்கு இரங்கல் தந்தி அனுப்பிய திருத்தந்தை, கர்தினால் Glemp, புனித வளனைப் பின்பற்றி நீதியான மனிதராக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் போலந்து திருஅவையின் தலைவராக இருந்த கர்தினால் Glemp, அந்நாட்டின் கம்யூனிச அரசுக்கு எதிரான அமைதியான போராட்டத்தில் முக்கியமான கருவியாகச் செயல்பட்டவர். இவர், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இம்மாதம் 23ம் தேதி மரணமடைந்தார்.  
கர்தினால் Glempன் இறப்பையொட்டி, ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான ஹங்கேரித் திருஅவைத் தலைவர் கர்தினால் Péter Erdőவும் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். 
கர்தினால் Glempன் இறப்புக்குப் பின்னர், கத்தோலிக்கத் திருஅவையில் கர்தினால்களின் மொத்த எண்ணிக்கை 210. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 119. 


4. பேராயர் சிமோஸ்கி : தொழுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் அதற்குச் சிகிச்சை அளிப்பதற்கும்  இன்னும் போதுமான வசதிகள் இல்லை

சன.25,2013. தொழுநோயாளர்களுக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த   புனித தமியான், முத்திப்பேறு பெற்ற அன்னைதெரேசா மற்றும் பல புனிதர்கள், தன்னார்வப் பணியாளர்கள் ஆகியோரைப் பின்பற்றி, அந்நோயாளிகளுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுமாறு கேட்டுக் கொண்டார் பேராயர் Zygmunt Zimowski.
இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் 60வது அனைத்துலக தொழுநோயாளர் தினத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட நலவாழ்வுப் பணியாளர்களுக்கான அவையின் தலைவர் பேராயர் Zimowski, உலகில் தொன்மைகாலந்தொட்டே மனிதரைத் தாக்கி வருவதாக நம்பப்படும் தொழுநோய் குணப்படுத்தப்படவில்லையென்றால் இறப்பை வருவிக்கும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், அந்நோயாளிகள், சமூகத்தால் ஓரங்கட்டப்படுதலையும் வறுமையையும் எதிர்கொள்கின்றனர் என்றுரைக்கும் பேராயரின் செய்தி, இவர்கள் பரிவன்புடன் நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுள்ளது. 
2011ம் ஆண்டில் இரண்டு இலட்சம் பேர் தொழுநோயால் தாக்கப்பட்டிருந்தனர் என்றும், இந்நோய்க் கிருமிகளால் புதிதாகத்  தாக்கப்பட்டிருந்தவர்கள், நோய் முற்றிய நிலையிலே கண்டுபிடிக்கப்பட்டனர் என்றும் உலக நலவாழ்வு நிறுவனம்(WHO)  வெளியிட்ட புள்ளிவிபரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் Zimowski.
இந்தியா, ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகள், தென் அமெரிக்கா ஆகிய இடங்களில் தொழுநோய்ப் பாதிப்பு அதிகம் உள்ளது என உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.


5. கர்தினால் டோப்போ : இந்தியக் கிறிஸ்தவர்களின் விசுவாசம் உலகுக்கு ஓர் எடுத்துக்காட்டு

சன.25,2013. இந்திய மக்களும், கிறிஸ்தவர்களும் தங்களது விசுவாசத்தோடு ஒத்திணங்கும் வகையில் வாழ்ந்தார்கள் என்றால், அப்போது இந்தியா இந்த உலகுக்கே எடுத்துக்காட்டாக அமையும் என்று இந்திய ஆயர் பேரவையின் முன்னாள் தலைவர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ கூறினார்.
இந்தியாவில் இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்படும் 64வது குடியரசு தினத்தை முன்னிட்டு இவ்வாறு கருத்து தெரிவித்த ராஞ்சி பேராயர் கர்தினால் டோப்போ, இந்தக் கொண்டாட்டங்கள் நம்பிக்கை ஆண்டுச் சூழலில் இடம் பெறுவதைச் சுட்டிக்காட்டினார்.
வன்முறை, ஊழல், பசி, ஊட்டச்சத்துக் குறைவு போன்ற நாட்டின் பிரச்சனைகளைக் களைவதற்கு இந்தியர்கள் காந்தியின் போதனைகளின் வழியில் செல்ல வேண்டும் எனவும், கிறிஸ்தவர்களில் மனமாற்றம் தேவையென்றும் கூறினார் கர்தினால் டோப்போ.
இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தலத்திருஅவைக்கு முக்கிய பங்கு உள்ளது, இது திருஅவையின் கடமையுமாகும் என்று ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறிய கர்தினால் டோப்போ, வாய்மையே வெல்லும் என்ற நாட்டின் விருதுவாக்குச் சூழலில் உண்மையின் அழகை நாம் மீண்டும் கண்டுணர வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.


6. எருசலேம் முதுபெரும் தலைவர் : புதிய இஸ்ரேல் அரசு பாலஸ்தீனியர்களை மறக்கக்கூடாது

சன.25,2013. இஸ்ரேலில் புதிதாக ஆட்சி அமைக்கும் அரசு பாலஸ்தீனியர்களை மறக்கக் கூடாது என்று எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal கேட்டுக் கொண்டார்.
இஸ்ரேலில் இச்செவ்வாயன்று தேர்தல்கள் இடம்பெற்றுள்ளவேளை, பதவி விலகும் பிரதமர் Benjamin Netanyahu கட்சி, Yair Lapid கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தியிருப்பது, நாட்டின் முன்னேற்றத்துக்கு உண்மையிலே உதவும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார் முதுபெரும் தலைவர் Twal.
பாலஸ்தீனம் என்று அழைக்கப்படும் ஒரு நாடு இருக்கின்றது என்பதையும், பாலஸ்தீனிய மக்கள் என்ற ஒரு சமுதாயம் இருக்கின்றது என்பதையும் தேர்தலில் வெற்றிபெறும் இஸ்ரேல் அரசியல்வாதிகள்  நினைவில் வைக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார் எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர்.
மேலும், ஜோர்டனில் நடைபெற்றுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சிரியாவில் சண்டைகள் நிறுத்தப்படுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். 


7. வியட்னாமில் ஒரு கட்சி ஆட்சி முடிவுக்கு வர கத்தோலிக்கர் வலியுறுத்தல்

சன.25,2013. வியட்னாமில் ஒரு கட்சி ஆட்சி முடிவுக்கு வருவதை வலியுறுத்தும் மனு ஒன்றில் அந்நாட்டுக் கத்தோலிக்கர், அறிவாளர்கள், அரசியல்வாதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.
800க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ள அம்மனுவில், வியட்னாமில் தேசிய அரசியல் அமைப்பு சீரமைக்கப்பட்டு பல கட்சிகள் அமைப்பு ஏற்படுத்தப்படவும், நீதித்துறை, சட்டத்துறை, செயல்பாட்டுத்துறை ஆகியவற்றைத் தனித்தனியே பிரிக்கவும் வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது அரசின் கையில் உள்ள நிலவுடமையிலும் சீர்திருத்தம் தேவை என வலியுறுத்தும் அம்மனு, அந்நாட்டின் கட்டுப்பாட்டிலுள்ள வழிபாட்டுச் சுதந்திரம் உட்பட முழு மத சுதந்திரம் தேவை எனவும் கூறியுள்ளது.
இம்மனுவில் Vinh ஆயர் Paul Nguyen Thai Hop, வியட்னாம் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவில் ஒருவரான அருள்பணி Mary Joseph Le Quoc Thang, Ho Chi Minh நகர உயர்மறைமாவட்டத்தின் முதன்மை குரு Huynh Cong Minh John Baptist உட்பட பலர்  கையெழுத்திட்டுள்ளனர்.


8. இலங்கையில் இருமொழிக் கலப்பில் தேசிய கீதம்

சன.25,2013. இலங்கையில், சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தனித்தனியாகப் பாடப்பட்டு வரும் தேசியப் பண்ணை, இரு மொழிகளையும் கலந்து ஒரு புதிய வடிவிலான தேசியப் பண் தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாடு மற்றும் இன விவகாரங்கள் அமைச்சகத்தின் முயற்சியினால் தயாரிக்கப்பட்டுள்ள இப்புதியப் பண், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பார்வைக்கு அனுப்பபட்டு, அதன் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இருமொழி கலந்த இந்த தேசியப் பண் அமலுக்கு வர, இலங்கையில் ஓர் அரசியல் சட்டத்திருத்தம் தேவைப்படலாம் என்று கூறிய அமைச்சர் நாணயக்கார, நாடாளுமன்ற குழுவின் பரிந்துரை இப்போது அரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
 

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...