Thursday, 24 January 2013

Catholic News in Tamil - 24/01/13

1. 47வது உலகத் தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள செய்தி

2. திருத்தந்தையின் உலகத் தொடர்பு நாள் செய்தி டிஜிட்டல் புரட்சிகளைப் பற்றிய ஒரு நடுநிலையான கருத்தை வெளியிட்டுள்ளது - பேராயர் Claudio Maria Celli

3. திருத்தந்தையின் உலக அமைதி நாள் செய்தி நம் ஒவ்வொருவரையும் ஆன்மீக ஆய்வுக்கு அழைக்கிறது - கர்தினால் பீட்டர் டர்க்சன்

4. ஒடிஸ்ஸா வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நம்பிக்கையை இன்னும் இழக்காமல் வாழ்கின்றனர் - கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா

5. விலங்குகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை திருஅவை என்றும் நியாயப்படுத்தியது இல்லை - அருள்தந்தை Federico Lombardi

6. தமது மகளை கொலை செய்யச் சொன்ன சவுதி பெற்றோரை மன்னித்தோம்: ரிசானாவின் தாயார்

7. செவ்வாய்க் கோளத்தில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான வலுவான அறிகுறிகள்

------------------------------------------------------------------------------------------------------

1. 47வது உலகத் தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள செய்தி

சன.24,2013. டிஜிட்டல் வழி தொடர்புகள் பெருகியுள்ள இக்காலத்தில், அத்தொடர்புகள் வழியாக நமது எண்ணங்களைப் பகிர்ந்து, நாம் உருவாக்கும் உறவுகளையும், சமுதாயக் குடும்பத்தையும் எண்ணிப்பார்க்க விழைகிறேன் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.
இவ்வாண்டு மேமாதம் 12ம் தேதி கொண்டாடப்படும் 47வது உலகத் தொடர்பு நாளுக்கென, "சமுதாய வலைத்தளங்கள்: உண்மை மற்றும் நம்பிக்கையின் கதவுகளும், நற்செய்திப் பணியின் புதிய அரங்கங்களும்" என்ற தலைப்பில், திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியின் துவக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் தூய ஆவியார் பெருவிழாவுக்கு முந்தைய ஞாயிறு உலகத் தொடர்புகள் நாள் திருஅவையால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கென திருத்தந்தை வழங்கும் செய்தி, செய்தியாளர்களின் பாதுகாவலாரான புனித பிரான்சிஸ் டிசேல்ஸ் அவர்களின் திருநாளான சனவரி 24ம் தேதி வெளியிடப்படும்.
2013ம் ஆண்டுக்கென வழங்கியுள்ள செய்தியில், சமுதாய வலைத்தளங்களின் வளர்ச்சியையும், அவை நமக்கு முன் வைக்கும் சவால்களையும் திருத்தந்தை ஆய்வு செய்துள்ளார்.
சமுதாய வலைத்தளங்கள் மூலம் நமது சிந்தனைகளை இன்னும் விரிவாக்கும் முயற்சிகளில் நாம் ஈடுபடவேண்டும் என்று கூறும் திருத்தந்தை, உண்மையையும், நல்ல மதிப்பீடுகளையும் பகிர விழைவோருக்கு இத்தொடர்புகள் விடுக்கும் சவால்களையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தொடர்பு உலகை வளர்ப்பது சமுதாய வலைத்தளங்களின் முதன்மையான சவால் என்று கூறும் திருத்தந்தை, கணணித் தொடர்பு உலகில் இயேசுவையும், அவரது மதிப்பீடுகளையும் பகிர்ந்துகொள்வது கிறிஸ்தவர்களின் முன் உள்ள பெரும் சவால் என்று விளக்கியுள்ளார்.
கிறிஸ்தவ பாரம்பரியம் செறிவுள்ள பல அடையாளங்களை, தொன்றுதொட்டு பயன்படுத்தி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, தற்போது வளர்ந்துள்ள டிஜிட்டல் உலகிலும் கிறிஸ்துவ அடையாளங்களைப் பகிர்வது நமக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு சவால் என்று  கூறியுள்ளார்.
சமுதாய வலைத்தளங்களின் அற்புதங்களைப் பயன்படுத்தி, அனைத்து மனிதர்களின் முழுமையான முன்னேற்றத்திற்கு உதவுவதும் இன்றைய அழைப்பு என்று திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.
நற்செய்தியைப் பரப்பும் புதிய வழிகளை கிறிஸ்தவர்கள் அனைவரும் தொடர்ந்து தேடவும், அனைத்து வழிகளிலும் இறைவனின் அன்பையும், நன்னெறி விழுமியங்களையும் வளர்க்கும் கருவிகளாக நாம் மாறவும் தன் ஆசீரை அனைவருக்கும் வழங்கி தன் 47வது உலகத் தொடர்புகள் நாள் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. திருத்தந்தையின் உலகத் தொடர்பு நாள் செய்தி டிஜிட்டல் புரட்சிகளைப் பற்றிய ஒரு நடுநிலையான கருத்தை வெளியிட்டுள்ளது - பேராயர் Claudio Maria Celli

சன.24,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கியுள்ள உலகத் தொடர்பு நாள் செய்தி, நமது டிஜிட்டல் தொடர்புப் புரட்சிகளைப் பற்றிய ஒரு நடுநிலையான கருத்தை வெளியிட்டுள்ளது என்று வத்திக்கன் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
2013ம் ஆண்டுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள 47வது உலகத் தொடர்பு நாள் செய்தியை, சனவரி 24, இவ்வியாழனன்று காலை செய்தியாளர்களிடம் வெளியிட்டு, உரையாற்றிய சமூகத் தொடர்புகள் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Claudio Maria Celli இவ்வாறு கூறினார்.
கணணிவழித் தொடர்புகளைப் பற்றிய கவலை பலரையும் பாதித்துள்ள வேளையில், திருத்தந்தை விடுத்துள்ள இந்தச் செய்தி, இன்றையத் தொடர்புகளை நேர்மறையாக, அதே நேரம், ஆழமாக அலசியுள்ளது என்று பேராயர் Celli சுட்டிக்காட்டினார்.
ஆதாரமற்ற பல செய்திகளைப் பகிர்ந்து வரும் சமுதாய வலைத்தளங்களில் தெளிவான சிந்தனைகளுடன், தகுந்த ஆதாரங்களுடன் செய்திகளைப் பகிர்வதும் அவசியம் என்பதை திருத்தந்தையின் செய்தி வலியுறுத்துகிறது என்றும் பேராயர் Celli எடுத்துரைத்தார்.
சமூகத் தொடர்புகள் திருப்பீட அவையின் செயலர் பேரருள்தந்தை Paul Tighe, செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியபோது, தொடர்பு சாதனங்கள் இறைவனின் ஒரு கொடை எனவும், இக்கொடைகளை நாம் பயன்படுத்தும் முறைகளிலேயே சமுதாய மாற்றங்களைக் கொணர முடியும் எனவும் திருத்தந்தை தன் செய்திகளில் கூறி வருகிறார் எனச் சுட்டிக்காட்டினார்.


3. திருத்தந்தையின் உலக அமைதி நாள் செய்தி நம் ஒவ்வொருவரையும் ஆன்மீக ஆய்வுக்கு அழைக்கிறது - கர்தினால் பீட்டர் டர்க்சன்

சன.24,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாண்டுக்கென வழங்கியுள்ள உலக அமைதி நாள் செய்தி நம் ஒவ்வொருவரையும் ஆன்மீக ஆய்வுக்கு அழைக்கிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
புனித பூமியில் அமைதி நிலவ அனைத்துலகும் செபிக்கும் நாள் சனவரி 27, வருகிற ஞாயிறன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள அமைதி, மற்றும் நீதி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் இவ்வாறு கூறியுள்ளார்.
புனித பூமியில் அமைதி நிலவ அனைத்துலகும் செபிக்கும் நாள் 2009ம் ஆண்டு ஒரு சில இளையோர் குழுக்களால் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். அவ்வாண்டு 400 நகரங்கள் இணைந்து  நடத்திய ஒரு நாள் செப முயற்சி, ஒவ்வோர் ஆண்டும் வளர்ந்து, இவ்வாண்டு ஐந்தாவது முறையாக, வருகிற ஞாயிறன்று உலகின் 3000 நகரங்களில் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைதி நாளுக்கென சிறப்புச் செய்தி வழங்கியுள்ள கர்தினால் டர்க்சன், "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" என்ற தலைப்பில் திருத்தந்தை வழங்கியுள்ள செய்தியைச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து, இறைவனோடும் ஒன்றித்து வாழும்போது உலகில் அமைதி நிலவும் என்பதை எடுத்துரைத்த கர்தினால் டர்க்சன், முழுமையான அமைதி கடவுளிடமிருந்து வருவதால், அக்கொடைக்கு நாம் ஒன்றிணைந்து வேண்டுவது முக்கியம் என்று கூறினார்.


4. ஒடிஸ்ஸா வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நம்பிக்கையை இன்னும் இழக்காமல் வாழ்கின்றனர் - கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா

சன.24,2013. ஒடிஸ்ஸாவின் தலத் திருஅவை, சாதி, மதம் ஆகிய பாகுபாடுகளைக் கடந்து பணியாற்றுவதால், அங்கு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நம்பிக்கையை இன்னும் இழக்காமல் வாழ்கின்றனர் என்று கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா கூறினார்.
பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பேராயர் பார்வா, ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில், நடைபெற்றுவரும் நம்பிக்கை ஆண்டில், பிரிவுகள் ஏதுமின்றி திருஅவை வளர வேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறினார்.
ஒடிஸ்ஸா கிறிஸ்தவ சமுதாயம், தலித், பழங்குடியினர் எனவும், பல்வேறு கிறிஸ்தவ சபைகள் எனவும் பிரிந்து கிடக்கிறது என்பதை எடுத்துரைத்த பேராயர் பார்வா, இந்தப் பிரிவுகளை நீக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளையும் சுட்டிக்காட்டினார்.
கடந்த நூறு ஆண்டுகளாக கத்தோலிக்கத் திருஅவை மற்றும் பிற கிறிஸ்துவ சபை பணியாளர்களின் அயராத உழைப்பால் பழங்குடியினரின் வாழ்வு முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், இந்த முன்னேற்றத்தை இன்னும் வளர்ப்பது இன்றைய சமுதாயத்தின் கடமை என்றும் பேராயர் பார்வா வலியுறுத்தினார்.


5. விலங்குகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை திருஅவை என்றும் நியாயப்படுத்தியது இல்லை - அருள்தந்தை Federico Lombardi

சன.24,2013. மிருகங்களுக்கு இழைக்கப்படும் வரம்பு மீறிய கொடுமைகளை, கத்தோலிக்கத் திருஅவை எதிர்த்து வருகிறது என்று வத்திக்கான் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
யானை தந்தத்தால் ஆன திரு உருவங்கள் கத்தோலிக்க ஆலயங்களில் வழிபாட்டில் பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டி National Geographic பத்திரிகையில் சனவரி 17ம் தேதி கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. Oliver Payne என்பவர் எழுதிய இக்கட்டுரையை அடுத்து, வத்திக்கானுக்கு பல மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த மின்னஞ்சல்களுக்கும், Oliver Payne எழுதிய கட்டுரைக்கும் பதில் தரும் வகையில் அருள்தந்தை Lombardi, தன் எண்ணங்களைத் தொகுத்து, National Geographic இதழுக்கு ஒரு கடிதமாக வழங்கியுள்ளார்.
விலங்குகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை திருஅவை என்றும் நியாயப்படுத்தியது இல்லை என்பதை இக்கடிதத்தில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
யானையின் தந்தத்தால் ஆன பொருள்கள் விலையேறப் பெற்றவை என்ற எண்ணம் பரவலாக இருந்த பழங்காலத்தில், திரு உருவங்கள் தந்தத்தால் செய்யப்பட்டன என்பதை மறுக்கமுடியாது என்று கூறும் அருள்தந்தை Lombardi, திருஅவை இந்தப் பழக்கத்தை உற்சாகப்படுத்தியது என்று சொல்வது தவறான எண்ணம் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் பல நாடுகளில் தந்த வேட்டையில் யானைகள் கொல்லப்படுவதற்கு, திருஅவை வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறது என்பதையும் தன் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் அருள்தந்தை Lombardi.


6. தமது மகளை கொலை செய்யச் சொன்ன சவுதி பெற்றோரை மன்னித்தோம்: ரிசானாவின் தாயார்

சன.24,2013. தமது மகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியோருக்கு Shari-ah சட்டத்தின்படி தாம் மன்னிப்பை வழங்குவதாக சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட Rizana Nafeekன் தாயார் தெரிவித்துள்ளார்.
Rizanaவினால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோர், Rizanaவை மன்னிக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் சவுதி அரசு குறிப்பிட்டுள்ளது.
எனினும் இஸ்லாமிய மதத்தின் Shari-ah சட்டத்தின்படி, தமது மகளுக்கு மன்னிப்பு வழங்காத சவுதி பெற்றோருக்கு, தாம் மன்னிப்பை வழங்குவதாக Rizanaவின் தாய் குறிப்பிட்டுள்ளார்.
Rizanaவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பாக சவுதி அரசு தமக்கு எவ்விதத் தகவலும் தரவில்லை என்றும், ஊடகம் மூலமே தமது மகளின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை தெரிந்துக்கொண்டதாகவும் Rizanaவின் தாய் தெரிவித்துள்ளார்.


7. செவ்வாய்க் கோளத்தில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான வலுவான அறிகுறிகள்

சன.24,2013. செவ்வாய்க் கோளத்தில் நிலப்பரப்புக்கு கீழே கிடைக்கப்பெறுகின்ற தாதுப்பொருட்கள், அக்கோளத்தில் முன்னொரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இதுவரையில் கிடைத்திருக்கும் ஆதாரங்களில் வலுவானதென்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
செவ்வாய்க் கோளத்தின் வரலாற்றில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் அங்கு காணப்படுவதாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.
இலண்டனின் Natural History அருங்காட்சியகம் மற்றும் Aberdeen பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான Nasa மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான Esa (European Space Agency) ஆகியவற்றின் தரவுகளைக் கொண்டு நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் Nature Geoscience என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
கோளங்களை விண்கற்கள் மோதும்போது, நிலப்பரப்புக்கு அடியில் இருக்கின்ற பாறைகள் மேற்பரப்புக்கு கொண்டுவரப்படுகின்றன. செவ்வாய்க் கோளத்தில் அவ்வாறு விண்கல் மோதியதால் ஏற்பட்ட ஒரு பள்ளத்தில் காணப்படும் தாதுப்பொருட்களை ஆராயும்போது, அங்கே உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்று இன்னும் தெரியாத நிலையில், செவ்வாய்க் கோளத்தில் நிலத்தடியில் நுண்ணியிர்கள் வாழ்ந்தது உறுதி செய்யப்படுமானால், பூமியில் உயிர்கள் தோன்றிய விதத்தை புரிந்துகொள்ளவும் அது உதவியாக இருக்கும் என்று ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான முனைவர் Joseph Michalski கூறினார்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...