Wednesday, 23 January 2013

Catholic News in Tamil - 22/01/13


1. வியட்னாம் கம்யூனிசக் கட்சியின் பொதுச் செயலர், திருத்தந்தை சந்திப்பு

2. வ‌த்திக்கான் தொலைக்காட்சி மைய‌த்திற்குப் புதிய‌ த‌லைவ‌ர்

3. அமெரிக்க ஆயர்கள் : Roe v Wadeன் 40வது ஆண்டு நிறைவையொட்டி செபமும் தவமும்

4. அமைதிக்காக மதங்கள் ஒன்றிணைந்து உழைக்க முன்வருமாறு டெல்லி பேராயர் வேண்டுகோள்

5. நேபாளத்தில் கிறிஸ்தவரல்லாதவரிடையே விவிலிய விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளது

6. மார்பகப் புற்றுநோய்ப் பாதிப்பில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்

7. இலங்கையில் 50 விழுக்காட்டினருக்கு நீரிழிவு நோய் ஏற்படக் கூடிய அபாயம்

------------------------------------------------------------------------------------------------------

1. வியட்னாம் கம்யூனிசக் கட்சியின் பொதுச் செயலர், திருத்தந்தை சந்திப்பு

சன.22,2013. வியட்னாம் கம்யூனிசக் கட்சியின் பொதுச் செயலர் Nguyên Phu Trong, இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே அவர்களையும் சந்தித்தார் Nguyên Phu Trong.
வியட்னாம் கம்யூனிச அரசின் அதிகாரி ஒருவர், திருப்பீடத்துக்கு வருகை தருவது, 2007ம் ஆண்டிலிருந்து இது நான்காவது தடவையாகும்.
2009ம் ஆண்டில் வியட்னாம் அரசுத்தலைவர் Nguyen Minh Triet திருப்பீடத்துக்கு வருகை தந்துள்ளார்.
சாய்கான் ஆக்ரமிக்கப்பட்டதையடுத்து, 37 ஆண்டுகளுக்கு முன்னர் வியட்னாமுக்கும், திருப்பீடத்துக்கும் இடையேயான அரசியல் உறவுகள் முறிந்தன. எனினும், தற்போது இவ்விரு நாடுகளுக்கு இடையேயான நல் உறவுகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. பேராயர் Leopoldo Girelli, 2011ம் ஆண்டில் வியட்னாமுக்கானத் திருப்பீடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக, நாடுகளின் தலைவர்களை மட்டும் சந்திக்கும் திருத்தந்தை, ஒரு கட்சித் தலைவரை, அதுவும், திருப்பீடத்துடன் முழு அரசியல் உறவு இல்லாத ஒரு நாட்டின் அதிகாரியைச் சந்தித்திருப்பது முக்கியம் வாய்ந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.

2. வ‌த்திக்கான் தொலைக்காட்சி மைய‌த்திற்குப் புதிய‌ த‌லைவ‌ர்

சன.22,2013.  வ‌த்திக்கான் தொலைக்காட்சி மைய‌த்தின் புதிய‌ த‌லைவ‌ராக‌ இத்தாலியின் மிலான் உய‌ர்ம‌றைமாவ‌ட்ட‌ பேரருட்திரு Dario Edoardo Viganòவை நிய‌மித்துள்ளார் திருத்த‌ந்தை 16ம் பென‌டிக்ட்.
கத்தோலிக்க திருஅவைக்கும் திரையுலகிற்கும் இடையேயுள்ள உறவு குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ள பேரருட்திரு Edoardo Viganò, உரோம் நகரின் இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதுநாள்வ‌ரை வ‌த்திக்கான் தொலைக்காட்சி மைய‌த்தின் த‌லைவ‌ராக‌, திருப்பீட‌ப் பேச்சாள‌ரும் வ‌த்திக்கான் வானொலி இய‌க்குன‌ருமான‌ இயேசுச‌பை அருள்த‌ந்தை ஃபெத‌ரிக்கோ லொம்பார்தி ப‌ணியாற்றி வ‌ந்தார்.
மேலும், திருப்பீட பத்திரிகை அலுவலகத்தின் துணை இயக்குனராக முனைவர் Angelo Scelzoவை இச்செவ்வாய்க்கிழமையன்று நியமித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். முனைவர் Scelzo இதுநாள்வரை திருப்பீட சமூகத்தொடர்பு அவையின் நேரடிச்செயலராகப் பணியாற்றி வந்துள்ளார்.

3. அமெரிக்க ஆயர்கள் : Roe v Wadeன் 40வது ஆண்டு நிறைவையொட்டி செபமும் தவமும்

சன.22,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டில் கருக்கலைப்பைச் சட்டப்படி அங்கீகரித்த Roe v Wade என்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் 40வது ஆண்டு நிறைவு இச்செவ்வாயன்று இடம்பெற்றவேளை, அந்நாட்டுக் கத்தோலிக்கர் செபமும் தவமும் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளனர் ஆயர்கள்.
இந்த 40ம் ஆண்டு நிறைவையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் வாழ்வுக்கு ஆதரவான பணிக்குழுத் தலைவர் கர்தினால் Sean O’Malley வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கேட்டுள்ளார்.
இந்த 40வது ஆண்டையொட்டி இடம்பெறும் 9 நாள்கள் செபம், தவம் மற்றும் திருப்பயணங்களில் கத்தோலிக்கர் பங்கு கொள்ளுமாறும் கேட்டுள்ளார் கர்தினால் O’Malley.
கருக்கலைப்பின் தீமை கற்பனைக்கெட்டாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது எனவும், குணப்படுத்தலையும் புதுப்பித்தலையும் இயேசு நடத்துகிறார் எனவும் கர்தினாலின் அறிக்கை கூறுகிறது. 
அமெரிக்க ஐக்கிய நாட்டில் கருக்கலைப்பு சட்டப்படி அங்கீகரிப்பட்டதிலிருந்து, 5 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட கருக்கலைப்புகள் இடம்பெற்றுள்ளன.

4. அமைதிக்காக மதங்கள் ஒன்றிணைந்து உழைக்க முன்வருமாறு டெல்லி பேராயர் வேண்டுகோள்

சன.22,2013. மேம்பட்ட ஓர் உலகை கட்டியெழுப்ப அனைத்து மதங்களும் கைகோர்த்து ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார் புதுடெல்லியின் புதிய பேராயர் Anil Jose Thomas Couto
மோதல்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைகள் சுரண்டப்படல் மற்றும் இலஞ்ச ஊழல்களால் பாதிப்படைந்திருக்கும் இவ்வுலகில் அமைதியையும் இணக்க வாழ்வையும் கொணர மதங்கள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியது அவசியம் என்றார் பேராயர்.
மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் மட்டும் போதாது, மதங்கள் கற்பிக்கும் மதிப்பீடுகளின்படி செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்றார் பேராயர் Thomas Couto.
மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முயலும்போதே, மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் பலனுள்ளதாக மாறும் என மேலும் கூறினார் டெல்லி பேராயர்.

5. நேபாளத்தில் கிறிஸ்தவரல்லாதவரிடையே விவிலிய விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளது

சன.22,2013. நேபாளத்தில் கிறிஸ்தவரல்லாதவரிடையே விவிலிய விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளதாக அண்மை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நேபாள மொழி விவிலியம் கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டுத் துவக்கத்திலும் அதிக அளவில் விற்பனையாகியுள்ளதாகவும், மேலும் பெருமெண்ணிக்கையில் அச்சிடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளால் பிரச்சனைகளை எதிர்நோக்கும் மக்கள், விவிலியத்தில் தங்கள் நம்பிக்கைகளைப் பதித்துள்ளதாகத் தெரிவித்தார் கிறிஸ்தவ அருள்பணியாளர் காஹர ராஜ்.
2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நேபாள மக்கள்தொகையில் 1.5 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள்.

6. மார்பகப் புற்றுநோய்ப் பாதிப்பில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்

சன.22,2013. "பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் வரிசையில், இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக, பெங்களூரு மருத்துவர் அமலா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை ஒக்கூர் தனியார் தாதியர் கல்லூரியில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய், மறைந்திருக்கும் உண்மைகள்எனும் தலைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய பெங்களூரு செயின்ட் ஜான் மருத்துவமனை புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் அமலா, பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோய்களின் வரிசையில் இந்தியா 2வது இடத்தைப் பிடிக்கிறது என்றார். குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களை இந்நோய் தாக்குகிறது என்ற அவர், குறைந்த வயதிலேயே வயதுக்கு வந்தோர், கால தாமதத்தில் கர்ப்பிணியானோர், மற்றும் குழந்தையில்லாத சிலரை இந்த நோய்த் தாக்குகிறது எனவும், நோயின் வீரியத்தால் நிணநீர் முடிச்சு, நுரையீரல், கல்லீரல் ஆகியவை பாதிக்கப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

7. இலங்கையில் 50 விழுக்காட்டினருக்கு நீரிழிவு நோய் ஏற்படக் கூடிய அபாயம்

சன.22,2013. இலங்கையில் 2050ம் ஆண்டளவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என அந்நாட்டு நலஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியரில் 10 முதல் 15 விழுக்காட்டினர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
நீரிழிவு, இருதய நோய், சுவாச நோய்கள் மற்றும் புற்று நோய் போன்ற தொற்றா நோய்களினால் நாள்தோறும் 650 பேர் உயிரிழக்கின்றனர்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றாமை, உடற்பயிற்சிகளில் ஈடுபடாமை போன்ற காரணங்களினால் இவ்வாறு தொற்றா நோய்கள் ஏற்படுகின்றன எனவும் கூறப்படுகின்றது. 
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...