Tuesday, 22 January 2013

Catholic News in Tamil - 21/01/13

 
1. கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் அமைதிக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

2. ஈராக்கில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான கிறிஸ்தவ மையம்

3. ஒரேபாலினத் திருமணங்களை எதிர்க்க விசுவாசிகளின் ஆதரவை நாடும் இங்கிலாந்து திருஅவை

4. தகவல் அறியும் சட்டத்தை நிறைவேற்றுமாறு பிலிப்பீன்ஸ் அரசுக்கு தலத்திருஅவை வேண்டுகோள்

5. ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் என்ணிக்கை இங்கிலாந்தில் குறைந்துள்ளது

6. ஐ.நா.: அப்கானிஸ்தான் சிறைகளில் கைதிகள் துன்புறுத்தப்படுவது பரவலாக உள்ளது

------------------------------------------------------------------------------------------------------

1. கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் அமைதிக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

சன.21,2013. கிறிஸ்தவர்கள் மத்தியில் காணக்கூடிய விதத்தில் ஒன்றிப்பு ஏற்படாமல் இருப்பது, குறிப்பாக, இன்னும் சரிசெய்யப்படாமல் இருக்கின்ற, கிறிஸ்தவர்களைப் பிரித்துள்ள வரலாற்று பிரிவினைகள், திருஅவையின் முகத்தை உருவிழக்கச் செய்யும் மிகக் கடுமையான பாவங்களில் ஒன்று என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இம்மாதம் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை உலகின் கிறிஸ்தவ சபைகளில் சிறப்பிக்கப்பட்டுவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் குறித்து இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவ சபைகளுக்கிடையே முழுமையான ஒன்றிப்பு ஏற்படுவதற்கான ஆவலைத் தட்டி எழுப்புவதற்கும், இவ்வொன்றிப்புக்குத் தங்களை அர்ப்பணிப்பதற்கும் எல்லா விசுவாசிகளையும், எல்லாக் கிறிஸ்தவச் சமூகங்களையும் இந்த ஒன்றிப்பு வாரம் வரவேற்கும் தருணமாக இருக்கின்றது என்று கூறினார்.
கடந்த மாதத்தில், ஆயிரக்கணக்கான ஐரோப்பிய இளையோருடனும், Taize கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவுடனும் வத்திக்கானில் தான் செபித்ததை நினைவுகூர்ந்த திருத்தந்தை, அந்நேரம், மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அருளின் நேரமாக இருந்தது, அந்நேரத்தில் ஒரே கிறிஸ்துவின் உருவில் இருப்பதன் அழகை நாம் அனுபவித்தோம் என்றும் கூறினார்.
இந்தியாவிலுள்ள கிறிஸ்தவச் சமூகங்களால் பரிந்துரை செய்யப்பட்ட, “நம் ஆண்டவர் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்?” என்ற இவ்வாண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு வார மையக் கருத்தைக் குறிப்பிட்ட திருத்தந்தை, கிறிஸ்துவில் நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற முறையில், எந்தவிதமான அநீதியானப் பாகுபாடுகள் களையப்படவும், கிறிஸ்தவர்கள் மத்தியில் காணக்கூடிய விதத்தில் ஒன்றிப்பு ஏற்படவும் ஒன்றிணைந்து செபிக்குமாறு ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துவதாகவும் கூறினார்.
உலகில் இடம்பெறும் அனைத்துவிதமான சண்டைகளும், அப்பாவிக் குடிமக்கள் படுகொலை செய்யப்படுவதும் நிறுத்தப்படவும், போரிடும் தரப்புகள் உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கானத் துணிவைப் பெறவும் வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் அமைதிக்காக நாம் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
மேலும், கானாவூர் திருமண விருந்தில் நடைபெற்ற புதுமை குறித்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் பற்றியும் மூவேளை செப உரையில் விளக்கிய திருத்தந்தை, மனிதர்களுக்கு எப்போதும் தூய்மைப்படுத்துதல் தேவைப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.


2. ஈராக்கில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான கிறிஸ்தவ மையம்

சன.21,2013. ஈராக்கில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, கடந்த பத்தாண்டுகளில் முதன்முறையாக கிறிஸ்தவ கலாச்சார மையம் ஒன்றை துவக்கியுள்ளது தலத் திருஅவை. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமூகங்களிடையே தொடர்புகளை அதிகரிக்கும் நோக்கில் நாட்டின் வடபகுதியிலுள்ள கிர்குக் நகரில் துவக்கப்பட்டுள்ள இந்த மையம் 2003ம் ஆண்டிற்குப்பின் துவக்கப்பட்டுள்ள முதல் மையம் எனவும், இது அமைதியின் செய்தியை வழங்குவதோடு, பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க உதவும் என்றார் கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ.
2003ம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தின் தாக்குதலுக்கு முன்னர் 10 இலட்சத்திற்கும் அதிகமாக இருந்த ஈராக் வாழ் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, தற்போது 4 இலட்சத்து, 50 ஆயிரமாக குறைந்துள்ளது. 2003க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் ஈராக்கில் 900 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 200பேர் பிணையத்தொகைக்காக கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


3. ஒரேபாலினத் திருமணங்களை எதிர்க்க விசுவாசிகளின் ஆதரவை நாடும் இங்கிலாந்து திருஅவை 

சன.21,2013. ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டமாக்க விழையும் இங்கிலாந்து அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கத்தோலிக்க விசுவாசிகள், தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கருத்துக்கடிதங்களை அனுப்பவேண்டும் என அஞ்சல் அட்டைகளை விநியோகித்து வருகிறது இங்கிலாந்து திருஅவை.
வருகின்ற சனிக்கிழமை முதல் ஒவ்வொரு பங்குத்தளத்திலும் அஞ்சல் அட்டைகள் மக்களின் பயன்பாட்டிற்கென வைக்கப்படும் என்று கூறிய தலத்திருஅவை அதிகாரிகள், ஒரே பாலினத்திருமணத்தை அங்கீகரிக்கும் புதிய சட்டம் மூலம், திருமணத்தின் உண்மை அர்த்தம் மாற்றம் பெறுவதுடன், திருமணத்திற்கும் குழந்தை பிறப்புக்கும் இடையே இருக்கவேண்டிய அடிப்படைத் தொடர்பு முறிவுபடும் என்பது உட்பட பல்வேறு எதிர்மறை விளைவுகளையும் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகையதொரு புதியச் சட்டத்தை ஆதரிப்பதாக எந்த ஒரு முக்கிய அரசியல் கட்சியும் கடந்த‌ தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடாத நிலையில், தற்போது இத்தகைய சட்டத்திற்கு ஆதரவு அளிக்க முன்வந்திருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனவும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.


4. தகவல் அறியும் சட்டத்தை நிறைவேற்றுமாறு பிலிப்பீன்ஸ் அரசுக்கு தலத்திருஅவை வேண்டுகோள்

சன.21,2013. தகவல் அறிவதற்கான உரிமையை தரும் சட்டம்  பிலிப்பீன்ஸ் காங்கிரஸ் அவையில் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும் எனவும், அதன் வழியாகத்தான் மக்கள் பொதுநலன் குறித்த தகவல்களை அரசிடம் இருந்து பெறமுடியும் எனவும் விண்ணப்பித்தார் அந்நாட்டின் கத்தோலிக்க சமூக நடவடிக்கைச் செயலகத்தின் தலைவர் ஆயர் Broderick Pabillo.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நிறைவேற்றி, அதை அமல்படுத்துவது மக்களுக்கே உதவுவதாக இருக்கும் என்று கூறிய ஆயர், இதன் வழி சமூக நீதி முன்னேற்றம் பெறும் எனவும் தெரிவித்தார்.
இச்சட்டத்தை அரசு நிறைவேற்றத் தவறினால், அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவதோடு, வரும் தேர்தலிலும் தன் பாதிப்பை வெளிப்படுத்தும் என்றார் ஆயர் Pabillo.


5. ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் என்ணிக்கை இங்கிலாந்தில் குறைந்துள்ளது

சன.21,2013. போதிய காற்றோட்ட வசதியில்லாத பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட தடையைத் தொடர்ந்து அந்நாட்டில் ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் என்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளதாக அண்மை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
2007ம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் இச்சட்டம் கொண்டுவரப்பட்ட அடுத்த ஆண்டிலேயே ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 12 விழுக்காடு வரை குறைந்ததாகக் கூறும் இவ்வாய்வு, அதற்கடுத்த ஒவ்வோர் ஆண்டும் மேலும் 3 விழுக்காடு குறைந்ததாகத் தெரிவிக்கிறது.
உணவு விடுதி போன்ற பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை கொண்டு வந்துள்ளதன் மூலம் வீடுகளுக்குள் புகைப்பிடிப்பது அதிகரிக்கும் என்ற அச்சம் தற்போது பொய்யாக்கப்பட்டு, புகைப்பிடித்தலின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


6. ஐ.நா.: அப்கானிஸ்தான் சிறைகளில் கைதிகள் துன்புறுத்தப்படுவது பரவலாக உள்ளது

சன.21,2013. அப்கானிஸ்தான் சிறைகளில் கைதிகள் துன்புறுத்தப்படுவது பரவலாகக் காணப்படுவதாக ஐ.நா. நிறுவனம் தன் அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐ.நா.வின் புலன் விசாரணை அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள 635 போர்க்கைதிகளிடம் நடத்திய விசாரணையில், பாதிக்கும் மேற்பட்டோர் தாங்கள் சிறைக்குள் சித்ரவதைப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அடித்துத் துன்புறுத்தல், பாலியல் முறையில் தவறாக நடத்தப்படல், கொலைசெய்வதாக அச்சுறுத்தல் உட்பட 14 வழிகளில் கைதிகள் துன்புறுத்தப்படுவதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளைச் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கும் அதிகாரிகள் எவ்விதத் தண்டனைகளும் இன்றி தப்பி வருவதாகவும், துன்புறுத்திப் பெறப்படும் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் ஐ.நா.வின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...